தலைப்பு

வியாழன், 17 பிப்ரவரி, 2022

என் வாழ்வில் பாபாவின் அற்புதங்கள் - மேதகு N.V. ரமணா

👨‍⚖️இந்தியாவின் 48வது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மேதகு N.V. ரமணா அவர்களின் ஸ்ரீ சத்யசாயி அனுபவங்கள்!

தமது  ஒரு கண் அசைவில் உலகையே மாற்றியமைக்கும் வல்லமை படைத்தவர் பகவான் பாபா. ஆனால் வியத்தகு செயல்களை  தகுதியான மனிதர்களைக் கொண்டு செய்யவைத்து, மானவ தத்துவத்தில் உள்ள மாதவ தத்துவத்தை செயல்  முறையில் விளக்குகிறார். அன்னையின் அன்பு , எப்போதும் குழந்தையை தூக்கிச் செல்வதல்ல. குழந்தையின் கைபிடித்து, அதை நடக்கக் கற்றுக் கொடுப்பதும்தான் அல்லவா?


48வது இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மேதகு N.V.ரமணா அவர்கள் வழக்கறிஞராக தம் வாழ்வை ஆரம்பித்து, தமது நேர்மையாலும் , கடும் உழைப்பாலும் படிப்படியாக நீதித் துறையில் முன்னேறியவர். இவர் டெல்லி மற்றும் ஆந்திரப் பிரதேச உயர் நீதி மன்றங்களில் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்த பின், பதவி உயர்வு பெற்று, உச்ச நீதி மன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்து வந்தார். 

பாபாவுடனான அவரது பந்தம் எத்தகையது? வாருங்கள்! அவர் சில ஆண்டுகளுக்கு முன் பிரசாந்தி நிலையத்தில் ஆற்றிய உரையில் அதுபற்றி கேட்போம்....


🌹 ஸ்ரீ சத்யசாயி பார்வை பட்டால் சகல ஜீவ நன்மை:

என் வாழ்வில் பாபாவின் அற்புதங்கள் பலவற்றுள் மறக்க முடியாத.. மனதிற்கு மிக நெகிழ்வான.. மெய்சிலிர்க்கும் படியின் முக்கிய மூன்று மகிமைகள் நிகழ்ந்துள்ளன.

பாபாவை முதல் முதலாக பம்பாயில் 1973ம் ஆண்டு தரிசித்தேன். . அப்போது  நான் 10ம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். பாபாவைப் பற்றி அப்போது ஒன்றும் தெரியாது. இந்த  தரிசனத்துக்குப் பிறகு நீண்ட இடைவெளி. இரண்டாவது சந்திப்பு 1986ல் நிகழ்ந்தது, எனக்கு அப்போது திருமணமாகி இருந்தது. எனது மனைவி வீட்டார் தீவிர பாபா பக்தர்கள். என் மனைவிக்கு பாபாதான் சிவமாலா என பெயர் சூட்டினாராம். மனைவியுடன்  புட்டபர்த்தி சென்று பாபாவை தரிசித்தேன். பின்னர் அடிக்கடி அங்கு செல்ல ஆரம்பித்தேன். அப்படி ஒருமுறை தரிசிக்க சென்றபோது, மூன்றாம் வரிசையில் இடம் கிடைத்தது. பாபாவுடனான சம்பாஷன (பேசும்) பாக்கியமும் கிடைத்தது. தரிசனம் தந்து கொண்டிருந்த பாபா , என் அருகே வந்தார். "பங்காரு  எழுந்திரு" என்றார். எழுந்து நின்ற என்னைப் பார்த்து "உனக்கு என்ன வேண்டும்" என்று கேட்டார்? ஒன்றும் கேட்கத் தோன்றாமல் "ஒன்றும் வேண்டாம் ஸ்வாமி" என்றேன். புன்னகைத்த பாபா "ஒன்றுமே வேண்டாமா?" என கேட்டுவிட்டு விபூதி சிருஷ்டித்து அளித்துவிட்டு தமது தரிசனத்தை தொடர்ந்தார். 

இதுதான் எனது வாழ்வில் நிகழ்ந்த முதல் அற்புதம். அற்புதமென்று ஏன் கூறுகிறேன்?  நான் என் வழக்கறிஞர் தொழிலில் சிரத்தையுடனும், கடும் உழைப்புடனும் ( நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம்) ஈடுபட்டிருந்தேன். ஆனாலும் பலனோ, பாராட்டோ கிடைத்ததில்லை. பாபாவின் தரிசனத்துடன் சம்பாஷனும் கிடைத்த இந்த நிகழ்வுக்குப் பிறகு , என் உழைப்புக்கு தகுந்த ஊக்கமும்,  பாராட்டுதல்களும் கிட்ட  ஆரம்பித்தன.

இரண்டாவது அற்புதமாக நான் கருதுவது பாபா எனக்கு அளித்த நேர்காணல் தான். ஒருசமயம் நானும் எனது இரு மகள்களும் பர்த்திக்கு சென்றோம். பாபா தரிசனம் முடிந்தது. எதிர்பாராத விதமாக பாபா எங்களை நேர்முகப் பேட்டிக்கு அழைத்தார். என் மூத்த மகளைப் பார்த்து பாபா கேட்டார். "நீ உன் எதிர்காலத்தில் என்னவாக ஆக விருப்பப்படுகிறாய்?" டாக்டராக என்று என் மகள் கூற, அவளை ஆசீர்வதித்த பாபா, இளைய மகளிடம் இதையே வினவ, அவள் ஒன்றும் கூறாமல் சிரித்தாள். அப்போது பாபா "நீ சிறந்த வக்கீலாக வருவாய்" என கூறினார். பாபாவின் சத்திய வாக்கு பொய்க்குமா என்ன? என் மூத்த மகள் டாக்டராகவும், இளைய மகள் வக்கீலாகவும் இப்போது பணி புரிகின்றனர்.


மூன்றாவது அற்புதமாக நடந்த சம்பவம். நான்  பர்த்தி சென்று பாபாவின் தரிசனத்திற்காக அமர்ந்திருந்தேன். பாபா என்னிடம் வந்தார். "பங்காரு உன் தொல்லைகள் ஓடும் மேகங்களாக விலகிவிட்டன..." என்றார்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. தொல்லைகள் இருப்பதாக நான் நினைத்ததுமில்லை, யாரிடமும் கூறியதுமில்லை. புரியாத நினைவுகளுடன் வீடு திரும்பினேன். எதிர்பாராத இனிய செய்தி. உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி தொலைபேசியில் அழைத்து, என்னை டெல்லி உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்திருப்பதாக கூறினார்.                        


                       

இதன் பிறகு நான் இரண்டுமுறை பர்த்தி சென்றுவந்தேன். பாபா என்னை அழைக்கவில்லை. மூன்றாம் முறை சென்றபோது. பாபா என்னை அழைத்தார். "பங்காரு உனக்கு பாதுகாப்பு தேவை" என்றார். "ஸ்வாமி நீங்கள் இருக்கும்போது வேறென்ன பாதுகாப்பு வேண்டும்" என நான் கூறினேன். "நீ பொது வாழ்வில் இருப்பதால், உனக்கு அவசியம் பாதுகாப்பு தேவை" என்று கூறி ஒரு மோதிரத்தை சிருஷ்டித்து என் கை விரலில் போட்டார். நான் வியந்து நின்றேன். நான் பாபாவுக்கோ அவரது சேவை நிறுவனங்களுக்கோ எதுவுமே செய்ததில்லை. ஆனால் பாபாவின் அன்பு எதையும் எதிர்பார்த்ததில்லை என்பதை உணர்ந்து  கொண்டேன்.


🌹 பாபாவின் போதனை- மனித வாழ்வின் அடித்தளம்...

இன்றைக்கு என்னை  இங்கு பேச அழைத்திருப்பதுவே பாபாவின் அற்புத அழைப்பாகக் கருதுகிறேன். பாபாவின் ஐம்பெரும் கோட்பாடுகளான சத்ய, தர்ம , சாந்தி, ப்ரேமை மற்றும் அஹிம்சை என்பவை உலகம் தழுவிய நீதிக் கோட்பாடுகள் ஆகும். நான் சார்ந்துள்ள நீதித் துறையின் முக்கிய கோட்பாடே சத்தியத்துடன் கூடிய தர்மம்தான்.                  

பாபா கூறுவதுண்டு..

மதம் ஒன்றே.. அது அன்பெனும் மதம்

ஜாதி ஒன்றே.. அது மனித ஜாதி      

மொழி ஒன்றே.. அது இதயத்தின் மொழி

கடவுள் ஒருவரே.. அவர் எங்கும் நிறைந்தவர்.

பாபாவின் இடையறாத மானிட சேவைக்கு இந்த புட்டபர்த்தியே சாட்சி. உலக வரைபடத்தின் சிறு புள்ளியாக இருந்த இந்த புனித பர்த்தியில், கல்வி நிறுவனங்களும், மருத்துவ மனையும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகளும் , மற்ற பல உலகத் தரம் வாய்ந்த சேவைகளும் மலர்ந்து , பாபாவின் அருளுக்கு உரைகல்லாக மிளிர்கின்றன. மனித குலம் என்பது ஒரு ஒருங்கிணைந்த கூட்டம். இதில் தனிமனிதன் மட்டில் ஒதுங்கி வாழ இயலாது. அக்கம்பக்கம் நடக்கும் அநியாயங்கள் தட்டிக் கேட்கப்பட வேண்டும். இதற்கு கல்வி தேவை. கல்வியும், ஒழுக்கமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். சமூகத்தில் நிகழும் கேடுகளை எதிர்த்துப் போராட மனித குண நலன் என்ற ஆயுதம் தேவை. இதுவே பாபா நமக்கு போதிக்கும் நல் உபதேசமாகும்.


🌻 சாய்ராம்... பாபாவின் அன்புப் பெட்டகத்திலிருந்து , பட்டை தீட்டப்பட்ட வைரங்களாக , பல ஆயிரக்கணக்கான அறிஞர்களும், சான்றோர்களும் நம்மை வழிநடத்த வந்துள்ளனர். அவர்கள் பாபாவின் தூதுவர்களாக நம்மை அன்புடன் அரவணைத்து வழிநடத்துவர். அது மனித குலத்திற்கு பாபாவின் அருட்கொடை.  அதில் அமிழ்ந்து அதன் வழி நாமும் நடப்போம். 🌻


ஆதாரம்: மேதகு  N.V ரமணா அவர்கள் 2018ல் பிரசாந்தி நிலையத்தில் ஆற்றிய உரையிலிருந்து... 

தமிழில் தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர். 

 கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக