தலைப்பு

புதன், 8 டிசம்பர், 2021

முன்னாள் கிரிக்கெட் கேப்டன் C.K நாயுடு அடித்து பாபாவின் காலடியைப் பணிந்த சிக்சர்!

C. K Nayudu, also known as CK, was the first captain of the Indian cricket team in Test matches.

பத்மவிபூஷண் C.K நாயுடு அவர்கள்தான் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதல் கேப்டன் ஆவார்.  இவரைப் போற்றும் விதமாக ஒவ்வொரு வருடமும் 23 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான 'சி.கே. நாயுடு கோப்பை' தேசிய கிரிக்கெட் போட்டியும்  பிசிசிஐ -யால் நடத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் இவரின் நினைவை போற்றும் விதமாக  ஒவ்வொரு வருடமும்  சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் என்ற விருதும் பிசிசிஐயால் இன்றளவும் வழங்கப்பட்டு வருகின்றது.

வாழ்க்கை என்னும் கிரிக்கெட்டில் நம்மை நோக்கி வீசப்படும் பந்துதான் சவால்கள். அவை பலவிதமானவை. சுழல் பந்து, வேகப்பந்து, வேகம் குறைந்த பந்து, நேர் பந்து, இப்படி பலவிதமான பந்துகளை, பகவான் கொடுத்த நன்மதி என்ற மட்டையால் பல திசைகளில் அடித்து புண்ணியம் என்ற ரன்களை குவிக்கவேண்டும். கவனம் சிதறினால் , அவுட் ஆக நேரிடும்.

பல்லாயிரக்கணக்கான தம் அவதாரப் பணிகளுக்கிடையே, பகவான் பாபா  கிரிக்கெட் விளையாட்டிலும் தம்  கவனத்தை செலுத்தி இருக்கிறார். கவாஸ்கர், சச்சின். லக்ஷ்மணன்  மற்றும் டிராவிட் போன்ற பல கிரிக்கெட் ஜாம்பவான்களும் சத்ய சாயி பாபாவின் தீவிர பக்தர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. உலகத் தரம் வாய்ந்த கிரிக்கெட் அரங்கத்தை  புட்டபர்த்தியில் அமைத்த பாபா கவாஸ்கர், காலி சரண்,  பிரசன்னா போன்ற கிரிக்கெட் வீரர்களை அரவணைத்து அப் பணியில்  அவர்களை ஈடுபடுத்தயுள்ளார்..

1930-களில் கிரிக்கெட் , செல்வந்தர்களாலும் மேல் தட்டு மக்களாலும் ஆடப்பட்ட ஆட்டம். இதில் மேலை நாட்டவர்களுக்கு ஈடாக திறமையாக விளையாடி முத்திரை பதித்தவர்களில் பத்மபூஷண் C.K. நாயுடு அவர்களும் ஒருவராவார். இவர் 7 டெஸ்ட் ஆட்டங்களிலும் 207 முதல் நிலை(First class) ஆட்டங்களையும் ஆடி பல சிக்சர்களை விளாசியுள்ளார். இவரே இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதல் கேப்டன் ஆவார். இந்திய அரசின் பெருமைமிக்க பத்மவிபூஷண்  விருதையும் பெற்றவர்.


C.K. நாயுடு அவர்களின் மகளான சந்திர நாயுடு 'A Sixer for the Lord, from Padma Bhushan Col. C.K.Nayudu'.  என்ற சிறு புத்தகத்தை  எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் இருந்து ஒரு சுவாரசியமான சம்பவம் கீழே தொகுக்கப்பட்டுள்ளது..

🌹பகவான் பாபா அமர்ந்ததிருந்த திசையில் சிக்ஸர் அடித்து  வரவேற்ற C.K. நாயுடு:

திருமதி. சந்திர நாயுடு அவர்கள் கூறியது...
என் தந்தையார்  உட்பட நாங்கள் அனைவரும் சத்ய சாய்பாபாவின் பக்தர்கள். 1957இல்  ஒருமுறை எனது தந்தையார் கிரிக்கெட் விளையாடுவதற்காக  சென்னை சென்றிருந்தார். அவர்களுடன் நாங்களும் சென்றிருந்தோம்.  நாங்கள் சென்ற சமயத்தில் பாபா சென்னைக்கு விஜயம் செய்திருந்தார். அதனைக் கேள்விப்பட்ட எனது தந்தையார் பாபாவை தரிசிக்க சென்றிருந்தார்.  சென்ற இடத்தில் தரிசனமும், பாபாவிடம் பேச வாய்ப்பும் அதிர்ஷ்டவசமாக கிடைக்கப்பெற்றது.  அப்போது எனது தந்தையார் பாபாவிடம்.. 'பாபா நாளை நான் விளையாடப் போகிறேன் எனக்கு உங்களின் ஆசிர்வாதம் வேண்டும்.  அதுமட்டுமல்லாமல் எனக்கு ஒரு ஆசையும் இருக்கின்றது' என்று பாபாவிடம் சொன்னார்.  அதற்கு பாபா என்னவென்று கேட்டார்.  இவரோ 'பாபா நாளை நான் விளையாடுவதை நீங்கள் பார்க்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்' என்ற தனது விருப்பத்தை தெரிவித்தார். அதற்கு பாபா 'ஓ அப்படியா.. அப்படி நான் வந்தால் நீ  எனக்காக என்ன செய்வாய்' என்று கேட்டார்.  அதற்கு எனது தந்தையார் 'நீங்கள் வந்தால் நான் உங்களை வரவேற்க ஒரு சிக்சர் அடுப்பேன்' என்று புன்சிரிப்போடு சொன்னார்.  அதற்கு பாபாவும் அப்படியே சிரித்துக்கொண்டே சரி பார்க்கலாம் என்று அவரை ஆசிர்வதித்து வழியனுப்பினார்.


மறுநாளே C K .நாயுடு பங்குபெறும் கிரிக்கெட் ஆட்டத்தைக் காண மைதானம் சென்றார் பாபா. அப்போது அங்கு ஆடிக் கொண்டிருந்த நாயுடு அவர்கள் பாபா வருவதை பார்த்த ஆனந்த பரவசத்தில் தம்மிடம் வீசப்பட்ட பந்தை லாகவமாக தடுத்து பாபா கார் நிறுத்தியிருந்த இடத்தில் விழுமாறு சிக்ஸர் அடித்தார். (பந்தும் பாபாவின் பாதமலர்களில் பணிந்ததோ) இந்நிகழ்ச்சியை பாபா  ஒரு சிறுவனைப் போன்ற குதூகலத்துடன் கண்ணை மலர விழித்து விவரித்த காட்சி என்னை வியப்படைய வைத்தது. பிறகு, பாபாவின் அன்புப் பரிசாக என் தந்தைக்கு ஒரு பதக்கமும்.. எனது அன்னைக்கு பாபாவின் சிறுவயது  புகைப்படமும் வரவழைத்துக் கொடுத்தார். அப் புகைப்படத்தை இன்றளவும் எங்கள் பூஜை அறையில்  பூஜிக்கிறோம்.

புட்டபர்த்தி போன்ற ஒரு குக்கிராமம் காண்பவர் எல்லாம் வியக்க பிரம்மாண்ட வளர்ச்சி பெற்றது ஒரு சாதாரண மனிதரின் அல்லது நிறுவனத்தால் முயற்சியாலா? அது ஈரேழுலகின் ஒரே இறைவன் சத்யசாயியின்  தெய்வீக பிரபஞ்ச சக்தியால் மட்டுமே இயன்ற காரியம். பாபாதான் பரிபூரண பரம்பொருள்..  அதை அவர் ஆற்றிய  அளப்பரிய பெருஞ்செயல்களால் உணரலாம். இவ்வாறு சந்திர நாயுடு அவர்கள் பாபாவுடனான தம் தந்தையின் தொடர்பு பற்றி கூறியிருக்கிறார்.

ஆதாரம்: A Sixer for the Lord, from Padma Bhushan Col. C.K.Nayudu - Chandra Naidu
தமிழாக்கம்: திரு.குஞ்சிதபாதம், நங்கநல்லூர். 

🌻 இந்த உலக வாழ்வே ஒரு விளையாட்டு. அதை நீ விளையாடு என்கிறார் பாபா, அதை எப்படி விளையாடினால் நாம் வெற்றிபெற இயலும் என்பதை தம் உபதேசத்தால் கற்பிக்கிறார். நம் ஒவ்வொரு ஓட்டத்திலும்( ரன்) கூட இருந்து கைதட்டி ஊக்குவிக்கிறார்.  ஆகவே வாழ்வு என்னும் விளையாட்டை, பகவான் கற்றுத் தந்த படி, விளையாடி வெற்றிப் பதக்கத்தை வெல்வோம். 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக