நம் தாயக விடுதலைக்காக, வீறுகொண்டு எழுந்து, தன்னலமற்று பாடுபட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றி, நெஞ்சம் நெகிழ்ந்து பாபா அவர்கள் பாராட்டிக் கூறியது என்ன?
2007ம் ஆண்டு ஆகஸ்ட் 15 சுதந்திரத்திருநாள் அன்று, பாபா அவர்கள் நேதாஜி பற்றிய ஒரு உணர்ச்சிப் பிரவாகமான சொற்பொழிவாற்றினார் 25 நிமிடநேரம், பொங்கும் அருவியின் தாரையாய், தங்கு தடையற்ற பேருரையில் நேதாஜி அவர்களின் பெருமைகளை மனமுருகி எடுத்துரைத்தார். அனைவரின் மனங்களை உருக்கிய அவரது உரை, நமது அன்னைத் திரு நாட்டிடம் நம்மில் அனேகருக்கு அன்பு இல்லாததை சுட்டிக்காட்டும் ஏக்கக் குரலாக ஒலித்தது. நாட்டுப்பற்று என்றால் என்ன/நாம் எப்படி இயங்க வேண்டும் என்ற கேள்விக்கு விடையாக இருந்தது.
அன்றைய சுவாமியின் பேருரை. சுவாமியின் மனம் திறந்த பேருரையில் காணப்பட்ட ஆதங்கம் சொற்களால் நம்மால விவரிக்க இயலாது. பாபா கூறுகிறார்....
இங்கு இயக்கப்படும் ஒலிபெருக்கிகளில் எழுதப் பட்டிருக்கும் சொல் "போஸ்" (அந்த ஆடியோ ஸ்பீக்கர்கள் Bose என்ற கம்பெனியால் உருவாக்கப்பட்டவை) ஆனால் நாட்டின் சுதந்திரத்திற்கு உழைத்த "போஸின்" பெயரை நாம் மறந்துவிட்டோம் என்று தமது உரையை ஆரம்பித்த பாபா போஸ் அவர்களின் குடும்பம் பற்றி கூறுகையில், நேதாஜியின் மூத்த சகோதரரான சுரேஷ் சந்திர போஸ் அவர்களின் மகள் லலிதா போஸ் என் மீது மிகுந்த பக்தி கொண்டவள்.. சதா 'சாய்ராம் சாய்ராம்' என்றே சொல்லி கொண்டே இருப்பாள். அவள் தமது தந்தையின் சம்மதம் பெற்று தம்மை பர்த்தியிலும், ஒயிட் பீல்டிலும் தரிசிக்க வந்ததாகவும் சொல்கிறார். மேலும் லலிதா போஸ் கொடைக்கானலோ, ஊட்டியோ அல்லது மதுரையோ சுவாமி செல்லும் இடங்களுக்கெல்லாம் அவரைத் தொடர்ந்து வந்ததாகவும் கூறுகிறார். சதா சாயி நாம ஜெபத்துடன், பஜன் பாடல்களையும் பாடி இறைபக்தியில் திளைத்திருந்த அவள், ஒரு சமயம் சுவாமியிடம் பேசும் போது, "சுவாமி... எனது சித்தப்பா ஒரு தீவிர தேச பக்தர். நாங்கள் பாரதத் திரு நாட்டின் புதல்வர்களாக இருப்பதில் பெருமை கொண்ட நிலையில், இன்றைய இந்தியர்களிடம் அந்த உணர்வு மறைந்து ஒற்றுமையும் சிதைந்து விட்டதே" என வருத்தப்பட்டதாகவும் சுவாமி கூறினார்.
மேலும் "சுபாஷ் சந்திர போஸ் நல்ல உடல் உறுதியும் , மனத்திடமும் கொண்டவர். நம் அன்னைத் திருநாடு உலகில் தலை சிறந்தோங்க வேண்டும் என்பது அவரது கனவாகும். அவரது தீவிர நாட்டுப்பற்று புகழும் கண்டு பொறுக்காத, அவரது சம காலத் தலைவர்கள் அவர் மீது பொறாமை கொண்டு, அவரின் புகழ் பரவாமல் தடுத்துவிட்டனர். அவர் விமான விபத்தில் இறந்ததாக அவர்கள் கூறியது தவறு. அந்த சமயத்தில் அவர் ஒரு கப்பலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்" என பாபா கூறுகிறார்.
"போஸ் ஒரு செயல் வீரர். அவர் போன்ற ஒருவர் இன்று இல்லாதது என் மனதை வலிக்கச் செய்கிறது. அவர் இந்தியாவின் அடிமையாம் அவலநிலையை நன்கு உணர்ந்திருந்தார். சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட அவர், சுதந்திரம் என்பது மனதோ. உடலோ சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல.அது ஆத்மா சம்பந்தப்பட்டது என்ற தத்துவத்தையும் உணர்ந்திருந்தார். அவரது நாட்டுப்பற்று போற்றிப் பாராட்டுதலுக்குரியது. அவரது போராட்டம் சுயநலமற்றது. இன்று நாம் விருந்துகளிலும், களிப்புகளிலும் ஈடுபட்டு வருகிறோம். தனவந்தர்களாகத் திகழும் பலரும், எளியவர்களைச் சகோதரர்களே என பேச்சளவில் அழைத்துவிட்டு, செயலளவில் அதை நிராகரிக்கின்றனர். ஆனால் அந்த சகோதரத்துவ அன்பை, போஸ் தம் வாழ்வில் கடைபிடித்து, செயலிலும் காட்டினார்.
மேலும் போஸ் ஒருமுறை என்னை சந்திக்க புக்கப்பட்டினம் வரை வந்தார், ஆனால் அதற்குமேல் அவரால் பர்த்திக்கு வர இயலவில்லை.. ஆகவே, நானே அவரைப் பார்க்கப் புக்கப்பட்டினம் சென்றேன். என்னைக் கண்டதும் அவர் உணர்ச்சி வசப்பட்டு என் கரங்களைப் பற்றி "இந்த இளம் வயதில் நீங்கள் செயற்கரிய செயல்களைச் செய்கிறீர்கள். மனித குலத்தின் விடுதலைக்காக நீங்கள் பாடுபடுகிறீர்கள்" என்றார்.
"நமது தாய்நாடு நம் புனித தாய்க்கு சமமானது. இதன் சுதந்திரம் என்பது ஆத்ம விஸ்வாசமே என்பதை உணருங்கள். போஸ்மீது நான் வைத்த அன்பினாலே தான் இங்கு அவர் பற்றி பேச வந்தேன். இவர் போல கவிக் குயில் சரோஜினி நாயுடுவும் ஒரு புனித ஆத்மா தான். இவர்களைப் போன்ற ஒளிரும் ஆத்மாக்களை நாம் மறக்கக் கூடாது".
🌻 சுவாமி தமது பேருரையை முடிக்கும் போது அவரது குரல் உணர்ச்சி வசத்தால் கம்மி இருந்தது. இவர்களைப் போன்ற தன்னலமற்ற தியாகிகளை சுவாமி தமது இதயத்தின் நெருக்கத்திலே வைத்து போற்றுகின்ற இந் நிகழ்வு, நாம் எப்படி வாழ்ந்தால் அவரது அருளையும், அருகாமையையும் பெறலாம் என்பதை உணர்த்துகிறது அல்லவா? 🌻
ஆதாரம்: Radio Sai Prasanthi Diary 2007
தமிழில் தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர்
ஜெய் சாய்ராம்.....ஜெய்ஹிந்த்.....🇮🇳🙏
பதிலளிநீக்கு