தலைப்பு

வியாழன், 3 பிப்ரவரி, 2022

அண்டி வருவோரைக் காக்கும் கிண்டி பாபா திருக்கோவில்!

(03-02-1949) இதே நாளில் அன்று!

அன்றும் ஒரு குருவாரம். அது 1949 பிப்ரவரி 3 ம் நாள். மன்று ஆடும் நடராசன், குன்றத்தை குடைபிடித்து கோகுலத்தைக் காத்த நேசன், பக்தர் மனம் நின்றாடும் பர்த்தீசன், தருமிகு சென்னையில், பெருமைமிகு ஷீர்டி பாபா கோயிலைத் துவக்கிவைத்து நம் அனைவரையும் ஆசியளித்த நந்நாள். வாருங்கள் நினைவுத் தடங்களில் பயணித்து அந்த கோலாகலக் காட்சிகளைக் காண்போம்...


1.உன்னையல்லால் வேறு தெய்வமில்லை, என்று லோகநாத முதலியார், பாபாவின் பொன்னடி சரணடைந்து, கிண்டியில் ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்களுக்கு ஒரு கோயில் கட்ட முனைந்தபோது, "என் முந்தைய தேகத்திற்கு, இங்கு ஒரு திருக்கோயில் எழுப்பு" என பாபா இயம்பினார். 

2.  அக்காலத்தில் யாருமே அறியாத ஷீரடியாருக்கு, எப்படி சிலை வடிக்க இயலும் என முதலியார் தவித்தபோது ஷீரடிபாபா திருஉருவப் படம் சிருஷ்டித்து, எங்கிருந்தோ ஒரு ஸ்பதியையும் அனுப்பி , அற்புதமாக , உலகிலே முதல் முதலாக ஷீர்டிபாபாவின் கல்லால் ஆன விக்ரஹத்தை உருவாக்கினார்.

3.பாபாவின் அருளால் யுத்த காலத்திலும் கட்டிடப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைத்து, திருக்கோயில் வளர்ந்து முற்றுப்பெற்றது.

4.  1949 பிப்ரவரி 3ம் நாள் குருவாரத் திருநாளில், குருபாபாவான நம்சாயி, கர்ப்பக்கிரஹத்தில் ஷீர்டியார் திருவுருவச் சிலையருகே, பிரத்யட்ச தெய்வமாக நின்று,   தமது அங்கையின் அசைவிலே வெள்ளி விநாயகரின் அற்புதச் சிலையையும், நவ ரத்தினங்களையும் சிருஷ்டித்து, ஷீர்டி பாபா விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்படும் குழியில் சொரிந்தார்.

5. பிறகு பாபா அவர்கள் தங்கப் புஷ்பங்களளைச்  சிருஷ்டித்து, அவற்றை லோகநாத முதலியாரிடம் கொடுத்து அர்ச்சனை செய்யச் சொன்னார். 

6. விக்ரஹ பந்தனம் செய்ய அமைக்கப்பட்டிருந்த  குழியில் வைக்கப்பட ஷீர்டி பாபாவின் சிலையை நோக்கி தமது கையை, ஸ்ரீசத்ய சாயி பாபா அவர்கள் அசைத்தார். அப்போது அந்த சிலை சிறிது உயரம் மேலெழும்பி மறுபடியும் தனது இருப்பிடத்தில் அமர்ந்தது. இதன் முலம் பாபா, தமது சக்தியை ஷீர்டி பாபா விக்ரஹத்தில் புகுத்தினார்.

7. அதன்பின்னர், அங்கு ஒரு ஸ்ரீசக்ர யந்திரத்தையும் ஸ்தாபித்து அருளினார்.

8.பிறகு முதலியார் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி ,சந்தனக் குழம்பில் கால் பதித்த சத்ய சாயி பாபாவின் சின்ன கால் தடங்கள்,ஷீர்டி பாபாவின் பெரிய திருவடித் தடங்களாக உருவாகின. (இந்த ஸ்ரீ சக்ரமும், பாபாவின் சந்தனம் படிந்த காலடிச் சுவடும், கோயிலின் கருவறையில் இன்றும் காணலாம்)

9. பிரதிஷ்டை முடிந்து ஒருமாத காலம் பாபா தினமும் இக் கோயிலுக்கு வருகை தந்து , தமது அருட்சக்தியை அங்கு பரவச் செய்தார்



விக்ன விநாயகர் சந்நிதி, நவக்கிரஹங்கள் சந்நிதி என சந்நிதிகளையும் கொண்டு, பர்த்திக்கு முன்பே சர்வமத ஸ்தூபியும் நிறுவப்பட்ட இத்தனை சிறப்பு வாய்ந்த , தெய்வமே, தெய்வத்தை பிரதிஷ்டை செய்த இந்த திருக்கோயிலின் 74வது பிரதிஷ்டாப மஹோத்சவ தினமும் ஒரு குரு வாரத்தில் நிகழ்வது நமது நெஞ்சங்களை பக்திப் பரவசத்தில் ஆழ்த்துகின்றது.. இன்று தான் (3.2.2022 ) கிண்டி திருக்கோயிலின் 74 வது பிரதிஷ்டா தின நந்தாள்.

அவனருளாலே அவன்தாள் பணிவோம். 🙇🏻‍♂️

ஜெய் ஸ்ரீ சாய்ராம்.


ஷீரடி சாயி   துவரகமாயி

பிரசாந்திவாசி சாயிராம்

சாயிராம் சாயிராம்

ஏக் நாம் சுந்தர நாம்.


தொகுத்தளித்தவர்: திரு, குஞ்சிதபாதம், நங்கநல்லூர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக