தலைப்பு

திங்கள், 27 டிசம்பர், 2021

விடுதலைப் புலிகளுக்கு சிகிச்சை அளித்த டாக்டரை கமாண்டர் சுட்ட போது நேர்ந்த சுவாமி மகிமை!

இலங்கை வாழ் இனிய சுவாமி பக்தர் ஒருவருக்கும்... இலங்கை சார்ந்த பிற பக்தர்களுக்கும் சுவாமி எவ்வாறு தனது கருணை நீள் கரத்தை கடல் கடந்து நீட்டி காவல் குடையாக இன்றளவும் திகழ்கிறார் என்பதை உணர்த்தும் உன்னதமான சுவாரஸ்யப் பதிவு இதோ...


எழிலும் எழில் சார்ந்த புரமும் இலங்கை... மனிதரின் நச்சுகளை கடந்து புத்தரின் காற்றும்.. சிவபக்தரான இராவணனின் மூச்சுகாற்றும்... சரணாகதிக்கே பெயர்போன விபீஷண இதயமும் அங்கே இன்னமும் துடித்துக் கொண்டுதான் இருக்கிறது!! 85ல் சிலோன் கலவரத்தின் போது ஒரு பேராசிரியர் லண்டனுக்கு புலம் பெயர்கிறார்... ஒரு மரத்தை வேரோடு பெயர்த்து இன்னொரு இடத்தில் நட முற்படும் போது ஏற்படும் வலி அந்த மரம் மட்டுமே அறியும்! ஆனாலும் மனிதன் இடம்விட்டு இடம் புலம்பெயரும் ஜீவராசியே...! நல்ல முருக பக்தர் அவர். அவர் பெயர் ஸ்கந்த ராஜா. முருக தலங்கள் முருக தேரோட்டம் என முருக வழிபாட்டிற்கு முக்கியத்துவம் தருபவர்... கோபம் மூக்கிற்கு மேல் எகிறும்... ஆகையால் குடும்பம் விட்டுப் பிரியும் சூழ்நிலை... இந்தியா வருகிறார்... மன அமைதிக்காக திருத்தலங்கள் சுற்றிப் பார்க்கிறார்... வணங்காத இறை ரூபங்களே இல்லை எனும் அளவிற்கு எல்லா வழிபாடும் புரிகிறார்... நிம்மதி இன்னும் நிஜப்படவில்லை...ஒருவர் புட்டபர்த்தி செல்லுங்கள்... சாயிபாபாவை தரிசனம் செய்யப் போங்கள் என்கிறார்... ராஜாவின் தாய் ஏற்கனவே சுவாமி பக்தை தான்... அப்போதே சுவாமியை பிடிக்காது ராஜாவுக்கு... மந்திரவாதி என அதுவரை பொய்யாக நம்பிக் கொண்டிருக்கிறார்... சரி என்றபடி ராஜா இப்போது பர்த்தி வருகிறார்!

சுவாமி அருகே வரவில்லை எனக் கோபப்பட்டு பிரசாந்திநிலையம் விட்டு புறப்படுகிறார்... சுவாமியின் பேரன்பு யாரையேனும் விடுமா? "ஒருவரையும் நீ ஒதுக்குவதில்லை" என்கிற படி மீண்டும் ஆசிரமம் வந்து தங்குகிறார்... இலங்கையின் பிற பக்தரோடு அறையை பகிர்ந்து கொள்கிறார்... அங்கே இவரோடு தங்கிய ஒருவர் "இன்று தான் கடைசி நாள்...என் ஊர் சக பக்தர் கொடுத்த 20 லெட்டரையும் சுவாமி வாங்காவிட்டால் கணேஷ் கேட்டிலேயே வீசி எறிந்து போய்விடுவேன்" என ஆத்திரப்படுகிறார்..

"நான் ஒரு நாளுக்கே கோபப்பட்டானே.. இவர் 15 நாட்களாக காத்திருக்கிறாரே!" என உண்மை உறைக்கிறது ராஜாவுக்கு... ஞானம் பேராசிரியருக்கே பாடம் எடுக்கும்... முருகனே பிரம்மனுக்கு பாடம் எடுக்கவில்லையா! அன்று சலவைத்துணி வராததால்... அடுத்த நாள் தரிசனம்... தரிசனத்தில் முதல் ரோ கிடைக்கிறது... ராஜாவுக்கு 9 ஆவது ரோ... இவர் நம்மை எங்கே கண்டுகொள்ள போகிறார்...? பணக்காரர்களோடு தான் பேசுவார்... என்றெல்லாம் கற்பனை செய்து கொள்கிறார்... ஒரு ஏழையை மனம் மாற்றினால் அவன் குடும்பத்திற்கு மட்டுமே நன்மை... ஒரு பணக்காரனை மனம் மாற்றினால் ஆயிரம் ஏழைக் குடும்பத்திற்கும் நன்மை...! எனும் மனோ தத்துவரீதியில் தான் இறைவன் இயங்குகிறார் என்பது புரியாதபடி ராஜா அறியாமையில் அவ்வாறு நினைக்கிறார்... இவர் இறைவன் என்றால் என்னோடு பேசட்டும் என்பதாக நினைத்துக் கொள்கிறார்... ஒரு எறும்பின் எண்ணம் கூட சுவாமி அறிகிறார்! அழகு தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து ஆன்மா குளிரக் குளிர அருகே வருகிறது... வந்து இலங்கை பக்தர்களை நேர்காணலுக்கு அழைக்கிறது...! "சிலோன் ... இன்டர்வியூ போங்கள்" என்கிறபடி...

அந்த இலங்கை பக்தர்களுக்கு ஏக மகிழ்ச்சி... அறையில் கோபப்பட்டவர் தன் கோபம் எனும் பாவக்கறையை கண்ணீரால் கழுவிக் கொண்டிருக்கிறார்... தன்னைத் தான் அழைக்கவில்லையே.. தான் ஏன் எழ வேண்டும்? என அமர்ந்திருக்கிறார் 9 ஆவது ரோ'வில் ராஜா... சுவாமி கைநீட்டி ராஜாவையும் அழைக்கிறார்... அதை சற்றும் எதிர்பாராமல் சிலிர்த்தபடி எழுகிறார்... அனைவரும் நேர்காணல் அறைக்குச் செல்கிறார்கள்... அந்த ஆதித்தமிழ் தேசத்தினரை ஆதி புருஷர் ஆட்கொள்கிறார்!

நேர்காணல் அறையில் 20 பேர்... உள்ளே நுழைகிறார் சுவாமி. நுழைந்தபடி... ஒரு பெரியவரை சுட்டிக்காட்டி.. "இவர் ஏன் இங்கு வந்தார் தெரியுமா? இவர் அதிர்ஷ்டக்காரர்...இன்று இவருக்கு பிறந்தநாள்!" என்று கூறியபடி சிருஷ்டி மோதிரம் அளிக்கிறார்! "இதை எடுக்க எவ்வளவு செகண்ட் ஆகியது" என சுவாமி கேட்கிறார்... "மைக்ரோ செகண்ட் கூட இல்லை" என ஒரு இலங்கை பக்தர் ஆச்சர்யப்பட்டு சொல்கிறார்...ராஜாவுக்கு உறைக்கிறது! ராஜா சென்று சுவாமியின் பாதம் அருகில் அமர்ந்து கொள்கிறார்... உடனே ராஜாவுக்கு ஓர் எண்ணம் மனதில் "நீங்கள் கடவுள் என்றால்... சிலோனில் ஏன் கலவரம்? ஏன் குண்டுவீச்சு" என்று நினைக்கிறார்... நினைத்த அடுத்த நொடி... சுவாமி ராஜாவை பார்த்து "இது பஞ்சாப் போல்... வரும் போகும்... கடந்து செல்லும் மேகங்கள் போல்... கவலைப்படாதே! என் பக்தனை எந்த குண்டும் எதுவும் செய்ய முடியாது என்று பல முறை சொல்லியிருக்கிறேன்" என்கிறார்.. ராஜாவுக்கு தூக்கிவாறிப் போடுகிறது! தான் நினைத்த மாத்திரத்தில் பதில் சொல்கிறாரே என...

அதற்கு பல நிதர்சன உதாரணங்கள்... சிலோனில் ஒரு டாக்டரான சுவாமி பக்தர் விடுதலைப் புலிகளுக்கு வைத்தியம் பார்த்தார் என ஒரே காரணத்திற்காக ஆர்மி கமாண்டர் அவரை சுட உத்தரவு இடுகிறார்... பகைவனாயினும் , துரோகியே ஆயினும் சிகிச்சை அளிப்பது தான் மருத்துவர் கடமை என்கிற வகையில் அவர் சிகிச்சை அளித்தார்... ஆனால் சுடுவதற்கு தயாராக இருக்கிறார் கமாண்டர்... டாக்டரை இருவர் பிடித்துக் கொள்கிறார்கள்... கைகள் பின்னால் கட்டப்படுகிறது... கண்கள் மூடப்படுகின்றன... குண்டுகள் துப்பாக்கியில் பொருத்தும் சப்தம் கேட்கிறது... துப்பாக்கி தயாராகிறது... டாக்டரோ செய்வது அறியாது சுவாமியை நினைத்தபடி "சாயி... ரா...ம்" என கத்துகிறார்... கமாண்டர் துப்பாக்கியை அழுத்துகிறார்... தோட்டா டாக்டரின் இதயத்தை பதம் பார்க்காமல் துப்பாக்கியின் வெளியே குதித்து விழுகிறது! மீண்டும் குண்டு துப்பாக்கியில் போடப்பட்டு சுட குறிபார்த்த போது.. அவர் அமர்ந்த குதிரை நகரக் கூட இல்லை... சரி விட்டுவிடு என கமாண்டர் உத்தரவிட்டு.. குதிரையிலிருந்து கீழ் இறங்கி சென்றுவிடுகிறார்! இப்படி ஆயிரக்கணக்கான மகிமைகள்... சுவாமி தனது காவல் குடையை இலங்கை பக்தர்களுக்கு இன்றளவும் விரித்தபடியே விசித்திரம் புரிந்து வருகிறார்! 

பிறகு நேர்காணலில் சுவாமி மதம் பற்றி தமிழில் பேசி... அவர்களுக்கு புரியாமல் போகவே ஆங்கிலத்தில் பேசுகிறார்...ராஜாவுக்கு சுவாமியின் மொழி ஞானம் புரிகிறது... "உனக்கு என்ன வேண்டும் ?" என சுவாமி கேட்கிறார்...ராஜாவோ " பாபா எனக்கு யாருமே இல்லை" என்கிறார்... அதற்கு சுவாமி "கவலைப்படாதே... நான் உன் கூடவே இருக்கிறேன்" என்கிறார்... "அகலுடை விழியே அக்கறை மொழியே" எனும்படி சுவாமியின் கவச சம்பாஷணை நிகழ்கிறது! 

      ஒரு சிங்களவரிடம் " உனக்கு என்ன வேண்டும்" எனக் கேட்கிறார்... " எனக்கு வியாதியை குணமாக்கும் சக்தியை அருளுங்கள்!" என்கிறார்.. "ஓ...healing power... உன் மனம் குரங்கு மனம்...உனக்கு  எப்படி அந்த சக்தியை அளிக்க முடியும்?" என சிரிக்கிறார்! பிறகு ஒருவரிடம் " உனக்கு என்ன வேண்டும்?" எனக் கேட்கிறார்..."எனக்கு ஒருவரும் இல்லை... ஒருவர் வேண்டும்" என்கிறார்... "உனக்கு பேராசை அதிகம்"உன் பிள்ளைகள் புகைப்படம் காட்டு... அதனை ஆசீர்வதித்து.."நன்றாக படிக்க வை" என்கிறார்..

      "உனக்கு என்ன வேண்டும்?" என இன்னொருவரை கேட்கிறார்... "எனக்கும் மோதிரம் வேண்டும்" என்கிறார்.. "உனக்கு பொறாமை" என சிரிக்கிறார் சுவாமி.. சுவாமி சிரிப்பதையும்... சிரிக்கும் புகைப்படத்தையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்!! உலகில் அதிசய அழகுகள் ஏழலல்ல!! ஒரே ஒரு அதிசயப் பேரழகு மட்டுமே... அது சுவாமி இதயத்தை தன் உதடுகளில் பொருத்தி... பல கோடி சௌந்தர்யங்களைப் பற்களில் பதித்தபடி சிரிப்பதே!! அது மனித ஆன்மாவையே கபளீகரமே (அபகரிப்பு) செய்துவிடுகிறது!!

அனைவரும் நேர்காணல் அறையிலிருந்து பேரமைதியோடும் பரம திருப்தியோடும் வருகிறார்கள்.. எனக்கும் வேண்டும் எனக் கேட்டவர்க்கும் சிருஷ்டி மோதிரம் கிடைக்கிறது! ராஜா தீவிர சுவாமி பக்தராகிறார்... பிரச்சனை இல்லாமல் விவாகரத்தும் நடக்கிறது.... மீண்டும் ராஜாவுக்கு மணம் நிகழ...இலங்கைப் பெண்... பாடகி..பெயர் பரமேஸ்வரி ... சுவாமி பக்தையாக இல்லையே என சிறு குறை ராஜாவுக்கு... பிறகு கணவர் காட்டிய கடவுளை கட்டியாகப் பிடித்தபடி சுவாமி பஜன் பாடுவதும்... பஜன் பாடல் கற்றுக் கொடுப்பதும் என ராஜா மனைவியான பரமேஸ்வரி பக்தீஸ்வரி ஆகிவிடுகிறார்!

(ஆதாரம் : அற்புதமும் ஆன்மீகமும் -5 / பக்கம் : 110 / ஆசிரியர் : திருமதி சாயி சரஜ்) 


பயத்தில் பெரிய பயம் மரண பயமே... "உன்னிடமிருந்தே பிறந்தோம் சாயி! உன்னிடமே தான் கலப்போம் சாயி" எனும் பரம சத்தியம் உணர்ந்து விட்டால்... எமனே எதிரில் வந்தாலும் அவனை தேநீருக்கு அழைத்து அவனோடு கடோபநிஷத் பேசும் அளவிற்கு பக்குவமும் தைரியமும் வந்துவிடுகிறது... காரணம் இந்த வாழ்க்கையில் ஏற்படும் பல மாற்றங்களை கடந்து... இந்த மனித ஆன்மா பல ஜென்மங்களில் ஏற்படும் மாற்றங்களில் கூட என்றும் மாறாமல் ஜென்ம ஜென்மமாய் தொடர்வது சாட்சாத் சுவாமி ஒருவரே! சுவாமி பக்தி ஒன்றே உடன் வரக்கூடியது... பக்தியை சேகரிக்கும் உண்டியலான இந்த உள்ளத்தில் ஏன் உலகக் குப்பைகளை சேகரிக்க வேண்டும்?


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக