பரம்பொருளின் பிரகடனம்:
"என் வருகையானது நல்ல, துறவற ஞானம் மிகுந்த சாதுக்கள், சாதகர்கள், குருமார்கள் மற்றும் உலக தெய்வங்களின் எனை நோக்கிய ஏக்க அழைப்பால் மட்டுமே நிகழ்ந்தது."
- இறைவன் ஸத்ய ஸாயி
இமய யோகி ஶ்ரீ சுவாமி ராமா(1925 –1996):
இமாலயமே தனது தாய் மடியாகக் கொண்டு குழந்தைப் பருவத்திலிருந்தே தியான ஆழங்கள் கண்டு... பரம ஞானோதயம் அடைந்து... எழுந்து நடமிடும் மானஸரோவராய் வெளிநாடுகளில் யோக மார்க்கம் பரப்பி... இமய சாதுகளுக்காக இலவச மருத்துவமனையையே கட்டிய ஸ்ரீ சுவாமி ராமா அவர்கள் ஸ்ரீ சத்ய சாயி அவதாரம் பற்றி சொன்ன திருச்சத்திய வாசகம் இதோ...
1925 ஆம் ஆண்டு உத்திரபிரதேச மாநிலத்தில் கார்வால் ஜில்லாவில் தோலி என்ற ஊரில் அந்தணர் குலத்தில் பிறந்தவர் சுவாமி ராமா.. பிரிஜ் குமார் அவருக்கு சூட்டப்பட்டப் பெயர்... சாதாரணமாக அவர் பிறக்கவில்லை... முதிர் வயதை எட்டிக் கொண்டிருந்த குழந்தையில்லா ஒரு தம்பதியரின் முன் ஒரு இமய மகான் திடீரென தோன்றி... உங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கும்... அதை நேரம் வரும் போது எடுத்துக் கொள்வேன் என கூறி மறைந்தவர்... அவர் சொன்னது போல் பிறந்த குழந்தையே சுவாமி ராமா...
அந்த இமய மகானே பெங்காலி பாபா... பெற்றோர் மரிக்க.. தோலி கிராம மக்களிடமிருந்து அந்தக் குழந்தை பிரிஜ் குமாரை இமயத்திற்கு எடுத்துச் சென்று ஒரு யோகியாகவே அந்த இமய மகான் வளர்க்கிறார்.. அவரே உலகம் அறியும் உன்னத மகான் ஸ்ரீ சுவாமி ராமா.. சுவாமி ராமாவின் வாழ்க்கை முழுவதுமே சுவாரஸ்யம் நிறைந்தது... திகில் அடங்கியது... அவரின் குகை வாசங்கள் புல்லரிக்கச் செய்வன... அவரின் தனிப்பட்ட ஆன்மீக அனுபவங்களை... அவர் தரிசித்த விசித்திரமான இமய யோகிகளை... அவர்கள் செய்த பரகாயப் பிரவேசங்களை... அவரின் குரு பெங்காலி பாபாவின் பரமேஷ்டி குருவான முக்தி பாபாவை நேபாளில் அவர் தரிசித்த மெய்சிலிர்க்கும் அனுபவம் போன்ற ஆன்மீகப் பொக்கிஷங்களை தனது சுயசரிதையான "இமயத்து ஆசான்கள்" புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்...அதை வாசிப்பவர் எவராயினும் தியானத்தில் அமர்ந்து விடுவர்.. ஏற்கனவே தியானம் செய்பவர் தியான ஆழங்கள் அடைவர் என்பது தீர்க்கமான தனிப்பட்ட அனுபவம்!
ஒருமுறை சுவாமி ராமாவோடு அவரது சீடர்கள்.. பக்தர்களான மோகன் சுவாமி மற்றும் சில வெளிநாட்டு நபர்கள் சூழ்ந்திருந்தனர்... அப்போது ஸ்ரீ சத்ய சாயி அவதாரம் பற்றி ஒருவர் பேச்சை ஆரம்பிக்கிறார்.. சுவாமியின் சிருஷ்டி பற்றி விமர்சிக்கிறார்.. அது வெறும் கண்கட்டி வித்தை... அதில் ஒன்றும் இல்லை என சுவாமி ராமாவோடு சூழ்ந்திருந்தவர் நகைப்பாய் பேசுகையில்.. சுவாமி ராமா உடனே அதட்டுகிறார்... அந்த அதட்டலில் சிம்ம கர்ஜனை ஒலித்தது.. உண்மையில் பயந்து விட்டனர்.. அவர்கள் அதை எதிர்பார்க்கவே இல்லை... குருதேவர் தாங்கள் எது சொன்னாலும் சரிதான் எனச் சொல்வர் என்று எதிர்பார்த்தனர்... நேரத்திற்கு தகுந்தாற் போல் சத்தியத்தை திரித்துப் பேசுவது மகான்களின் சுபாவம் இல்லை... சுவாமி ராமா ஒரு பூரண மகான்... பரிபூரண இமய யோகி...விஞ்ஞானப் பூர்வமாக தன்னை உடலில் இருந்துப் பிரித்துக் காட்டியவர்... ஒரே சமயத்தில் ஏழு இடங்களில் வியாபித்திருப்பவர்... அவரிடம் யார் எதற்காக வந்தாலும் / எதை நினைத்து வந்தாலும் அதை தெள்ளத் தெளிவாகச் சொல்பவர்.. அப்படிப்பட்ட உயர் உன்னத மகானான சுவாமி.. "Stop it.. உங்களுக்கு என்ன தெரியும்? அவரைப் பற்றி?" என அதட்டுகிறார்... பூரண சத்தியத்தை வெளிப்படுத்த சுவாமியின் சங்கல்பம் இன்றி அது இயலாது.. ஆகவே மிக மேலோட்டமாக எதைச் சொல்ல வேண்டுமோ அதை மட்டும் சொல்கிறார்.. ஆனால் அந்த சொற்களில் பரம சத்தியம் பொதிந்திருந்தது! கேட்டவர்கள் சிலிர்த்தார்கள்... குருதேவரின் பார்வையைப் பார்க்க அதிர்ந்து பாதங்களையே நோக்கினார்கள்!
"அவர் (ஸ்ரீ சத்ய சாயி) ஒரு மேன்மைமிக்கவர்! பரம சத்தியமானவர்...சமூகத்திற்கு எவ்வளவோ நன்மை புரிந்து கொண்டிருக்கிறார்!" என சுவாமி ராமா நமது சுவாமியை பற்றி ஆரம்பிக்கிறார்...
"பிறகு ஏன் அவர் காற்றிலிருந்து பொருட்களை வரவழைக்கிறார்.. அது க..ண் கட்டி வித்தை தா...னே"?
என ஒரு பக்தர் தயங்கியபடி கேட்க...
"அது கண் கட்டி வித்தையும் இல்லை.. கால் கட்டி வித்தையும் இல்லை... தன்னுடைய சக்தியை சிறிதளவேனும் பக்தர்களை உணர வைப்பதற்காக அப்படிச் செய்கிறார்.. அது முழுக்க அருளின் பிரவாகம்.." என சுவாமி ராமா தொடர்கிறார்...
மேலும் "அது எப்படி என உங்களுக்குச் சொன்னால் விளங்கிக் கொள்ள முடியாது.. அது சூர்ய விஞ்ஞானம்! சூரியனின் ஆற்றிலலிருந்து அவரின் பேராற்றல் அதைத் தருகின்றன!" என்கிறார்!
"அது போல் உங்களால் செய்ய இயலுமா?" என ஆர்வ மிகுதியில் ஒரு பக்தர் கேட்க...
"அதை எல்லாம் நான் செய்யக் கூடாது..." என மறுதலிக்கிறார்...
"எங்களுக்காக ஒரே ஒரு முறை!" என குருதேவரான சுவாமி ராமாவிடம் முறையிடுகிறார்கள்...
மகான்களை சூழ்ந்திருப்பவர் அவரின் ஞானத்தையே அடைய முயல வேண்டுமே அன்றி வெற்றுப் பொருட்களை அல்ல... வள்ளலாருக்கும் இது நேர்ந்தது... மனிதர்கள் சிலர் அவரின் ரசவாத வித்தைக்காக சுற்றிக் கொண்டே இருந்தனர்... அவரும் தகரத்தை தங்கமாக்கி அவர்களிடம் தராமல் வீசி எறிந்து கொண்டே நடந்தார்... அகத்தை தங்கமாக்கும் ரசவாதமே முக்கியமே தவிர அவை அல்ல.. இதை சுவாமி ராமாவும் நன்கு உணர்ந்திருந்தார்...
"சரி.. அவர் போல் அல்லாமல் வேறொன்றை செய்கிறேன்.." என கைக் கடிகாரத்தை பக்தர் மோகன்சுவாமியிடம் கேட்கிறார்...
அந்தக் கைக்கடிகாரத்தை அப்படியே கைகளால் மூடி தங்கக் கடிகாரமாக உருமாற்றித் தருகிறார்... அனைவரும் வியக்கிறார்கள்... அதில் வியப்போ பெருமிதமோ எந்த ஒரு உணர்வும் சுவாமி ராமா முகத்தில் இல்லை... அவர் எல்லாவற்றையும் கடந்தவர்... சுவாமி விஷயத்தில் சுவாமி ராமா சொல்லிய சூர்ய விஞ்ஞானம் ஒரு கோணத்தில் சத்தியம்.. காரணம் நம் சுவாமி இரவிலும் சிருஷ்டித்திருக்கிறார்... அதில் ஒரே ஒரு கோணமே சுவாமி ராமா பேசியது! சுவாமியே தனது பேராற்றலை வேலி போட்டு தடுத்தே வைத்திருந்தார்... பொருளியல் மனிதரை ஆன்மீகமாய் உயர்த்த சுவாமி பொருட்களை சிருஷ்டித்தார்...வைரத்தை எப்படி வைரத்தால் அறுக்க முடியுமோ அப்படி... தன்னை எப்படி உணர்த்தினால் உலகியல் மக்கள் உணர்வார்களோ அப்படி உணர்த்தினார்.. ஒவ்வொரு மனிதரையும் சுவாமி ஒவ்வொரு பாணியில் அணுகுகிறார்... சிலருக்கு சொல்லே போதும்... சிலருக்கு சொல் கடந்த பொருள் தேவை... சிலருக்கு நேரடியான ஆன்ம நெறிகளே போதும்.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அணுகுமுறை... ஆதிசங்கரரின் குருவாரான கோவிந்த பகவத்பாதருக்கே கிரியா தீட்சை அளித்த ஸ்ரீ மகாவதார் பாபாஜியோடு 10 ஆண்டுகள் கிரியா யோகம் புரிந்த பெங்காலி பாபாவின் ஞானக் குழந்தை சுவாமி ராமா நம் சுவாமி பற்றி பகிர்ந்த வாசகம் ஒரு துளியாயினும் கடலாய் இதயத்தில் பேரானந்தம் எழச் செய்கிறது!
(ஆதாரம் : "இமயத்து ஆசான்கள்" புத்தகம் / இமயகுருவுடன் ஒரு இதயப் பயணம் / பக்கம் : 100 / ஆசிரியர் : மோகன்சுவாமி)
எப்படி கையேந்தி பவனில் உண்டாலும் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் உண்டாலும் ஒருவருக்கு ஜீரண சக்தி இல்லை என்றால் உணவு செரிமானமின்றி வெளியே வந்துவிடுமோ.. அது போல் ஆன்மீகத்தில் ஒருவருக்கு தியானம் நிகழாமல் எந்த ஆன்மீக பலாபலனும் எப்போதும் இல்லை! என்பதை தனது வாழ்க்கையாகவே வாழ்ந்த சுவாமி ராமா நிதர்சனமாய் சுவாமியைப் பற்றி பேசிய சத்ய மொழிகள் கைகூப்பி தொழச் செய்கின்றன... அனைவருள்ளும் "தியானப் பொழிவு!" நிகழ சுவாமி ராமாவை வணங்கி... நமது சுவாமியை வழிபட்டு வேண்டுகிறேன்!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக