தலைப்பு

சனி, 12 பிப்ரவரி, 2022

சூர்ப்பனகை போல் கோபம் கொண்ட ருக்மணிக்கு ராமராய் காட்சி தந்த ஸ்ரீ சத்ய சாயி ராமன்!

சுவாமியை இகழ்பவர்களையும் சுவாமி நேசிக்கிறார்... சுவாமி மேல் கோபம் கொண்டவர்களையும் பிற்காலத்தில் தன் மேல் தாபம் கொள்ளும் அளவிற்கு அக மாற்றம் தருகிறார்... அப்படி ஒரு கோபக்கனல் எவ்வாறு சுவாமியின் திருவிளக்கு தீபக்கனலாய் சுடர்ந்தது எனும் சுவாரஸ்யப் பதிவு இதோ...


1963ல் சுவாமியை பற்றி யாரேனும் பேசினால் மூக்கின் மேல் கோபப் பறவை முகாமிடும் அந்தப் பெண்மணிக்கு... அவர் பெயர் ருக்மணி... அந்த மணி ஓசையோ இடியோசையாகவே முழங்கிக் கொண்டிருக்கிறது! யாரேனும் "சத்யசாயி" என வாய் திறந்தால் போதும் படைபடையாக சண்டைக்குப் போய்விடுவார்.. அவர் ஒரு போலி... என அவர்களை வலுக்கட்டாயமாக ஒப்புக் கொள்ள வைப்பார் ருக்மணி... வெறுப்பு என்றால் அப்படி ஒரு வெறுப்பு சுவாமி மேல்... காரணம் கேட்டால்... அவருக்கே தெரியாது! கொடியை பாம்பென நினைக்கும் இருள் மயக்கமது! சுவாமியோ சாதாரண கொடி அல்ல பிரபஞ்சத் தொப்புள் கொடி! ருக்மணி ஒரு தெருவில் வருகிறார் என்றால் சுவாமி பக்தர்கள் வேறு தெருவழியாக பதறி அடித்து தன் வீட்டிற்குச் செல்வர்! 


போத்தனூரில் போஸ்ட் மாஸ்டராக ருக்மணியின் கணவர் பணியாற்றி வருகிறார்... தீவிர ஷிர்டி சுவாமி பக்தர் அவர். அவரின் நண்பர் ஒருவர் "இவர் தான் ஸ்ரீ சத்ய சாயி... ஷிர்டி சாயியின் மறு அவதாரம் !" என சுவாமியின் புகைப்படம் ஒன்றைத் தருகிறார்... உடனே அதை நல்லவிதமாக பூஜையறையில் ஷிர்டி சுவாமி புகைப்படம் அருகே மாட்டிவிடுகிறார்... மனைவி ருக்மணி அதை பார்த்துவிட்ட பிறகு இலங்கையே பற்றி எரிந்ததைப் போல் அவருக்கு இதயம் பற்றி எரிகிறது... உடனே அந்தப் படத்தை சுக்கல் நூறாய் கிழித்துப் போடுகிறார்...பாவம் அப்பாவி கணவருக்கு அன்று லட்சார்ச்சனை... இதயம் நடுங்கிப் போகிறது அவருக்கு... புன்னகை விடுத்து சூர்ப்பனகை போல் கோபம் கொண்டதில் கணவர் அலுவலகம் பறக்கிறார்!


 ஒருமுறை ருக்மணியின் குழந்தைக்கு வயிற்று வலி காரணமாக கோவை P.S.G மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அருகாமை மருத்துவப் படுக்கையில் சுவாமி பக்தை "பிரசாந்தி" என்ற பத்திரிகையை வாசித்துக் கொண்டிருக்கிறார்... ருக்மணிக்கும் வாசிக்கத் தருகிறார்... "இதெல்லாம் நான் வாசிக்க மாட்டேன்" என உக்ரமாகப் பேசிவிடுகிறார்... இருந்தபோதும் அந்த சுவாமி பக்தைக்கு ருக்மணியோ பெரிதும் உதவியாக இருப்பதால் அந்த சுவாமி பக்தையோடு அவர் மிகவும் நெருங்கிப் பழகுகிறார்... பழக்கம் வீடு வரை தொடர்கிறது... ருக்மணியை வீட்டில் வைத்துவிட்டு வெளியே செல்லும் அளவிற்கு பழக்கம் இறுகுகிறது! ஒருமுறை அந்த சுவாமி பக்தை தனது மகன் திருமணத்திற்கு கிளம்ப வேண்டும்... வீட்டை பூட்டிக் கொண்டு செல்ல ஒரே பயம்‌. பயந்த சுபாவம்! ஆக ருக்மணியை வீட்டிற்கு காவலாக வைத்துவிட்டுச் சென்றுவிடுகிறார்... திருமணநாள் அன்று ருக்மணியிடம் வீட்டுத் தொலைபேசியில் பேசி சர்க்கரைப் பொங்கல் வைத்து சுவாமிக்கு நெய்வேத்யம் செய்யச் சொல்கிறார்... அந்த சுவாமி வீட்டில் இருந்து கொண்டே "அந்தப் பரட்டை தலைக்கு எல்லாம் நெய்வேத்யம் செய்ய முடியாது... அம்மன் படத்தின் அருகேயே வைத்துவிடுகிறேன்!" என மனதிற்குள் நினைத்தபடியே சர்க்கரைப் பொங்கலை அக்கறைப் பொங்கலாய் அம்மனுக்கு நெய்வேத்யம் செய்கிறார்.. இறை ரூபங்கள் தான் வேறே தவிர பரப்பிரம்ம சுவாமி ஒன்று தான்...! பாவம் வெறுப்போடிருந்த ருக்மணி அன்று அதை அறிந்திருக்க வாய்ப்பில்லை!  
ருக்மணி தங்கி இருக்கிற அந்த சுவாமி பக்தை வீட்டில் ஒருநாள் சாயி பஜன் நிகழ்கிறது! பஜனில் சாயி என வருகிற இடத்தில் எல்லாம் ராமா கிருஷ்ணா என மாற்றிப் பாடுகிறார்...! 

சாயி என்ற பெயர்க்காரணமே தெய்வீக அன்னை என்பது தான் என அவருக்கு அப்போது பாவம் தெரியாது! 

ஒருமுறை சாயி பஜனில் கலந்து கொண்ட ஒரு பெண்மணி வீட்டில் சாயி பஜன்... ருக்மணி குடும்பத்தோடு பஜனுக்கு செல்கிறார்... இப்படி நாற்காலியில் போய் அவர் படம் வைத்திருக்கிறார்களே என சுறுக்கென்று கோபம் வருகிறது... அடக்கிக் கொள்கிறார்...அதே சாயி பெயர் வருகிற போது ராமா கிருஷ்ணா என பெயர் மாறாட்டம்! அந்த நொடி அதே நொடி.. நாற்காலியில் அமர்த்திய சுவாமி படத்தில் சுவாமி ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியாய் ருக்மணிக்கு காட்சி அளிக்கிறார்... ருக்மணியால் நம்ப முடியவில்லை... கண்களைக் கசக்கிப் பார்க்கிறார்... அவராவது ராமராவது பிரமையாக இருக்கும் என மீண்டும் சாயி வருகிற இடத்தில் ராமா என மாற்றிப் பாட...அதே சுவாமி படத்தில் ஸ்ரீராமராய் காட்சி அளிக்கிறார் சுவாமி... 

இப்படியே பலமுறை... ஆச்சர்யத்தில் உறைகிறார்... பிறகு தான் ருக்மணிக்கு தெரியும்... வந்திருந்த அவரின் குடும்பத்திற்கே சுவாமி ஸ்ரீ ராமச்சந்திரனாய் காட்சி கொடுத்தது பற்றி...

அன்றிலிருந்து அக மாற்றம் ஆரம்பமாகிறது... சுவாமியை உணர்கிறார்.. பக்தையாகிறார்... 6 மாதம் கடந்து பர்த்தி வருகிறார்...சுவாமி தரிசனம். பின் அடிக்கடி பர்த்தி விஜயம். பிறகு அவர் பிள்ளைக்கு சுவாமி கல்லூரியிலேயே விரிவுரையாளராக வேலை கொடுத்து... தனது இதயத்திலேயே இடம் கொடுத்த சுவாமி பர்த்தியில் தங்க இடமும் கொடுத்து... பர்த்தியில் ஊழியர் குடியிருப்பிலேயே (Staff Quarters) வாழ்ந்து சுவாமியை அனுதினமும் தரிசித்து ஆனந்தப்படும் அளவிற்கு ஒரேயடியாக ருக்'மணி' சுவாமியின் திருக்கோவில் 'மணி'யாக மாறிவிடுகிறார்...!

அன்றுமுதல் அந்த எரிமலை குளிர்ந்து கைலாயமாய் சுவாமி எனும் பரப்பிரம்மத்தையே சுற்றி வருகிறது!


(ஆதாரம்: அற்புதமும் ஆன்மீகமும் -3 / பக்கம் : 56 / ஆசிரியர் : திருமதி சரோஜினி பழனிவேலு) 


வெறுப்பு எனும் நெருப்பை தனது பேரன்பு கங்கையால் தணிப்பவர் சுவாமி! அதற்குப் பதிலாக ஞான நெருப்பை வழங்கி நமது இதயத்தையே அகலாக்கிவிடுகிறார்...! பரவசமாய் கசியும் கண்களின் நீரே நெய்யாக அந்த இதய வெளிச்சத்தை இன்னமும் பிரகாசிக்கச் செய்கிறது! சுவாமி இறைவன் என்பதற்கு ஒவ்வொருவரின் இதயமே நிரூபணம்! நமது அந்த இதயத்துடிப்புகளே ... அந்த மனசாட்சியின் குரலே அன்றாடம் அந்த பரம சத்தியத்தை எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது...!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக