குழந்தைப் பேறு பெரிய பாக்கியமே... அந்தப் பேற்றை எவ்வாறு சுவாமி பலருக்கும் மருத்துவத்தையே சவால் விடும் அளவிற்கு மகத்துவம் புரிந்திருக்கிறார் என்பதற்கான ஓர் சிறு சான்று சுவாரஸ்யமாய் இதோ...
டாக்டர் மனோன்மணி ஜெயராம் ரெட்டி. வேலூர் சி.எம்.சியில் படித்து டாக்டரானவர். ஒருமுறை திருப்பத்தூர் திருமணம் ஒன்றில் நூலாசிரியர் சந்தித்து பதிவு செய்த அனுபவம்! அப்போது அவருக்கு 83 வயது. ஆனாலும் டாக்டர் மிக சுறுசுறுப்பாக இருந்திருக்கிறார்! டாக்டர் தொழில் என்பது தூய தொழில்... சேவா நோக்கத்தோடு முன்நின்று அதை நிகழ்த்தினால் அதை விட கர்மகரைதலுக்கான வழி ஒன்றுமில்லை...! அப்படி ரிஷிகேசத்தில் நிகழ்த்திய பத்தமடை டாக்டர் குப்புசுவாமியே பார்போற்றும் ரிஷிகேஷ் மகான் ஸ்ரீ சிவானந்த சரஸ்வதி மகராஜாக உயர்ந்தது! ஸ்ரீ சிவானந்தரையே டாக்டர்கள் முன்னுதாரணமாகக் கொண்டு தங்கள் தொழிலை எழிலாய் உயர் சேவா நோக்கோடு சுடர்விட வேண்டும்!!
டாக்டர் மனோன்மணி முதன்முறையாக சுவாமியை வேங்கடமுனி இல்லத்தில் தரிசிக்கிறார்! பர்த்தி செல்ல ஆர்வம்... கணவர் அனுமதிக்கவில்லை... ஒருமுறை சென்னை வந்து அவர் கணவர் மட்டும் திரும்பிவிட்ட போது... டாக்டர் மனோன்மணி மட்டும் தனியாக பெங்களூர் புறப்படுகிறார்! அந்த 2 1/2 மணி நேரம் தகிக்கும் வெய்யிலில் நின்று காத்திருக்கிறார்... சுவாமி அவரை கண்டவுடன் உள்ளே அழைத்து மின்விசிறியின் அடியில் அமர வைக்கிறார்! தன்னையே மின்விசிறியாக்கி தரணிக்கு காற்றை அருளும் சுவாமியின் கருணையே மனித குலத்தையே மாயை வெய்யிலிலிருந்து மீட்டு தனது திருக்கேசக்குடையின் கீழ் நிழல் தருகிறது!
அந்த முறை... டாக்டரின் மருமகளுக்கு பிள்ளைப் பேறே இல்லை என டாக்டர் ராஜரத்தினம் சொல்லிவிட... கலங்கிப் போனவராய் கடவுளின் முன் கதிகலங்கி நிற்கிறார்! கடவுள் சுவாமியோ "உனக்கு இரண்டு பேத்திகள் பிறப்பார்கள்... கவலைப்படாதே! நான் இருக்கிறேன்... இந்த விபூதியை உன் மருமகளிடம் கொடு!" என ஆசி கூறி வழி அனுப்புகிறார்! அடுத்த வருடமே முதல் பேத்தி பிறக்கிறாள்! ஒருமுறை டாக்டர் ரெட்டியின் மகன் ஆபத்திலிருந்து உயிர் மீட்கப்படுகிறார்... அந்த முறை புட்டபர்த்தி சென்ற டாக்டரிடம் சுவாமி "நானே உன் மகனின் உயிரை காப்பாற்றியது... கலங்காதே... என்றும் உனக்கும் உன் குடும்பத்திற்கும் துணை இருப்பேன்!" என்கிறார்! பலமுறை டாக்டர் பர்த்தி செல்லும் போதெல்லாம் சுவாமி நேர்காணல் வழங்கி ஆசி கூறி அனுப்பியிருக்கிறார்! திருப்பத்தூரில் சமிதி ஆரம்பிப்பதற்கு அவரின் முழு முயற்சி முக்கிய காரணமாக அமைகிறது! சுவாமியிடம் சமிதியின் திறப்பு விழா அழைப்பிதழை எடுத்துச் செல்கையில்... தனக்குப் பதிலாக புண்ணிய பக்தர் பிரேம சுவாமியின் தாயாக பிறந்திருக்கும் மகாபாக்கியம் பெற்ற ஸ்ரீமான் கஸ்தூரி அப்போது செல்கிறார்! விழா நிறைவு பெற்று அனைவருக்கும் டாக்டர் வீட்டில் விருந்து!
அந்த விருந்தின் போது 5 வெள்ளி டம்ப்ளர் காணாமல் போகிறது... யார் திருடியது தெரியவில்லை... டாக்டர் ரெட்டி உடனே சுவாமிக்கு உடனே ஒரு கடிதம் எழுதுகிறார்... அய்யய்யோ சுவாமி வெள்ளி டம்ப்ளர் போய்விட்டது எனும் புலம்பல் கடிதம் அல்ல... அவரின் உள்ளத்தை வெளிப்படுத்தும் ஆம்பல் கடிதம்! "திருடன் வெள்ளி டம்ப்ளர்களை திருடியது போல் நீங்கள் என் உள்ள டம்ப்ளரை திருடிக் கொண்டு விடுங்கள்... என் எண்ணம் உணர்வு ஐம்புலன் எல்லாவற்றையும் திருடிவிடுங்கள் சுவாமி!" என்று எழுதி அனுப்புகிறார்! அது தானே பக்தி! பறிகொடுப்பதெல்லாம் பகவானுக்கே...! யார் நமக்கு என்ன தருகிறாரோ அவரே அதை பறித்தும் விடுகிறார்.. எப்போதும் எதற்கும் உரியாமையாளர் சுவாமியே தவிர மனிதர் அல்லர்! ஒருமுறை சுவாமியிடம் டாக்டர் ரெட்டி சென்ற போது.. "நீ சுதந்திரமாக நேரே என்னிடம் வந்து பேசலாம்!" என கருணை மொழிகள் தூவுகிறார் சுவாமி... "சுவாமி நீங்கள் தான் என் வாழ்விற்கு வழிகாட்ட வேண்டும்!" என்கிறார்!
கோசலை-யசோதை- தேவகி - தேவகிரி இவர்கள் ஒருவருக்கும் கிட்டாத அவதார அணுக்கத்தை இறுதி நாட்கள் வரை அடைந்த புண்ணியவதியும் பாக்கியவதியுமான பேரன்னை ஸ்ரீ ஈஸ்வராம்பா சமாதி ஆகிவிட்டார் என செய்தி கார்டு வருகிறது.. டாக்டர் ரெட்டி உடனே புட்டபர்த்தி கிளம்புகிறார்... நள்ளிரவில் அவர் சயனித்துக் கொண்டிருந்த போது... பக்தர்களின் பக்தர்... தொண்டர்களின் தலைவர் தூய ஸ்ரீமான் கஸ்தூரி அவர்களை எழுப்பி அங்குள்ள மருத்துவமனையில் இரண்டு முதிர்வயது பெண்மணிக்கு உடல்நலம் திடீரென சரியில்லை...தாங்கள் வரவேண்டுமென எழுப்புகிறார்! ஒரு டார்ச்...அதை அடித்தபடி டாக்டர் மருத்துவமனைக்கு உள்ளே செல்ல... அந்த டார்ச்சை அடிக்கிற போதெல்லாம் அந்த ஒளியின் பாய்ச்சலில் சுவாமியின் திருவுருவம் தெரிகிறது... மீண்டும் அணைத்து மீண்டும் ஆன் செய்கிறார்.. மீண்டும் சுவாமியின் திருவுருவம் தெரிகிறது... ஸ்ரீமான் கஸ்தூரியிடம் இந்த டார்ச்சின் முகப்பில் சுவாமி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கிறதா எனக் கேட்க.. சோதித்து விட்டு இல்லை என்கிறார்... மீண்டும் டார்ச் ஆன்... மீண்டும் சுவாமி திருவுருவம்... பரவசப்படுகிறார் டாக்டர்... பிறகு அந்த டார்ச்சை எடுத்து பூஜையறையில் வைத்து விடுகிறார்! இதை நூலாசிரியரிடம் பகிர்ந்த போது தன்னிலை மறந்து பேசுகிறார்... சுவாமியின் அனுகிரகத்தை அனுதினமும் உணர்கிறேன்.. இப்போது எனக்கு உள்ளமே பிரசாந்தி நிலையம்... புறத்தேடுதல் நின்றுவிட்டது என்கிறார்!
புறத்தேடுதல் எப்போது நிற்கிறதோ அப்போதே அகத்தேடுதல் ஆரம்பிக்கிறது!!
(ஆதாரம் : அற்புதமும் ஆன்மீகமும் - 3 / பக்கம் : 53 / ஆசிரியர் : திருமதி சரோஜினி பழனிவேலு)
நிகழாததை நிகழ வைப்பதும்... நினையாததை நடத்துவதும்... மறப்பதை நினைவூட்டுவதும்...உறங்கியதை எழுப்புவதுமே சுவாமியின் இறை சுபாவம்! அனைத்திற்கும் அளவு கடந்த கருணை ஊட்டுவதே சுவாமியின் மகிமா பிரபாவம்!
அந்த அனுகிரக பெருமழையில் தான் ஒவ்வொரு ஜீவனும் நிகழ்வியலால் நனைந்து நனைந்து உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன... இருட்டையும் பொருட்டாக கருதாமல் தன் பக்தர்க்கு ஒளி காட்டுவதும்... ஒளியால் வழிகாட்டுவதும் சுவாமியின் திருஅவதார சூட்சுமம்!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக