தலைப்பு

செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

1948'ல் சென்னையில் 22வது வயதில் சுவாமியின் நேரடி மகிமா லீலைகள்!


சுவாமியை யார் எனவே தெரியாத ஒரு சென்னை வாசியின் கடும் நோயை குணமாக்க தான் இருக்கும் இடத்திற்கு வரச்சொல்கிறார் சுவாமி... ஆனால் அவரோ கண்டிப்பான முதலாளியிடம் வேலை பார்ப்பவர்.. அவர் எங்கு சென்றார்? அலுவலகமா? சுவாமியிடமா? அவரின் நோய் தீர்ந்ததா? அமானுஷ்ய சுவாரஸ்யமாய் இதோ...

தாமோதர நாயக்கர் சென்னைவாசி. அந்தக் காலத்திலேயே BA பட்டம் பெற்றவர்... அவரின் 84 ஆவது வயதில் சந்தித்து சுவாமி அனுபவத்தை நேர்காணல் எடுக்கிறார் நூலாசியியர். பரம பாக்கியம் அப்படிப்பட்டவரை அவர் சந்தித்தது! அந்த தள்ளாத வயதிலும் தெளிந்த மனதோடு.. பக்குவத் திரளோடு இருக்கிறார்... மரத்தில் மெல்லிய கம்பியை வளைத்து மகாத்மா காந்தி போன்ற தலைவர்களின் உருவங்களை செதுக்குகிறார்... அப்போது உள்ளே நுழைகிறார் நூலாசிரியர்... "சாயிராம்... நீங்கள் ஏன் சுவாமியை இப்படி உருவாக்கவில்லை ?" எனக் கேட்கிறார்! "அய்யோ... அவர் இறைவன்... அப்படி எல்லாம் கம்பியில் சுவாமி உருவத்தை வளைத்துச் செய்வது பயமாக இருக்கிறது!" என்கிறார் தாமோதர பெரியவர்... என்ன ஒரு பயபக்தி! 


அது 1948. சுதந்திரம் வாங்கிய அடுத்த வருடம்! மெல்லிய தனது சுதந்திர காற்றை சுவாசிக்க தேச நாசி விரிந்து கொண்டிருந்த பொற்பொழுது! 1926 றே ஆன்மீகத்திற்கு சுதந்திரம் கிடைத்து விட்டது...! 1940 அன்றே ஆன்மீகக் குடியரசாக இந்தியா திகழ ஆரம்பித்து 8 வருடம் கடக்கிறது.. தாமோதர நாயக்கரோ ஸ்பென்ஸருக்கு எதிரில் இருந்த லூகாஸ் கம்பெனியில் ஸ்டோர் கீப்பராக இருக்கிறார்! ஒருநாள் திடீரென சூலை நோய் ஆட்கொள்கிறது... சைவ நால்வரில் ஒருவரான திருநாவுக்கரசருக்கு பிடித்த அதே நோய் தான்... லிவரில் வலி... அந்த நுரையீரல் குறையீரலாய் வலி உயிர் போகிறது! முதன்முதலாக சுவாமி சென்னைக்கு 1948 ல் தான் விஜயம் செய்கிறார் என நூலாசிரியரிடம் பதிவு செய்கிறார் தாமோதர நாயக்கர். அவரிடம் ரங்கநாத முதலியார் "வந்திருக்கும் சாயிபாபாவிடம் நீ போ... உன் நோயை அவர் நிச்சயம் குணப்படுத்துவார்!" என்கிறார். "வலிக்கு பிறகே ஒளி!" என்பதாக  அந்த செய்தி அவரின் லிவருக்கே பால் வார்க்கிறது! அன்று ஞாயிற்றுக் கிழமை அவர் சுவாமியை தரிசிக்க ஃபிளவர்ஸ் ரோடிற்குப் போகிறார்! 

அங்கிருந்தவர்களிடம் பரிதாபமாய் வாசற்கதவுக்கு வெளியே பெருத்த வலியோடு விசாரிக்கிறார்...! ஆனால் அப்படி யாரும் இங்கே இல்லை என சொல்லிவிட... நிராசையோடு பெருமூச்சுவிட்டபடி தனது மனைவியோடு திரும்பிப் போகிறார்... ஒரு தெருவில் திரும்புகிறார் அவசரமாக ஒரு கார் வந்து அவரை வழிமறிக்கிறது.. யார் அது என்பதைப் போல் இமையை விரிக்கிறார்.. அதிலிருந்து இருவர் இறங்கி "மன்னிக்க வேண்டும்... சுவாமி உங்களை அழைத்து வரச் சொன்னார்" என பதறுகிறார்கள்... "வெளியே நின்றபோது இல்லை என்று ஒருவர் சொன்னாரே!" என தாமோதரர் கேட்கிறார்... "மன்னிக்க வேண்டும்... மன்னிக்க வேண்டும்... அறியாமல் அப்படி நேர்ந்துவிட்டது...சுவாமி எங்களை கோபித்துக் கொண்டார்... அதற்குப் பின் ஓடிவந்து உங்களை வாசலில் தேடினோம்... நீங்கள் இல்லை...ஆகவே தான் காரை எடுத்து உங்களை எப்படியாவது கண்டுபிடித்து அழைத்து வர வேண்டும் என கிளம்பினோம்... இது சுவாமி உத்தரவு! என பணிவோடு பேசுகிறார்கள்... சுவாமி கொடுத்த டோஸ் அப்படி! 

     "நான் உள்ளே இருக்கும் போதே.. இல்லை என ஏன் பொய் சொன்னீர்கள்? நீங்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்... ? நான் பணக்காரர்களின் சுவாமி இல்லை... ஏழைகளுக்காகவே வந்திருக்கிறேன்... இப்பொழுதே அந்த கண்ணாடி போட்டவரை என் முன்னே அழைத்து வாருங்கள்!" என சுவாமி ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியாய் கர்ஜிக்கிறார்! பதறுகிறார்கள் பிரகலாதர்களாய் மாறிப் போன ஹிரண்ய கசிபுகள்! சுவாமிக்கு பொய் பேசுவதும்... பொய்யான வாழ்க்கையும் பிடிக்காது... காரணம் சுவாமி சாதாரண சாயி அல்ல... ஸ்ரீ சத்ய சாயி!


சுவாமி முன் நிற்கிறார்... சுவாமியின் அதிரூப லாவண்யத்தை கண்களால் பருகிய படி சொக்கிப் போகிறார் தாமோதரர். "நாளை தியாகராய நகரில் (சென்னை - மாம்பலம்) வந்து என்னைப் பார்!" என்கிறார் சுவாமி... "சுவாமி.. நாளை அலுவலகம்.." என இழுக்கிறார்... மேலும் "லண்டனிலிருந்து முதலாளி நாளைக்கு வருகிறார் என வாட்ச் மேன் சொன்னான்... 8.30 அங்கே செல்ல வேண்டியதான....நாளைக்கு எப்படி உங்களை...?" என மொழிகளை வாய்க்குள் விழுங்கி விழுங்கி தயங்குகிறார் தாமோதரர்... சுவாமியோ "நாளைக்கே என்னை வந்து பார்!" என மீண்டும் சொல்லி வீட்டின் உள்ளே சென்றுவிடுகிறார்! சுவாமியின் சொல்லில் பொதிந்திருந்த பெருங்கருணை அருவக் கயிறுகளால் அவரின் இதயத்தைக் கட்டிப் போட்டுவிடுகின்றன..!

வேலையே போனாலும் பரவாயில்லை என அலுவலகம் சென்று.. "இன்று ஒரு அவசர வேலையானபடியால் நான் லீவு" என சீட்டு எழுதிவிட்டு சுவாமி தரிசனத்திற்கு சென்றுவிடுகிறார்! அந்த கொடுமையான வலியை தனது முதலாளி அல்ல "பிரபஞ்ச முதலாளியே" தீர்க்க முடியும் என தாமோதரருக்கு அப்போதே நன்கு புரிந்திருக்கிறது! அது மாம்பலம்... பெருங்கூட்டம்... சுவாமி பேரழகு மயிலிறகாய் அசைந்து வருகிறார்! பைத்தியம் பிடித்த டாக்டரை விபூதி வரவழைத்து தணிக்கிறார்... ஆஸ்துமாவால் மூச்சுப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட ஒருவருக்கு விபூதி தந்து குணமாக்குகிறார்... இப்படி அங்கே பல நேரடி பரவச அனுபவங்கள்... நடமாடும் சஞ்சீவினியாய் சுவாமி புரியும் லீலைகளை கண்டு தாமோதரர் பிரம்மிக்கிறார்...! சுவாமி புன்னகையோடு நெருங்கி அவர் முன் வருகிறார்.. கைவிரல் அசைத்து சுவாமி விபூதி தருகிறார்.. அவர் கை நடுங்கியபடி பயபக்தியோடு வாங்கி உட்கொள்கிறார் ... அடுத்த விநாடியே அந்த சூளை நோய் பறந்து போகிறது.. அதற்கு பிறகு அந்த நோய் வரவே இல்லை என்கிறார் 84 வயதான தாமோதரர்.


அடுத்த நாள் பயந்து பயந்து அலுவலகம் செல்கிறார்... முதலாளியிடம் "மன்னிக்க வேண்டும்.. நேற்று ஒரு அவசர வேலை அதனால் தான் வர இயலவில்லை!" என தலை தாழ்த்தி பவ்யமாய் பேசுகிறார்... அதை கேட்டு அதிர்ந்தபடி முதலாளி "யோவ்.. மேட் மேன்...உனக்கு என்ன பைத்தியமா? யூ...நேத்திக்கு நீ வந்து ரெஜிஸ்டரில் கையெழுத்து போட்டு வேலை பார்த்த... இப்போ என்ன ஆச்சு? வாட் இஸ் திஸ் மேன்... இப்படி உளர்ற?" எனப் பேச... பதறிப் போய் ரெஜிஸ்டரை திறக்க... அவரின் கையெழுத்து அழுத்தம் திருத்தமாய் இருக்கிறது... கை நடுங்குகிறது தாமோதரருக்கு... அந்த நொடி அதே நொடி வேலையை காப்பாற்றிய சுவாமியை நினைத்து கண்கலங்குகிறார்... என்ன மேன் ஆச்சு? எனக் கேட்கிறார் முதலாளி... வெள்ளைக்கார துரை அவர்! நேற்று எழுதிப் போன சீட்டையும் காட்டி... நடந்ததை சொல்கிறார்... யார் அவர்? அவர் பெயர் ? என முதலாளி விசாரிக்க... "சத்ய சாயி பாபா" என்கிறார் தாமோதரர்.. அசந்து போய் அப்படியே நாற்காலியை விட்டு எழுந்து கையெடுத்து கும்பிட்ட படி "ஓ மை காட்! (Oh My God)" என பிரம்மித்துப் போகிறார் லண்டனில் இருந்து வந்த முதலாளி வெள்ளைக்கார துரை... சுவாமியின் தெய்வத்திரு லீலையை அனுபவிக்கும் இதயம் எந்த மொழி கொண்டு அதை விவரிக்க இயலும்?


(ஆதாரம் : அற்புதமும் ஆன்மீகமும் -3 / பக்கம் : 155 / ஆசிரியர் : திருமதி சரோஜினி பழனிவேலு) 


சுவாமியால் எதையும் அரங்கேற்ற முடியும் என்பதைத்தான் இந்த லீலா மகிமை எடுத்தியம்புகிறது! இறைவனுக்கு இறைப் பேராற்றல் என்பது சுபாவம்... சுவாமியே இறைவன் என்பதை தாமோதரர் சுவாமியை தரிசிக்கும் மாத்திரத்திலேயே உணர்ந்து கொண்டு விடுகிறார்! இதயக்கற்பூரம் பக் என பற்றிக் கொண்டு விடுகிறது! பூர்வ ஜென்மங்களிலிருந்தே ஒருவருக்கு பக்தி இருக்குமெனில் அது இந்த ஜென்மத்திலும் தொடர்ந்து வர யார் இறைவன் என்பதை இனம் கண்டுவிடுகிறது! பயபக்தி அவசியமே... கர்மாவின் மீதான பயமும்.. சுவாமி மீதான பக்தியுமே இணைந்து பயபக்தி! அதையே சுவாமி பாப பீதி -- தெய்வ ப்ரீதி என்கிறார்! "ரோமாபுரி ஒரே நாளில் நிர்மாணிக்கப்பட்டதல்ல!" என்ற ஒரு பழமொழி உண்டு.. சாதாரண ரோமாபுரியே அப்படி எனும் போது... அரும்பெரும் இறை பக்திக்கு இன்னமும் பல தொடர் ஜென்மங்கள் தேவைப்படவே செய்கின்றன...!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக