பாரதப் போரில் பார்த்தனுக்கு சாரதியாய் தேர் ஓட்டிய பகவான் ஸ்ரீகிருஷ்ணர், சொந்தங்களுக்கு எதிராக போரிட விரும்பாத மனம் கலங்கிய அர்ஜூனனுக்கு பகவத் கீதையை உபதேசித்து சிந்தை தெளிவித்தார். மஹா பாரத யுத்தம் ஏற்படுத்திய கொடிய விளைவுகளுக்கு நிகராக கலியுகத்தின் அதர்மம் தலை விரித்து ஆடுகின்ற இந்த சந்தர்ப்பத்தில், தர்மம் என்ற தேரில் ஏறி, அன்பு என்னும் கீதையை "சனாதன சாரதி"யின் வழி அச்சிலேற்றி அனைவருக்கும் உபதேசித்து சத்ய யுகம் மலரச் செய்ய , அதே ஸ்ரீ கிருஷ்ணரே பகவான் ஸ்ரீ சத்யசாயியாக அவதரித்துள்ளார்....
🌹உலக மறையாம் சனாதன சாரதி இதழ் பிறந்தது:
பவ வினைகள் போக்கும் சிவராத்திரி புண்ணிய நாள். சுவாமியின் ஒருபாதி அம்சமான நிறை மூர்த்தி சிவன் மறை லிங்கங்களை சிருஷ்டித்து நம் பவ வினைகளைக் களையும் சுபராத்திரி, பெருநாள். 1958 பிப்ரவரி 16ம் நாள், சிவராத்திரி நன்நாளின், பொன் மாலைநேரம். பகவானின் வாய்மொழி உபதேசங்கள் அவரது திருக் கரங்களிலே தவழ்கிறது, இதயக் கிழிசல்களை இறுகத் தைக்கும் புனிதமான நல் நூலாக... ஞானப் பாலில் ஊறித் ததும்பிடும் ஏடாக... சனாதன சாரதி என்னும் உலகப் பொதுமறையாக...
சனாதன சாரதியின் முதல் இதழை பகவான் கூடி இருந்த பக்தர்களுக்கு அளித்து, ஆசீர்வாதச் செய்தியாய் கூறியதாவது...
"இந்த "சனாதன சாரதி" வேதங்கள் , உபநிஷத்துகள், சாஸ்திரங்கள் என்ற அஸ்திரங்களை ஏந்தி...பொய்மை, அநீதி, அக்கிரமம் மற்றும் தீமைகளை எதிர்த்துப் பிரச்சாரம் மேற்கொள்ளும் பணியைத் துவங்கியுள்ளது! இந்த சாரதி, உலக மேம்பாட்டுக்காகவும் , மனித குலம் களிப்புடன் வாழவும் ஜெயபேரிகை கொட்டி முழக்கமிடும்!"
🌹சனாதன சாரதி இதழ் உருவானது எப்படி?
பலகாலம், பகவானின் பக்கத்திலேயே இருந்து பாதசேவை புரிந்து ஸ்ரீ பிரேம சுவாமியின் தாயாய்ப் பிறந்திருக்கும் பாக்கியவான் திரு கஸ்தூரி அவர்கள் தமது "LOVING GOD" என்ற புத்தகத்தில் கூறியுள்ளதாவது.
"நான் எனது பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின், பகவான் பாபாவின் அண்மையில் புட்டபர்த்தியில் வசிக்கலானேன். அப்போது பெங்களூர், ரேடியோ நிலையத்தில் டைரக்டராக வேலை நியமனம் கிட்டியது. நான் அதை ஏற்க நான் விரும்பாவிடினும், பாபாவின் விருப்பத்தின் மேல் அந்தப் பணியில் சேர்ந்தேன். இவ்வாறு 15 மாதங்கள் கழிந்தன. அப்போதுதான் பாபா அவர்கள் பெங்களூர் திரு. விட்டல்ராவ் இல்லம் வருவதாக ஒரு செய்தி கிடைத்தது. திரு. விட்டல்ராவ் அவர்களின் இல்லம் நான் குடி இருந்த வீட்டிற்கு மிக அருகாமையில் இருந்தது. சிறிது துப்பு துலக்கும் வேலையில் ஈடுபட்டேன். திரு. விட்டல்ராவ் வீட்டு ஜன்னல்கள் மற்றும் கதவு திரைச் சீலைகள் துவைப்பவரிடம் பேசி, அந்தத் துணிகள் சலவை செய்தபின் ஒப்படைத்த நாளைக் கண்டறிந்தேன். அன்று எனது சிறிய மகளை விட்டல்ராவ் வீட்டிற்கு எதிரில் வாசலிலே உட்காரவைத்தேன். இதன் மூலம் பாபா அவர்கள் திரு.விட்டல்ராவ் வீட்டிற்குள் நுழைந்த 10வது நிமிடத்தில் நான் அங்குசென்றுவிட்டேன்.
விட்டல்ராவ் ஆச்சர்யமுடன் என்னை தடுக்க முயல்கையில், பாபா என்னைப் பார்த்துவிட்டார். அருகில் அழைத்து என் தோள்மீது தமது கரத்தை போட்டபடி, "உனக்கு புட்டபர்த்தியில் இப்போது வேலை தயாராக உள்ளது. ஒரு மாதாந்திர இதழ் வெளியாகப் போகிறது அதன் பெயர் என்னவாக இருக்கலாம்?" என என்னை வினவினார். சிறிது தயக்கத்திற்கு பின் நான் கூறினேன். "கடவுளின் பாதை( Godward path) / கர்ம தர்மா (Karma Dharma) /ப்ரேம யோஹா (Prema Yoga)." இல்லையில்லை என தமது தலையை அசைத்து மறுத்த பாபா "நான் தீர்மானித்து விட்டேன், அதன் பெயர் சனாதன சாரதி" என்றார்.
🌻யுத்த களத்தில் பார்த்தனுக்கு ஒலி வடிவில் உபதேசித்த கீதையை, இன்று பாரதத்தில், பார் அனைத்தும் பயன்பெற, பாபா மொழி வடிவில் வெளிக் கொணர்ந்துள்ளார். சனாதன தர்மத்தின் வேரான சத்ய, தர்ம, சாந்தி ப்ரேமை. அஹிம்சைகளை, சாறாக வடித்து உலக மக்களுக்கு நேராகப் புகட்டும் புத்தகமாக "சனாதன சாரதி" திகழ்கிறது. அது புத்தக வடிவிலுள்ள பொக்கிஷம். பாபாவின் போதனைகள் நிரம்பிய அற்புதக் கருவூலம்.
Source: 'Loving God' by Prof. Kasturi & Sri Sathya Sai Digvijayam (1926-1985)
தமிழில் தொகுத்தளித்தவர்: திரு குஞ்சிதபாதம், நங்கநல்லூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக