தலைப்பு

சனி, 19 பிப்ரவரி, 2022

ஒரு பக்தரின் அனுபவம் வாசித்ததால் சொந்த வீடு அனுகிரகமான சுவாமி குடும்பம்!

வேறொரு பக்தருக்கு நிகழ்ந்த சுவாமி அனுபவம்.. அதை வாசித்து அதனால் ஏற்பட்ட சுவாமி மேலான திட நம்பிக்கையும் பக்தியும் ஒரு பெருஞ்செயலை எவ்வாறு நிறைவேற்றியிருக்கிறது என்பதற்கான பரவச அனுபவம் இதோ...


திருமதி ராமகிருஷ்ணனின் ஏற்பாட்டின்படி சீனிவாசபுரம் திரு சாயிநாத் சர்மா தம்பதியினரை நேர்காணல் எடுக்க சந்திக்கிறார் நூலாசிரியர். வீட்டின் உள்ளும் புறமும் சுவாமியின் திருப்படங்கள்... புறக்கண்களுக்கும் சுவாமியின் திருப்படங்கள் பக்தியை ஊட்டிக் கொண்டிருக்கின்றன...! சாயிநாத்தின் பெற்றோர் ஷிர்டி சுவாமி பக்தர். அவர் பிறக்கும் போது அவர் தந்தை ஷிர்டியில் இருக்கிறார்... சாயிநாத் எனப் பெயர் வை..இப்படி தந்தையிடம் இருந்து தந்தி வருகிறது.. ஆகவே அவர் பெயர் சாயிநாத்.‌ ஒருமுறை சாயிநாத் தந்தையின் நண்பருக்கு உடல் நலம் சரியில்லை... சுவாமி அவர் கனவில் சென்று தன் விபூதியை கொண்டு போய்க் கொடு எனக் கட்டளையிடுகிறார்... கனவிலிருந்து விழிக்கிற போது குப் என விபூதி வாசனை வீசுகிறது அறை முழுதும்... நண்பர்க்கு அவர் எடுத்துக் கொண்டு போய் நெற்றியிலும் வாயிலும் இட... மரணத் தருணத்திலிருந்து மீள்கிறார் நண்பர்! சாயிநாத்தின் தந்தை இரு சாயியும் ஒருவரே என்பதை உணர்ந்தவர். சுவாமியின் சிறுவயதிலேயே தரிசித்துவிட்டு... "இறை அவதாரமே புட்டபர்த்தி கிராமத்தில் அவதரித்திருக்கிறது!" எனத் தெளிவாக எடுத்துரைத்தவர். 

சாயிநாத்தின் மனைவி நிர்மலா. தனது அனுபவத்தை பகிர்கிறார்.. நூலாசிரியரின் "அற்புதமும் ஆன்மீகமும் பாகம் ஒன்று" புத்தகத்தை ஆப்ஸ்பரியில் வாங்கி வாசிக்கிறார்.. அதில் ஒரு பக்தர் அனுபவம்... வாடகை வீடு சொந்த வீடாக மாற்றிய சுவாமி லீலை அது! தனக்கும் சுவாமி சொந்த வீடமைத்து தருவார் எனும் திட நம்பிக்கை ஏற்படுகிறது! பக்தர் அனுபவங்களை வாசிப்பதன் விசேஷமே சுவாமி மேலான நம்பிக்கை திட நம்பிக்கையாக பரிணாமப்படுவதே! எதிர்பாரா விதமாக அவர் தங்கியிருந்த வீட்டு உரிமையாளர் வீட்டை காலி செய்யும்படி சொல்ல.. இனி வாழ்ந்தால் சொந்த வீடு தான் எனும் வைராக்கியம் பிறக்கிறது! அதே சமயத்தில் சீனிவாசபுரத்தில் ஒரு வீடு விலைக்கு வர... அட்வான்ஸ் 2000 கொடுக்கிறார்கள்... அன்றே சுவாமியை ஆப்ட்ஸ்பரி மாளிகையில் தரிசிக்கிறார்கள்... அதிகக் கூட்டம் காரணமாக... தரிசனம் பெற இயலவில்லை... அன்று இரவே சுவாமி சாயிநாத்தின் கனவில் சென்று "நீ வந்து என்னை பர்த்தியில் வந்து பார்!" என்கிறார் ஆங்கில மொழியில் தனது விசிட்டிங் கார்ட் கொடுத்தபடி... அவர் அந்த கார்டை பார்க்கப் பார்க்க முகவரி மறைந்து போகிறது.. கனவு கலைகிறது... அவருக்கோ பர்த்தி செல்ல தயக்கம்... ஆனால் "சூழ்நிலை சிருஷ்டிகர்த்தாவான சுவாமி ஒரு சம்பவத்தை அரங்கேற்றி பர்த்தி வரவழைக்கிறார்! சாயிநாத்தின் தம்பி கோபிநாத் ஒரு பெண்ணை காதலிக்கிறார்... காதலித்த பெண் குடும்பத்தினர் சுவாமி பக்தர்கள்.. சுவாமி அனுமதித்தால் மட்டுமே கல்யாணம்...வாருங்கள் சுவாமியை தரிசிக்கச் செல்வோம் என அழைக்கையில்...இரண்டு வீட்டார் குடும்பமும் பர்த்தி வருகிறது...


சுவாமியை முதல் வரிசையில் சாயிநாத் தரிசித்தபடி பரவச நிலைக்குப் போகிறார்.. அந்த நிலையில் சுவாமி அவருக்கு விஸ்வரூப தரிசனம் காட்டுகிறார்... பிறகு கடிதம் ஏந்தி சாயிநாத் காத்திருக்க.. சுவாமி வாங்காமல் திரும்பிவிட...ஊருக்கு செல்லலாம் என டிக்கெட் எடுக்கச்செல்கையில். அதற்குள் டிக்கெட் கவுன்ட்டர் அடைத்துவிட.. அடுத்த நாள்... சுவாமிக்கு எந்த நேரம் எதைச் செய்ய வேண்டும் என நன்கு தெரியும் என்பதே இது எடுத்துக் காட்டுகிறது! தரிசன வரிசையில் சுவாமி கடிதம் பெற்று... சாயிநாத் "சுவாமி.. தம்பியின் கல்யாணம்..." என தயங்கியபடி இழுக்க... "அப்படியே நடக்கட்டும்! நல்லது" என்கிறார்.. இரு வீட்டாருக்கும் மகிழ்ச்சி.. இதில் சொந்த வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுத்தது அவர்களுக்கு மறந்தே போகிறது.. மொத்தம் 1,75,000 /- அவர்களின் கையிலோ 20,000 மே இருக்கிறது.. பலர் அதை விட அதிக தொகைக்கு அந்த வீட்டை வாங்க முன் வந்தும்.. சாயிநாத் குடும்பத்திற்கே வீட்டை விற்க அந்த உரிமையாளரின் மனதை சுவாமி மாற்ற...சுவாமியை நிர்மலாவும் சாயிநாத்தும் மீண்டும் பர்த்தியில் தரிசிக்க...மள மள மளவென பலர் உதவ.. வீடு ரெஜிஸ்டர் ஆகிறது.. வீட்டு உரிமையாளர் திடீரென 10,000 ரூபாய் அதிகப்படுத்த.. தன்னிடம் ஏற்கனவே உள்ள 20,000த்தில் அதைக் கொடுத்து விடுகின்றனர்.. எப்படியாவது நவம்பர் 23 ல் சுவாமி பஜன் ஆரம்பிக்க வேண்டும் என்ற வைராக்கியம் நிகழ்ந்து பிறகு தொடர்ந்து நடைபெற்று வருகிறது! 

சாயிநாத் கனவில் பலமுறை சுவாமி தரிசனம் தருகிறார்.. கனவில் காய்கறி மார்க்கெட்டிற்கு கூடவே வருகிறார்.. சுவாமி மிகவும் சிக்கனம் என்கிறார் சாயிநாத். அதனை நூலாசிரியரும் ஆமோதிக்கிறார்.. "சிக்கன வாழ்வினை தந்து நீ காக்க!" என்பதே கவச மொழியும்... புட்டபர்த்தியில் சில சுவாமி பக்தர்கள் சுவாமியின் தரிசனப் பிரிவை தாங்க முடியாமல் இன்னமும் அங்கே தங்கி.. பணம் எல்லாம் கரைத்து முழிக்கிற போது... சுவாமி தரிசன வரிசையில் யாரும் பார்க்காத படி ஒரு கவரை மடியில் போட்டுவிட்டு போவாராம்... அறைக்கு வந்து பிரித்துப் பார்த்தால் பணம் இருக்கும்.. அது மிகவும் சரியாக கூடுதல் குறைதல் இல்லாமல் பயணச் செலவுக்கு கன கச்சிதமாய் இருக்குமாம்... அப்படி ஒரு சிக்கனம் சுவாமி.. அதைத் தானே நமக்கு நவவித கோட்பாட்டிலும் போதித்திருக்கிறார்! பகட்டு எப்போதுமே பக்தி தராது.. ஆடம்பரம் தீய கர்மாவையே சேகரித்துக் கொள்கிறது... வாழ்க்கை என்பது பிறரிடம் கெத்தாக காட்டிக் கொள்தல் அல்ல.. அது சத்தாக உள்ளே திருப்திப்பட்டு வாழ்வதே என்பதை ஆன்மீக வாழ்வியலாக தானும் நடந்தபடி போதிக்கிறார் சுவாமி !


(ஆதாரம் : அற்புதமும் ஆன்மீகமும் -3 / பக்கம் : 164 / ஆசிரியர் : திருமதி சரோஜினி பழனிவேலு) 


"ஒவ்வொரு பணத்தையும் எண்ணி எண்ணி செலவு செய்!" இது சுவாமியின் திருக்கூற்று... இதில் ஒரு "எண்ணி" என்பது இந்த செலவு தேவை தானா? என எண்ணுவது.. இன்னொரு "எண்ணி" என்பது பணத்தை எண்ணுவது! இது சிக்கனத்தை வலியுறுத்துகிறதே தவிர கஞ்சத்தனத்தை அல்ல... சுவாமியே தனது தோழன் என்கிறார் நிர்மலா.. அவர் அடைந்த லௌகீக வைராக்கியம் நல்லது.. அதை விட மேன்மையானது ஆன்மீக வைராக்கியம் அடைவது! "வீட்டைக் கட்டிப் பார்! கல்யாணம் பண்ணிப் பார்!" என்பார்கள்.. அதை எல்லாம் சுவாமியின் அனுகிரகம் சிறப்பாக நடத்திவிடும்.. காரணம் மோட்சம் எனும் உண்மையான வீட்டையே அளிக்கும் சுவாமிக்கு கல்வீடு கட்டித் தருவது ஒன்றும் கடினமான காரியமில்லை!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக