பள்ளிப் படிப்பை துறந்த பாபா, தம்மை ஷீர்டி சாயி அவதாரம் என்று அறிவித்த காலத்திலும், அதற்கு பின்னாலும், புட்டபர்த்தியில் இளமையில் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் திவ்ய சரித்திரம் நாம் அறிய வேண்டிய அற்புதமாகும். அந்நாளைய புட்டபர்த்தி எப்படி இருந்தது, பாபாவின் அவதாரச் செயல்பாடுகள் எவ்வாறு வேறூன்றி துளிர்விடத் தொடங்கின என்பது போன்ற நிகழ்வுகளை இனி காண்போம்...
🌹கோகுலமாம் கொல்லப்பள்ளி.... புற்று மண்டி புட்டபர்தியானது:
ஆம். புட்டபர்த்தியின் அந்நாளைய பெயர் கொல்ல பள்ளி. கோகுலம் போல் ஆநிறைகள் பெருகி வளர்ந்த ஒரு சிறு கிராமம். இந்திய வரைபடத்தில் ஒரு மிகச் சிறிய புள்ளி போன்ற ஒரு எளிய குக்கிராமம். ஆநிறைகள் மேய்ச்சலுக்கு அடர் வனம் சென்றபோது , ஒரு பசுவின் மடிபற்றி நாகம் பால் அருந்துவதைக் கண்ட மேய்ப்பவன், அந்த நாகத்தை கல்வீசி கொல்ல, அந்த பாம்பு இட்ட சாபத்தால் ஆவினங்கள் மெல்ல மெல்ல குறையத் தொடங்கின.பின்னர் பாம்பு புற்றுகள் பல தோன்ற ஆரம்பித்தன. புற்றுக்கள் நிறைந்த ஊர் என்பதால் புட்டபர்த்தி என்ற திருப்பெயர் சூட்டப் பெற்றது. ஆநிறைகள் இருந்ததால் , மாயன் கோபாலன் அவதாரம் எடுக்க இக் கிராமத்தை தேர்ந்தெடுத்தான் போலும். பாம்பணை மீது பள்ளி கொண்ட பரந்தாமன், பாம்பு புற்றுகள் நிறைந்த புட்டபர்த்தியை விரும்பியதில் வியப்பென்ன.
🌹கோயில்கள் நிறைந்த ஊர்... கோபாலன் தவழ்ந்த ஊர்:
கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் என்ற மூதுரைக்கேற்ப, புட்டபர்த்தி பல கோயில்களின் இருப்பிடமாகத் திகழ்ந்தது. பாபாவின் பாட்டனார் கனவில் தோன்றி, பாரிஜாத மலர் கொணர சென்ற பரந்தாமன் நீண்ட காலமாக வரவில்லை. அவரைத் தேடி வந்த போது பெரும் புயலில் சிக்கிவிட்டேன். எனக்கு களைப்பாக இருக்கிறது. தங்க ஒரு இடம் கொடு எனக் கேட்ட தேவி சத்யபாமாவுக்கு ஒரு கோயிலும், அதன் அருகில் அஞ்சனை மைந்தன் ஆஞ்சனேயனுக்கு ஒரு கோயிலும், பழமையானவை. பாபா பிறந்த இல்லம் சிவன் கோயிலாக மாற்றப்பட்டு 1979ல் பகவானின் திருக்கரத்தினால் திறக்கப்பட்டது முஸ்லீம் அன்பர்கள் தொழுகை நடத்த ஒரு மசூதி பாபாவினால் 1978 ல் கட்டித் தரப்பட்டது.
🌹வியத்தகு வேணுகோபாலர் கோயில்:
பசுவிடம் பால் குடித்த நாகத்தை கொன்ற கல், சாப நிவர்த்திக்காக ஒரு கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழி படப்பட்டு வந்தது. அக்கல்லில் இறந்த பாம்பின் ரத்தம் உறைந்து கறையாக படிந்திருந்தது. பாபாவின் கட்டளைப்படி அந்த கல்லில் உறைந்திருந்த ரத்தக்கறை கழுவி அகற்றப்பட்டு, சந்தனக் காப்பு இடப்பட்டது. என்னே ஆச்சர்யம். அப்போது அந்தக் கல்லில் குழல் ஊதும் வேணுகோபால ஸ்வாமியின் திரு உருவம் காணப்பட்டது. அதைவிட அற்புதம் , அக்கல்லை காதருகில் வைத்து உற்று கேட்டால் , ஸ்ரீ வேணுகோபாலனின் மூச்சு சப்தம் புல்லாங்குழல் வழியாகக் கேட்டது. இந்த கோயிலின் வழிபாட்டால் சர்ப்பம் இட்ட சாபம் விலகி , மறுபடியும் ஊரில் ஆவினங்கள் பெருகத் தொடங்கின.
🌹பழைய மந்திரம்.. பாபாவின் மகிமை.. ஒளிவீசிய சுந்தரம்:
பழைய மந்திரத்தின் வரலாறு பாபாவின் இளமை கால வரலாறு. ஒளி வீசி எழும் காலைக் கதிரவனின் உதயம் போன்று, ஜொலிக்கும் வரலாறு ஆகும். ஆகவே பாபா அவதார அறிவிப்பு நாளிலிருந்து தொடங்கினால்தான், முழுமையான நிகழ்வுகளின் வடிவம் நமக்கு புலப்படும்
🌹அவதார பிரகடனமும்... அதற்கு பின்பும்:
அக்டோபர் 20, 1940. மாயை விலகிவிட்டது. நான் உலக மக்களுக்கானவன் என்று கூறிய இளம் சத்யா, உரவகொண்டாவில் கலால் துறையில் பணியாற்றிய ஆஞ்சனேயலு என்பவர் வீட்டுத் தோட்டத்தில் மரங்களுக்கிடையே ஒரு கல்மீது அமர்ந்தது அனைவரும் அறிந்ததே.
மக்கள் பலரும் பழங்களும் புஷ்பங்களும் கொணர்ந்து இளம் சத்யாவை வழிபட, நான் ஷீர்டி சாயியின் அவதாரம் என்றார் சத்யா. குவியலாக இருந்த மல்லிகை மலர்களை கைகளால் வீசி தரைமீது எறிய, அது அழகிய எழுத்து வடிவில் சாயிபாபா என பரிணமித்தது. மூன்று நாட்கள் அங்கிருந்து நாமஸ்மரணம் உபதேசங்கள் செய்த பாபா, அன்னை ஈஸ்வராம்பா கையால் மூன்று கவளம் கலந்த அன்னத்தை உண்டார். அவர் விருப்பபடி நடக்கலாம், தொந்தரவு தர மாட்டேன் என அன்னை கூறியதால் மீண்டும் பர்த்தி வந்த பாபா, கர்னம் சுப்பம்மா வீட்டிற்கு வந்தபின், தனது தகப்பனார் பெத்த வெங்கம ராஜூ வீட்டில் சில தினங்களும், பிறகு ஈஸ்வராம்பா சகோதரர் சுப்பராஜூ இல்லத்தில் சில தினங்களும் தங்கினார். பிறகு மறுபடியும் கர்னம் சுப்பம்மா வீட்டிற்கே குடி பெயர்ந்தார். வியாழக்கிழமை பஜன்கள் , தினசரி பஜன்களாக பரிமாணித்தன. தொலை தூரத்திலிருந்து அனேகம் மக்கள் பாலசாயியை தரிசிக்க வந்தனர். எட்டுக்கு எட்டு பரப்பை கொண்ட ஒரு சிறிய அறை பஜனை கூடமாக இருந்தது. கூட்டத்தை சமாளிக்க பின்னர் ஒரு ஷெட் கட்டப்பட்டது.
தம்மை தரிசிக்க வரும் அனைவருக்கும் அன்னம் அளிக்கப்பட வேண்டும் என்ற பாபாவின் விருப்பத்தை மகிழ்வுடன் நிறைவேற்றினர் சுப்பம்மா.. பின்னர் சாக்கம்மா என்ற புண்யவதிகள். சமைத்த உணவுகள் போதாது என்ற நிலை வரும் போது பாபாவிடம் தகவல் தெரிவிக்க , அவர் இரண்டு தேங்காய்களை தம் கையால் எடுத்து ஒன்றின் மேல் ஒன்றை மோதி உடைத்தே , அதிலுள்ள நீரை சமைத்த உணவுகளின்மேல் தெளிக்க அவை அட்சய பாத்திரமாய் அள்ள அள்ள குறையாத உணவுகளை வழங்கின. . இவ்வாறு ஐந்தாண்டுகள் சுப்பம்மா இல்லத்தில் பகவான் இருந்து அருள் பாலித்தார்.இதற்கிடையில் கிராமத்திலிருந்த வம்பர்கள் பகவான் சுப்பம்மா வீட்டில் தங்குவதற்கு இடையூறாக இருந்ததால், சுவாமி சித்ராவதியின் மறுகரையிலுள்ள குகைகளில் வாழத் தொடங்கினார். சுப்பம்மா அவருக்கு தினமும் உணவளிக்கும் திருப்பணியை மேற்கொண்டார். ஸ்வாமியின் இந்த நிலைகண்டு, புக்கப்பட்டினத்திலுள்ள சிகனந்தா என்கிற துறவி அவரை தம் ஆசிரமத்திற்கு அழைத்து தங்க வைக்க விரும்பினார். இதைக் கண்டு மனம் பதறிய கமலம்மா, சுப்பம்மமாவிடம் கலந்து பேசி புட்டபர்த்தியில் உள்ள தங்களது காலி மனையை ஸ்வாமியின் உபயோகத்திற்காக அவருக்கு வழங்க முடிவெடுத்தனர். இந்த மனை சத்யபாமா மற்றும் கோபால கிருஷ்ணர் கோவிலுக்கு இடையில் அமைந்திருந்தது.. இதன் பத்திரப் பதிவு 20.7. 1945 ல் புக்கப்பட்டினம் பதிவு அலுவலகத்தில் (Doc.No.553 of 1945)பதிவு செய்யப்பட்டது.
பதிவின் விவரம்: புட்டபர்த்தி கிராமத்திலுள்ள கர்னம் சுப்பம்மா, கமலம்மா ஆகிய எங்களுக்கு சொந்தமான, சர்வே எண் 310.6.0.11( 34 செண்ட்) பரப்பளவுள்ள ரூபாய் 50 மதிப்புள்ள நிலத்தை, ரத்னாகரம் பெத்தவெங்கம ராஜுவின் குமாரர் சத்ய நாராயணாவுக்கு இந்த நன்கொடை பத்திரம் (Gift deed) மூலம் அளித்து பதிவு செய்கிறோம். இந்த இடத்தை ஸ்வாமியை தரிசிக்க வருபவர்கள் உபயோகத்திற்காக பயன் படுத்திதக் கொள்ளவும். அப்போது இருந்த பத்திரப்பதிவுக் கட்டணம் ரூ 0.12 .
பின்னர் பகவானின் ஆரம்ப கால பக்தர்களான திருமலை ராவ், புஷ்பம்மா,கர்னம் சுப்பம்மா போன்றவர்கள், பகவானிடம் ஒரு நிரந்தர இல்லமாகிய கோயிலைக் கட்ட அனுமதி கேட்டு பிரார்த்தித்தனர். களிமண்ணால் செய்யப்பட்ட மங்களூர் ஓடுகளுடன், தகர மேற்கூரை வேயப்பட்ட கட்டிடம் உருவாகி 14-12-1945 வைகுண்ட ஏகாதசி தினத்தன்று பகவான், சுப்பம்மா வீட்டிலிருந்து ஊர்வலமாக வந்து பழைய மந்திரம் என்னும் பூலோக வைகுண்டவாசி ஆனார்.அவர் பழைய மந்திரின் ஹாலுக்கு இடப்புறம் ஒரு சிறிய 8×6 அளவுள்ள அறையில் எளிமையே உருவாக வசிக்கலானார்.
சாய்ராம்.... பழைய மந்திரில் பகவானின் லீலா விநோதங்கள் அனைத்தையும் விவரிக்க விண்ணை காகிதமாக்கி எழுதினாலும் இயலாது. ஆயினும் ஒரு செய்தியைக் கூறாமல் இப்பதிவு நிறைவு பெறாது. பழைய மந்திரம் கட்டிட கடைக்கால் போட ஒரு குழி தோண்டப்பட்டபோது , லிங்கம் இல்லாத ஆவுடையார் கற்கள் பல அதில் இருந்தன. லிங்கங்கள் எங்கே போயின என ஆவலுடன் பக்தர்கள் கேட்க பாபா அவரது திருக் கரத்தால் தமது வயிற்றைச் சுட்டிக் காட்டினார். லிங்கோற்பவஹரா லிங்கேஸ்வரா என்ற பஜன் நினைவுக்கு வருகிறது அல்லவா. பகவானின் திவ்ய சரித்திரம் ஏழ்கடல் போன்று விஸ்தீரண்மானது. அதை நம் கடுகு போன்ற சொற்களில் அடைக்க இயலாது. ஆயினும் நம்மால் இயன்ற அளவு அவன் புகழை பாடி ஆனந்தம் அடைந்து உய்வோமாக.
ஓம் ஸ்ரீ சாய்ராம்.
ஆதாரம் : Excerpts from “The Early days - Coffee PODI (Powder) SAKAMMA” & Sri Sathya Sai Digvijayam Part 1 (1926 – 1985)
தமிழாக்கம்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக