தலைப்பு

திங்கள், 13 டிசம்பர், 2021

இன்று கீதா ஜெயந்தி : கிருஷ்ணர் கீதையை உபதேசித்த நாள்!!

ஞானமழையான ஸ்ரீமத் பகவத் கீதை குருஷேத்ரம் எனும் யுகநிலத்தில் வழிய வழியப் பொழிந்த திருநாளான இன்று.. கீதையின் மகிமையையும்... ஸ்ரீ கிருஷ்ணரும் சுவாமியும் ஒன்றென்றும் அனுபவத்தையும்... எப்படி இந்த கீதை ஜெயந்தியை கொண்டாடுவது எனும் வழிமுறையையும் சுவாரஸ்யப் பதிவாக இதோ...


இறைவன் அவதாரமாய் இறங்கி வந்த பாரதபூமியில் நாம் பிறப்பதற்கும்... இறைவன் உடலெடுத்து சுவாசித்த காற்றை நாமும் சுவாசிக்கவும் பிறவிப் புண்ணியம் செய்திருக்கிறோம்!! பாரதத்தை இதுவரையும் இதற்கு மேலும் சுற்றி வருபவர்கள் எல்லாம் பாக்கியசாலிகளே! யுகங்களில் பரிபூரண அவதாரங்கள் இரண்டு.. ஒன்று ஸ்ரீ கிருஷ்ணர் இன்னொன்று ஸ்ரீ சத்ய சாயி... 


சனாதன தர்மிகளின் வேத நூல் எது என்றால் ? ரிக் யஜூர் சாம அதர்வண என யாரும் உடனடியாகச் சொல்லாமல்.. ஸ்ரீ மத் பகவத் கீதையே என்பார்கள் இன்றைய காலத்திலும்.. அதற்கான காரணம் சதுர்வேத சாரமே கீதையில் இறங்கி இருக்கிறது... ஸ்ரீ மத் பகவத் கீதையையும் ஸ்ரீ சத்ய சாயி ஸ்பீக்ஸ் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் கூட இரண்டிலும் ஒரே சாரம்சமே வெவ்வேறு வெளிப்பாட்டில் இருக்கிறது என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்... காரணம் இரண்டு பரிபூரண அவதாரங்களும் ஒன்றே!!

ஆக சுவாமி அளித்த அந்த ஆதி ஞானப் பொழிவே ஸ்ரீமத் பகவத் கீதை... அது மார்கசீர்ஷா மாதம் "சுக்ல ஏகாதசியில்" நிகழ்ந்தது... அந்த பெரும்புனித நன்னாள்  இன்றே!! எப்பேர்ப்பட்ட பாக்கியம் ஸ்ரீ அர்ஜுனன் பெற்றது... எப்பேர்ப்பட்ட பாக்கியம் அந்த குருஷேத்திரப் போர்க்களம் பெற்றது... தகுதிப்படி பார்த்தால் தர்மருக்கே கீதையை சுவாமி உரைத்திருக்க வேண்டும்.. ஆனால் சுவாமியோ அர்ஜுனனுக்கு அளித்தார்... சரணாகதியையே சுவாமி தன் பக்தனின் தகுதியாகப் பார்க்கிறார்... 


சுவாமியிடம் பூரணமாய் சுய விருப்பு வெறுப்பின்றி சரணாகதி அடைந்தவர் ஸ்ரீ அர்ஜுனன்... கிளி தானே காகம் தானே எனக் கிளையில் அமர்ந்த பறவையைப் பார்த்து சுவாமி கேட்ட போது எல்லாவற்றுக்கும் ஆம் ஆம் என்றார் அர்ஜுனன். சுவாமி அதற்கு காரணம் கேட்கையில்... நீ நினைத்தால் கிளியை காகமாக்குவாய் .. காகத்தை குயிலாக்குவாய் என்றாரே பார்க்கலாம்.. அது தான் இறைவனை உணர்தல்.. அது தான் பூரண சரணாகதி.. அப்பேர்ப்பட்ட அர்ஜுனனுக்கு உறவினரைப் போரில் வதைப்பதா என ஆயிரம் கேள்விகள்.. கேள்விகள் கோடி பதில் நீ ஒன்றே எனும்படி சுவாமி அப்போது மாயையை விளக்குகிறார்.. மாயையை விளக்கி மாயையை அவனிடமிருந்து விலக்குகிறார்... போர் செய்யச் சொல்கிறாரே சுவாமி என்ன அகிம்சா மூர்த்தியா ? எனக் கேட்கலாம் அப்படி இல்லை.. ஒரு வேளை அர்ஜுனனுக்கு பூந்தோட்டத்தில் பூக்கள் பறிப்பதைப் பற்றி தயக்க சந்தேகம் வந்திருந்தால் சுவாமி அர்ச்சனையைப் பற்றிய கீதை வழங்கி இருப்பார்... எந்த இடமோ அந்த இடத்திற்கு தகுந்த ஞானத்தை சுவாமி தன் பக்தர்களுக்கு வழங்கத் தயங்கியதே இல்லை... அர்ஜுனன் பெற்ற கீதா புண்ணியம்.. அவரால் அவரின் சரணாகதியால் இன்று அகில உலகமே அதனைப் பெற்று கொண்டாடுகிறது... இந்த நன்னாளில் நாம் ஸ்ரீஅர்ஜுனனின் சரணாகத பக்தியும் நமக்கு அருளும்படி சுவாமியிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்!! எதை எதையோ வேண்டி வாழ்வை வீணடிக்காமல் ... நிலையான சுவாமியிடம் நிலையானதை மட்டுமே கேட்க வேண்டும்... காமதேனுவிடம் காபி பொடி கேட்பதால் என்ன புண்ணியம்?!


இந்த கீதை ஜெயந்தி நாளில் வடநாட்டினரும்.. இங்கிருந்து செல்லும் தென்னாட்டினரும் சுவாமியை ஆராதித்து.. ஸ்ரீ கிருஷ்ண கோவிலில் வழிபாடு நடத்தி... புனித மண்ணான குருஷேத்திரத்தை வலம் வந்து.. அங்குள்ள புனிதக் குளங்களில் நீராடி பெரிதாக இன்றைய ஞான நாளை பூரிப்புடன் கொண்டாடுகிறார்கள்... இந்த நன்னாளில் இருந்து நாம் அனைவரும் கீதையை இதயப்பூர்வமாய் வாசித்து வாழ்வில் அதனை கடைபிடிக்க வேண்டும்..அதுவே நாம் சுவாமியையும் கீதையையும் வழிபடுவதற்கு சமம்...! வழிபாடு என்பது சுவாமியின் திருச்சொற்களை கடைபிடித்தலே என்பதைப் புரிந்துணர வேண்டும்!! கீதையை மனனம் செய்து ஒப்பித்தலால் அல்ல அதனை வாழ்வில் கடைபிடிப்பது மட்டுமே நம்மை ஞானம் நோக்கி நகர்த்தும்... மனனம் செய்து ஒப்பித்தலோ.. அதைப் பற்றி பொழுது போக பேசுவதோ மெனு கார்டை வாசிப்பது போல் தான்.. கீதையை வாழ்வாக்கிக் கடைபிடிப்பதே மெனு கார்டில் உள்ள பதார்த்தங்களைச் சாப்பிடுவதற்கு சமம்... கீதையை வாழ்வதே ஞான சுவை... அப்போதே ஞானானுபவம் வாய்க்கிறது...


உன்னிடம் இருந்தே பிறந்தோம் சாயி... உன்னிடமே தான் கலப்போம் சாயி எனும் ஞான ரசத்தை திளைக்க திளைக்க ஊட்டக்கூடிய கீதா சுவையை ஆன்மா உணர்ந்து கொண்டால் சோக வருத்த தயக்க பயங்களுக்கு இடமே இல்லை... 

ஒரு பெரிய இருட்டு அறைக்கு ஒரு சின்ன மெழுகு வெளிச்சமே போதுமானதாக இருக்கிறது... வாழ்வில் நாமே கற்பனை செய்து சிறுகச் சிறுக சேகரித்த மாயை எத்தனை அடர்த்தியாக இருந்த போதும்..

ஒரே ஒரு கீதை சுலோக ஞானமே போதும்.. நம் வாழ்வை தட்டி எழுப்பி ஆன்மீகம் நோக்கி நகர்த்த...


 பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக