தலைப்பு

ஞாயிறு, 26 டிசம்பர், 2021

201-250 | ஸ்ரீ சத்யசாயி தெய்வீக நிகழ்வுகள்!

பேரிறைவன் ஸ்ரீ சத்யசாயியின் சிறு அசைவே அத்தியாயம் அத்தியாயமாய் நமக்கு பகவத்கீதை சொல்லித் தருகிறது. அதை சுருக்கமாய் ... தெய்வீக நெருக்கமாய் சுவாமியின் உபதேசங்களை உணர்த்தும் மகிமையாய் / அற்புதமாய் / லீலையாய்/ சம்பாஷணையாய் ஸ்ரீ சத்யசாயி கதம்ப மாலையாக உங்கள் இதயத்தை அரவணைக்கிறது 





📝 நிகழ்வு 201:


புட்டபர்த்தியில் மற்றொரு நாள், என் மனைவியிடம் ஒரு விஷயத்தைப் பற்றி ஞாபகப்படுத்தி சிறிதளவு கடிந்து கொண்டார்: "நான் தாவண்கரேயில் உன் வீட்டு வாசலில் வந்து நின்றேன். என்னை பார்த்தவுடன் ஒரு கணப்பொழுது உன் மனதில் ' நான் ஷீரடியில் இருந்து வந்திருக்கலாம் ' என்று தோன்றிய பிறகும், நான் வைத்திருந்த தகரக் குவளையில் ஒரு அரை அணா காசைப் போட்டாய்! நான் மீண்டும் கேட்டபோது, ' எஜமானர் வீட்டில் இல்லை' என்று எனக்கு என்னவோ தெரியாதது போல கூறினாய்! பிறகு நான் உன் கணவர் வேலை செய்யும் கல்லூரிக்கு சென்றேன். அவரது அறையில் இருந்த ஜன்னலின் வெளியே இருந்து, ' ஓம்!' என்று சொல்லி அழைத்தேன். அதைப்பற்றி அவர் உன்னிடம் கூறவில்லையா? அவரும் என்னை ஏதோ ஒரு சன்னியாசி என்று நினைத்துக் கொண்டார் போலும்!" என்றார். 

ச்ருதி சொல்கிறது, "எல்லாப் பக்கங்களிலும் இறைவனின் கண்கள் உள்ளன, அவரது முகங்கள் எல்லா இடத்திலும் உள்ளன, கைகள் எல்லாப் பக்கங்களிலும் உள்ளன, கால்கள் எல்லா இடத்திலும் உள்ளன. அவரது எண்ணற்ற கைகள் மற்றும் கால்களினாலும் அவர் அனைத்தையும் இயக்கிக் கொண்டிருக்கிறார்" என்று.

   சந்தேகம் என்பதை நாம் நம் கைவசம் வைத்துக் கொண்டு நமது அகங்காரத்துக்கு ஊறு விளைவதை தடுக்கும் கருவியாக பயன்படுத்திக் கொண்டு வருகிறோம். நம் சுவாமியினுடைய ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு பதிலும் சந்தேகம் என்னும் திரையை சற்றே விலக்குகின்றன.

 ஆதாரம்: திரு. கஸ்தூரி அவர்கள் எழுதிய "லவிங் காட்" என்ற நூலில் இருந்து.


📝 நிகழ்வு 202:

ஒரு தடவை காகிநாடாவில் மூன்று நீளமான தெருக்கள் சந்திக்கும் இடத்தில் மேடை அமைக்கப்பட்டிருந்தது.  மூன்று தெருக்களும் மக்களால் நிரம்பி வழிந்தன.  மேலும் வீடுகளின் மொட்டை மாடிகளிலும் மக்கள்  குழுமியிருந்தனர்.  இந்த மாபெரும் கூட்டத்தில் பேசுவதற்காக சுவாமி எழுந்தார். ஆனால் பேச ஆரம்பிப்பதற்கு முன்னால்,  தெருக்கள் மற்றும் மாடிகளில் நிரம்பியிருந்த மக்கள் அனைவரையும்,  அந்த வீடுகளையும்  ஐந்து நிமிட நேரம் உற்று கவனித்தார்.

   அவர் தம் சொற்பொழிவை முடித்துவிட்டு எங்களிடம் பேசிக்கொண்டிருக்கையில்  தனது ஐந்து நிமிட ஆழ்ந்த பார்வையைக் குறித்து, "நான் ஏன் அவ்வாறு செய்தேன் தெரியுமா?  அந்த வீடுகளின் கூரைகளை திடப்படுத்திக் கொண்டு இருந்தேன்!  அந்த வீடுகள் கட்டப்பட்டபோது  ஏதாவது ஒரு நாள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மொட்டை மாடியில் போய் நிற்பார்கள் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்! மேலும் சிலர் மரங்களின் மீது அமர்ந்திருந்ததைப் பார்த்தீர்களா?" என்றார்!  அனைத்தும் அறிந்த நம் சுவாமி,  கட்டிடங்கள்  பளு தாங்காமல் விழுவதனால்  தன் சொற்பொழிவைக் கேட்க வந்தவர்கள் விபத்துக்குள்ளாவதைத் தவிர்க்கும்  பொருட்டு தனது அன்பும் சக்தியும் கலந்த பார்வையை அவைகளின் மீது செலுத்தினார்!!!

   ஆதாரம்: திரு. கஸ்தூரி அவர்கள் எழுதிய 'லவிங் காட்' என்ற நூலில் இருந்து.

 

📝 நிகழ்வு 203:


பகவானது அன்பின் பரந்து விரிந்த தன்மையை எடுத்துக்காட்டும் ஒரு நிகழ்ச்சியை இங்கே விவரிக்கிறேன். நெல்லூரில் இருந்து 10 மைல் தொலைவில் கொடவளூர் என்ற கிராமத்திற்கு சுவாமி வருகை தருவதாக இருந்தது. அவரது உபசரிப்பாளர் வீடு , வீட்டைச் சுற்றியுள்ள பொதுவெளி, மற்றும் தெருக்கள் அனைத்தும் மக்களால் நிரம்பி வழிந்தன. தனக்கு பாத பூஜை செய்ய அந்த உபசரிப்பாளருக்கு அனுமதி அளித்திருந்தார். ஆனால் யாரும் உள்ளே வரவோ வெளியே போகவோ முடியாதபடி அவரது வீட்டின் ஒவ்வொரு அறையிலும் கிராமத்து மக்கள் நிரம்பி இருந்தனர். இந்த இக்கட்டான நிலையில் இருந்து மீள்வதற்கு பாபாவின் அன்பு, வழி காண்பித்தது. பக்தரின் இதயத்தை நோகச் செய்வதற்கு அவர் விரும்பவில்லை. அந்த வீட்டிலிருந்து கிளம்பும்போது அவரை, தனது காரைப் பின் தொடர்ந்து வருமாறு பணித்தார். கிராமத்தின் வெளியே ஒரு சமவெளியை அடைந்தபின் ஒரு தோப்பினுள், மாட்டுவண்டிப் பாதையை ஒட்டி இருந்த ஒரு ஒதுக்குப்புறமான ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே அவரது பாத பூஜையை ஏற்றுக் கொண்டு அவருக்கு ஆனந்தம் அளிப்பதாக கூறினார். அதேபோல ஒரு மரத்தினடியில , அருகிலே அமைதியான பசுக்கள் குழுமி இருக்க பாத பூஜை விமரிசையாக நடந்தேறியது. அந்த நேரத்தில் நான் கிருஷ்ணனது பிருந்தாவனத்தில் இருப்பது போல் உணர்ந்தேன்!

 ஆதாரம்: திரு.கஸ்தூரிஅவர்கள்எழுதிய "லவிங் காட்" என்ற நூலிலிருந்து.


📝 நிகழ்வு 204:


சுவாமி ஒருமுறை என்னிடம், "என்னை பரிசோதித்துப் பார்" என்று கூறியிருந்தார். மருத்துவரான என் கணவர் வேலை நிமித்தம் ஊரில் இல்லாதபோது ஐந்து வயதே ஆகியிருந்த எனது மகன் தீவிரமான ஜுரத்தினால் பீடிக்கப்பட்டான். அருகில் இருந்த ஒரு மருத்துவர் ஐந்து நாட்களுக்கு சிகிச்சை அளித்தும் எந்த ஒரு பலனும் இல்லை. அவனது செயல்பாடுகள் புத்தி பேதலித்ததைக் காண்பித்தன. மனிதர்களை அவனால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. ஒன்றுக்கொன்று தொடர்பற்ற வார்த்தைகளை பேசிக்கொண்டிருந்தான். அந்த நேரத்தில் நான் சுவாமியின் வார்த்தைகளை நினைவு கூர்ந்தேன்.

   என் வீட்டில் இருந்த பணிப்பெண்ணிடம் என் மகனைப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு நான் பூஜை அறைக்குள் நுழைந்தேன். உங்களது உதவி எனக்கு இப்போது மிகவும் அவசியம் என்று சுவாமியுடன் கூறினேன். மேலும் அவருக்கு நான் மூன்று கட்டுப்பாடுகளை விதித்தேன்.

   1. நான் மறுபடியும் அவனது அறைக்குள் செல்லும் பொழுது அவன் தூங்கிக் கொண்டிருக்க வேண்டும்.

  2. மறுநாள் காலை அவனது உடம்பின் உஷ்ண அளவு 98.4 டிகிரி ஆக இருக்க வேண்டும்.

   3. அன்று மாலையும் இதே அளவு தொடர வேண்டும்.

   4. இவ்வாறு வேண்டிய பின் நான் ஒரு மந்திரத்தை ஓதிக் கொண்டு சிறிது நேரம் அமர்ந்தேன்.

 பிறகு நான் அவனது படுக்கை அறைக்குள் சென்று பார்த்தபோது அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்! எனது மற்ற இரு வேண்டுகோள்களுமே பூர்த்தி செய்யப்பட்டன! அந்த நேரத்தில் சுவாமி வெங்கடகிரியில் மகாராஜாவுடன் பேசிக் கொண்டிருந்தார்; நான் சுவாமியிடம் வேண்டிக் கொண்டபோது நேரம் காலையில் ஒன்பது மணி ஆகும். அதே நேரத்தில் சுவாமி திடீரென தன்னை மறந்த சமாதி நிலையில் ஆழ்ந்துவிட்டார்! அவர் மறுபடியும் சுவாதீனத்திற்கு வந்தபோது, "என்னுடைய பக்தையான ராணி மா மிகுந்த கஷ்டத்தில் இருந்தார். அவரது மகன் அதிகமான ஜுரத்தினால் புத்தி பேதலித்த நிலையில் இருந்தான். ராணி மா என்னிடம் வேண்டிக் கொண்டதால் நான் அங்கு சென்று அவரது மகனைக் காப்பாற்றினேன்! அவன் இப்போது குணமான நிலையில் உள்ளான்!" என்று சுவாமி கூறினார்.

ஆதாரம்: மே 2021 சனாதன சாரதி இதழில் திருமதி. ராணி சுப்ரமணியன் அவர்கள் எழுதிய பதிவு.


📝 நிகழ்வு 205:


அந்த நாட்களில் சுவாமி எங்கள் அறைக்குள் வந்தும் போய்க் கொண்டும் இருப்பார்; எங்களுடன் அமர்ந்து கொள்வார், உணவு உண்பார், சில நேரங்களில் விளையாடவும் செய்வார். நாங்கள் நெருங்கிய உறவினர் போல இருந்தோம். ஒருநாள் அவர் எங்களைப் பார்த்து, "நிறைய புத்தகங்கள் படிக்கின்றீர்களே?" என்று கேட்டார். அதற்கு நாங்கள்," சுவாமி ! பிறகு நாங்கள் எதைப் படிக்க வேண்டும்! எங்களுக்கு ஆன்மீக வாழ்க்கை பற்றி எதுவும் தெரியாததால் அதனைப் பற்றிய கல்வி கற்க விரும்புகிறோம். ஆகையால் நாங்கள் படிப்பது அனைத்தும் அதற்கு உதவும் என்று நம்புகிறோம்" என்று கூறினோம். அதற்கு அவர், "இறை அருள் பெற்ற பக்தர்கள் மற்றும் தொண்டர்களின் வாழ்க்கை வரலாறுகளை படியுங்கள். அவற்றின் மூலம் நீங்கள் நிறைய கற்றுக் கொள்வீர்கள். இந்தப் புத்தகங்கள் எதுவும் உங்களுக்கு பயனளிக்காது. தேவையில்லாமல் தலைபளுதான் அதிகரிக்கும். அத்வைதத்தை பற்றிய புத்தக அறிவு கிடைக்கும், அவ்வளவுதான்! ஆனால் இறையருள் பெற்ற பக்தர்கள், இறைவனை அனுபவித்திருக்கிறார்கள், ஆன்மீகப் பாதையில் சென்று, இறை உணர்வை பெற்றிருக்கிறார்கள். தன்னைப் பற்றிய உண்மையை அறிந்துள்ளார்கள். இந்த ஆன்மீக யாத்திரை முழுவதும் உள்நோக்கி செல்வதாகும். ஆன்மீக அனுபவத்தை வெளியே தேட முடியாது. அது வெளியே கிடைக்காது. ஆகவே வெளித் தேடலை முற்றிலும் மறந்து விட வேண்டும். அது ஒரு உள்நோக்கிச் செல்லும் யாத்திரை ஆகும்" என்று கூறினார்.   

மேலும் அவர், உங்களுக்கு சந்தேகங்கள் வரும் போதெல்லாம் அமைதியாக உட்கார்ந்து சுவாமியிடம் வேண்டிக்கொள்ளுங்கள்: "சுவாமி! எனக்கு புரியவில்லை; இதன் அர்த்தத்தை எனக்கு புரிய வையுங்கள்; இனி நான் என்ன செய்ய வேண்டுமென்று கூறுங்கள்!"

மேலும் அவர், "எந்தப் பிரச்சனை வந்தாலும் சரி, நீ என்னிடம் வேண்டிக் கொள்ள வேண்டும், ஆனால் அந்த வேண்டுதல் இதயத்தில் இருந்து வரும் உண்மையான வேண்டுதலாக இருக்கவேண்டும் வெறும் மேலோட்டமானதாய் இருக்கக்கூடாது. அமைதியாக உட்கார்ந்து நீ உன் இதயத்தின் உள்ளே சென்று வேண்டிக்கொள். நான் எனது எங்கும் நிறைந்த தன்மையை உனக்கு வெளிப்படுத்துவேன்" என்றார்.

ஆதாரம்: மே 2021 சனாதன சாரதி இதழில், திருமதி. ராணி சுப்ரமணியன் அவர்கள் எழுதிய பதிவு.


 📝 நிகழ்வு 206:


நான் முதன்முதலாக பர்த்திக்கு சென்றிருந்தபோது சுவாமி என்னிடம், "உன்னுடைய ப்ரோக்ராம் என்ன?" என்று கேட்டார். அதற்கு நான் "எனது மாமனாரும் மாமியாரும் எனக்கு பத்து நாட்கள் மட்டுமே அனுமதி அளித்து இருக்கிறார்கள், நான் எங்கு போகின்றேன், யாரைப் பார்க்கப் போகின்றேன் என்ற விவரங்கள் எதுவுமே அவர்களுக்கு தெரியாது. அவர்கள் என்னைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். ஆகையால் பத்து நாட்களுக்கு மேல் நான் இங்கு தங்க முடியாது" என்றேன். அதற்கு சுவாமி, "நீ இங்கு ஒரு மாதமாவது தங்கி இரு. நீ எப்பொழுது இங்கிருந்து செல்லலாம் என்று நான் உனக்கு பிறகு கூறுகிறேன்" என்றார். அதற்கு நான், "ஆனால், சுவாமி! நான் அவர்களுக்குத் தகவல் சொல்ல வேண்டும் .அதனை நான் எவ்வாறு செய்வது ?" என்று கேட்டேன். அதற்கு அவர், "நான் அவர்களுக்கு தந்தி அனுப்ப ஏற்பாடு செய்கிறேன் அவர்களது முகவரியை மட்டும் எனக்கு கொடு நீ எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம்" என்று கூறினார்.

  அதற்கு நான்," சரி, சுவாமி !"என்று கூறிவிட்டேன். நான் இதன்மூலம் என்ன கூற விழைகின்றேன் என்றால்- ஆன்மீக வாழ்க்கைக்கான தயார் நிலையில் நான் இல்லாமல் இருந்ததால் எனக்கு நடக்கின்ற எதுவுமே புரியாமல் இருந்தது.

   ஆன்மீக வாழ்க்கை என்பது உலகியல் வாழ்க்கையில் இருந்து முற்றிலும் மாறுபட்டது அல்லவா? அதேபோல ஆன்மீகத்தை சார்ந்த நடத்தையும் உலகியல் சார்ந்த நடத்தையும் இரு துருவங்களைப் போன்றவைகளாகும். ஆன்மீக வாழ்க்கையை ஏற்கும் வண்ணம் எனது மனதை சுவாமி தயார் செய்தார். கீழ்க்கண்ட உண்மை எனக்கு திடீரென புரிந்தது: "என்னை பின்பற்ற வேண்டும் என்று நீ நினைத்தால், உனக்காக நான் எந்த வழியைக் காட்டுகின்றேனோ அதே வழியில்தான் நீ என்னை பின் தொடர வேண்டும். 'இல்லை, சுவாமி! என்னால் பத்து நாள் தான் இங்கே தங்க முடியும்' என்று உன்னால் கூற முடியாது. நீயாகவே எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாது" என்ற உண்மையை எனக்கு சுவாமி தெளிவுபடுத்தினார்.

ஆதாரம்: மே 2021 சனாதன சாரதி இதழில் திருமதி. ராணி சுப்ரமணியன் அவர்கள் எழுதிய பதிவு.


 📝 நிகழ்வு 207:


என்னுடைய சகோதரர்கள் சுவாமி உடனேயே தங்கினார்கள். சுவாமி குளிப்பதற்கு தண்ணீர் எடுத்து வைப்பது, அவர் குளித்து முடித்த பின் உடுத்திக் கொள்ள வேண்டிய துணிகளை எடுத்து வைப்பது, அவர் தரிசனத்திற்காக வெளியே செல்லும்போது அவரது அறையை சுத்தம் செய்வது, சுவாமியைப் பார்க்க வருவோரை பற்றிய தகவலை சுவாமியிடம் தெரிவிப்பது, அவர் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது அவருக்கு பாத சேவை செய்வது போன்ற செயல்களை செய்யும் பாக்கியம் பெற்றிருந்தார்கள். ஒரு நாள் யாரோ ஒரு பக்தர் சாமிக்கு ஒரு வாழைப்பழத் தார் ஒன்றை அளித்திருந்தார். அதனை சுவாமி தன் அறையில் வைத்திருந்தார். ஒரு நாள் இரவில் படுக்கச் செல்வதற்கு முன்னால் என் சகோதரர்களை பார்த்து, "உங்களுக்கு பசிக்கிறதா, அப்படியென்றால் இந்த பழங்களை புசியுங்கள். ஆனால் தோல்களை இப்போது வெளியே போடாதீர்கள். யாரேனும் பார்த்தால் அது நன்றாக இருக்காது. இப்போதைக்கு அவற்றை என் கட்டிலுக்கு அடியில் போட்டு விடுங்கள். நாளை காலை நாம் அவற்றை வெளியே போட்டுக்கொள்ளலாம்" என்றார்.

உடனே மிகுந்த சந்தோஷத்தில் எனது சகோதரர்கள் இருவரும் வாழைப்பழங்களை உண்டனர். சுவாமியின் வார்த்தைகளுக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்தனர்! சுவாமிக்கு பாத சேவை செய்து கொண்டே கட்டிலின் இருபக்க ஓரங்களிலும் தலையை வைத்துக்கொண்டு உறங்கிவிட்டனர்! விடியற்காலையில் சுவாமி எழுந்து வெளியே வந்து என் அம்மாவை அழைத்து கட்டிலுக்கு அடியில் போடப்பட்ட அந்த வாழைப்பழத் தோல்களை காண்பித்து, *"இதோ உன் அருமை மகன்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்று பார்!"* என்றார்!

 அதைப் பார்த்த என் அம்மா பயத்தில் நடுங்க ஆரம்பித்தாள். நாங்களும் அம்மாவைப் பின்தொடர்ந்து சுவாமியின் அறைக்குள் சென்றோம். "எல்லா பழங்களையும் தின்றுவிட்டு தோல்களை கட்டிலுக்கு அடியில் போட்டு விட்டார்கள்; இப்போது பாருங்கள் அவர்கள் குறட்டை விட்டு தூங்குவதை!" என்றார். இந்த உரையாடலினால் அவர்களது தூக்கம் கலைந்தது. இந்த நேரத்தில் நாங்கள் அனைவரும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்ததால் அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை!  

பிறகு அம்மா அவர்களை எங்களது அறைக்கு அழைத்து, நடந்ததை விவரித்து கடிந்து கொண்டபோது அவர்கள் இருவரும் வாய்விட்டு சிரித்தனர்! சுவாமி தான் அவர்களை அவ்வாறு செய்யச் சொன்னார் என்ற உண்மையைக் கூறினர். அப்போது நாங்கள் அனைவரும் சுவாமியின் விஷமத்தனமான விளையாட்டை நினைத்து எங்களுக்குள் சிரித்துக்கொண்டோம்.

 ஆதாரம்: திருமதி.விஜயம்மா அவர்களது "அன்யதா சரணம் நாஸ்தி" என்ற புத்தகத்திலிருந்து...


📝 நிகழ்வு 208:


ஒரு நாள் நாங்கள் அனைவரும் சித்ராவதி நதிக்கரையில் இளைப்பாறிக் கொண்டு இருந்தோம். அப்போது பேசிக்கொண்டிருக்கையில் சுவாமி திடீரென்று, "அதோ பாருங்கள்! நாகசாயி வந்து கொண்டிருக்கிறார்!" என்றார். அவர் ஒரு மனிதர் என்று நினைத்து எங்களைச் சுற்றி பார்த்த பொழுது யாரும் எங்கள் கண்களுக்குப் புலப்படவில்லை. சுவாமி தன் விரலை சுட்டிக் காட்டி இதோ இந்த திசையில் பாருங்கள் என்று காண்பித்தபோது, மிகப்பெரிய பாம்பு ஒன்று எங்களை நோக்கி வந்து கொண்டிருப்பதைக் கண்டோம்! அது பார்ப்பதற்கு ஆதிசேஷனை போலவே இருந்தது! அதனுடைய வாலின் முடிவை எங்களால் காண முடியவில்லை!! அதனைக் கண்டு நாங்கள் மிகவும் பயந்தோம். அது படமெடுத்து எங்களை நோக்கி முன்னேறிய போது, அந்தப் படத்தின் நடுவே சுவாமியின் முகம் நன்றாக தெரிந்தது. இத்தகைய அற்புதத்தை நாங்கள் இதற்கு முன்பு கண்டதும் இல்லை கேட்டதும் இல்லை! நான் எங்கும் இருக்கிறேன் எதிலும் இருக்கிறேன் என்று எங்களுக்கு சுவாமி புலப்படுத்துவது போல தோன்றியது.

சுவாமியின் முகம் அதனில் தென்பட்டாலும் அது ஒரு பாம்பு தானே! ஆகையால் நாங்கள் மிகவும் பயத்தால் நடுங்கினோம். "சுவாமி! தயவு செய்து அதனைப் போகச் சொல்லுங்கள்" என்று வேண்டிக் கொண்டோம். அவர் உடனே 'ஐயோ பாவம்' என்று சொல்லிக்கொண்டு , அந்தப் பாம்பைப் பார்த்து "நாகசாயி! சரி, இப்பொழுது நீ போய்விடு" என்று கூறினார். அது உடனே அப்படியே மறைந்து விட்டது!

ஆதாரம்: திருமதி.விஜயம்மா எழுதிய ' அன்யதா சரணம் நாஸ்தி' என்ற நூலிலிருந்து.


📝 நிகழ்வு 209:


சித்ராவதி ஆற்றின் கரையிலே ஒரு மிகப்பெரிய புளியமரம் இருந்தது. மரப்பலகை சேர்த்து கட்டப்பட்ட கயிறுகளை ஒரு உறுதியான கிளையில் மேல் தொங்கவிட்டு ஒரு ஊஞ்சலைத் தயார் செய்தோம். அதன் மேல் சுவாமி உட்கார்ந்துகிட்டு, "வாருங்கள் யார் என்னை மிகுந்த உயரத்திற்கு தள்ளுவார்கள் என்று பார்ப்போம்!" என்று கூறுவார். எங்கள் சக்தியை எல்லாம் பயன்படுத்தி நாங்கள் தள்ள ஆரம்பித்தவுடன், சுவாமி, "நீங்கள் எல்லோரும் பார்ப்பதற்கு நன்றாக உடலை வளர்ப்போர் போல இருக்கிறீர்கள்! ஆனால் உங்களுக்கு சக்தியை இல்லை" என்று கேலி செய்வார்! பிறகு எங்களை எல்லாம் தள்ளி நிற்கச் செய்து தானாகவே வெகுவேகமாக ஊஞ்சலை ஆட்டுவார். அவரது ஆட்டம் வேகத்தில் அந்த ஊஞ்சல் மரத்தின் உச்சி கீழே வரைக்கும் சென்று விடும்! அதனைப் பார்த்து நாங்கள் அரண்டு போய் விடுவோம்! "சுவாமி! போதும், நிறுத்திவிடுங்கள்!" என்று கூச்சல் இடுவோம். ஏனென்றால் அந்த ஊஞ்சல் நகரும் வேகத்தில் எங்களால் அதை தடுத்து நிறுத்த முடியாது. அது நல்ல உயரத்தில் இருக்கும் போது சுவாமி அங்கிருந்து திடீரென்று குதித்து விடுவார்! அதனைப் பார்த்து நாங்கள் சற்று நேரம் பேச்சு மூச்சற்று நிற்போம்! அப்போது எங்கள் அருகில் அவர் வந்து "ஏன் நீங்கள் இப்படி பயப்படுகிறீர்கள்" என்று கூறுவார். எங்கள் இதயத்தில் ஏற்பட்ட படபடப்பு அடங்குவதற்கு சிறிது நேரம் பிடிக்கும்.

 ஆதாரம்: திருமதி விஜயம்மா அவர்கள் எழுதிய "அன்யதா சரணம் நாஸ்தி" என்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 210:


விஷமங்கள் பல செய்து கொண்டிருந்த நமது சாய் கிருஷ்ணா, ஒருநாள் சித்ராவதி ஆற்றின் கரையில் இருந்த ஒரு பாறையின் மீது நின்று கொண்டு ஒரு காலை முன்னால் எடுத்து வைத்து, "உங்களில் யாரேனும் ஒருவர் என் காலை அசைத்து விடுங்கள் பார்ப்போம்?" என்று கூறினார்! 

அப்போது அங்கிருந்த ஐந்து ஆண்கள் முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் சுவாமியின் கால் கட்டை விரலைக் கூட அசைக்க முடியவில்லை! சுவாமியோ அனுமனை போல திடமாக நின்றார்! பதினான்கு உலகங்களையும் ஏழு சமுத்திரங்களையும் தன் வயிற்றின் உள்ளே அடக்கிய பிரம்மாண்டமான பிரபஞ்ச சாயியை யாரேனும் நகர்த்துவது என்பது சாத்தியப்படுமா?

ஆதாரம் திருமதி விஜயம்மா அவர்கள் எழுதிய ": அன்யதா சரணம் நாஸ்தி" என்ற புத்தகத்தில் இருந்து.



📝 நிகழ்வு 211:


சுவாமி ஒரு தடவை மணலில் இருந்து சிருஷ்டி செய்யப்பட்ட விநாயகர் சிலையை என் அம்மாவுக்கு அளித்தார். அது களிமண்ணினால் செய்யப்பட்டதா அல்லது கல்லினால் ஆனதா என்று எங்களால் சொல்ல முடியவில்லை. அது மிகுந்த கருப்பாகவும் இல்லை. ஆனால் அதில் ஒரு சிவப்பு நிற சாயல் தெரிந்தது. அதிசயத்திலும் அதிசயம் என்னவென்றால் அந்த சிலையில் தும்பிக்கை முழுமையானதாக இல்லை! ஏன் அத்தகைய சிலையை என் அம்மாவிடம் கொடுத்தீர்கள் என்று நாங்கள் கேட்டதற்கு அவர், "ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அந்த சிலைக்கு பாலினால் அபிஷேகம் செய்யுங்கள். அந்தத் தும்பிக்கை அதன் இயற்கையான நீளத்திற்கு வளர்ந்துவிடும்" என்று கூறினார்! அவர் சொன்னபடியே ஆயிற்று!!  அவரது அன்பளிப்புகளின் மதிப்பினைக் கணிப்பது என்பது இயலாத காரியம்.

ஆதாரம்: திருமதி. விஜயம்மா அவர்கள் எழுதிய "அன்யதா சரணம் நாஸ்தி" என்ற புத்தகத்திலிருந்து.



📝 நிகழ்வு 212:


ஒரு நாள் இரவில் சுவாமி படுக்கையில் படுத்துக் கொண்டு எங்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.  அப்போது திடீரென்று கீழே விழுந்து விட்டார்.  அவரது உடல் பார்ப்பதற்கு (ஒரு மூட்டை போல) முடங்கி சுருண்டு இருந்தது. சிறிது நேரம் கழித்து அவர் முனக ஆரம்பித்தார்.  அதைப் பார்ப்பதற்கு எங்களுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது.  கடவுளின் அவதாரமான ஒருவருக்கு எதற்காக இந்த  வலிகள் எல்லாம்?  உலகத்தில் உள்ள எல்லா பிறவிகளையும் காத்து, கவனித்து நெறிப்படுத்துபவர் அவர் தானே? இப்படிப் பலவிதமான எண்ணங்கள் எங்கள் மனங்களில் ஓடிக் கொண்டிருந்தபோது  அவரது அங்கங்கள் ஒவ்வொன்றாக அசைய ஆரம்பித்தன.  மிகுந்த சிரமத்துடன் அவர் தன் கைகளையும் கால்களையும்  நீட்டினார்.  அவர் எங்களிடம் ஏதோ கேட்டார்; ஆனால் எங்களுக்கு அது புரியவில்லை. "உங்கள் கால்களை  அழுத்தி விடலாமா" என்று  ஒருவர் கேட்டதற்கு அவர் வேறு ஒரு மொழியில் பதில் அளிப்பது போல் இருந்தது. அவர் தனது இரு கைகளையும்  உயர்த்தி எங்களை ஆசீர்வதிப்பது போல காட்டி  ஏதோ சில வார்த்தைகளை கூறினார். அப்போதுகூட எங்களுக்கு தெரியாத ஏதோ ஒரு உலகத்தில் அவர் இருப்பது போல தெரிந்தது.  சிறிது நேரத்திற்குப் பிறகு ஒரு பக்தரை அழைத்து தனது உடலை  மசாஜ் செய்யும்படி கூறினார்.  அப்போது அவர், "இப்போதுதான் நான் அமெரிக்காவிற்கு பயணம் செய்து திரும்பினேன். அங்கே ஒரு பெண் பிரசவ வேதனையில் இருந்தாள்.  கருப்பையில் குழந்தை சரியான நிலையில் இல்லாததால் அதனால் வெளியே வர இயலவில்லை.  அங்கே மருத்துவர்கள் கை விரிக்கும் அளவுக்கு  சென்று விட்டார்கள்.  நான் தான் உள்ளே சென்று அந்த குழந்தையை சரியான நிலையில் வைத்தேன்.  குழந்தை பிறந்தவுடன் அம்மாவையும் குழந்தையையும் ஆசீர்வாதம் செய்துவிட்டு  இப்போதுதான் திரும்பினேன்" என்றார்!

ஆதாரம்: திருமதி. விஜயம்மா அவர்கள் எழுதிய" அன்யதா சரணம் நாஸ்தி" என்ற நூலிலிருந்து...


📝 நிகழ்வு 213:

மற்றொரு நாள் அவர் தனது அறையில் இருந்து மாடிப்படிகளின் வழியாக கீழே இறங்கி வந்து கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு மர பொம்மை போல அசையாமல் நின்றார். உடனே அருகில் இருந்த ஆண்கள் அவரைச் சுற்றி ஒரு வட்டமாக நின்று  கொண்டனர். சில நிமிடங்களுக்கு பிறகு ஸ்வாமி, "இன்று கோகுலாஷ்டமி இல்லையா! அதனால், நான் பிருந்தாவனத்திற்கு சென்று வந்தேன்!" என்று கூறினார். 

மேலும் அவர் அங்கேயே தொடர்ந்து நின்று கொண்டிருந்த போது , "சுவாமி! இப்பொழுது நாம் கீழே இறங்கி செல்லலாமா" என்று  கேட்டோம். அப்போது அவர் தனது திருப்பாதங்களை எங்களிடம் காண்பித்தார்.  தெய்வீக வாசனையுடன் கூடிய பாரிஜாத மலர்கள்  அவரது இரு பாத கமலங்களை முழுவதுமாக மூடி இருந்ததை பார்த்தோம்!  உடனே  எங்கள் கை அடங்கும் அளவிற்கு அந்த பூக்களை   கிடைத்தற்கரிய  பொக்கிஷமாக  எடுத்து வைத்துக் கொண்டோம்!

ஆதாரம்: திருமதி. விஜயம்மா அவர்கள் எழுதிய "அன்யதா சரணம் நாஸ்தி" என்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 214:

ஒரு தடவை கிருஷ்ணா ஏதோ ஒரு வேலை நிமித்தமாக சென்னை செல்ல வேண்டி இருந்தது. அவன் அங்கு இல்லாத போது திடீரென்று சுவாமிக்கு அதிக ஜுரம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் அவர், "கிருஷ்ணா! கிருஷ்ணா!" என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தார்! கிருஷ்ணா திரும்பி வந்தபிறகுதான் அவரது ஜுரம் குறையத் தொடங்கிற்று. தனது பக்தர்களை கடவுள் எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்பதை இந்த நிகழ்ச்சி மூலம் புரிந்து கொள்ளலாம். யாரோ ஒருவர் சுவாமியிடம்," சுவாமி! நீங்கள் கிருஷ்ணாவின் மீது ஏன் இவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர்கள்?"என்று கேட்டபோது அவர், "எனது முந்தைய ஷீரடி அவதாரத்தில் , சுற்றி இருந்தவர்கள் என்னை கேலி செய்தும், என்னை ஒரு பைத்தியம் என்று அழைத்து என் மீது கற்களை விட்டெறிந்த போதும் , இந்தப் பையன் தான் என்னை நோக்கி ஓடி வந்து என்னை கட்டிப்பிடித்துக்கொண்டு என்னைக் காப்பாற்றி," இவர் ஒரு பைத்தியம் இல்லை, இவர் ஒரு மகாத்மா!" என்று கூவினான்! அதனால்தான் எனக்கு இவனை மிகவும் பிடிக்கும்" என்று கூறினார்! அப்போதுதான் அந்த உண்மையை அவர் வெளிப்படுத்தினார்! நமது முந்தைய பிறவிகளில் அவருடன் நமக்கு இருந்த உறவினை அவர் மட்டுமே அறிவார்! காரணம் இன்றி எதையும் சுவாமி செய்வதில்லை.

பின்குறிப்பு: கிருஷ்ணா , விஜயம்மாவின் அண்ணன் ஆவார்.

ஆதாரம் : திருமதி.விஜயம்மா அவர்கள் எழுதிய "அன்யதா சரணம் நாஸ்தி" என்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 215:

ஒரு தடவை நாங்கள் குடும்பத்துடன் குப்பத்தில் இருந்தபொழுது, சென்னையில் எனது வீட்டில் திருடு போனதாகத் தகவல் வந்தது. அதிர்ஷ்டவசமாக சுவாமி அப்போது சென்னையில்தான் இருந்தார். உடனே என் கணவர் அங்கு சென்றார். வழக்கமாக நாங்கள் எங்கள் வீட்டில் வெள்ளிப் பாத்திரங்களை பூஜை அறையில் வைத்து பூட்டி விடுவோம். திருடன் எங்கள் வீட்டின் பின்புற கதவின் வழியாக உள்ளே நுழைந்து எல்லா அறைகளுக்குள்ளும் சென்றிருக்கிறான். விலை மதிப்பான பொருட்களை தேடும் பொருட்டு அங்கிருந்த பொருட்களை வீசி எறிந்து இருக்கிறான். பூஜை அறையில் மட்டும் எதுவும் எடுக்காதது போல இருந்தது. ஆனால் சுவாமி எனக்காக ஸ்ருஷ்டி செய்து கொடுத்திருந்த வெள்ளியிலான , கழுத்தில் மாட்டிக் கொள்ளும் டாலர் போன்றதான சிறிய நாகர் சிலையை மட்டும் எடுத்துக்கொண்டு போய் விட்டான்! இதைக் கேட்டு நான் மிகவும் வருத்தம் அடைந்தேன். சுவாமியிடம் என் கணவர் இதை பற்றி கூறிய போது, "இதுவரை குமாரம்மாவைப்பற்றி இருந்த நாகதோஷம் இப்போது விலகி விட்டது!" என்று கூறினாராம்!  

இறைவனது பிரபஞ்ச இயக்கத்தில் எத்தகைய செயல்கள் எத்தகைய காரணங்களினால் உருவாகின்றன என்பதை அறிவது மிகவும் கடினம்! நமக்கு நிகழ்பவை அனைத்தும் இறைவனால் நமது நன்மைக்காகவே நடக்கின்றன என் ற ஒரு நம்பிக்கையை நாம் எப்பொழுதும் பெற்றிருக்க வேண்டும்.

ஆதாரம்: திருமதி.விஜயம்மா அவர்கள் எழுதிய "அன்யதா சரணம் நாஸ்தி"என்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 216:

ஒரு தீபாவளியின் போது நாங்கள் அனைவரும் சென்னையில் உள்ள ஸ்ரீ ஹனுமந்த ராவ் அவர்களின் வீட்டில் குழுமி இருந்தோம். நமது இதயக் கள்வனான சுவாமி என்னிடம்," குமாரம்மா ! நான் நேற்று குப்பத்தில் உள்ள உனது வீட்டிற்குச் சென்றிருந்தேன்! அங்கு அனைவரையும் பார்த்தேன்! எனது போட்டோவின் முன் அமர்ந்து கொண்டு, உன் அம்மா, சுவாமியின் தரிசனம் கிடைக்கவில்லை என்று அழுது கொண்டிருந்தாள்! " என்று கூறினார் உடனே அவர் உள்ளே சென்று ஒரு கடித உறை ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்து, "உனது அம்மாவுக்கும் மற்றவர்களுக்கும் நான் ஒரு கடிதம் எழுதியுள்ளேன். அதனுடன் சேர்த்து நோன்புக் கயிறுகளும் பிரசாதமும் வைத்துள்ளேன். பாவம்! அவர்களுக்கு இவற்றை தபாலில் அனுப்பி விடு!" என்று கூறினார். நான் எனது மனத்தினுள்," சுவாமி நீங்கள் சந்திரனின் ஒளியை விட குளிர்ந்த தன்மை உடையவர்; வெண்ணையை விட மிருதுவானவர்" என்று நினைத்துக்கொண்டேன், ஆனால் வாயைத் திறந்து சொல்ல முடியவில்லை. எனது பெற்றோர்கள் அப்போது மிகுந்த பணப் பற்றாக்குறையில் இருந்தனர். ஆனால் எத்தகைய இக்கட்டான நிலைமையிலும், இறைவன் எப்போதும் நமது அருகிலேயே நின்று கண் இமைகளை போல நம்மைக் காத்து வருகிறார் என்றால், எத்தனையோ பிறவிகளில் நாம் செய்த நற்செயல்களின் பலனே ஆகும்.

ஆதாரம் திருமதி விஜயம்மா அவர்கள் எழுதிய "அன்யதா சரணம் நாஸ்தி" என்ற நூலிலிருந்து.


📝 நிகழ்வு 217:


ஒருநாள் ஏழு அல்லது எட்டு நபர்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தோம். சுவாமி நடந்துகொண்டே உத்தரவுகள் பிறப்பித்துக் கொண்டிருந்தார். அவர் எங்கள் அருகில் வந்தபோது ஒரு பெண் "சுவாமி! என் தலை மிகவும் வலிக்கிறது" என்று கூறினாள். உடனே சுவாமி தன் கையில் விபூதி வரவழைத்து எங்கள் அனைவருக்கும் கொடுத்தார். நான் என் வாயில் போட்டபோது அது பாகற்காயை விட மிகவும் கசந்தது. அதே விபூதி என் அருகில் இருந்த பெண்ணுக்கு முற்றிலும் சுவையற்று இருந்தது. மற்றொரு பெண்ணோ தனக்கு அந்த விபூதி அமுதத்தை விட இனிப்பாக இருந்தது என்று கூறினாள். வேறொரு பெண் அதில் கற்பூர வாசனை அதிகம் இருந்ததாகக் கூறினாள்!  
எத்தகைய அற்புதம் இது? எப்படி ஒரே விபூதி பலருக்கு பலவிதமான சுவைகளை கொடுக்க முடியும்? இதிலிருந்து நம்மால் எதனைப் புரிந்து கொள்ள முடிகிறது என்றால், அவர் அவரது உடல் நலக் குறைபாடுகளைத் தீர்த்துவைக்கும் பொருட்டே அதன் சுவை மாறுபட்டு இருக்கிறது! மேலும், சில நேரங்களில் வெள்ளையாய் இருக்கும் இந்த விபூதி மற்ற நேரங்களில் ஹோம குண்டத்தில் இருந்து எடுத்ததைப் போல கருப்பாக இருக்கும்! சில நேரங்களில் மிருதுவாகும் சில நேரங்களில் கரகரப்பாகவும் இருக்கும். இத்தகைய வேறுபாடுகள் அனைத்துமே பற்பல நோய்களைக் குணப்படுத்தும் பொருட்டே ஆகும்.
   
ஆதாரம்: திருமதி விஜயம்மா அவர்கள் எழுதிய "அன்யதா சரணம் நாஸ்தி" என்ற நூலிலிருந்து.



📝 நிகழ்வு 218:


ஒரு வைகுண்ட ஏகாதசியின் போது சுவாமி சென்னையில் இருந்தார். அன்று மாலை நடந்த பஜனையில் நாங்கள் பங்கேற்றோம். அப்போது சுவாமி தன் கையை சுழற்றி ஒரு மிகச்சிறிய பாத்திரத்தை வரவழைத்தார். அதன் கொள்ளளவே நான்கு தேக்கரண்டிகள் தான்! அது மூடி இருந்தும்கூட அதிலிருந்து ஒரு திரவம் தளும்பிக் கொண்டிருந்தது. சுவாமி அதன் மூடியைத் திறந்த போது அடர்த்தி மிக்க தெளிவான ஒரு திரவத்தை பார்க்கமுடிந்தது. அதில் இருந்து வீசிய நறுமணம் எங்கும் பரவியது. எல்லோரும் பார்க்கும்படியாக சுவாமி அதனை தாக்குப்பிடித்து, "இது அமிர்தம், இப்போதுதான் சுவர்க்கத்தில் இருந்து வந்தது!" என்றார். அந்தப் பாத்திரத்திற்கு ஏற்றவாறு சுவாமி ஒரு சிறிய கரண்டியை சிருஷ்டித்தார்! மிகச்சிறிய அளவிலான அது பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது! அதன் கொள்ளளவு ஒரு சிறு துளி தான் இருக்கும்! அங்கு குழுமியிருந்த அனைவருக்கும் எப்படி இந்த சிறிய அளவிலான அமிர்தம் சரிவரும் என்று நாங்கள் நினைத்தோம்! ஜெகன்மோகினியான சாயி, எங்களிடையே அழகாக நகர்ந்து வந்து, எங்களது வாயைத் திறக்கச் சொல்லி, ஒரு கரண்டி அளவு அமிர்தத்தை ஊற்றினார்! அதன் சுவையையும் இனிமையையும் எங்களால் விவரிக்க இயலாது! இரண்டாவது முறையும் அவர் எங்களுக்கு அளித்தார்.  

வைகுண்ட வாசியான சாயி அமிர்தத்தை எடுக்க எடுக்க அது குறையாமல் இருந்தது!! அழிவு என்ற வார்த்தையே அகராதியில் இல்லாதவருக்கு அனைத்துமே அளவற்றதாயிருக்கும்!!
   
ஆதாரம்: திருமதி.விஜயம்மா அவர்கள் எழுதிய " அன்யதா சரணம் நாஸ்தி" என்ற நூலிலிருந்து.


📝 நிகழ்வு 219:


சகல சௌபாக்கியங்களையும் அள்ளித்தரும் தெய்வமான சாயி அன்னபூர்ணேஸ்வரி, ஒருநாள் இரவு உணவிற்காக ஒரு பக்தையின் வீட்டிற்குச் சென்றார். சுவாமி வீட்டை வந்து அடையும் வரை நமக்கு ஒரு விதமான கவலை இருக்கும். அவர் வந்தவுடன் அந்த கவலை வேறு விதமாக மாறிவிடும்! அவர் நம்மிடையே இருக்கும் பொழுது நாம் அனைத்தையும் மறந்து விடுவோம்! கடவுளே நமக்கு எதிராக அமர்ந்து, உணவு உண்டு, பேசிக்கொண்டிருந்தால், அந்த சுவர்க்கத்தில் நமது மனம் எவ்வாறு, சாதாரண நிலையில் செயல்படும்? சாப்பிட்டு முடித்தவுடன் சிறிது நேரம் அளவளாவியதற்குப்பின், சுவாமி புறப்படுவதற்கு தயாராகையில் , அந்த வீட்டுப் பெண்மணி தன் கைகளை கூப்பிக் கொண்டு ,"சுவாமி ! உங்களுக்கு நான் என்ன பரிமாறினேன் என்பது எனக்கு ஞாபகமே இல்லை!" என்றார். அதற்கு சுவாமி, "நானும் என்ன சாப்பிட்டேன் என்று எனக்கு தெரியவில்லை!" என்று உதட்டை பிதுக்கி கொண்டே சொன்னார்! இதனைக்கேட்ட நாங்கள் ஆச்சரியத்துடன் அதிர்ந்து போனோம்! சுவாமியின் ஒவ்வொரு வார்த்தையிலும் எவ்வளவு ஆழமான உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன என்பதை நம்மால் பலமுறை அறிய முடியாது!*
   
ஆதாரம்:திருமதி.விஜயம்மா அவர்கள் எழுதிய "அன்யதா சரணம் நாஸ்தி" என்ற நூலிலிருந்து.


📝 நிகழ்வு 220:

பிருந்தாவனத்தில் கல்லூரி ஆரம்பித்த காலத்தில் சுவாமி ஒரு தடவை தன் மாணவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். ஒரு தருணத்தில், அங்கிருந்த ஒரு பக்தர்," ஆனால், சுவாமி! அமெரிக்கா மிகுந்த தொலைவில் உள்ளது" என்றார். அதற்கு சுவாமி, "ஓஹோ! அப்படியா? ஆனால் அது எனது நீட்டிய கைகளுக்கு அப்பால் இல்லை! இந்த முழு உலகமுமே என்னுடைய வீடு மாதிரி தான். உலகத்தில் உள்ள நாடுகள் அனைத்தும் என் வீட்டில் உள்ள பல அறைகள் போலவே தான்! ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் செல்ல எவ்வளவு நேரம் பிடிக்கும்? எனக்கு அவ்வளவு நேரம் தான் ஆகும்! நமது நாடான இந்தியா, வீட்டிலுள்ள பூஜை அறை போன்றதாகும்! தூரம் என்பது உங்களுக்கு மட்டும்தான்! ஆனால் எனக்கு எல்லாமே என் கைகளுக்கு எட்டும் தூரம் தான்!" என்று அறைகூவல் விடுத்தார்!!
  
ஆதாரம்:திருமதி.விஜயம்மா அவர்கள் எழுதிய "அன்யதா சரணம் நாஸ்தி" என்ற நூலிலிருந்து.


📝 நிகழ்வு 221:

சுவாமி ஒரு பெண்மணியைக் கடந்து சென்று கொண்டிருந்த போது, "உன்னுடைய அம்மா தவறிவிட்டார் இல்லையா" என்று கேட்டார். உடனே அருகில் இருந்த பெண்மணி சுவாமியிடம், "ஆமாம், சுவாமி! அவள் ஒரு உயர்ந்த ஆத்மா, சுவாமியிடம் மிகுந்த பக்தி உடையவள்" என்றாள். சுவாமி சிரித்துக்கொண்டே, "ஆமாம்! இறந்த பெண்மணியின் கண்கள் மிகப் பெரியவை" என்று சொல்லிக் கொண்டே நகர்ந்தார்! அதைக் கேட்ட எங்களுக்கு உதட்டை கடித்து கொள்வதைத் தவிர வேறொன்றும் செய்யத் தோன்றவில்லை. குழப்பமடைந்த அந்த பெண்மணி, சுவாமியிடம் அவரது வார்த்தைகளுக்கு பொருள் கேட்டாள். அதற்கு அவர், "ஒரு பெண்மணி உயிருடன் இருக்கும்போது அவளுக்கு ஓரக்கண் பார்வை (மாறு கண்) இருந்ததாம்! அவள் இறந்த பின்பு , அருகில் இருந்தவர்கள் "பாவம்! அவள் தாமரை இதழ்களைப் போன்ற கண்களை பெற்றிருந்தாள்!" என்று கூறினார்களாம்! அதேபோல இவள் உயிருடன் இருந்தபோது யாரும் அவளை ஞானியாக கருதவில்லை; குழந்தையைப் பெற்றெடுத்து நன்றாக வளர்த்த அம்மாவாகவும் கருதவில்லை. ஆனால் அவள் இறந்த பிறகு அவளை எல்லோரும் ஞானி என்று போற்றுகின்றார்கள்!" என்று விளக்கினார்!

  
ஆதாரம்:திருமதி.விஜயம்மா அவர்கள் எழுதிய "அன்யதா சரணம் நாஸ்தி" என்ற நூலிலிருந்து.


📝 நிகழ்வு 222:

ஒருநாள் மதியம் நாங்கள் சித்ராவதி  ஆற்றை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது வெயில் கொளுத்தியது.  அப்போது சுவாமி, திரு. கஸ்தூரி அவர்களை நோக்கி, "இப்போது உனக்கு என்ன வேண்டும் ?" என்று கேட்டார்.  அதற்கு அவர், "சுவாமி! இப்போது மழை பெய்தால் மிக நன்றாக இருக்கும்" என்று கூறினார்.  அதற்கு பலத்த சிரிப்புடன் சுவாமி , "மழையா! அவ்வளவுதானா?" என்று கேட்டுவிட்டு வானத்தை நோக்கி, "நன்றாக மழை பெய்யட்டும்!" என்றார்!  அடுத்த நொடியே நாங்கள் நின்றிருந்த இடத்தை சுற்றிலும் ஒரு சில நிமிடங்கள் பலத்த மழை கொட்டி தீர்த்தது! ஆனால் வேறு எங்கும் மழை பெய்யவில்லை!!!
   
மற்றொரு நாள் இதே பாதையில் சென்று கொண்டிருக்கும்போது,  கீழே கிடந்த ஒரு கல்லை எடுத்து அதை கற்கண்டாக சுவாமி மாற்றினார்.  உடனே கஸ்தூரியை பார்த்து, "நானே குனிந்து கல்லை எடுத்ததால் உனக்கு முழுமையாக நம்பிக்கை வரவில்லை!  ஆகையால் நீயே எனக்கு ஒரு கல்லை எடுத்துக் கொடு" என்றார்.  கஸ்தூரி அவர்களும் சிறிது தூரம்  சென்று கல்லை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார்.  அதனை வாங்கிக்கொண்ட சுவாமி உடனே, " இதோ! பிடித்துக் கொள்" என்று கூறி திரும்பவும் கஸ்தூரியிடம்  அந்தக் கல்லைத் தூக்கிப் போட்டார்.  இதனை சற்றும் எதிர்பாராத திரு கஸ்தூரி அவர்கள் எப்படியோ அந்த கல்லை தன் கையில் பிடித்த போது அது கற்கண்டாக மாறியிருந்தது!  பிடித்த வேகத்தில் அவர் கைகளை மூடிக் கொண்டார்.  திரும்பவும் திறந்து பார்த்தபோது அது மீண்டும் கல்லாக மாறி இருந்தது!
   
ஆதாரம்: திருமதி.விஜயம்மா அவர்கள் எழுதிய"அன்யதா சரணம் நாஸ்தி"என்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 223:


ஒரு தடவை புற்று நோயால் அவதிப்பட்டு கொண்டிருந்த ஒரு கோடீஸ்வரர் புட்டபர்த்தி வந்தார். அவரது இடது கையில் இருந்த அந்த புற்றுநோய் பார்ப்பதற்கு மிகவும் மோசமாக இருந்தது.  தன்னை முற்றிலும் குணப்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன்  சிறந்த மருத்துவரைத்  தேடி உலகம் முழுவதும் திரிந்த பின்னர்,  நமது சுவாமியின் அற்புத சக்தியை பற்றி கேள்விப்பட்டார். ஸ்வாமியின் தரிசனத்திற்காக ஒரு வாரம் முழுவதும் முதல் வரிசையில் அமர்ந்த பின்னரும் ,  சுவாமி அருகில் வரும் பொழுதெல்லாம் தனது நோயைப் பற்றி சுவாமியிடம் தெரிவிப்பதற்கு முனைந்த போதிலும்,  சுவாமியும் தன் காதில் விழாதது போலவே இருந்துவிட்டார்! அவரைக் கண்டுகொள்ளவில்லை.  அவர் பர்த்தியை விட்டு கிளம்பும் நாள் வந்துவிட்டது.  அவர் மிகவும் வேதனைப்பட்டார். ஆனால் அருகில் இருந்த பக்தர்கள் அவருக்கு மிகுந்த ஊக்கம் அளித்தனர். " சுவாமியின் இத்தகைய செயல்முறை எப்போதும் இருப்பதுதான்.  அவரை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. அவர் அறியாதது ஒன்றுமில்லை. மேலும் ஒருமுறை இன்று மாலை  உங்களுடைய அதிர்ஷ்டம் எப்படி இருக்கிறது என்று பார்த்து விடுங்கள்"என்று கூறினார்கள்.  எப்படியோ மாலையிலும் தரிசனத்திற்காக அவரை முதல் வரிசையில் உட்கார வைத்தார்கள். அன்றும் சுவாமி தரிசனத்தின் போது அவர் அருகில் வந்தார், ஆனால் அவரைப் பார்க்கவில்லை.  அவரால் சுவாமியுடைய ஆரஞ்சு நிற அங்கியின்  ஓரத்தை மட்டும் தொட்டு வணங்க முடிந்தது.  சுவாமி அவருடன் பேசாததால் வலியினாலும்  வருத்தத்தினாலும் துடித்தார்.  தனது அறைக்குச் சென்று தாளிட்டுக் கொண்டார்.  சிறிது நேரம் கழித்த பிறகு அவரது அறையில் இருந்து பலத்த அலறல்கள் வருவதை மக்கள் கவனித்தனர்.  அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று எண்ணினர். அவர்கள் உடனே ஓடி வந்து அந்த அறையின் கதவை வேகமாகத் தட்டினர். அவர் உள்ளிருந்து கதவை திறக்க விட்டாலும்  ஜன்னல் வழியாக  மக்களால் அவரைப் பார்க்க முடிந்தது. அவர் அளவில்லாத ஆனந்தத்தில் குதித்து கொண்டிருந்தார்!  எப்படியோ ஒருவழியாக அவரை கதவை திறக்க வைத்து  அவரிடம் விசாரித்தபோது அவர் தனது இடது கையை காண்பித்தார்.  அங்கிருந்த புற்றுநோய் சுவடின்றி முற்றிலும் மறைந்து போயிருந்தது!!  ஆர்வமுடன்  அவரிடம் " நீங்கள் என்ன செய்தீர்கள்? "என்று விசாரித்தபோது அவர், " நான் ஒன்றும் செய்யவில்லை. சுவாமி என்னை கடந்து சென்ற போது நான் அவரது அங்கியின் ஓரத்தை தொட்டேன்.  அவ்வாறு தொட்டதன் பயனாகவே  என்னுடைய நோய் குணமாகிவிட்டது!"  என்று ஆனந்த கண்ணீருடன் கூறினார்!!
   
ஆதாரம் திருமதி விஜயம்மா அவர்கள் எழுதிய "அன்யதா சரணம் நாஸ்தி" என்ற புத்தகத்திலிருந்து.
📝 

நிகழ்வு 224:


23-11-1954  அன்று பிரசாந்தி நிலையத்திற்கு அருகில் இருந்த குன்றின் மீது சுவாமி, ஒரு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். ஹைதராபாத்தில் இருந்து சேவைக்கு வந்திருந்த பக்தர்கள் உயரமாகவும் நல்ல உடற்கட்டு உடையவர்களாகவும் இருந்தார்கள்.  ஒருநாள் சுவாமி அவர்களைப் பார்த்து, "ஐய்யய்யோ! நீங்கள் என்ன, பெண்களைப் போல சிறிய குடங்களை தூக்கிக் கொண்டு செல்கிறீர்கள்?" என்றார். அவ்வளவுதான்! மறுநாளே எங்கிருந்தோ  பெரிய குடங்கள் வரவழைக்கப்பட்டிருந்தன.  சேவை நடந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த சுவாமி அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டே "இப்போது தான் நீங்கள் எல்லோரும் ஆண்கள்" என்றார்!  வேலை முடியும்வரை சுவாமி அங்கேயே இருந்து கொண்டு எல்லோருடன் பேசிக் கொண்டும் கேலி செய்து கொண்டும் எங்களைச் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். எவ்வளவுதான் கடினமாக வேலையாக இருந்தாலும் சுவாமி இருக்கும் போது அது மிகவும் சுலபமாக தெரிந்தது. கிருதயுகத்திலும் திரேதா யுகத்திலும் மிகவும் கடினமான கட்டிட வேலைகளை ஒரே இரவில்  அரக்கர்கள் செய்து முடிப்பார்களாம்! சுவாமி, "அந்தக் காலங்களில் அவர்கள் பார்ப்பதற்குக் அசிங்கமாகவும் கொடூரமாகவும் இருந்தாலும் அவர்கள் தூய இதயத்தை கொண்டவர்களாக இருந்தார்கள்!  ஆனால் இந்தக்  காலத்தில்  உருவங்கள் பார்ப்பதற்கு இனிமையாக இருந்தாலும் இதயங்கள் கொடூரமாக இருக்கின்றன!  அந்தக் காலத்தில் அரக்கர்கள் உங்களைவிட நல்லவர்களாக இருந்தார்கள்!!  அரக்கர்களை விரல்களால் எண்ணமுடிந்தது!  ஆனால் இந்தக் காலத்தில் ஒவ்வொரு மனிதனும் அரக்கனாக உள்ளான்!!" என்றார்!!

ஆதாரம்: திருமதி. விஜயம்மா அவர்கள்  எழுதிய "அன்யதா சரணம் நாஸ்தி " என்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 225:


1995இல் இன்ஸ்டிட்யூட்டில் இருந்து நான் எனது முதல் சம்பளத்தை வாங்கியபோது, நான் அதை சுவாமியிடம் நேரடியாகக் கொடுக்காமல் அமைதியாக சென்ட்ரல் டிரஸ்ட் வங்கி கணக்கிற்குள் போட்டுவிட்டேன் . ஏனென்றால் அவர் அதனை வாங்கிக் கொள்ள மாட்டார் என்று தெரியும். மறுநாள் மாலை நான் தரிசனத்திற்கு சென்றபோது ஒரு கடுமையான பார்வையுடன் அவர் எனக்காகக் காத்துக் கொண்டிருந்தார்! நான் பயந்துவிட்டேன்! நான் வங்கியில் கட்டிய அதே தொகையை உள்ளடக்கிய ஒரு உறையை என்னிடம் கொடுத்து, "எனக்கு ஏதாவது கொடுக்கும் அளவிற்கு நீ என்ன அவ்வளவு பெரிய மனிதன் ஆகி விட்டாயா? உனது ஆணவம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது அதனால்தான் நீ இவ்வாறு செய்திருக்கிறாய்!" என்றார். உடனே நான் பணிவுடன்," சுவாமி! நமது முதல் சம்பளத்தை அம்மாவிடம் கொடுப்பதுதான் நம் வழக்கம். நீங்கள் தான் என் அம்மா, அதனால் தான் உங்களிடம் கொடுத்தேன்" என்று பதில் கூறினேன். உடனே சுவாமியின் முகம் மாறியது. கடினத் தன்மை குறைந்து மிருதுவானதாக தெரிந்தது. ஆனால் அவர் என்னை உற்றுப் பார்த்துக் கொண்டே, "இல்லை! ஆனால் இன்னமும் நீ எனக்கு ஏதோ கொடுப்பதாக நினைத்தாய்! அது ஆணவத்தின் அறிகுறி. அதனால் தான் "எனது முதல் சம்பளத்தை நான் சுவாமிக்கு கொடுக்கிறேன்" என்று நினைத்தாய்! நீ உண்மையாகவே எனக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நினைத்தால்- இந்தக் கணம் முதல், "நீ, நான்" என்ற எண்ணங்களை அறவே அகற்றி விடு! நாம் இருவரும் ஒன்றே!" என்று கூறினார். இந்த நிகழ்வு எனக்கு ஒரு பாடமாக அமைந்தது. 
  
ஆதாரம்: ஸ்ரீ சத்யசாய் இன்ஸ்டிட்யூட்டில் படித்த முன்னாள் மாணவர் ஒருவரின் நாட்குறிப்பிலிருந்து.


📝 நிகழ்வு 226:

சொற்பொழிவு ஆற்றுவதற்கு எந்த அளவுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை சரிபார்ப்பதற்காக எங்களில் சிலரை சுவாமி பூர்ண சந்திரா ஆடிட்டோரியத்திற்கு அழைத்தார். அப்போது 'சிறிய டிபன்' என்று சொல்லிக்கொண்டு முப்பத்தி ஏழு சிற்றுண்டிகளை அடங்கிய ஒன்றை எங்களுக்கு அளித்தார்! அதை உண்டு முடிப்பது மிகவும் கடினமானதாக இருந்தது. இறுதியில், தன் நாற்காலியில் இருந்து எழுவதற்கு விழைந்தார். அந்த நேரத்தில் நாங்கள் எங்கள் கைகளை கழுவாத நிலையில் இருந்தோம். அதே நேரத்தில் சுவாமிக்கு உதவுவதற்கான வாய்ப்பை இழந்து விட விரும்பவில்லை. எங்களுடைய கழுவாத கைகளுடன் சுவாமியை பிடித்தால் அவரது கை அசுத்தமாகி விடுமே என்ற கவலை எங்களுக்கு இருந்தது. என்ன செய்வதென்று அறியாமல் திகைத்தோம். நாங்கள் முடிவு செய்வதற்குள் சுவாமியே எங்களது உள்ளங்கைகளை பற்றிக்கொண்டு மெதுவாக எழுந்து விட்டார்! திடீரென்று இவ்வாறு நடந்தவுடன் நாங்கள் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்தோம்! அவ்வாறு அவர் எழுந்தவுடனே எங்களிடம் "உங்கள் கைகள் அசுத்தம் ஆனால் பரவாயில்லை, ஆனால் உங்களது இதயங்கள் அசுத்தம் ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்! ஏனென்றால் அது சுவாமிக்கு சொந்தமானது!" என்றார்!!
   
ஆதாரம்: ஸ்ரீ சத்யசாய் இன்ஸ்டிடியூடின் முன்னாள் மாணவரது குறிப்பேட்டிலிருந்து....
 


📝 நிகழ்வு 227:


நான் ஒருமுறை புட்டபர்த்தி சென்றிருந்தபோது, ஒரே வரிசையில் புதிதாக கட்டப்பட்டு இருந்த வீடுகளில் கிரகப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இதற்காக ஒவ்வொரு வீட்டிலும் ஐந்து திரிகள் அடங்கிய ஒரு பித்தளை குத்துவிளக்கு, எண்ணெய் ஊற்றி, தயாராக வைக்கப்பட்டிருந்தது. முதலாவது வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு சுவாமி அருகில் சென்றபோது, அங்கே ஒருவர் தீப்பெட்டியைத் தேட ஆரம்பித்தார். அதை கவனித்த சுவாமி "ஏன்? தீப்பெட்டி இல்லையா? பரவாயில்லை" என்றார். விளக்கை ஆசீர்வதிப்பது போல தனது வலது கையை உயர்த்திக் காண்பித்தார். உடனே அந்த ஐந்து திரிகளும் ஒளி வீச ஆரம்பித்தன!! உடனே அருகில் இருந்தவர்கள் எல்லோரும் கைகளைத் தட்டி, "சாய்ராம்! சாய்ராம்!" என்று உரக்கக் கூறினர்! சுவாமி நகைத்துக் கொண்டே நகர ஆரம்பித்தார். அப்போது அருகில் இருந்த ஒருவர் பக்கத்தில் இருந்து வீடுகளைப் பற்றியும் கூற ஆரம்பித்தார். அதற்கு சுவாமி, "அனைத்து வீடுகளிலும் கிரகப்பிரவேசம் முடிந்துவிட்டது!" என்றார்! உடனே நாங்கள் அனைவரும் ஆவலுடன்அந்த வீடுகளில் நுழைந்து பார்த்தோம்! எல்லா வீடுகளிலும் விளக்குகள் ஒளி வீசிக் கொண்டிருந்தன!! என்ன அற்புதம்!! சுவாமி ஒரு வேலையை செய்வதற்கு தன் உடலுடன் அங்கே வர வேண்டும் என்ற அவசியமில்லை!! அவர் நினைத்தாலே போதும்!!
   
ஆதாரம்: சாய் மோகன் அவர்கள் எழுதிய "லீலா மோகன சாயி" என்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 228:

பள்ளி மாணவர்களும் என்னைப்போன்ற கல்லூரி மாணவர்களும் தினமும் மாலை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு வேளையும் சுவாமி தரிசனத்திற்காக சென்று மந்திரம் வராண்டாவில் உட்கார்வோம். ஒரு மாணவன் மட்டும் தினமுமே முதல் வரிசைகளில் அமர்வான். சுவாமியும் அவன் வந்துள்ளானா என்று நோட்டம் விடுவார், அவ்வப்போது அவனுடன் பேசுவார். ஆனால் ஒருநாள் அவன் அங்கே இல்லை. மறுநாளும் அவன் தென்படவில்லை; உடனே சுவாமி வார்டனை அழைத்து அவன் எங்கே என்று கேட்டார். வார்டனும் வராண்டா முழுவதும் பார்த்துவிட்டு சுவாமியிடம் வந்து, அவன் கடைசியில் கார் ஷெட் அருகில் அமர்ந்து உள்ளதாக தெரிவித்தார். அப்போது அவனிடம் ஒன்றும் கூற வேண்டாம் என்று சொல்லிவிட்டார். மறுநாளும் அவன் எப்போதும் உட்காரும் இடத்தில் இல்லாததால், வார்டனை கூப்பிட்டு அவனை அழைத்து வரச் சொன்னார். அவன் வந்தவுடன், "நீ ஏன் இங்கே வந்து அமர்வதில்லை?" என்று கேட்டார். அதற்கு அவன், "சுவாமி! நான் இங்கே வந்து அமர்ந்து உங்களை தரிசனம் செய்துகொண்டிருக்கும் போது, என் மனதில் எங்கிருந்தோ தீய எண்ணங்கள் வந்து குவிகின்றன. அப்போது மிகுந்த தர்மசங்கடத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகிறேன்; அதிலிருந்து என்னால் மீள முடிவதில்லை. ஆகையால் தூரத்தில் அமர்ந்து கொண்டு உங்களை தரிசிப்பது நல்லது என நினைத்தேன்" என்றான். இதனைக்கேட்ட நாங்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தோம். ஆனால் சுவாமியோ மிகுந்த அன்புடன் அவனை நோக்கி, "பங்காரு! உனக்கு தீய எண்ணங்கள் வருவது எனக்கு முன்னால் நிகழ வேண்டும் என்பது எனது சங்கல்பம்" என்றார்! இதனைக் கேட்ட அவன் அதிர்ந்து போய்விட்டான்! மேலும் அவர், "உன்னை பார்த்த உடனேயே உனது பிற்கால வாழ்வில் உனக்கு அதிகமாக தீய எண்ணங்கள் வரும் என்பது எனக்கு முன்னரே தெரிந்துவிட்டது! அப்போது அவற்றால் உனக்கு தீங்குகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். ஆகையால் நான் உன் முன் நிற்கும் பொழுது உனக்கு இந்த தீய எண்ணங்கள் வந்து போக வேண்டும் என்று முடிவு செய்தேன். நான் இருக்கும் போது வரும் தீய எண்ணங்கள் அவைகளின் இயற்கையான பாதையில் சென்று இறுதியில் மறைந்து விடும். அத்தையை எண்ணங்கள் மறுபடியும் தோன்றாமல் அழிந்து போய்விடும். ஆனால் என்னிடமிருந்து தொலைவில் இருக்கும் போது தோன்றும் தீய எண்ணங்கள் மறுபடியும் தோன்றி துன்புறுத்தும் தன்மையுடையவை. ஆனால் அவைகளை என் முன் தோன்றுமாறு நான் சங்கல்பம் செய்யும்போது அவை முற்றிலும் வேரறுக்கப்படுகின்றன. ஆகையால் உனக்கு பிற்காலத்தில் தோன்ற இருந்த தீய எண்ணங்களை இப்பொழுதே நான் வேரறுக்க முற்பட்டேன்" என்றார்!
  
ஆதாரம்: : ஸ்ரீ சத்யசாய் இன்ஸ்டிடியூடின் முன்னாள் மாணவரது குறிப்பேட்டிலிருந்து.


📝 நிகழ்வு 229:

சுவாமியின் கார் ஓட்டுனர்களில் ஒருவரிடமிருந்து நான் நேரடியாக கேட்டு பூரித்து மகிழ்ந்த ஒரு நிகழ்வு இது:

ஒருமுறை வெளியூருக்கு காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது சுவாமி திடீர் என்று "எவ்வளவு தான் முயற்சி செய்தாலும், யாரும் என்னுடைய சங்கல்பம் இல்லாமல் என்னை தரிசனம் செய்ய முடியாது" என்று கூறினார்! உதாரணமாக அவர் அந்த சமயத்தில் காருக்கு சற்று முன்னால் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவரை காண்பித்து , "அவருக்கு என்னை தரிசனம் செய்யும் பாக்கியம் இப்போது இல்லை" என்று கூறினார்! இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அந்த ஓட்டுனர் சுவாமியிடம் , "நான் வேண்டுமானால் அவருக்குப் பின்னால் சென்று ஹார்ன் அடிக்கட்டுமா?" என்று கேட்டார். அதற்கு சுவாமி அவரிடம், "நீ என்ன வேண்டுமானாலும் செய்! ஆனால் "இன்று அவருக்கு என் தரிசனம் கிடையாது" என்ற உண்மையில் எந்த மாற்றமும் இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார்!! தன்னுடன் பயணம் செய்யும் மனித உருவிலான இறைவனிடமிருந்து கிடைத்தற்கரிய இந்த சுதந்திரத்தை பெற்ற அந்த ஓட்டுநர், அந்த சைக்கிளுக்கு பின்னால் காரை ஓட்டிச் சென்று அந்த சைக்கிளின் வேகத்திலேயே பின்தொடர்ந்தார்! மேலும் அவர் தொடர்ந்து ஹாரன் அடிக்க ஆரம்பித்தார். எப்படியாவது அந்த ஓட்டுனர் இந்த தொல்லை தாங்காமல் மன உளைச்சலுக்கு ஆளாகி, தன் தலையை பின்பக்கம் திருப்பி கோபத்துடன் காரைப் பார்ப்பார், அப்போது எதேச்சையாக பின்சீட்டில் அமர்ந்து இருக்கும் சுவாமியை பார்க்க மாட்டாரா என்று எண்ணினார். ஓட்டுனர் எவ்வளவுதான் முயற்சித்தாலும் காரின் ஹார்ன் சத்தம் சைக்கிள் ஓட்டுபவரின் காதுகளில் விழுந்ததாகவே தெரியவில்லை!! அவர் ஏதோ ஒரு ஆழ்ந்த சிந்தனையில் இருந்ததுபோல் தெரிந்தது! ஏதும் நடக்காததுபோல் தன்னுடைய வேகத்திலேயே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்! இவ்வாறு சுமார் ஒரு அரை கிலோ மீட்டர் தூரம் தொடர்ந்த பின்னர், அங்கே இடதுபக்கம் தோன்றிய ஒரு சிறு தெருவில் அந்த சைக்கிள் ஓட்டுனர் திரும்பிவிட்டார்!! அப்போதுகூட அவர் பின்புறம் திரும்பிப் பார்க்கவே இல்லை!! தன்னுடைய சங்கல்பம் இல்லாமல் யாரும் தன்னுடைய அங்கியின் ஆரஞ்சு நிறத்தை கூட பார்க்க முடியாது என்ற உண்மையை கார் ஓட்டுனருக்கு சுவாமி இவ்வாறு நிரூபித்தார்!!
  
ஆதாரம்: : ஸ்ரீ சத்யசாய் இன்ஸ்டிடியூடின் முன்னாள் மாணவரது குறிப்பேட்டிலிருந்து.


📝 நிகழ்வு 230:


என்னையும் சேர்த்து 17 வெளிநாட்டினர் அடங்கிய ஒரு சிறிய கூட்டத்தை சுவாமி இன்டர்வியூவிற்கு அழைத்தார். உள்ளே நுழைந்தவுடன் சுவாமி என்னை நோக்கி "நான் உன் மகன் ரமேஷுக்கு அளித்த மோதிரத்தை நீ பார்த்தாயா?" என்று கேட்டார். அதற்கு நான் "ஆம், சுவாமி! பார்த்தேன்" என்று பதிலளித்தேன். உடனே சுவாமி ரமேஷை அருகில் அழைத்து தான் கொடுத்த மோதிரத்தைத் தன்னிடம் திரும்ப கொடுக்கும்படி கேட்டார். அங்கே இருந்த அனைவரிடமும் அந்த மோதிரத்தை காண்பித்து அதில் எத்தனை வைரங்கள் இருக்கின்றன என்று கேட்டார். அதற்கு எல்லோரும், "மூன்று வைரங்கள், சுவாமி!" என்று பதிலளித்தனர். சுவாமி அந்த மோதிரத்தை தன் வாயின் அருகில் வைத்துக்கொண்டு பலமாக அதன் மேல் ஊதினார். பிறகு அவர் அதனை எங்களிடம் காண்பித்த போது அதில் ஏற்கனவே இருந்த மூன்று வைரங்கள் மறைந்து தற்போது ஒரு பெரிய வைரமாக மாறி இருந்தது!

சுவாமி என் மகனிடம், "இப்போது பார்த்தாயா? அந்த மூன்று வைரங்களும் ஒன்று சேர்ந்து ஒரே வைரமாக மாறி விட்டன! இதே போலவே நான், நீ, உன் தந்தை ஆகிய மூவரும் வேறு வேறு வஸ்துக்கள் அல்ல! அவ்வாறாக வேறுபடுத்திப் பார்க்கக்கூடாது. உண்மையிலேயே, நாம் அனைவரும் ஒரே ஆத்ம தத்துவத்தை உள்ளடக்கிய தேகங்களே!" என்றார். 

ஆதாரம்: திரு.பாம்பே ஸ்ரீனிவாசன் அவர்கள் எழுதிய குறிப்பேட்டிலிருந்து.


📝 நிகழ்வு 231:

நான் அப்போது ஸ்ரீ சத்யசாயி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில்  இதய அறுவை சிகிச்சை பிரிவில்  இதயம்- நுரையீரல் செயற்கைக் கருவியை இயக்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன்.  ஒருமுறை பிறவி முதல் இருந்துவந்த இதய குறைபாட்டை சரிசெய்யும் விதமாக ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அறுவை சிகிச்சை முடிந்த பின்னரும் செயற்கை கருவியை முழுமையாக நீக்கி கொள்ளும் அளவுக்கு அவரது இதயம் சரிவர இயங்கவில்லை.  அங்கிருந்த அனைவரும் கவலைப்பட ஆரம்பித்தனர். அந்த சிக்கலை நாங்கள் நன்றாக அலசி ஆராய்ந்தோம். அதன் பின்னர் அவருக்கு ஒரு சில மருந்துகளை கொடுத்து பார்த்தோம் . அப்படியும் சரி வராததால் எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இறைவனை வேண்டுவதை தவிர மற்ற அனைத்தையும் செய்து விட்டோம் என்று எனக்கு தோன்றியது. நான் ஏற்கனவே அறுவைசிகிச்சை அறையில் ஐந்து மணி நேரம் இருந்ததால் எனக்கு பதிலாக சில நேரத்திற்கு வேறு ஒருவர் உள்ளே சென்றார். நான் வெளியே வந்தவுடன் ஒரு நிமிடத்திற்கு சுவாமியின் முகத்தை என் மனக்கண் முன் கொண்டுவந்து "அந்த நோயாளி  தங்களது அருளால் குணமடைய வேண்டும்" என்று வேண்டினேன். உடனே மீண்டும் அறைக்குள் சென்றேன். அந்த ஒரு நிமிடத்தில் நிலைமை முற்றிலும் மாறி இருந்தது!  அவரது இதயம் சரிவர இயங்க தொடங்கி இருந்தது!  அனைவருக்கும் அது ஒரு புதிராக இருந்தது. நான் யாரிடமும் எனது வேண்டுதலை பற்றி கூறவில்லை.  அந்த நோயாளி வெகு வேகமாக குணமடைய தொடங்கினார்.  
அந்த வாரத்தின் ஞாயிற்றுக்கிழமையில் சுவாமி திடீரென்று என் அருகில் வந்து,  விபூதியை ஸ்ருஷ்டி செய்து என் கைகளில் போட்டு "அந்த நோயாளி குணமடைய என்னிடம் நீ வேண்டிக் கொண்டதற்காக உனக்கு இந்தப் பிரசாதம் " என்று கூறினார்!  மேலும் அன்று நடந்த நிகழ்ச்சியை அங்கிருந்த மற்ற அனைவருக்கும் முழுமையாக விளக்கினார்!
   
ஆதாரம்:  ஸ்ரீ சத்யசாய் இன்ஸ்டிடியூட்டின்  முன்னாள் மாணவரான திரு. ரவி மாரிவாலா அவர்களது உரையிலிருந்து.


📝 நிகழ்வு 232:

நான் லண்டனில் உள்ள "ராயல் காலேஜ் ஆஃப் ஆர்ட்" இல் முதல்வராக பணிபுரிந்தபோது , ஸர் ஐஸாக் டைக்ரட் என்ற பக்தர்  என்னை சந்தித்தார்.அந்த உரையாடலின் போது "சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை  கட்டுவதற்காக சுவாமிக்கு ஒரு நல்ல கட்டிட வடிவமைப்பாளர் தேவைப்படுகிறது; நீங்கள் அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்கிறீர்களா?" என்று கேட்டார்.  நானும் அந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ளலாம் என்று நினைத்தேன்.  இவ்வாறு முதல் முறையாக இந்தியாவிற்கு வந்து பிரசாந்த் நிலையத்தை அடைந்தோம்.  மறுநாள் சுவாமி எங்களை இன்டர்வியூவுக்கு அழைத்தார்.  அவர் என்னை பார்த்து அருகில் வரும்படி அழைத்தார். நானும் அவர் அருகில் சென்று அமர்ந்தேன்.  அவர் உடனே உனக்கு என்ன வேண்டும் என்று வினவினார் உடனே நான் லண்டனில் நடைபெற்ற எங்களது உரையாடலை மனதில் நினைத்து, "சுவாமி! நான் உங்களது புதிய மருத்துவமனைக்கு வடிவமைப்பாளராக இருக்க வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களா?" என்று கேட்டேன். அவர் எனது கேள்விக்கு செவிசாய்க்காமல் சிறிது நேரம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். அந்தப் பார்வையில் தென்பட்ட அன்பில் நான் உருகிப் போனேன். சிறிது நேரம் கழித்து அதே கேள்வியை அவர் மீண்டும் கேட்ட போது நான் மிகுந்த பணிவுடன் "சுவாமி!  நான் உங்களுக்கு வடிவமைப்பாளராக சேவை  செய்ய விரும்புகிறேன்!" என்று கூறினேன். அவருக்கு எதிரே அமர்ந்த நேரத்தில்  நான் ஒரு மேதாவி என்ற அகந்தை  கரைந்து போய்  "நான் உங்களது சேவகனாக பணிபுரிகிறேன்" என்று சொல்ல வைத்தது.  அவர் ஒரு மோதிரத்தை வரவழைத்து அதில் என்ன இருக்கிறது என்று கேட்டார்.  அப்போது என்னிடம் கண்ணாடி இல்லாததால் அதை படிக்க முடியவில்லை என்று கூறினேன்.  அவர் சிரித்துக் கொண்டே "படிக்க முடியவில்லை  என்றால் எவ்வாறு நீ ஒரு சிறந்த வடிவமைப்பாளராக இருக்க முடியும்" என்றார்!  எனது அகந்தை மேலும் அழிந்தது!  அதில் AUM என்று பொறிக்கப்பட்டிருந்தது.  அனைவரிடமும் அதை காண்பித்து விட்டு மீண்டும் தன் கையில் வாங்கி அதன் மேல் ஊதினார். அது உடனே சிலுவை பொறித்த வெள்ளி மோதிரம் ஆக மாறியது! அதனையும் காண்பித்து விட்டு மறுபடியும் அதன் மேல் ஊதினார் இப்போது அது பிறைச் சந்திரனும் ஒரு நட்சத்திரமும் பொறிக்கப்பட்டதாக மாறியது! அப்போதுதான் "கடவுள் தான் என்ன நினைத்தாலும் அதனை செய்து காட்ட முடியும்" என்பதை உணர்ந்தேன். 

பிறகு சுவாமி என்னையும் என் மனைவியையும் தனிமையில் பேசுவதற்கு உள்ளே அழைத்துச் சென்றார். பேசி முடித்த உடன் அந்த மோதிரத்தை அவர் என் கையில் அணிவித்தார். அப்போது அதன் மேல் AUM என்று திரும்பவும் மாறி இருந்தது. இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தைப் பின்வருமாறு உணர்ந்தேன். நான் பணிசெய்யும் கல்லூரி இஸ்லாமியத்தை சார்ந்தது. நான் இஸ்லாமியத்தை படித்தவன் ஆனால் பிறவியிலும் வளர்ப்பிலும் கிறிஸ்துவன். அனைத்து மதமும் ஒன்றே என்ற படிப்பினையும் எனக்கு உணர்த்தப்பட்டது.
   
ஆதாரம்: டாக்டர். கீத் க்ரிச்லோ அவர்களது உரையிலிருந்து .


📝 நிகழ்வு 233:


கிஷோர் என்பவர், திருமணம் செய்து கொண்ட பின்னர் ஶ்ரீ சத்ய சாய் இன்ஸ்டிட்யூட்டில் MBA படிப்பிற்காக சேர்ந்த முதல் மாணவர் ஆவார். ஒரு சிம்போசியத்திற்காக மூன்று இடங்களில் இருந்தும் மாணவர்கள் பர்த்தியில் குழுமியிருந்தனர். அப்போது தரிசனத்திற்காக வந்த சுவாமி, கிஷோரி்டம், "உன் மனைவி எங்கே?" என்று கேட்டார். அதற்கு அவர், "அவர் இங்கேதான் இருக்கிறார், சுவாமி!" என்றார். பிறகு சுவாமி, "உன் மனைவியின் பெயர் என்ன?" என்று கேட்டார். பொது இடத்தில், பலரின் முன்பு மனைவியின் பெயரை சொல்வதற்கு வெட்கத்துடன் தயங்கினார் கிஷோர். சுவாமி அவரை விடாமல் மேலும் தொடர்ந்து, "சொல்,.. சொல்.." என்று கேட்டார். உடனே அவர் சுவாமிக்கு மட்டும் கேட்கும்படியாக மெதுவான குரலில், "கார்கி (Gargi), சுவாமி!" என்று பதிலளித்தார். உடனே சுவாமி, வேண்டுமென்றே, "இத்தனை பேருக்கு முன்னால் உன் மனைவியின் பெயரை சொல்வதற்கு உனக்கு வெட்கமாக இல்லை?" என்று ஒரு பொய் கோபத்துடன் கூறிவிட்டு கிஷோரைப் பார்த்து ஒரு விஷமச் சிரிப்பு கொடுத்தார். அதை கவனித்த கிஷோர், சுவாமி தன்னுடன் விளையாடுகிறார் என்று புரிந்து கொண்டார். மேலும் தொடர்ந்த சுவாமி, "காயத்ரி.... காயத்ரி.. காயத்ரி.." என்று மூன்று முறை சொல்லிக்கொண்டே நகர்ந்து விட்டார்! கிஷோருக்கு ஒன்றும் அப்போது விளங்கவில்லை. 

ஆனால், பல வருடங்களுக்குப் பின்னர் அவர் ஒரு அகஸ்திய நாடி சோதிடரிடம் சென்றிருந்தபோது, அந்த சோதிடர் தன்னைப் பற்றிய ஒரு தகவலைத் தவிர மற்ற அனைத்தையும் சரியாக சொன்னது போல இருந்தது. தன் மனைவிக்கு மட்டும் இரண்டு பெயர்கள் இருப்பதாக அவர் தெரிவித்த போது, கிஷோர் அதற்கு மறுப்பு தெரிவித்து ' ஒரே ஒரு பெயர் தான் ' என்று அடித்துக் கூறினார். அதற்கு அந்த நாடி சோதிடர், "இந்த ஏட்டில் , ' கார்கி, காயத்ரி' என்று இரண்டு பெயர்கள் தெளிவாகக் குறிப்படப்பட்டுள்ளன. இரண்டாவதாக காயத்ரி என்ற பெயர் கடவுளால் கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது" என்று கூறினார். இதனைக் கேட்ட கிஷோர் சுவாமியின் வார்த்தைகளை நினைத்து வியப்பில் ஆழ்ந்தார்!

ஆதாரம்: அரவிந்த் பாலசுப்ரமண்யா அவர்கள் எழுதிய ' சாயி பாகவதம் - பாகம் 1' என்ற நூலிலிருந்து...


📝 நிகழ்வு 234:

சில வருடங்களுக்கு முன்னால் நான், என் பெற்றோர், மற்றும் என் சகோதரர் ஆகியோர் லண்டனில் உள்ள தெருக்களில் சில பொருட்களை வாங்குவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தோம். ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வெளியே வந்து கொண்டு இருந்த போது என் தந்தை எதேச்சையாக தன் கைப்பையில் கையை நுழைத்தபோது அதிலிருந்த எங்களது பாஸ்போர்ட்டுகள் காணாமல் போயிருந்ததை உணர்ந்தார்! உடனே நாங்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துபோய் விட்டோம்! ஆனால் சுவாமி மீது எங்களுக்கு இருந்த நம்பிக்கையினால் சில நொடிகளில் பயத்திலிருந்து விடுபட்டோம். ஆயினும் அனைவரும் அவற்றை மும்முரமாக தேட ஆரம்பித்தோம். நாங்கள் வந்த பாதை எல்லாம் திரும்பச் சென்று தேடினோம். ஏற்கனவே நாங்கள் சென்றிருந்த கடைகளில் கேட்டோம். இறுதியில் வேறு வழியில்லாமல் புகார் செய்வதற்காக என் தந்தை போலீஸ் அலுவலகத்தை தேடினார். அவ்வாறு அவர் செல்லும்போது ஒரு ஆங்கிலேய இளைஞர் அவரிடம் நேராக வந்து, "நீங்கள், தொலைந்து போய் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களைப் பாதுகாக்கும் அலுவலகத்தை தேடுகிறீர்கள் என நினைக்கிறேன். அதோ! அந்த இடத்தில் இருக்கிறது!" என்று ஒரு திசையை காண்பித்தார். என் தந்தை அந்த அலுவலகத்தின் உள்ளே சென்றபோது அதே நேரத்தில் ஒரு அதிகாரி எங்களது பாஸ்போர்ட்டுகளை ஒரு பையில் போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தார்! உடனே அவரது வாயிலிருந்து "கடவுளுக்கு எனது நன்றி!" என்ற வார்த்தைகள் வெளிவந்தன. இதனைக் கேட்ட அந்த அதிகாரி சிரித்துக் கொண்டே, "இந்த பாஸ்போர்ட்டுகள் உங்களுடையவை தானா ?" என்று கேட்டார். என் தந்தையின் ' ஆமாம் ' என்ற சொல்லைக் கேட்ட அந்த அதிகாரி நிம்மதி பெருமூச்சு விட்டு அவற்றை என் தந்தையிடம் கொடுத்தார். என் தந்தை அவரிடம் "அவை எவ்வாறு உங்களது அலுவலகத்தை வந்தடைந்தன?" என்று கேட்டதற்கு "நீங்கள் வரும் வழியில் யாரையும் பார்க்கவில்லையா?" என்றார். என் தந்தை ' இல்லை' என்று கூறவும் அவர், "சில நொடிகளுக்கு முன்னர் தான் ஒரு கடையின் உரிமையாளர் என்று சொல்லிக்கொண்டு ஒருவர் இங்கு வந்து இவற்றை எங்களிடம் ஒப்படைத்தார்" என்றார்!  
இறுதியாக என் தந்தை அவரது அடையாளங்களை கேட்டார். அதற்கு அவர் அளித்த பதிலைக் கேட்ட நாங்கள் அனைவரும் இன்ப அதிர்ச்சியில் அங்கேயே அமர்ந்து விட்டோம்! ஏனெனில் அந்த அடையாளங்கள் அனைத்தும் நம் பகவானையே குறிப்பதாக இருந்தன! மனதில் நாங்கள் சுவாமிக்கு நன்றி கூறினோம். முடிவில், மேலும் ஆனந்தமளிக்கும் ஒரு நிகழ்வு என்னவென்றால், பல மாதங்களுக்குப் பிறகு சுவாமி என் தந்தையின் கனவில் வந்து, தான் எவ்வாறு லண்டனில் அவருக்கு உதவினார் என்பதை விவரித்துள்ளார்!!
    
🙇🏻‍♂️ ஓம் ஸ்ரீ ஸாயிஆபத்பாந்தவாய நம: 
    
ஆதாரம்: ஸ்ரீ சத்யசாய் இன்ஸ்டிட்யூட்டின் முன்னாள் மாணவர் ஒருவரின் உரையிலிருந்து.


📝 நிகழ்வு 235:

சுவாமி கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது, பக்தர்களின் கோரிக்கையை ஏற்று திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்திற்கு சென்றார். அப்போது பிரபல விஞ்ஞானியான டாக்டர். பகவந்தம் அவர்களும் சுவாமியுடன் சென்றிருந்தார். அங்கு நடைபெற்ற ஒரு ஆன்மீக பொதுக்கூட்டத்தில் அருகில் இருந்தும் தொலைவில் இருந்தும் பல பக்தர்கள் வந்து குழுமியிருந்தனர். அப்போது அந்த பெரிய கூட்டத்தின் ஒரு மூலையில் அமர்ந்து இருந்த ஒரு வயதான மூதாட்டியை சுவாமி பகவந்தத்திடம் சுட்டிக் காண்பித்து, "அவரது குழந்தைப் பருவத்திலிருந்து அவரை எனக்குத் தெரியும்" என்று கூறினார். பகவந்தம் அவர்கள் தனது மனதில், "அந்த மூதாட்டியை விட சுவாமி வயதில் மிகவும் இளையவர்; அப்படி இருக்கையில் எவ்வாறு சுவாமிக்கு அவரை குழந்தைப் பருவத்திலிருந்து தெரிந்திருக்க முடியும்?" என்று எண்ணினார். அவர் உடனே, "சுவாமி! உங்களுக்கு வயது முப்பது தான் ஆகிறது. ஆனால் அந்த மூதாட்டிக்கு வயது எழுபதுக்கு மேல் இருக்கும். அப்படியெனில் உங்களுக்கு எவ்வாறு அவரைக் குழந்தைப்பருவம் முதல் தெரிந்திருக்க முடியும்?"என்று கேட்டார்! அதற்கு சுவாமி மிகவும் அமைதியாக, "அவரை என்னுடைய முந்தைய அவதாரத்தில் இருந்து தெரியும்!" என்று கூறினார்! சற்று நேரம் கழித்து டாக்டர்.பகவந்தம் அவர்கள் அங்கு குழுமியிருந்த மக்களிடையே நடந்து சென்றார். அப்போது அவர் அந்த மூதாட்டியின் அருகில் சென்று ,அவரிடம் "நீங்கள் ஷீரடிக்கு சென்றது உண்டா" என்று கேட்டார். அதற்கு அந்த மூதாட்டி, "என்னுடைய குழந்தை பருவத்தில் எனது சித்தப்பா என்னை ஷீரடிக்கு அழைத்துச் சென்றார். அப்போது பாபா எனக்கு ஒரு டாலரை அன்பு பரிசாக அளித்தார். அதை நான் இப்போதும் கூட என் கழுத்தில் அணிந்து கொண்டு இருக்கிறேன். இதோ, பாருங்கள்!" என்று எடுத்துக் காண்பித்தார். இதனைப் பார்த்த டாக்டர். பகவந்தம் அவர்களுக்கு அவரது சந்தேகம் அறவே நீங்கியது மட்டுமல்லாமல் ஒரு புதிய புரிதலும் கிடைத்தது! 

இந்த நிகழ்வைப் படித்தவுடன் ஸ்ரீமத் பகவத் கீதையில் நான்காவது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள ஒரு விஷயம் நமக்கு நினைவுக்கு வரக்கூடும்: அர்ச்சுனன், இதே போன்ற ஒரு சந்தேகத்திற்கு ஸ்ரீ கிருஷ்ணரிடம் விளக்கம் கேட்டபோது, அவர், "அர்ச்சுனா! நீயும் நானும் எண்ணற்ற பிறவிகளை கடந்து வந்துள்ளோம்! என்னுடைய எல்லாப் பிறவிகளைப் பற்றியும் நான் நன்கு அறிவேன்! ஆனால் நீ உன்னுடைய முற்பிறவிகளைப் பற்றி அறிய வாய்ப்பில்லை!" என்று கூறியிருந்தார்!
   
ஆதாரம்: " தபோவனம் " என்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 236:

பழைய மந்திரத்தில் நடைபெற்ற தசரா நிகழ்ச்சிகள் என்றும் மறக்க முடியாதவை. அப்போது ஒவ்வொரு நாளும் இரவில் பல்லக்குத் திருவிழா நடைபெறும். தினமும் பல்லக்குகள் பலவிதமாக அலங்கரிக்கப்பட்டிருக்கும். சுவாமி அதில் அமர்ந்தவுடன் புட்டபர்த்தியில் உள்ள தெருக்களில் பல்லக்கு ஊர்வலம் நடைபெறும். அவ்வாறு 1946இல் இறுதி நாளான விஜயதசமி அன்று சுவாமி பல்லக்கில் ஏறி அமர்ந்த பின்னர்  அதனை சுமப்போர் பல்லக்கைத் தூக்கியபோது ஒரு மிகப்பெரிய பாம்பு பல்லக்கின் அடியில் இருந்து வெளியே நெளிந்து செல்லத் தொடங்கியது அதனை பார்த்த உடன் அருகில் இருந்த அனைவரும் பயத்தில் ஓட ஆரம்பித்தனர். சிலர் கைகளில் மரக்கட்டைகளை எடுத்துக்கொண்டு அதனை அடிக்கத் துரத்தி சென்றனர். ஆனால் சுவாமி அவர்களை திரும்ப அழைத்து, "தினமும் இந்தப் பாம்பு என்னை வணங்குவதற்காக வந்து போகிறது.  அது யாரையும் தீண்டாது. அதனை யாராலும் பிடிக்கவும் முடியாது. அதனை விட்டு விடுங்கள்" என்றார். 

ஆதிசேஷனான லட்சுமணனை மகாவிஷ்ணுவான ஸ்ரீ ராமரிடம் இருந்து யாராலும் பிரித்து விட முடியுமா?
  
ஆதாரம்:  திருமதி. விஜயம்மா அவர்கள் எழுதிய 'அன்யதா சரணம் நாஸ்தி' என்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 237:

இந்த சம்பவம் சுவாமியின் 43வது பிறந்தநாள் விழாவின் போது நடந்தது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக என்னைப்போல் அமெரிக்காவிலிருந்து திருமதி. ஆண்டர்சன் என்ற மற்றொரு பெண்மணியும் வந்திருந்தார். ஆனால் அவரது இரு கால்களும் செயலிழந்து விட்ட நிலையில் அவரை சக்கர நாற்காலியில் வைத்து நகர்த்திக் கொண்டு வருவார், அவருடைய கணவர். ஆகையால் அவர் வந்த உடனேயே அவர் குன்றின் மேல் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு செவிலியர்கள் மூலம் அவர் நன்கு கவனித்துக் கொள்ளப்பட்டார். நவம்பர் 22 ஆம் தேதி சுவாமி மற்ற பலருடன் சேர்த்து எங்களுக்கும் புதிய புடவைகளைக் கொடுத்திருந்தார். பிறந்த நாள் காலையில் அந்தப் புதிய புடவைகளை அணிந்து கொண்டு நாங்கள் ஆடிட்டோரியத்தை அடைந்தோம். அந்தப் பெண்மணி மேடையின் ஒரு மூலையில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார். அன்று முதல் நிகழ்ச்சியாக அப்போதெல்லாம் எண்ணெயில் தோய்த்த பூவை சுவாமியின் தலை மேல் மூன்று முறை வைப்பது என்ற நிகழ்வு நடக்கும். சுவாமியைப் பெற்றெடுத்த பெருமையை பெற்ற திருமதி. ஈஸ்வரம்மா முதல் மற்றும் பலருக்கு இந்த அரிய வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த முறை நானும் அந்தப் பட்டியலில் இருந்தேன். அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது திடீரென சுவாமி என் பக்கம் திரும்பிப் பார்த்து, "நீ ஒன்று செய்; இந்த எண்ணெய் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு திருமதி. ஆண்டர்சனிடம் செல்; அவரிடம் ஒரு பூவை கொடுத்து அதை அவள் கைகளால் அந்த எண்ணெயில் நனைத்து நீ அதனை என்னிடம் கொண்டு வா. அவர் மிகவும் சந்தோஷப்படுவார்" என்று கூறினார்! ஆனால் நான் ஒரு அடி எடுத்து வைப்பதற்குள் சுவாமி என்னை நிறுத்தி , "இரு , நானே அவரிடம் செல்கிறேன்!", என்றார்! திடீரென்று சுவாமி தனது சிம்மாசனத்தில் இருந்து கீழே இறங்கி, நான் எண்ணெய் பாத்திரத்துடன் அவரைப் பின்தொடர, திருமதி. ஆண்டர்சனை நோக்கி சென்றதை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர், தன் கையால் எண்ணெய் வைப்பதற்கு ஏதுவாக சுவாமி தன் தலையைக் குனிந்து கொண்டார். இதனைப் பார்த்த பக்தர்கள் சுவாமியின் பேரன்பை நினைத்து ஆனந்தம் அடைந்தனர்! எண்ணெய் தோய்த்த பூவை திருமதி ஆண்டர்சன், சுவாமியின் தலை மேல் மூன்று முறை வைத்தார். அவர் மூன்றாவது முறை வைக்கும்போது சுவாமி அவரது கைகளைப் பிடித்துக் கொண்டுஅவரை, "எழுந்து நில் !"என்றார். அவரும் அடுத்த நொடியில் எழுந்து நின்றார்! இதனைக் கண்ட பக்தர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்! மேலும் சுவாமி, "என்னுடன் நடந்து வா!" என்றார்!


பல வருடங்களாக செயலிழந்த நிலையில் இருந்த இரண்டு கால்களும் உடனே செயல்பட ஆரம்பித்தன! சுமார் 40 அடிகள் நடந்து சென்று சுவாமி சிம்மாசனத்தை அடையும்வரை அவரது வேகத்திலேயே பின்தொடர்ந்தார்!!
.. 
சுவாமியின் அளவுகடந்த கருணையினால் நடந்த இந்த நிகழ்வை தரிசித்த நான் எனது ஆனந்தத்தை அடக்க முடியாமல் நேராக 'மைக்'கை அடைந்து அங்கு குழுமியிருந்த பக்தர்கள் அனைவருக்கும் இந்த நிகழ்ச்சியை விவரித்தேன் .எவ்வாறு பல வருடங்களாக இரு கால்களும் செயலிழந்த நிலயில் இருந்த பக்தரை சுவாமி இன்று நடக்க வைத்திருக்கிறார் என்பதை அறிவித்தேன்!
   
ஆதாரம்: திருமதி. இந்திரா தேவி என்ற அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பக்தரின் உரையிலிருந்து.


📝 நிகழ்வு 238:


சென்னையில் பிரபல நீரிழிவு நோய்  மருத்துவ நிபுணரான டாக்டர் மோகன் அவரது நோயாளி ஒரு முறை அவரது  குதப் பகுதியில் தோன்றிய ஒரு பெரிய கட்டியை அகற்ற சிக்கலான ஒரு  அறுவை சிகிச்சைக்காக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை முடிந்த பின்னரும் அவருக்கு வலி குறையவே இல்லை. மிக சக்திவாய்ந்த  வலி நிவாரண மருந்துகளை அளித்தும் கூட ஒரு பயனும் இல்லாமல் போயிற்று. இதற்காக பல மணி நேரம் அவரது அறையிலிருந்து விட்டு தனது  வீட்டுக்குச் செல்ல நினைத்த டாக்டர் மோகன் அவர்களுக்கு மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. அவர் சுவாமியை மனதில் நினைத்தார்.  அப்போது சுவாமி கொடுத்திருந்த மோதிரம் ஒன்றை அவர் கையில் அணிந்திருந்தார். உடனே அவர் அந்த மோதிரத்தை அந்த நோயாளியின் நெற்றியில் புருவ மத்தியில் வைத்து சிறிது அழுத்தி பகவானை வேண்டினார். அடுத்த சில நிமிடங்களில் அந்த நோயாளி ஆழ்ந்து உறங்கத் தொடங்கினார். மறுநாள் காலை டாக்டர் மருத்துவமனைக்கு சென்றபோது அந்த நோயாளி ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். அவர் விழித்தவுடன் அந்த நோயாளி டாக்டரிடம், "நீங்கள் நேற்று இரவு என்ன மருந்து எனக்கு கொடுத்தீர்கள்?" என்று கேட்டார். அதற்கு டாக்டர்," நான் மருந்து ஏதும் கொடுக்கவில்லை " என்றார். அந்த நோயாளி," பிறகு நீங்கள் என் கண்களை மூடச் சொல்லி என்ன செய்தீர்கள்? என்னுடைய வலி விநோதமாக முற்றிலும் உடனே போய்விட்டது!" என்றார் .அதற்கு டாக்டர் , "நான்  இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டேன்" என்று பதிலளித்தார். 

அந்த நோயாளி ஒரு இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர். ஆயினும் அவர் டாக்டர் மோகனின் சொல் மீதும் அவரது வேண்டுதல் மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். ஆகையால் டாக்டர் சொல்லியதற்கு இணங்க தன் நோயை குணப்படுத்துவார் என சுவாமியை அவர்  திடமாக நம்புகிறார்...அப்படி விடாப்பிடியாக நம்பியதாலும் டாக்டர் மோகனின் பிரார்த்தனையாலும் அவர் தனது வலியிலிருந்து நிவாரணம் பெறுகிறார்!
  
ஆதாரம்: பாம்பே சீனிவாசன் என்ற பக்தரின் உரையிலிருந்து.


📝 நிகழ்வு 239:

கல்ப விருட்சத்தின் அடியில் ஒரு மிகப் பெரிய அகலமான பாறை இருந்தது. அதன் மேல் சுமார் 200 பேர் அமரலாம்.  சுவாமி எங்கள் எல்லோரையும் அங்கு கூட்டிச் செல்வார்.  சுவாமி அந்த மரத்தின் கிளைகளை நோக்கி எகிறி குதித்து அதன் இலைகளை பறிப்பார்.  பிறகு எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு இலையை கொடுத்து எங்கள் கைகளை மூடிக் கொள்ளச் சொல்வார்.  சில கணங்கள் கழித்து அவர் எங்கள் கைகளை திறக்கச் சொல்வார்.  அப்போது, கல்கண்டு, பெப்பர்மின்ட் , ஜெபமாலை போன்ற பலவகைப்பட்ட பொருள்களை எங்கள் கைகளில் பார்ப்போம்! அனைத்து கைகளிலும் வேறு வேறு பொருட்கள் இருக்கும்!  அவர் திரும்பவும் எங்கள் கைகளை மூடி திறக்கும்படி சொன்னவுடன் பார்த்தால்,  அனைத்துப் பொருட்களும் மறைந்துபோய்,  அவர் கொடுத்த இலையே காணப்படும்!  எனக்கு கிடைத்த கல்கண்டை அப்பொழுதே சாப்பிட்டு இருக்கக்கூடாதா என்று நினைப்பேன்!  இந்த  விந்தைகள் நடந்துகொண்டிருக்கும்போது நாங்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் எங்கள் கண்களை அகல விரித்து சுவாமியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்போம்!  எவ்வாறு பலவிதமான பொருட்களை பலர் கைகளில் ஒரே நேரத்தில் சிருஷ்டிக்க முடியும் என்று நாங்கள் வியந்து கொண்டிருப்போம்!  அவ்வாறு மெய் மறந்த நிலையில் நாங்கள் இருக்கும்போது சுவாமி எங்கள் முன்வந்து தன் கைகளை தட்டி எங்களை சுய நிலைக்கு கொண்டு வருவார்! 
   
ஆதாரம்:  திருமதி. விஜயம்மா அவர்கள் எழுதிய "அன்யதா சரணம் நாஸ்தி" என்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 240:

ஒருநாள் தபால் மூலம் கடிதங்கள் வந்த போது நான் சுவாமியின் அறையில் இருந்தேன். ஒரு கடிதத்தை அவர் திறக்காமலும் படிக்காமலும் கீழே போட்ட போது அங்கு அப்போது புதிதாக அந்த அறையில் இருந்த ஒருவர் சுவாமியிடம் "சுவாமி! அந்த கடிதத்தை நீங்கள் படிக்காமல் கீழே போட்டு விட்டீர்கள். அது ஒருவரது அல்லல்களின் கதையாக இருக்கக்கூடும்" என்றார். அதற்கு சுவாமி, "இல்லை, இல்லை! அது ஒரு மகிழ்ச்சியான கதை தான்! அவருக்கு ஒரு மகன் பிறந்ததை பற்றி எழுதியுள்ளார். ஆனால் அவர் அந்த மகன் தன் முன் வாயில் இரண்டு பற்களுடன் பிறந்து இருப்பதாக சிறிய கவலை தெரிவித்துள்ளார்!" என்ற கூறினார். பிறகு அந்த கடித உறையை தன் கையிலே திறக்காமலேயே வைத்துக்கொண்டு எங்களிடம் அதில் எழுதப்பட்டுள்ள முழு விவரத்தையும் கூறினார்! "தெலுங்கானாவில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து ஒரு தம்பதியினர் புட்டபர்த்திக்கு சென்ற வருடம் யாத்திரை வந்திருந்தனர். அவர்கள் தங்களுக்கு ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என்று வேண்டினர். உடனே நான் அவரிடம் ஒரு ஆப்பிளை கொடுத்து அதை தன் மனைவியுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கூறினேன். ஆனால் அவர் அந்த ஆப்பிளை தன் கையில் வாங்கிக் கொண்டு, அதன் தோல் மீது இருந்த சில அடையாளங்களை கவனித்துவிட்டு , என்னிடம் " எலி கடித்து இருக்குமோ என்று சந்தேகமாக இருக்கிறது. நீங்கள் தான் அது என்னவென்று கூற வேண்டும்" என்று கூறினார். அதனை சாப்பிடுவதற்கு பயப்படுவது போல் தெரிந்தது. அதற்கு நான், "நீங்கள் இருவரும் தைரியமாக இதனை சாப்பிடலாம். உங்களுக்குப் பிறக்கும் குழந்தை மட்டும் வாயில் சில பற்களுடன் பிறக்கும், அவ்வளவுதான்!" என்று கூறினேன். நான் சொன்னபடியே குழந்தை பிறந்ததாக இந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார்; அவ்வாறு பற்களுடன் பிறந்தது தீய விளைவை ஏற்படுத்துமோ என்ற பயத்தில் தான் ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா என்றும் கேட்டுள்ளார்" என்று கூறிய பின் அந்தக் கடிதத்தை திறந்து எங்களுக்கு காண்பித்தார். அவர் சொன்ன விவரங்கள் அனைத்தும் அதில் காணப்பட்டன! சுவாமியின் சர்வக்ஞத்துவத்தைப் ( அனைத்தும் அறிந்த தன்மையை) பார்த்து நாங்கள் பிரமித்துப்போனோம்!
   
ஆதாரம்: 1960 இல் வெளிவந்த சனாதன சாரதி இதழில் திரு.கஸ்தூரி அவர்கள் எழுதிய பதிவில் இருந்து.


📝 நிகழ்வு 241:

1947 அக்டோபர் மாதத்தில் சுவாமியை நாங்கள் முதல் முறையாக அவர் பெங்களூர் வந்திருந்தபோது திருமதி. சாக்கம்மா அவர்கள் வீட்டில் தரிசித்தோம்.  அவரது இரண்டாவது அல்லது மூன்றாவது வருகையின் போது , அழைப்பின்றியே எங்கள் வீட்டுக்கு வருவதாக கூறி அனுக்கிரகித்தார்! இதைக் கேட்ட எங்கள் இதயங்கள் ஆனந்தத்தால் பொங்கி வழிந்தன!  ஆனால் ஒருநாள் காலையில் அவர் என்னிடம் அன்று மாலையிலேயே எங்கள் வீட்டுக்கு வருவதாக கூறினார். ஆனால் நாங்கள் ஏமாற்றம் அடைந்தோம்.  மறுநாள் காலையில் சுவாமியைப் பார்க்க செல்வதற்கு என் காரை வெளியே எடுப்பதற்காக பூட்டி இருந்த கார் 'ஷெட்'டிற்குச் சென்றேன். ஆச்சரியம்!  சுமார் ஐந்து வயது குழந்தையின் கால் பதிவுகள் மூன்றினை,  வளைந்திருக்கும் காரின் பின் புறத்தின் மேல் பகுதியில் கண்டேன்! அந்த மூன்று  பதிவுகளுமே வலது கால் சம்பந்தப்பட்டவையாக இருந்தன. யாரோ ஒரு குழந்தை  ஒற்றைக்காலில் தத்திச் சென்றது போல இருந்தது!  அந்த சரிவான பின்புறத்தில் எந்த குழந்தையும் நிற்கக்கூட முடியாது!
எங்கள் குடும்பத்தார் அனைவரும் அதனை பார்த்து ஆச்சரியப்பட்டோம்! இது சுவாமியின் லீலையாகத்தான் இருக்கும் என்று நம்பினோம்.  மறுநாள்  காலை நான் சுவாமியிடம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தபோது அவரிடம் "நீங்கள்  வாக்களித்தது போல அன்று மாலை எங்கள் வீட்டுக்கு  வரவில்லை" என்று கூறினேன். இதைக் கேட்ட அவர் ,  பரந்த புன்முறுவலுடன் "நான் வந்தேன்! அதற்கான அறிகுறிகளை நீ கவனிக்கவில்லையா?" என்று கேட்டார்.  இதனைக் கேட்ட நான் மிகவும் பூரிப்படைந்தேன்!
   பிறகு பல  வருடங்களுக்குப் பின் 1965 அக்டோபரில்  இந்த அற்புதத்தைப் பற்றி எழுதுவதற்கு நான் அவரிடம்  ஒப்புதல் கேட்கும்போது, "ஒரே ஒரு காலின் பதிவு,..."  என்று நான் கூறிக் கொண்டிருக்கும் போதே  அவர் குறுக்கிட்டு, "இல்லை;  மூன்று கால்பதிவுகள், அனைத்துமே வலதுகாலை சார்ந்தவை" என்று  திருத்தம் செய்தார்! என்ன சொல்வது,  உண்மையிலேயே, தெய்வம்தான்!!
   
ஆதாரம் : திரு. விட்டல் ராவ் அவர்கள் 1965-ஆம் வருடம் சனாதன சாரதி இதழில் எழுதிய பதிவு.


📝 நிகழ்வு 242:

சுவாமி பிரசாந்தி நிலையத்திற்கு வந்த பிறகும்கூட தசரா மகோற்சவம் சிறப்பாக நடைபெற்றது. அப்போது  பத்தாவது நாள் நடந்த பல்லக்கு  உற்சவத்தின்போது சுவாமியின் புருவங்களில் இருந்து விபூதி, குங்குமம்  போன்றவை தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். அல்லது சில நேரங்களில் சூரிய ஒளி போன்ற  மின்வெட்டு ஒளிகள் அவ்வப்போது தோன்றும். அந்த விபூதியை  கிராமத்தார், சிவன் தன் நெற்றியில் பூசியிருக்கும் 'கைலாஷ் விபூதி' என்று அழைப்பர்.  இதைப்பற்றி நான் ஒருவரை சுவாமியிடம் கூறியபோது அவர், "இல்லை, இல்லை! ஒரு நல்ல புனிதமான மனிதர் இறந்தால் அவரது உடல்  சுடுகாட்டில்  எரியூட்டப்படும் போது  கிடைக்கும் சாம்பலையே சிவன்  கொணர்ந்து தன் உடல் முழுவதும் பூசிக் கொள்வார்!  உனக்கு கொடுக்கட்டுமா?  ஒரு பக்தி மிகுந்த சாதகர் இறந்துவிட்டார். அவரது உடல் இப்பொழுதுதான் கங்கைக்கரையில் எரியூட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது" என்று  கூறிவிட்டுத்  தன் உள்ளங்கையை அசைத்து சுமாராக ஒரு பெரிய அளவிற்கு வெள்ளைநிற சாம்பலை வரவழைத்தார்!  எனது கூப்பிய கரங்களில் அவர் அதனைப் போட்டபோது , உள்ளங்கைத் தோல் கொப்பளித்து விடுமோ என்று பயந்தேன்! ஏனென்றால் அது அவ்வளவு சூடாக இருந்தது!" இதுதான் சிவனது விபூதி ஆகும்"  என்று சுவாமி கூறினார்!!
   
ஆதாரம்: திரு. கஸ்தூரி அவர்கள் எழுதிய 'லிவிங் காட்' என்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 243:

என்னுடைய மனைவி ஒரு நாள், தாம் பல நாட்கள் சுவாமியை வேண்டி,பாடிப் பயிற்சி செய்திருந்த ஒரு கன்னட பாடலை சுவாமியின் முன் பாடினார். அது இவ்வாறு தொடங்கிற்று: "நின்ன நம்பி பந்தே, என்ன கையே பிடாதிரு கன மகிமனே சாயிநாதா". அதாவது: "நான் உன்னை முற்றிலும் நம்பி வந்துள்ளேன், அதிமகிமை பொருந்தியவனே சாயிநாதா! என் கையை விட்டு விடாதே!". அப்போது சுவாமி தன் கைகளை கூப்பிக் கொண்டு நாற்காலியில் உட்கார்ந்து அமைதியாக எங்களை பார்த்துக் கொண்டிருந்தார். என் மனைவி பாடுவதை நிறுத்தியவுடன் அதற்கு பதில் அளிப்பது போல, அவளது தாய்மொழியான தமிழிலேயே, "விரும்பும் முன்னே தருவாரே, சாயி பாபா ,வேண்டும் முன்னே வருவாரே!" என்று சுவாமி தொடர்ந்து பாடினார்!!
   
ஆதாரம்: திரு கஸ்தூரி அவர்கள் எழுதிய "லவிங் காட்" என்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 244:

இந்த நிகழ்வு 1989இல் நான் சுவாமியிடம் வருவதற்கு முன்னரே நடந்தது. எனது நோயாளிகளில் ஒருவரான திரு விஸ்வநாதன் பல வருடங்களாக நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார். அதனால் அவரது பாதத்தில் தோன்றிய புண் பல நாட்கள் குணமாகாமல் இருந்தது. அதைப்பற்றி அவர் மிகவும் கவலைப்பட்டார். அதனால் அவர் சுவாமியை பார்ப்பதற்கு சென்றார். சுவாமி அவருக்கும் அவரது மனைவிக்கும் இன்டர்வியூ அளித்தார். அப்போது நீரிழிவு நோய் அவரது கண்களை பாதித்து விட்டதாக கூறினார். இதனைக் கேட்டு திகைத்த விஸ்வநாதன், "சுவாமி! நான் எனது காலில் உள்ள உபத்திரவத்திற்காக வந்துள்ளேன்! என் கண்களில் ஒன்றுமில்லை" என்று கூறினார். அதற்கு சுவாமி, "உனக்கு கால்களில் ஒன்றுமில்லை! ஆனால் கண்களின் பின்புறத்தில் நீரிழிவு நோயின் காரணமாக ஒரு கசிவு இருக்கிறது" என்று கூறிய அவர் மேலும் தொடர்ந்து, "நீ மெட்ராஸில் டாக்டர்.மோகனின் மனைவியான டாக்டர். ரேமா- நீரிழிவு நோய் நிபுணரை சந்தித்து ஆலோசனை செய்! அவர் உன் கண்களுக்கு மருத்துவம் செய்வார்" என்றார். மறுநாள் அவர் சென்னைக்கு வந்தபோது தன் காலில் இருந்த புண் முற்றிலும் குணமாகி இருந்ததைக் கவனித்தார்! பிறகு அவர் சுவாமி கூறியதைப்போல டாக்டர். ரேமாவை சந்தித்தார். அவரைப் பரிசோதித்த பிறகு டாக்டரும் சுவாமி கூறியதையே ஆமோதித்தார்! லேசர் சிகிச்சை மூலம் அந்தக் கசிவு முற்றிலும் நீக்கப்பட்டது. இவ்வாறு சுவாமி கூறியது அனைத்தும் நிஜமானது!
   
ஆதாரம்: டாக்டர். வி. மோகன் அவர்கள் எழுதிய "சத்யசாயிபாபா லிவ்ஸ் ஆன்" என்ற புத்தகத்தில் இருந்து.


📝 நிகழ்வு 245:

ஒருமுறை மார்பகப் புற்றுநோய் உள்ள ஒரு பெண்மணி என்னிடம் வந்தார். அறுவை சிகிச்சைக்கு முன்னர் தனது நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக என்னை சந்தித்தார். அறுவை சிகிச்சைக்கு முதல் நாள் அவரது நெருங்கிய நண்பர் ஒருவருக்கு சுவாமியிடம் பேச வாய்ப்பு கிடைத்தது. அவர் சுவாமியிடம் பேசுவதற்கு முன்னரே சுவாமியே அவரிடம் இந்தப் பெண்மணியின் உடல்நிலை குறித்து முழு விவரங்களையும் தெரிவித்தார். மேலும் மறுநாள் அவர் டாக்டர் மோகனின் சென்டரில் அறுவை சிகிச்சை எடுத்துக் கொள்வதாக கூறினார்! பிறகு இந்தப் பெண்மணிக்கு விபூதி வரவழைத்து அவரிடம் கொடுத்து அவரைத் தான் பார்த்துக் கொள்வதாக கூறினார். மறுநாள் அவரை அறுவை சிகிச்சைக்கு எடுத்துச் செல்வதற்கு முன்னால் அவரது படுக்கையில் சுவாமியின் விபூதி தோன்றியது! அறுவை சிகிச்சை முடிந்து இந்த மார்பகக் கட்டி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அதில் புற்று நோய்க்கான எந்த அறிகுறியும் இல்லை என்று தெரிந்தது! இதனைப் பார்த்த மருத்துவர்கள் மிகவும் ஆச்சரியம் அடைந்தனர் அவர்கள் தங்கள் வாழ்நாளில் இதுவரை இத்தகைய வினோதத்தைப் பார்த்தது இல்லை என்று கூறினர்! இந்த நிகழ்வின் மூலம் சுவாமியின் மகத்துவத்தின் மூன்று முகங்களை நாம் காண முடிகிறது. அவரது நண்பருக்கு தாமே அனைத்து விவரங்களையும் கூறியதன் மூலம் சுவாமியின் 'அனைத்தும் அறியும் ஆற்றலு'ம், படுக்கையில் விபூதி வரவழைத்ததன் மூலம் 'எங்கும் நிறைந்திருக்கும் ஆற்றலு'ம், புற்றுநோயை நீக்கியதன் மூலம் அவரது 'சர்வ வல்லமை'யும் நமக்குப் புலப்படுகின்றன.
   
இந்தப் பெண்மணியை தவிர மற்றும் எத்தனையோ பேர்களுக்கு சுவாமியின் கருணையின் மூலம் கேன்சர் கேன்சல் ஆனதுபற்றி நான் அறிந்திருக்கிறேன்.
   
ஆதாரம்: டாக்டர். வி. மோகன் அவர்கள் எழுதிய "சத்யசாயிபாபா லிவ்ஸ் ஆன்" என்ற புத்தகத்தில் இருந்து.


📝 நிகழ்வு 246:

ஒருமுறை சுவாமி வராந்தாவில் அமர்ந்து இருந்த ஒரு பக்தரை அவரது பெரிய குடும்பத்துடன் இன்டர்வியூவுக்கு அழைத்தார். இன்டர்வியூவின் இறுதியில் அவரது குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக சுவாமி என்னை உள்ளே அழைத்தார். புகைப்படங்கள் எடுத்து முடித்த பின் இன்டர்வியூ தொடர்ந்தது. அப்போது நடந்த உரையாடலை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். இந்தக் குடும்பத்தின் தலைவர் சுவாமியிடம், "சுவாமி! வாழ்க்கையில் மன நிம்மதியையும் மகிழ்ச்சியையும் எவ்வாறு அடைவது?" என்று கேட்டார். அதற்கு சுவாமி, "கடந்த ஒரு மணி நேரமாக நீயும் உனது குடும்பத்தினரும் மிக நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தீர்கள் அல்லவா ?அது எப்படி?" என்று திரும்பக் கேட்டார். அதற்கு அவர்," சுவாமி! அதற்கு நீங்கள்தான் காரணம்! நீங்கள் எங்களிடையே இருந்ததால் அவ்வாறு மகிழ்ச்சியாக இருக்க முடிந்தது" என்றார். உடனே சுவாமி மேலும் தொடர்ந்து, "இதே போல நான் எப்பொழுதும் உங்களுடனேயே இருக்கிறேன் என்ற உணர்வை மனதில் நிலைநிறுத்திக் கொண்டால் நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கலாம்!" என்று கூறினார்.
   
ஆதாரம்: திரு. நிதின் ஆசார்யா என்ற முன்னாள் மாணவரின் உரையிலிருந்து..


📝 நிகழ்வு 247:

என் மனைவி காலமாவதற்கு சில நாட்களுக்கு முன்னால் எனது மகள் என்னிடம் வந்து, "புட்டபர்த்தியில் திரு ஜி.கே. ராமன் அவர்களது உயிர் பிரியும் தருணத்தில் சுவாமியின் கையினாலேயே அவருக்கு தீர்த்தம் கிடைத்தது. இதேபோல அம்மாவிற்கும் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?" என்று கூறினாள். அவளுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்று திணறினேன். அந்த நேரத்தில் சுவாமியிடம் இருந்து தீர்த்தம் கிடைப்பது என்பது மிகவும் அரிதான விஷயம். எனது மனைவி டாக்டர் ரேமா உயிர்நீத்த அன்று காலை நான் ' மதியம் வந்து விடுகிறேன்' என்று கூறி விட்டு மருத்துவமனைக்கு சென்றேன். சுமார் 11 மணி அளவில் டாக்டர் கீதா பத்ரிநாத் அவர்களிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது . அவரைப் பற்றி நான் கேள்விப்பட்டு இருக்கிறேனே தவிர நான் அவரை நன்கு அறிந்ததில்லை. நான் என் பணியில் சிறிது முனைப்புடன் இருந்ததால் அவரிடம் " இப்போது என்னால் உங்களைப் பார்க்க முடியாது" என்று கூறிவிட்டேன். அதற்கு அவர் உடனே "இது சுவாமியைப் பற்றிய விஷயம்; நான் அதிக நேரம் எடுத்துக்கொள்ள மாட்டேன்! இது மிகவும் அவசரமான ஒரு தேவை. நீங்கள் அனுமதி அளித்தால் உடனே வருகிறேன்" என்று கூறினார். அவர் சுவாமியின் பெயரை கூறியதால் நான் உடனே அதற்கு சம்மதித்தேன். ஒரு சில நிமிடங்களில் அவர் என் சென்டருக்கு வந்தார். என்னே ஆச்சர்யம்! அவர் என்னிடம் ஒரு தீர்த்தத்தை அளித்தார். நான் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்தேன்! இது ஷீரடியில் பாபாவிற்கு அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தம் என்று கூறினார்!! முந்தைய தினம் தான் சீரடியில் இருந்து திரும்பி வந்ததாக கூறினார். மறுநாள் அதிகாலையில் நம் சுவாமி பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா அவரது கனவில் தோன்றி, "இந்த தீர்த்தம் யாருக்காக உன்னிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று தெரியுமா? நீ இதை டாக்டர்.மோகனிடம் கொடுக்க வேண்டும். அவரது இல்லத்தில் ஒருவர் நோய்வாய்ப்பட்டு இருக்கிறார். அவர் யார் என்றெல்லாம் அவரிடம் கேட்க வேண்டாம்! அங்கு சென்று அவரிடம் கொடுத்துவிட்டு," நீ இந்த தீர்த்தத்தை உங்கள் வீட்டில் இருக்கும் நோய்வாய்ப்பட்ட அவருக்கு அளிக்க வேண்டும். இது சுவாமியின் விருப்பம்" என்று மட்டும் கூறுமாறு பணித்தார். மேலும் சுவாமி "சீக்கிரம் செல், சீக்கிரம் செல், சீக்கிரம் செல்!" என்றும் மூன்று முறை கூறியுள்ளார். இதைக் கேட்ட நான் மிகவும் பூரிப்படைந்து அவருக்கு நன்றி கூறினேன். மேலும் அவர் என்னிடம் ஒரு சேடின் துணியை அளித்து என்னை வியப்பில் ஆழ்த்தினார்! இது சீரடியில் பாபாவின் உடல் மேல் போர்த்தப்பட்ட துணியாகும் என்று கூறினார்! நான் உடனே வீட்டிற்கு வந்து என் மனைவியிடமும் மகளிடமும் இதனைப் பற்றிக் கூறியபோது அவர்கள் பரவசமடைந்தனர்!

ஆதாரம்: டாக்டர். மோகன் அவர்கள் எழுதிய ," சத்ய சாயி பாபா லிவ்ஸ் ஆன்" என்ற புத்தகத்தில் இருந்து.


📝 நிகழ்வு 248:

டாக்டர் பூங்கோதை என்பவர் எங்களது ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒரு அங்கத்தின் தலைவராக பணியாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சி சுவாமி 2007 ஜனவரி இறுதியில் சென்னைக்கு வந்திருந்தபோது நிகழ்ந்தது. அந்த நேரத்தில் பூங்கோதை நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். எப்பொழுது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்ற நிலையில் இருந்த அவர் சுவாமியை தரிசித்து ஆசி பெற விரும்பினார். அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு நான் அவரிடம்," சுந்தரத்தின் உள்ளே வந்து அமர வேண்டாம்; ஏனென்றால் , அதிக நேரம் உட்கார நேரிடலாம். மேலும் கூட்டத்தின் நெரிசலில் நீங்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது . ஆகையால் சுந்தரத்தின் நுழைவு வாயிலிலேயே நின்று கொண்டு சுவாமி தரிசனம் செய்ய முற்படுங்கள்" என்று கூறினேன். அதற்கு அவரும், ஜனவரி 30 ஆம் தேதி (அவரது பிறந்த நாள்) அன்று வருவதாக கூறினார். ஆனால் அன்று காலையில் சுவாமி தமிழ்நாடு டிரஸ்ட் உறுப்பினர்களிடம், உரையாட போவதாகத் தகவல் எங்களுக்கு தெரிவிக்கப்பட்டு நாங்கள் சுந்தரம் ஹாலில் குழுமினோம். உடனே நான் இந்த தகவலை பூங்கோதையிடம் தெரிவித்து, இந்தக் காரணத்தால் சுவாமியின் பொது தரிசனம் இல்லாமல் போகலாம் என்பதையும் குறுந்தகவல் மூலம் தெரிவித்தேன். ஆனால் சில நேரம் கழித்து மேல் இருந்து கீழே இறங்கிய சுவாமி, "இப்போது இந்த உரையாடல் வேண்டாம்; நான் திருவான்மியூரில் அதிருத்ர ஹோமம் நடக்கும் இடத்திற்கு சென்று வருகிறேன்" என்று கூறிவிட்டு காரில் ஏறி அமர்ந்து கொண்டார்! உடனே நான் ஆச்சரியப்பட்டேன்! சுவாமியின் கார் சுந்தரத்தின் வாயிலிருந்து வெளியே சென்றபோது அங்கே கூப்பிய கைகளுடன் நின்றிருந்த பூங்கோதையை பார்த்து சிரித்துக்கொண்டே சுவாமி ஆசிர்வாதம் செய்தார்! பூங்கோதை தன் கண்களில் ஆனந்த கண்ணீர் மல்க பூரண மனநிறைவுடன் இல்லம் திரும்பினார்! அவரது ஆசையை பூர்த்தி செய்த பகவானுக்கு நான் மனதார நன்றி கூறினேன்!

 ஆதாரம் டாக்டர் மோகன் அவர்கள் எழுதிய ," சத்ய சாயி பாபா லிவ்ஸ் ஆன்" என்ற புத்தகத்தில் இருந்து.


📝 நிகழ்வு 249:

சென்னையில் உள்ள சுவாமியின் இல்லமான சுந்தரத்தில் அவ்வப்போது அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இவற்றை நானும் பலர் என்னுடன் சொல்லிக் கேட்டிருக்கிறேன். தமிழக அரசின் ஒரு மூத்த அதிகாரியும் , சிறந்த சாயி பக்தருமான ஸ்ரீ சாய் குமார், ஐஏஎஸ், அவர்கள்  தனக்கு வந்த ஒரு கனவை பற்றி எங்களிடம் கூறினார். தான் புட்டப்பர்த்தி வருவதற்கு சுவாமியின் ஆசியை வேண்டிக் கொண்டிருந்தார்.  சுவாமி அவரது கனவில் தோன்றி "நீ சுந்தரத்திற்கு வந்தாலே போதும்; அதுவும் என்னுடைய இல்லம் தான்" என்று கூறினார்.  மேலும் சுவாமி தொடர்ந்து கூறிய விஷயம் எங்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது! "மாநிலத் தலைவரிடமும் ட்ரஸ்ட் கன்வீனரிடமும் (நான் தான்) சென்று,  இவ்வாறு சொல்:  அவர்கள் என்னுடைய தேவைகளை சரிவர கவனிப்பதில்லை.  உதாரணமாக மாடியிலுள்ள எனது அறையில் என்னுடைய படுக்கையையும் தலையணையையும் எடுத்துவிட்டார்கள்.  நான் அருந்துவதற்கு தண்ணீர் வைப்பதில்லை.  நான் எனது உடலை விட்டுச் சென்று விட்டதால்  எனது அறையை சரிவர பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை  என்றும்,  எனது சவுகரியத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் நினைக்கிறார்கள்!" என்று சுவாமி கூறியிருக்கிறார்!  இந்த வார்த்தைகளைக் கேட்ட நாங்கள் மிகவும்  அதிர்ச்சியுற்றோம்.  உண்மையாகவே சுவாமியின் மகாசமாதிக்கு பிறகு நாங்கள் அவரது அறைக்கு செல்வதை நிறுத்தி விட்டோம்.  சுந்தரத்தின் காப்பாளரும் சுவாமியின் படுக்கை, தலையணை ஆகியவற்றை எடுத்து வைத்து விட்டதாக கூறினார்! சுவாமி உடலும் உயிருமாக நம்மிடம் உலாவிக் கொண்டிருந்தபோது அந்த அறை எத்தகைய பொலிவுடன்  விளங்கியதோ அதே  நிலைமைக்கு அந்த அறையை மறுநாளே நாங்கள் முயற்சி எடுத்து மாற்றி விட்டோம்!
 
ஆதாரம்: டாக்டர் மோகன் அவர்கள் எழுதிய "சத்யசாய்பாபா லிவ்ஸ் ஆன்" என்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 250:

19-05-2015  அன்று சுந்தரத்தில் நடந்த சுவையான நிகழ்ச்சி ஒன்றை இங்கே பகிர்கிறேன்.  அன்றைய தினம் சென்னையின்  நான்கு பகுதிகளிலிருந்து மகிளா(பெண்) உறுப்பினர்கள்  சகஸ்ரநாம அர்ச்சனை செய்வதற்காக சுந்தரத்துக்கு வந்திருந்தனர்.  அப்போது  அங்கு இருந்த ஒரு மாமரத்தில் இருந்து கீழே விழுந்த நான்கு மாம்பழங்கள் அவர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்பட்டன.  ஆனால் அவர்கள் அதைப் பார்த்து சிறிது குழப்பத்தில் ஆழ்ந்தனர். "நாங்கள் 36 பேர் இந்த நான்கு மாம்பழங்களை  எவ்வாறு பங்கிட்டுக் கொள்வது?" என்று  கேட்டனர்.  இதைக் கேட்ட சுந்தரத்தின் காப்பாளரான திரு. சந்திரன் அவர்கள், "சுவாமியிடம் வேண்டிக் கொள்ளுங்கள்! அவர் மேலும் உங்களுக்குப் பல மாம்பழங்களைத் தருவார்!" என்று கூறினார். 

சில நிமிடங்களுக்குப் பிறகு  பலமான காற்று வீசத்தொடங்கியது.  இந்தக் காற்றின் வேகத்தில் அந்த மாமரம்  பலமாகக்  குலுங்கியது என்றே சொல்லலாம்! அப்போது அம்மரத்தில் இருந்து சுமார் 100 மாம்பழங்கள் கீழே விழுந்தன!!  அடுத்த நிமிடம் அந்த காற்று நின்றுவிட்டது!! சுவாமி இவர்களது உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்தார் போலும்! உடனே அவர்களது ஆசையை பூர்த்தி செய்து விட்டார்!!  மிகுந்த மகிழ்ச்சியுடன் சுவாமிக்கு நன்றி கூறிய மகிளா உறுப்பினர்கள்  ஒவ்வொருவரும் தலா ஒரு மாம்பழம் வீதம், பிரசாதம்  பெற்றுக் கொண்டு தங்கள் வீட்டுக்கு சென்றனர்!! சுவாமி எப்போதும் சுந்தரத்தில்
வீற்றிருக்கிறார் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.


ஆதாரம்: டாக்டர் மோகன் அவர்கள் எழுதிய "சத்யசாய்பாபா லிவ்ஸ் ஆன்" என்ற புத்தகத்திலிருந்து.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக