தலைப்பு

செவ்வாய், 8 பிப்ரவரி, 2022

மளிகைக் கடை பொட்டல காகிதத்தின் ஒரு செய்தியால் பக்தராக்கி நேர்காணல் அளித்த அதிசய சுவாமி!

ஷிர்டி சுவாமி பக்தராக இருந்த ஒரு குடும்பத்தை எவ்வாறு இரு சாயியும் ஒருவரே என உணர வைத்து... பர்த்தி அழைத்து நேர்காணல் அருளியதே மிக மிக சுவாரஸ்யமான அனுபவம் இதோ.. அதே சுவாரஸ்யத்தோடு...


சத்யா என்பவரின் குடும்பம் ஷிர்டி சுவாமியை வழிபட்டு வந்தது!  அவர்கள் நெல்லும் சொல்லும் செழிப்பாக விளைகிற திருத்தலமான திருநெல்வேலியில் வசிப்பவர்கள். 1965ல் சுவாமியை பற்றி சிறிதளவு கேள்விப்பட்டிருந்தாலும்... சுவாமி மேல் ஆர்வத்தோடு அவர்கள் இருந்ததில்லை... ஒருமுறை சத்யா வாங்கிய துவரம் பருப்பு பொட்டலத்தில் ஒரு செய்தி... அந்தத் திருச் செய்தியால் ஒட்டுமொத்த குடும்பமே மாறுகிறது! அந்தப் பொட்டலத்தை எதேர்ச்சையாக திறக்கிற போது அவர்களின் இதயமே திறந்து கொள்கிறது... அந்த துவரம் பருப்பு மடித்த காகித வாசகமானது இருசாயியும் ஒன்றே என்பதை வலியுறுத்தி எழுதப்பட்டிருந்தது... சத்யாவின் குடும்பத்திற்கு அப்போதே சத்தியத்தை உணர முடிகிறது! உடனே சுவாமியை தரிசிக்கப் பேராவல் கொள்கின்றனர்... ஆனால் சத்யாவின் பெற்றோர் மாற்றலாகி மேட்டூர் சென்றுவிடுகின்றனர்... ஆகையால் உடனடியாக சுவாமியை தரிசிக்கும் பாக்கியத்தை பெற முடியவில்லை... இவர்களுக்கு தெரிந்த குடும்பம் மேட்டூர் அருகே சேலத்தில் வசித்து வருகிறது! 


அந்த சேலம் குடும்பத்து பெண்மணி சுவாமி பக்தை... ஒருநாள் அவரின் கனவில் சென்று நீ போய் சத்யா குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு புட்டபர்த்தி வா என்கிறார் சுவாமி. அது போல் அடுத்த நாளே அவர் மேட்டூர் சென்று சத்யாவின் குடும்பத்தை பர்த்திக்கு அழைத்துச் செல்கிறார்! பர்த்தியில் முதல் தரிசனமே வியாழன் அன்று அமைத்துத் தருகிறார் சுவாமி. 8 வயதாக இருக்கும் போதே சுவாமியை தரிசித்திருப்பதாக தனது பால்ய வயது காலத்தை நினைத்துப் பார்க்கிறார்... சுவாமி தான் எங்கேயும் தோன்றுபவர்.. எதிலும் தெரிபவர் அல்லவா... "இவரா... இவரை முன்பே தெரியுமே பார்த்திருக்கிறேனே!" என்ற ஓர் ஆழ உணர்வு ஏற்படுகிறது சத்யாவுக்கு...! சுவாமியின் கையசைப்பிலிருந்து யாருக்கும் நேர்காணல் இல்லை என்பது போல் நினைத்து பக்தர் திரும்புகையில் சுவாமி சத்யா குடும்பத்தை மட்டும் கை நீட்டி அமர வைத்தபின் நேர்காணலுக்கு அழைக்கிறார்... 

"நீங்கள் என்னிடம் ரொம்ப நாளாகவே வர ஆசைப்பட்டு வர இயலாமல் இருந்தீர்கள் அல்லவா! நான் தான் அந்த சேலத்து அம்மாவின் கனவில் போய் உங்களை என்னிடம் அழைத்து வந்தேன்!" என்கிறார் பரவு பொங்கப் பொங்க சுவாமி... அவர்களின் குடும்பப் பிரச்சனையை சுவாமியே சொல்லி ஆறுதல் அளிக்கிறார்.. பலநாளாக குணமாகாமல் இருந்த புண்ணொன்று சுவாமியை தரிசித்த மாத்திரத்திலேயே சத்யாவுக்கு குணமாகிறது! அவர்கள் எப்போது பர்த்தி வந்தாலும் நேர்காணல் தருகிறார் சுவாமி... எப்போது சுவாமி நேர்காணல் அளித்தாலும் சத்யா அருகே சென்று சுவாமியின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறார்... ஆம் அந்த திருக்கரம் தானே இந்த உலகத்திற்கே வாழ்க்கை எனும் பிச்சை இடுகிறது! அந்த திருக்கரம் தானே நாம் கேட்காமலேயே நமக்கு அபயக்கரம் நீட்டுகிறது... பிழையாகப் போய்விடாமல் தர்ம மழையோடு வாழ்வியல் நனைய அந்தத் திருக்கரம்... சுவாமியின் அதே திருக்கரம் தானே நம்மை மீட்டெடுத்து இதய வீணையில் பக்தி ராகம் மீட்டுகிறது!

"பகவான் எங்களோடு தாயைப் போலப் பழகுவார்" என்கிறார் நூலாசிரியரோடு சத்யா. சுவாமி ஒருவரே பிரபஞ்சத் தாய்! கவி எழுத்தால் எத்தனை உவமானங்களை  சுவாமிக்கு வழங்கிய போதும்.. அவை எதுவுமே சுவாமியின் பரம கருணையை முழுதாக அளக்கவே முடிவதில்லை!

     "உன் எதிர்காலம் சற்று சரியில்லாமல் இருக்கிறதே!" என சுவாமி சொல்லிய உடனேயே... கொஞ்சமும் கவலைப்படாமல் "அதற்கு நீங்கள் இருக்கிறீர்களே!" என்கிறார் சத்யா. அது தான் பக்தி! பக்தி கவலைப்படாது... வருத்தப்படாது! முகத்தை தூக்கி வைத்துக் கொள்ளாது... கர்வப்படாது! முழுதாய் மனம் பதமானால் தான் பக்தி! அப்படிப்பட்ட பக்தர்களையே சுவாமி அதிகம் நேசிக்கிறார்... அந்த சத்யாவின் பதிலுக்கு சுவாமி "ஆம் நான் உன்னுடன் எப்போதும் இருக்கிறேன்!" என்கிறார். உடனே ஒரு ஐந்து நிமிடம் சத்யாவின் உச்சந்தலையை தனது திருக்கையால் அழுத்தமாய் பதிக்கிறார்! எப்பேர்ப்பட்ட அனுகிரகம் சத்யாவுக்கு... இதை விட வேறென்ன பாக்கியம் தேவை... ! பிற்காலத்தில் சத்யாவின் குடும்ப வாழ்வில் பல சிக்கல்கள் நேர்ந்தபோதும் அவை எல்லாம் சுவாமியின் திருக்காவல் அனுகிரகத்தில் கரைந்து காணாமல் போய்விடுகிறது! 

     

ஒருமுறை சத்யாவின் தாயாரும் சத்யாவின் சகோதரியும் பர்த்திக்கு செல்லும் வழியில் பெனுகொண்டாவில் பேருந்து நிற்க... அதிகாலையே புறப்படும் படி ஒரு இக்கட்டான சூழல்.. மூவரும் பெண்கள்... நேரமோ நடு நிசி.. பாவம் என்ன செய்வார்கள்... அப்போது சுவாமி ஒரு காவலர் சீருடையில் தோன்றி அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்று.. மறுநாள் காலையும் தோன்றி பேருந்து ஏற வைத்திருக்கிறார்... அவர்கள் நன்றி சொல்லத் திரும்புகையில் நொடிப்பொழுதில் அந்த இடத்தை விட்டே மறைந்திருக்கிறார்! சத்யாவின் வீட்டில் சுவாமி பஜனை நிகழ்கிற போதெல்லாம் விதவிதமான பூக்கள் தோன்றுகிறது.. பலர் சுவாமியை நாற்காலியில் அமர்ந்தவாறு பலமுறை பஜனையில் தரிசித்திருக்கிறார்கள்! சத்யா ஒருமுறை உடல் நலம் சரியில்லாத போது சுவாமி உடனே கனவில் தோன்றி விபூதி சிருஷ்டித்து சத்யா வாயில் தூவி அபயம் காட்டி மறைந்திருக்கிறார். அடுத்த நாளே எழுந்து அமர்ந்துவிடுகிறார் சத்யா. ஆம் எழுந்து அமர்வதற்காகத்தான் சுவாமி மனதரிடையே அவதரித்திருப்பது... அந்த எழுகை அறியாமையிலிருந்து ஞானத்திற்கானது... அந்த அமர்தல் அலைதலிலிருந்து ஆன்ம தரிசனத்திற்கானது...!

(ஆதாரம் : அற்புதமும் ஆன்மீகமும் - 3 / பக்கம் : 90 / ஆசிரியர் : திருமதி சரோஜினி பழனிவேலு) 


சுவாமியின் பரமகருணை பரிசுத்தமானது! சுவாமியை யாராலும் எவராலும் பயன்படுத்தவே முடியாது...! அவர் வெறும் பொருள் அல்ல பரம் பொருள்.. அந்தப் பரம்பொருளை அனுபவிக்கக்தான் முடியும்! அந்த அனுபவம் ஆன்ம சாதனையால் ஆழமாகிறது... நமது இதய விரிவால் அகலமாகிறது! "நீ இருக்கிறாய் சுவாமி... எனக்கு எந்த குறையுமில்லை.. நீ மட்டுமே போதும் சுவாமி!" என மனம் உறைவதே சரணாகதி! அதை அடைந்துவிட்டால் வானகமே ஒருவரின் காலடியில் விழுந்து மண்டியிடுகிறது! சுவாமி ஒருவரே சத்தியம்... மற்றதனைத்தும் மனிதக் கற்பனையே!!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக