தலைப்பு

வியாழன், 24 பிப்ரவரி, 2022

பரவசக் கண்ணீர் வரவழைக்கும் பாபாவின் பால்ய காலத்து நேரடி வாக்குமூலங்கள்!

கோடை கால வகுப்புகளிலும்.. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பக்தர்கள் சிலரோடும் தனது பால்ய நாட்களை சுவாமி பகிர்ந்த கொண்ட தனது தெய்வீக இளமை நாட்கள் சுவாரஸ்யமாய் சுவாமியின் சொல்வழியே இதோ‌...


"ஏழு எட்டு வயதிருக்கும் எனக்கு.. நான் லோயர் எலிமென்ட்ரி பள்ளியிலே படித்துக் கொண்டிருந்தேன்! அதுக்கப்பறம் புக்கப்பட்டணம் ஹையர் எலிமென்ட்ரி ஸ்கூலிலே சேர்ந்தேன்.. புட்டபர்த்தியிலிருந்து புக்கபட்டிணத்துக்கு குறுக்கு வழியில் போனால் கூட இரண்டரை மைல் தூ....ரம்.. வீட்டில் ஒரே வறுமை.. நடந்தே தான் தினசரி போவேன்... சிலப்போ இரண்டுமுறை போய்ட்டு வரும்படி ஆகும்... எனக்கும் என் தாத்தாவுக்கும் நானே சமையல் செய்வேன்.. முழுக்க சைவ சமையல்... சில நாள் 8 மணிக்கு ஸ்கூல் போவதற்கு சமையலை பாதியில் முடித்து மீண்டும் இன்டெர்வல் (11 மணி முதல் 2 மணி வரை) விடும்போது மீண்டும் வீட்டுக்கு வந்து சமைத்து முடிப்பேன்.. இப்படி அந்த காலத்துலயே சுவாமி தினமும் 10 மைல் நடந்திருக்கிறேன்... இதில் வீட்டு வேலையும் வேற... இப்ப நீங்க எங்க அழச்சாலும் சிம்மாசனம் போடறீங்க.. கர்ஷீஃப் தரீங்க... குடிக்கிற தண்ணீர மூடி வெச்சு தரீங்க... டிவோட்டீஸ் லெட்டர நான் வாங்க.. அத கலெக்ட் பண்ணறதுக்கு கூட ஒரு ஆள் கூடவே வரீங்க ... வெளியே பாக்கறப்போ சுவாமி நவாப் மாதிரி இருக்காருன்னு நீங்க நினைக்கலாம்.. இல்ல அது உண்ம இல்ல.. ஒரு நாள்ல நான் எவ்வளவோ வேல பாக்குறேன்... தெரியுமா...? எந்த வேலையையும் எடுபடியா யாரையும் அழச்சு வேல வாங்கறது இல்ல... சுவாமி பாத்ரூம கூட சுவாமியே தான் க்ளீன் பண்றேன்... இப்படி சுவாமி ஏராளமான காரியம் பண்றேன்...


நான் பொறந்த நாள்ல இருந்தே நான் அவதாரம்னு எனக்கு நல்லா தெரியும்.. ஆனாலும் சராசரி மனுஷனா என்னோட வேல எல்லாம் நானே அலுக்காம அருவருக்காம தான் பாத்துக்கறேன்... புக்கபட்டண ஸ்கூல் டேஸ்'லயும் இப்படித்தான்... அப்பல்லாம் எனக்கு டிரஸ்'ங்கறதே மொரட்டு துணியில ஒரே ஒரு ஜோடி... அவ்வளவு தான்! அதத்தான் போட்டுப்பேன்.. வேற வாங்க காசு இருக்காது.. தீபாவளி வந்தா தான் புது டிரஸ் .. வருஷா வருஷம் ஒரு டிரஸ் தான்.. 


அது கூட ஸ்கூல் ல கிழிஞ்சு போகும்.. எப்டீன்னா.. நான் சத்யாவா ஸ்கூல்ல படிக்கும் போது... சத்யா தான் நம்பர் ஒன் மார்க் எல்லாத்தலயும்... அதனால ஸ்கூல் லீடர்.. கிளாஸ் லீடர் சத்யா தான்... டீச்சர் பாடம் எடுக்கும் போது கேள்வி கேட்பார்.. எல்லாரும் முழிப்பாங்க.. சத்யா தான் 'டான் டான்'னு பதில் சொல்வான்.. அதனால பதில் சொல்லாத மாணவர்கள சத்யா அடிக்கணும்.. பாவம் பசங்க... என்னால அவங்கள எப்படி அடிக்க முடியும்.. இப்பவே சுவாமி அஞ்சு அடி தான்.. அப்போ இதவிட குட்டியோண்டா இருப்பேன்னா பாத்துக்கோங்க.. எனக்கு எட்டாது அதனால அவங்கள நிக்க வெச்சு... ஒரு நாற்காலி மேல ஏறிட்டு கைய வேகமா அவங்க கன்னத்துல கொண்டு போற மாதிரி ஆக்ஷன் எல்லாம் பலமா முகத்துல வெச்சிட்டு (சுவாமி சிரிக்கிறார்) கன்னம் கிட்ட வரும் போது ரோஜாப்பூ மாதிரி தொடுவேன்... என்னால யாரையுமே எப்பவுமே காயப்படுத்த முடியாது!" "என்னடா சத்யா அடிக்கற மாதிரி நடிக்கற?" என ஆசிரியர் சத்யாவ அடி வெளுத்துவிடுவாரு... பசங்களும் ஆசிரியர் அப்படி என்ன வெச்சு அடிக்க சொன்னதால அவமானமா நெனச்சு அவரு போன அப்பறம்... பசங்க என்ன அடிப்பாங்க.. சட்டய கிழிப்பாங்க ... அப்ப கூட சுவாமிக்கு அவங்க மேல கோபமே வராது.. அவங்க பாவம்.. அறியாமையில அப்படி பண்றாங்க'ன்னு தான் நெனச்சு பரிதாபப்படுவேன்... ஏன்னா என்னால யாரையுமே எப்போமே வெறுக்க முடியாது... அவங்க வெறுத்தப்போ கூட அவங்ககிட்ட அன்பாத்தான் இருந்தேன் ... போகப் போக என் அன்ப அவங்க புரிஞ்சுகிட்டாங்க.. எல்லாருமே உள்ளூர நல்லவங்க தான்.. அறியாமையால சிலப்போ தப்பு பண்றாங்க... சட்ட கிழிஞ்சிரும்ன்னு சொன்னேன்ல...அந்த சட்ட கிழிஞ்சதால வீட்டுல ஊசி இருக்காது.. முள்ள வெச்சு குத்தி சமாளிப்பேன்.. ஏன்னா புது டிரஸ் வாங்க எல்லாம் உடனே முடியாது... அப்பறம் பசங்களுக்கு நிறைய ஸ்வீட்ஸ் சிருஷ்டி பண்ணி கொடுப்பேன்... அவங்களுக்கு சத்யா'ன்னா ரொம்ப இஷ்டம்... என்ன பிரியவே மாட்டாங்க... ஸ்கூல்ல மட்டும் இல்ல வெளியில கூட என்ன லீடர்.. குரு அப்படீன்னு கொண்டாடுவாங்க...


பஜனைங்க கத்துக் கொடுப்பேன்.. கத்துக்கிட்டாங்க... கூடப் பாடுவாங்க... இப்படியே நல்ல பிஹேவியர் அவங்களுக்கு டெவலப் ஆச்சு... ஒரு முற என்னாச்சு.. சுவாமி ஒரு குறும்பு பண்ணேன் (சுவாமி சிரிக்கிறார்)... புட்டபர்த்தி மணியக்காரர் குரூப்க்கு நல்ல நடத்த இல்ல.. அதனால அத ஒரு பாட்டா எழுதி.. ஸ்கூல் பசங்கள வெச்சு பாட வெச்சேன்.. அவங்களும் அதோட அர்த்தம் தெரியாம மனப்பாடம் பண்ணி.. அவங்க முன்னாடி பாடிட்டே போவாங்க... சுவாமி  ஒளிஞ்சிருந்து வேடிக்க பாப்பேன்.. தங்கள பத்தித்தான் அந்தப் பாட்டுன்னு அவங்களுக்கு புரிஞ்சு போக.. பசங்களும் என்ன மாட்டி விட...வெங்கப்பர கூப்ட்டு அனுப்சாங்க.. கண்டிக்க சொன்னாங்க..."இனிமே நீ அப்டீலாம் அவங்கள பாடச் சொல்லக் கூடாது..ன்னு" அதட்டினார்.. சுவாமியும் தல ஆட்டினேன்.. அடுத்த நாள் என்னாச்சுன்னா... (சுவாமி சிரிக்கிறார்) சுவாமியே அவங்க முன்னாடி பாடிட்டே போனேன் அப்படியே முன்னாடி வெங்கப்பர் நின்னு கோபமா பாக்கறாரு... "என் சொல்ல மீறிட்ட நீ" என அதட்டினார்.. "நான் எப்போ மீறினேன்? நீங்க என்ன சொன்னீங்க.. அவங்கள இனிமே அப்படி பாட வேண்டாம்னு சொல்லச் சொன்னீங்க... நானும் சொல்லிட்டேன்.. ஆனா என்ன பாட வேண்டாம்னு சொல்லலியே" அப்படீன்னு கேட்டுட்டு.. "இப்படி அத பாட்டா எழுதி வெச்சு பாடுறதே தப்பா இருக்குன்னா... அத அவங்க செயல்லயே பண்றாங்களே அது மட்டும் சரியா?" என அவர் முகத்துக்கு நேரா தீர்க்கமா கேட்டேன்.. வெங்கப்பர் கண்ணு பூரா தண்ணி... அத கேட்ட அந்த குரூப்பும் தன்னோட நடவடிக்கைய அப்பறம் மாத்திக்கிட்டாங்க! 


அப்பவே சுவாமி கிட்ட பேரன்பு வெச்ச டீச்சர்ஸும் கிளாஸ் மாஸ்டர்ஸும் இருந்தாங்க... ஒரு தெலுங்கு டீச்சர் மாத்தலாகிக் கூட சுவாமி படிக்கிற உரவகொண்டா ஸ்கூலுக்கு வந்திருக்காரு ... அப்படி ஒரு லவ் சுவாமி மேல... கமலாபுரத்துல எங் கூட படிச்ச ஸிரஸ்ததாரின் பிள்ளைங்க.. சுவாமி மேல உயிரையே வெச்சிருந்தாங்க... ரொம்ப நல்ல பசங்க... ஒருவாட்டி என்னாச்சுன்னா.. அவங்க ரெண்டு பேரும் சுவாமி கிட்ட வந்து  "சத்யா நீ தான் எங்க ரெண்டு பேரையும் எப்படியாச்சும் பாஸ் பண்ண வைக்கணும்னு" ரொம்ப அழுதாங்க.. அப்ப நான் ஒண்ணு பண்ணேன்.. அது நீங்க யாரும் பண்ணவே கூடாது... எங்கிட்ட சரணாகதி அடஞ்சிட்டா நான் அவங்களுக்காக என்ன வேண்ணா பண்ணுவேன்... அதனால அவங்கள பரீட்சை எழுதிட்டு.. பேர எழுதாம கொடுக்க சொன்னேன்... அவங்களும் அப்படியே பண்ணிட்டாங்க.. சுவாமி என்ன பண்ணேன்னா (சுவாமி சிரிக்கிறார்)... சுவாமி முதல்ல பரீட்ச எழுதி சீக்கிரமா முடிச்சிட்டு.. அவங்க ரெண்டு பேருக்கும் சுவாமியே பரீட்சை எழுதி அவங்க பேர போட்டு தனித்தனியா டீச்சர்'ட்ட கொடுத்துட்டேன்.. அவங்களும் பாவம் பாஸ் ஆயிட்டாங்க! அப்பறம் சுவாமி  அவதாரம்'னு அறிவிச்சிட்டு ஸ்கூல் போறத நிறுத்தின அப்பறம்.. "சத்யா சுவாமி ஆயிட்டான்டா... இனிமே ஸ்கூல் பக்கமே வரமாட்டான் டா!" என அந்த ரெண்டு பசங்களும் அதிர்ச்சி தாங்காம.. ஒருத்தன் தற்கொல பண்ணிக்கிட்டேன்.. இன்னொருத்தன் அந்த அதிர்ச்சிய நெனச்சே பைத்தியம் புடிச்சு... அவனும் கொஞ்ச நாள்ல போய்ட்டான்... வேறெங்கும் நான் அவங்கள போக விடல... எனக்குள்ளேயே ரெண்டு பேரையும் ஐக்கியமாக்கிக் கிட்டேன்! "

என்று சுவாமி தனது திருக்கல்யாண குணங்களைச் சொல்லி பரவசப்பட வைக்கிறார்... 

(ஆதாரம் : லீலா நாடக சாயி / பக்கம் : 17 / ஆசிரியர் : ரா.கணபதி )


பாபா தனது இறைப் பேராற்றலை வைத்து தனக்கான எந்த வசதியையும் எப்போதும்... அவர் சத்யாவாக இருந்தது முதற்கொண்டே செய்து கொண்டதில்லை.. அந்தப் பேராற்றலை பக்தர்க்கே பயன்படுத்துகிறார்...அது தான் இறையின் பெருங்குணம்... பாபாவின் வாழ்க்கையின் திருச்சம்பவங்கள் நமக்கு எளிமை- நேர்மை - தூய்மை - பிரேமை இவற்றையே கற்றுக் கொடுக்கின்றன...! இப்பேர்ப்பட்ட பேரற்புத பெருங்கருணை இறைவனின் கால்களில் விழுந்தபடியே வாழ வேண்டும்... அது போதும்.. வாழ்க்கை என்பது அவ்வளவு தான்.. சுவாமியின் திருப்பாதங்களில் விழுந்து கிடப்பது... பாபா போதும் என்றிருப்பது!! அது போதும்... அது ஒன்றே போதும்... அதுவே சரணாகதி... சுவாமியிடம் சரணாகதி அடைவதே இந்த மனித வாழ்க்கைக்கான ஒரே இலக்கு.. நம் விடியலுக்கான ஒரே கிழக்கு! வேறெதிலும் சாரம் இல்லை.. வேறெதுவும் சத்தியம் இல்லை.. வேறொன்றிலும் சுகமே இல்லை!!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக