தலைப்பு

சனி, 25 டிசம்பர், 2021

ஆப்ரிக்க தலைமுடிக்காரர் என விமர்சித்தவரின் குடும்பத்திற்கே தனது பேரன்பால் மகிமை புரிந்த சுவாமி!

கடவுள் நம்பிக்கையே இல்லாது சுவாமியை வாய்க்கு வந்தபடி விமர்சித்த ஒருவருக்கும் அவரது குடும்பத்திற்கும் எவ்வாறு தன்னை உணர வைத்து மகிமைப்படுத்தினார் சுவாமி எனும் அனுபவம் குறித்து சுவாரஸ்யமாய் இதோ...


அவர் பெயர் ரங்கன்... அந்த ரங்கன் சத்தியம் உணர்ந்து சயனிப்பவர்... இந்த ரங்கனோ மாயையால் சயனிப்பவர்... அவருக்கு கடவுள் நம்பிக்கையே இல்லை... சிலருக்கு நம்பிக்கையால் அனுபவம் ஏற்படுகிறது...

 சிலருக்கு அனுபவத்தால் நம்பிக்கை ஏற்படுகிறது... யாருக்கு எவ்வகை என சுவாமியே சங்கல்பிக்கிறார்! ஒருமுறை ரங்கன் குடும்பத்தினர் ரிஷிகேஷ் மகான் சிவானந்தரின் ஜெயந்தி விழாவிற்கு செல்வதாக இருந்தார்கள். அது 1954. அவரையும் அழைக்கிறார்கள்... சுத்தமான இரும்பு தான் காந்தத்தோடு ஒட்டிக் கொள்ளும்... துரு பிடித்த இரும்பு எப்படி ஒட்டும்? ஆனாலும் அந்த இரும்பை இழுத்துக் கொண்டு ரிஷிகேஷ் போகிறார்கள் குடும்பத்தினர். 

ஜெயந்தி விழா ஆசிரமத்தில்... அங்கே செல்லாமல் அவரும் நான்கு நண்பர்களும் பேருந்து பிடித்து பிப்லிகோட் சென்று... இரண்டுநாள் கால்நடையாக பத்ரி செல்கின்றனர்.. பூஜாரி வீட்டில் தங்கி... பிறகு திபெத் எல்லை வரை சென்று... கங்கையில் குளித்து... பிறகு பத்ரிநாத் தரிசனம்.. ரங்கனுக்கோ நாராயணனாகவும் சிவனாகவும் சேர்ந்து அச்சிலா ரூபம் காட்சி தருகிறது...தெய்வ நம்பிக்கை ஒளி தனது முதல் பொறியை ஏற்றுகிறது... தென்னாட்டில் வாழ்பவரான அவருக்கு வடநாட்டில் தான் பக்தி துளிர்க்க வேண்டும் என்பது சுவாமி சங்கல்பம்... அந்த 24 வயதில் ஒரு உள்மாற்றம்... ஷேத்ராடனம் முடித்து இல்லம் வந்தபிறகு அடிக்கடி கோவில் செல்கிறார்...

பெங்களூர்க்கு வேலை மாற்றலாகி நான்கு பேர் அறையை பகிர்ந்த தருணம்... நான்கு பேரும் அறைக்கு தாமதமாக வருவதைக் குறித்து ரங்கன் கோபப்பட... தாங்கள் சினிமா டிராமா கேளிக்கைகளுக்கு செல்லவில்லை சுவாமியை தரிசித்துவிட்டுத் தான் வருகிறோம் என்கிறார்கள்... அதற்கு ரங்கனோ "அந்த ஆப்ரிக்கா தலைமுடிக்காரர்... பைத்தியக்காரர்... அவரையும் நம்பி பின்னால் ஒரு பத்து பேர் கூட்டம்.. நீங்கள் என்ன பைத்தியமா?" என (அவர் சுவாமியை ஒருமையில் அவன் என்று அழைத்தது அவர் என இங்கே மாற்றப்பட்டிருக்கிறது) வாய்க்கு வந்தபடி பேசுகிறார்! இறைவனே விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கும் போது... அவருக்கு தன் வாழ்வையே அர்ப்பணித்து தொண்டாற்றும் உண்மையான பக்தர்களும் விமர்சனத்திற்கு ஆளாவது ஒன்றும் அதிசயமில்லை தான்...! "மாபெரும் அவதாரங்களான ஸ்ரீ ராமரும் ஸ்ரீ கிருஷ்ணருமே விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள் எனும் போது இவன் ஒரு சாதாரண பிச்சைக்காரனே!" என தன்னைப் பற்றிப் பேசி இருக்கிறார் பகவான் யோகி ராம்சுரத்குமார். அது தான் கலியின் அதிசிறந்த அறியாமைக் கூத்து!! 


பிறகு 6 மாதம் கடந்து தங்கை அழைத்ததற்காக அவளின் பாதுகாப்பு கருதி அவளோடு பர்த்தி செல்கிற போது...பேருந்து வழிமாறி பெங்களூர் வந்து விடுகிறது... ஓட்டலில் காபி சாப்பிட அமர்ந்த இருவரும் பர்த்தி எப்படி செல்வது எனக் கேட்கையில்.... டேபிள் அருகே அமர்ந்து காபி சாப்பிடுபவர்...என் வீட்டிற்கு அருகே தான் பாபா வந்திருக்கிறார்... அங்கே வாருங்கள் என அழைக்கிறார்...பெரும் புதிராகி அங்கே செல்கிறார்கள்... "இப்போது தான் சுவாமி வந்தார்.. உங்களுக்கு எப்படி தெரியும்?" என அவ்வீட்டு பக்தர்கள் கேட்க... அதற்குள் சுவாமி ரங்கன் முன் நேருக்கு நேர் வந்து தரிசனம் தர நின்ற படி..."நீ என் பின்னால் பத்து பேர் சுற்றுவார்கள் என்றாய்!" எனச் சொன்னாரே பார்க்கலாம்... ஈரக்குலை ஆடுகிகிறது ரங்கனுக்கு.. ரங்கனின் கண்களில் சொட்டு சொட்டாய் காவேரி நீர்த்துளிகள்!! கை கால் நடுங்குகிறது... தான் தரிசித்த பத்ரி நாராயணனே பர்த்தி நாராயணன் என உடனடியாக உணர்கிறார்... காற்று வீசிய உடன் தலை சாயும் நாணலாய் தலை சாய்கிறார்... ஆம் அந்த கானல் நாணலாகிறது!! சாஷ்டாங்கமாய் கால்களில் விழுகிறார்... "நீ பெங்களூர் தான்... எனக்கு தெரியும்" என்கிறார் சுவாமி. கால்களில் விழுந்து கரைந்து காணாமல் போகிறார் "ஓம் ஜெய் ஜெகதீச ஹரே" பாடும் கற்பூர ஆரத்தியாய்...


1968'ல் ரங்கன் குடும்பத்தோடு செல்கிறார். சுவாமி நேர்காணல் தருகிறார்...ரங்கன் மனைவியிடம் "உனக்கு 7 வருடங்களாக கடும் வயிற்று வலி... டாக்டர் சரி செய்யவில்லை... இன்றிலிருந்து விபூதி சாப்பிடு!" என்கிறார்‌. பிறகு வாய் பேசாத அவளின் மகளை விசாரிக்கிறார்‌... அதை நான் பார்த்துக் கொள்கிறேன்... கவலைப்படாதே என்கிறார்... சுவாமி சொன்னது போலவே சரியாகி நல்ல மாப்பிள்ளை அமைந்து குடும்பம் அமைகிறது! ரங்கனின் தம்பி திருமணத்தையும் சுவாமியே நிகழ்த்தி வைக்கிறார்... அந்த சமயத்தில் இரு மகள்களுக்கும் சிருஷ்டி அர்த்தநாரீஸ்வர லிங்கங்கள்... பேத்திக்கு சிருஷ்டி டாலரோடு செயின் என தன் அனுகிரக காவலை நிரப்புகிறார்...!


1983 இல் சுவாமி கனவில் சென்று சுந்தர காண்டம் வாசி எனச் சொல்ல... அதன்படியே வாசித்து முடிக்க... சுவாமியின் திருப்படத்திலிருந்து ஒரு கடித சீட்டு விழுகிறது... அதில் "What All things happen Rangan's house is truth -- Baba" என எழுதப்பட்டிருக்கிறது... இப்படி சிலர் வீட்டில் நிகழ்ந்திருக்கிறது... சுவாமியால் தனது பக்தர்களை எவ்வகை ஊடகம் வழியிலும் தொடர்பு கொள்ள முடியும்...அவர் சங்கல்பிக்க வேண்டும் அவ்வளவே...! கனவு, தியானம், கடித சீட்டு விழுதல் , எதிரே தன் ரூபம் மற்றும் வேறு ரூபங்களில் தோன்றுதல் இத்யாதி என எவ்வகையிலும் சுவாமி பக்தர்களின் தொடர்புக்கு இன்றளவும் வந்து கொண்டே தான் இருக்கிறார்!! அவரவர் மனப்பக்குவம் மற்றும் பிராராப்தம் பொருத்தே சுவாமி சங்கல்பிக்கிறார்!  அன்று முதல் ரங்கன் வீட்டில் விபூதி, குங்குமம் , மஞ்சள் ஊடே சிலாரூபங்கள் என சுவாமியின் சிருஷ்டி பெருகுகிறது...ஒருமுறை வீட்டைப் பூட்டிய படி வெளியே ரங்கன் குடும்பம் செல்ல... வீடு தேடி வந்த ஒருவர் உள்ளே கதவு திறந்தபடி பெரியவர் ஒருவர் அவ்வீட்டில் அமர்ந்திருக்க "அவன் வெளியே  சென்றிருக்கிறான் பிறகு வா!" என்கிறார் வேறு வடிவில் அமர்ந்தபடி சுவாமி...

இப்படி ஏராள மகிமை... ஏராள அனுபவங்கள்!! அதை விவரிக்க வேண்டுமானால் விரிந்து கொண்டே போகும்... தங்கை வீட்டில் சண்டை நடக்க.. ரங்கன் வடிவில் சுவாமி போய் சமாதானம் செய்து வைத்தது என சுவாமி ஆற்றாத அற்புதங்களே இல்லை... 

ஒருமுறை சுவாமி ரங்கனுக்கு நேர்காணல் அளிக்கையில் "பறவைக்கு இரண்டு சிறகுகள் போல் வாழ்க்கையில் சுக துக்கம் என இரண்டு சிறகுகள்... இரண்டும்  இருந்தால் தான் பறவை போல் மனிதனும் முன் செல்ல முடியும்...!" என்கிறார்... அதனை நெகிழ்ந்தபடி நூலாசிரியரிடம் பகிர்ந்து கொள்கிறார் ரங்கன்...

(ஆதாரம் : அற்புதமும் ஆன்மீகமும் -5 / பக்கம் : 78/ ஆசிரியர் : திருமதி சாயி சரஜ்) 


பக்தர்களின் அனுபவ சத்தியங்கள் வெறும் பொழுது போக்குவதற்காக வாசிக்க வேண்டியன அல்ல... நம் உள்ளத்துப் பழுது போக்குவதற்காக வாசிக்கப்பட வேண்டியன...!  சுவாமியால் எவ்வகை அற்புதங்களையும் மகிமைகளையும் எவருக்கும் எப்போதும் எப்படியும் புரிய முடியும்... சுவாமிக்கு அது பெரிய விஷயமில்லை! ஆனால் நாம் அதனை உள்வாங்கி உணர்ந்து மனப் பக்குவம் அடைந்திருக்கிறோமா...? அடைகிறோமா...? அடைவோமா...? என்பதை நமக்குள் உற்று நோக்கிக் கொண்டிருப்பதே முக்கியம்... தான் இறைவன் என்பதை சுவாமி கணம்தோறும் நம் வாழ்வில் நிரூபித்துக் கொண்டே தான் இருக்கிறார்... ஆனால் நாம் சுவாமியின் பக்தன் என்பதை நாம் நம் வாழ்க்கையாக நிரூபிக்கிறோமா? சுவாமி சொல்லை கடைபிடிக்கிறோமா? இதுவே மிகமுக்கியமாக நம்மால் நமக்குள்ளேயே கவனிக்கப்படவும் மறுபரிசீலனை செய்யப்படவும் வேண்டும்!!


  பக்தியுடன்

 வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக