தலைப்பு

சனி, 5 பிப்ரவரி, 2022

புகைப்படங்களுக்கு ஃபிரேம் போட்டுத்தரும் கடைக்காரரின் இதயத்தில் ஃபிரேம் போட்டு அமர்ந்த சுவாமி!


பல்வேறு தொழில் செய்யும் மனிதர்களின் வாழ்வில் சுவாமி எவ்வாறெல்லாம் தன் திருச்சாந்நித்யத்தை நிரப்பி...தன்னை உணர வைத்து...பக்தராக்கி அபயமளிக்கிறார் என்பதை அறியும் போது வியப்பாகிறது..‌. அப்படி ஒரு அனுபவம் இதயத்தில் ஃபிரேம் போடும் விதமாக இதோ...


அது சென்னையின் ஐம்பதுகள். அதிகம் நச்சாகாத காற்று... கட்டிடங்கள் அதிகமில்லா இடங்கள்... அடுக்குமாடிகள் வராத தெருக்கள்... மரங்கள் சுதந்திரமாக வாழ்ந்த ஏரியாக்கள்... சிலு சிலுவென காற்று... அடுத்த தெருவுக்குக் கூட பைக்கில் போகாமல் சைக்கிளில் போன ஆரோக்கியம்... ஒற்றுமையான கூட்டுக்குடும்பம்... உணர்ச்சி வசப்படும் ஜனங்கள் என நம்பவே முடியாத சென்னை அது... அது மயிலை கபாலீஷ்வரர் கோவில்... கடைவீதிகள் நிரம்பி வழியாத தெருக்கள் அவை... அங்கொன்றும் இங்கொன்றுமாகவே கடைகள்... மக்கள் அப்போது வெறும் பொருளை வாங்குவதை விட பரம்பொருளையே அதிகமாக வாங்க நடந்து கொண்டிருந்த பக்கவாட்டுத் தெருக்கள்... தெப்பக்குளம் எதிரில்...அதில் ஒரு கடை... "குருபரன் ஃபிரேமிங் வொர்க்ஸ்" 1954 ல் ஆரம்பிக்கின்றனர். கடைக்காரர் பெயர் லோகநாதன். 

ஒருநாள் இவரது கடைக்கு ஒருவர் வந்து பூப்போல் மெதுமெதுவாக ஒரு படத்தை எடுத்து ஃபிரேம் செய்வதற்காக கையில் தருகிறார்! பார்த்து கசங்காமல் ஃபிரேம் செய்து தாருங்கள் என பதட்டப்படுகிறார்... அவருக்கு அந்தக் கடைக்காரரிடம் படத்தை ஒப்படைப்பதற்கே மனம் வரவில்லை... அப்போதெல்லாம் படங்கள் பேப்பர் பிரின்ட் தான்... அது என்ன படம் என திறந்து பார்க்கிறார் லோகநாதன்... ஆச்சர்யப்படுகிறார்... புஸ் புஸ் என கேசம்... முகத்தில் தேஜோமயம்... புன்னகை இதயத்தை சுண்டி இழுக்கிறது... அபயஹஸ்தத்தில் அத்தனை தீர்க்கம்... "நான் இருக்கிறேன்.. ஏன் பயப்படுகிறாய்!" என்பதற்கான காட்சி வடிவமாக அந்தப் படம் திகழ... "யார் இவர்?" "என்ன விசேஷம் இவரிடம்?" எனக் கேட்கிறார் லோகநாதன்... "இவர் தான் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா... கண் கண்ட தெய்வம்! மக்களுக்கு அருளை வாரி வாரி வழங்குகிறார்...தீராத நோய்கள் எல்லாம் இவர் கண்பட்டாலே தீர்ந்துவிடும்!"* என்று சொல்லி பார்த்து அழுக்குபடாமல் கசங்காமல் கண்ணாடி ஃபிரேம் போட்டு தாருங்கள் எனக் கேட்கிறார்!


தொழில்நுட்பம் வளராத காலம் அது! 50களில் சுவாமியின் புகைப்படம் கிடைப்பது மிக மிக அபூர்வம். புட்டபர்த்தியில் தான் வாங்க வேண்டும்... அப்படி அபூர்வ சுவாமி படம் அது.. அந்தகால சென்னை மயிலையில் ஒரு ஃபிரேம் வொர்க் கடையில்... லோகநாதனின் ஆர்வத்தை கண்ட அந்த சுவாமி பக்தர்... நீங்கள் முதலில் சுவாமியை மனதாற பிரார்த்தனை செய்யுங்கள்.. ஏதேனும் அறிகுறி தோன்றினால் சுவாமி படம் வைத்து பூஜை செய்யுங்கள் என்கிறார்... இது தான் எதார்த்தமுறை... சுவாமி பக்தி அல்லாத மனிதர்களிடம் நமக்கு இருக்கும் திட நம்பிக்கையை விதைக்க வேண்டும்... அதற்கு பணிவும் பவ்யமும் மிகவும் முக்கியம்...! அதே சமயத்தில் அவர் திணிக்கவும் இல்லை கட்டாயப்படுத்தவும் இல்லை... கட்டளை இட்டால் யாரும் எதுவும் கேட்கமாட்டார்கள்.. ஆன்மீகத்திற்கும் கருணைக்கும் தான் சம்பந்தம் இருக்கிறதே தவிர ஆன்மீகத்திற்கும் கட்டளைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!


ஒரு வாரத்தில் லோகநாதன் வீட்டில் விபூதியும் ரோஜா மலர்களும் கலந்த வாசனை பரவுகிறது... சுவாமியின் பேரிருப்பை உடனேயே உணர்கிறார்... அன்று முதல் தனது வீட்டின் ஒவ்வொரு நகர்வும் சுவாமியின் துணையோடு அரங்கேற ஆரம்பிக்கிறது! 1973ல் ஒருமுறை லோகநாதனுக்கு மூக்கு வழியாக ரத்தப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்... வைத்தியம் பல செய்தும் ரத்தப்போக்கு நிற்கவே இல்லை! அந்த மருத்துவமனை நாட்களில் ஒருநாள் அதிகாலை சுவாமி இவரது தோள்பட்டையில் கைவைத்தபடி நிற்கிறார்... சுவாமி அருளிய திருக்கனவு அது! எழுந்தவுடனேயே அவரின் நோய் தீர்ந்து விடுகிறது! அன்றிலிருந்து சுவாமியின் திருக்கரத்தின் தோள்பட்டைத் தீண்டுதல் லோகநாதனை தொடர ஆரம்பிக்கிறது! இவர் கடையில் ஒரு சுவாமி படம்... யார் என்ன விலைக்குக் கேட்டாலும் தராமல் மாட்டி வைத்திருக்கிறார்.. காரணம் கேட்டதற்கு... பலர் வீட்டிலிருந்து அலுவலகம் செல்லும் போது அவரது கடையின் அந்த சுவாமி படத்தை வணங்கிவிட்டு செல்வதால் அதை யாருக்கும் தரவில்லை என தீர்மானமாக இருக்கிறார்... இதுவும் சுவாமி சேவையே! பிறர் வணங்குவதற்கான வழிவகை செய்வதும்... 

பல சுவாமி பக்தர்கள் ஃபிரேம் செய்யும் திருக்கடையாகவே அது மாறுகிறது! பல பக்தர்கள் சுவாமி படத்தை ஃபிரேம் செய்ய தரும் போது அந்த இடைப்பட்ட நாளில் சுவாமியின் படத்தை பிரிய முடியாமல் கண்கலங்குவார்களாம்... குழந்தையை கின்டர் கார்டனில் சேர்த்து கண்கலங்கும் தாயைப் போல் வருந்துவார்களாம்... காரணம் சுவாமியின் திருப்படம் வேறு சுவாமி வேறல்லவே... அந்தக் கால பக்தர்கள் எப்படி எல்லாம் இருந்திருக்கிறார்கள் என உணரும் போது புல்லரிக்கிறது! அதை அவரே நூலாசிரியரிடம் சொல்லி ஆச்சர்யப்பட்டிருக்கிறார்! 


இப்போது "குருபரன் ஃபிரேமிங் வொர்க்ஸ்" மிக பிரம்மாண்டமாகவும் பிரபலமாகவும் விரிவடைந்திருக்கிறது... அதற்கு சுவாமியின் பேரருளே காரணமாக அமைகிறது! திரு லோகநாதனின் மகன் பேரன் என அவரின் ஒட்டுமொத்த குடும்பத்திற்கே சுவாமி இன்றளவும் தனது அருட் கருணையை நிரப்பி வருகிறார்... அழகழகாய் வேலைப்பாடுகள் மிகுந்த தெய்வத்திருப்படங்களும் சுவாமியின் ஆசீர்வாதத்திற்கு இப்போதும் சாட்சியாக இருக்கிறது!

"எனக்காக ஒரு சொட்டு கண்ணீர் சிந்தினால்... உங்களின் பத்து சொட்டு கண்ணீரை நானே துடைக்கிறேன்!" என சுவாமி சொன்னதை நூலாசிரியரே பதிவு செய்கிறார்! 

குடும்பத்திற்காக சுவாமியிடம் அழுவதை விட சுவாமிக்காக சுவாமியிடம் அழுவதையே சரணாகதி விரும்புகிறது!

(ஆதாரம் : அற்புதமும் ஆன்மீகமும் - 3 / பக்கம் : 19 / ஆசிரியர் : திருமதி சரோஜினி பழனிவேலு) 


சுவாமியின் திருப்படம்/ பஜன்/ புத்தகம்  அனைத்துவித இறை வழிபாட்டு ஜனங்களுக்கும் கிடைக்கும்படியான சவுகரியங்களை பக்தர்களே செய்து தர வேண்டும்! சுவாமியின் மகிமைகளை கடைசி மனிதருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்...! இது இணையதள யுகமாகையால் பக்தியையும் சுவாமி எனும் பரம்பொருளையும் பரவச் செய்வது பெரிய சேவையே... அதையே தன்னலமில்லாமல் மிகத் தன்மையோடு எல்லோரையும் அரவணைத்து.. சுவாமி உலகத்திற்கே பொதுவான இறைவன் எனும் அடித்தளத்தில் இயங்கிவருகிறது சுவாமி சங்கல்பத்தோடு ஸ்ரீ சத்ய சாயி யுகம்!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக