தலைப்பு

திங்கள், 6 டிசம்பர், 2021

உறுமியபடி கடித்துக் குதறக் காத்திருக்கும் மாயை எனும் அதி பயங்கர நாய்!


மாயை எனும் மாய வலையில் சிக்காமல் இருப்பதற்கு சுவாமி கூறும் மிகப் பெரிய உபாயம் இது... ஏற்கனவே சிக்கியவர்களின் அக விடுதலைக்கும், இனி சிக்காமல் இருப்பதற்கும் சுவாமி ஒரு எளிய உதாரணம் வழி தனது தனிப்பெரும் ஞானாஸ்திரத்தை நம் இதயத்தில் பாய்ச்சுகிறார் இதோ...!


பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா, மாயையின் ஆற்றலை விளக்கினார். கடவுள் மாயையின் (பிரமை, பொய்த் தோற்றம், அறியாமை) எஜமானர். மாயை என்பது கடவுள் வீட்டு வாயிலில் காவல் காக்கின்ற பயங்கர நாய் போன்றது; அது வெளியாட்கள் அவரை அனுக அனுமதிப்பதில்லை .

நீ கடவுளை அடைய வேண்டுமென்பதில் நேர்மையாக இருந்தால் இரண்டு வழிகள் தான் உண்டு. ஒன்று எஜமானரின் உருவத்தைத் தரித்தல் , அப்போது நாய் உனக்கு எந்த தொந்தரவும் செய்யாது . இதற்கு சாரூப்யா என்று பெயர். ஆனால் இந்த கடவுளின் உருவத்தை தரித்தலில் சிறிதளவு குறைபாடும் இருத்தலாகாது. இருந்தால் நாய் உன்னைச் சும்மா விடாது. 

அடுத்த வழி, எஜமானரை பலத்த குரலில் அழைப்பது. உனது குரலை அவர் கேட்பார். உன்னிடம் அவர் வருவார். திறந்த கரங்களுடன் உன்னை வரவேற்கிறார். உன் கையைப் பிடித்துக் கொண்டு பெருகியோடும் பிரியத்துடன் உன்னை உள்ளே அழைத்துச் செல்கிறார். இதற்கு சாமீப்யம் அதாவது கடவுளுடன் நெருக்கமான இணக்கம் என்று பெயர். நீ எஜமானனுடன் கூடவே இருப்பதால் நாய் உனக்கு எந்தக் கெடுதலும் செய்யாது. கடவுளின் வளர்ப்பு நாய் என்பதால் நாய் அவர் சொல் படி கேட்கிறது. உனக்கு தொந்தரவு தரலாகாது என்று கடவுள் திருவுள்ளம் கொண்டால்  உனக்கு எந்த பங்கமும் வராது. உனக்கு பயம் இராது.

எவ்வளவு எளிய அழகான உருவகக் கதை இது. எவ்வாறு தான், தனது பரிபூரண சங்கல்பத்தாலேயே பக்தனோடு நெருங்கி ஐக்கியமாகிறார் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார். இரண்டாவது , எத்தனை எளிய வழி. பக்தன் மிகுந்த நேர்மையுடன் தனது இதயம் முழுவதையும் செலுத்தி, குரலில் வேதனையுடன் , உடல் உணர்வு முழுவதும் தாபம் வெளிப்பட கடவுளைக் கூவி அழைக்கிறான்.கோடிக் கணக்கான சாயி பக்தர்கள் செய்யும் கடவுள் நாமஸ்மரணத்துக்கு செவி சாய்த்து பக்தர் முன் அதிகாலையில் அளவற்ற கருணையுடன் தயையுடன் வருகிறார்.

இடைவிடாது ஒரு தெய்வத்தின் நாமத்தை கூறிக் கொண்டே இருப்பது, பக்தனை உயர்த்திக்கொண்டே சென்று முடிவில் அவர் அந்த தெய்வத்தின் வடிவைப் பெறுவார். இடைவிடாது ஸ்ரீ ராமனின் பெயரை பரதன் கூறிக்கொண்டு இருந்ததால் முடிவில் பரதனின் தோற்றம் இராமனின் தோற்றம் போலவே இருந்தது என்று  பகவான் கூறுகிறார். மஹா பாகவதத்திலும் , உத்தவர் இடைவிடாது ஸ்ரீ கிருஷ்ணரின் பெயரை சொல்லிக்கொண்டே வந்ததால் அவர் கிருஷ்ணனைப் போலவே தோற்றமளித்தார் என்றும் பகவான் கூறுகிறார். 

ஆதாரம்: தபோவனம். 


நாமம் சொல்வோம் இறை உருவைப் பெறுவோம். மாயையை வெல்வோம். 

💐ஜெய் சாய் ராம்💐


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக