தலைப்பு

வியாழன், 16 டிசம்பர், 2021

சத்யம் சிவம் சுந்தரம் வாசித்தவுடன் சுவாமி அளித்த கனவு சிகிச்சை!

சுவாமி பக்தையின் உடல்நலக் கேடும் அதனை சுவாமி எவ்வகையில் சுவாமி நிகழ்வுகள் நகர்த்தி கனவு வெளியில் சிகிச்சை அளித்து குணப்படுத்தினார் என்பது சுவாரஸ்யமாய் இதோ...!


அந்தப் பக்தை தன் பெயர் வேண்டாம் என நூலாசிரியருக்கு ஒரு கடிதத்தை எழுதுகிறார்.. உருக்கமான கடிதம் அது... சுவாமியின் பேரற்புத நிகழ்வுகள் கணிக்க முடியாதவை.. அப்பேற்பட்ட நிகழ்வு இது..

தான் ஒரு சுவாமி பக்தை என கடிதத்தில் ஆரம்பித்து.. வீடு முழுவதும் சுவாமி படத்தை அலங்கரித்து வைத்திருக்கும் அவருக்கு 5 மகன்கள்... 2 மகள்கள்... 

1960 இல் இருந்து சுவாமி பக்தை... எல்லா பிரசவமும் தனக்கு தொந்தரவு இன்றி பிறக்க... அந்த முறை பிரசவத்தில் கணவரின் மூன்று மாத உடல்நிலை கோளாறு காரணமாக மனவேதனை அடைகிறார்.. கணவரோ படுத்த படுக்கை.. அதைக் காண சகிக்காமல் கசப்பு இதயத்தை கவ்விப் பிடிக்கிறது... வேதனை தான் மனிதனை பற்றிப் பிடித்திருக்கும் ... பற்றால் பிடித்திருக்கும் வேதாளமே!

சரியான சாப்பாடு இல்லை... தொண்டையில் துக்கம் அடைக்க உணவு இறங்கவில்லை...ஆகவே குழந்தை வயிற்றுக்குள் சரியாக இல்லை...

மதராஸ் (இப்போதைய சென்னை) வந்து அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்கிறார்கள்...ஆனால் 3 மாதங்களில் வயிற்றில் கட்டி வந்து நெஞ்சை அடைத்து மூச்சுவிட முடியாமல் திணறுகிறார்... ஆறு வருடம் கஷ்டப்படுகிறார்... ஆனால் சுவாமி மேல் பக்தியின் காரணமாக பஜன் நடக்கின்ற இடத்திற்கு எல்லாம் சிரமப்பட்டால் கூட மெதுவாக நடந்து செல்கிறார்... சுவாமியே கதி.. தன் பொறுமையை அவர் இழக்கவில்லை... சுவாமி மேல் உள்ள நம்பிக்கையை அவர் கைவிடவில்லை... அது தானே பக்தி... மதியம் மாலை என எங்கே பஜன் நடந்தாலும் சென்றுவிடுவார்... சிலநாள் மதியம் படுத்துக் கொண்டால் கூட நெஞ்சை அடைத்து சிரமப்படுத்தும்...பிறகு ஒரு நாள் அவர்களுக்கு தெரிந்த தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர் தலைவியின் மனைவியை சந்திக்கிறார்... எவர் எதிர்வரினும் நீயே ஆகும் எனும் படி சுவாமியின் கருணை அந்த தலைவர் மனைவி வழியாகக் கிடைக்கிறது... அந்த அம்மையார் ஒரு கிருஷ்ண பக்தை... அவர் கையில் சத்யம் சிவம் சுந்தரம் புத்தகம் கிடைக்கிறது... அந்தப் புத்தகமே பிரேம சுவாமியின் அன்னையாகப் பிறக்கும் பாக்கியதை பெற்ற மகானுபாவர் ஸ்ரீமான் கஸ்தூரி அவர்கள் இயற்றிய சுவாமியின் முதல் வாழ்க்கை சரிதம்... சுவாமி பக்தர்களுக்கு அதுவே வால்மீகி ராமாயணம்... புத்தகம் கொடுத்து நாளை காலைக்குள் தந்துவிட வேண்டும் என வற்புறுத்துகிறார்... சரி என புத்தகம் வாங்கி வீட்டிற்கு வருகிறார்.. அது மே 1995.  விடிய விடிய வாசிக்கிறார்...   பரவசப்படுகிறார்... 4.45 அதிகாலை புத்தகத்தை ஒரே மூச்சில் முடித்து அயர்ந்து தூங்கிவிடுகிறார்...

அதே நொடி சுவாமி கனவில் வருகிறார்.. கனவில் அவரோ நீட்டி படுத்தபடி இருக்கிறார்.. சுவாமி அருகில் நின்ற படி .. ஒரு பிரச்சனையும் இல்லை.. சின்ன அறுவை சிகிச்சை செய்து விடுகிறேன்.. சரியாகிவிடும் என்கிறார்.. சுவாமி என பயந்து அலறுகிறார்... "பயப்படாதே.. நான் இருக்கிறேன்...ஒன்றும் ஆகாது என தைரியப்படுத்தி தேற்றி அறுவை சிகிச்சை செய்கிறார்... பட்டாம்பூச்சி அளவிற்கு ஒரு பிளாஸ்த்ரி ஒட்டப்படுகிறது.. திடீரென விழிக்கிறார்.. சிலிர்க்கிறது.. வயிற்றைத் தொட்டுப் பார்க்கிறார்.. கட்டி இருந்த இடம் காலியாக இருப்பதான உணர்வு ஏற்படுகிறது... அவரின் கண்ணீர் துளித்துளியாக விழுந்தபடி சத்யம் சிவம் சுந்தர புத்தகத்திற்கு  அபிஷேகம் செய்து கொண்டிருந்தது!

(ஆதாரம் : அற்புதமும் ஆன்மீகமும் - 5 / பக்கம் -1 / ஆசிரியர் : திருமதி சாயிசரஜ்)


சுவாமி தன் பக்தர்களின் கனவில் வந்து வழிநடத்துவதும்,  சிகிச்சை அளித்து வருவதும் இன்றளவும் நடந்தபடியே தான் இருக்கிறது... சுவாமி வரும் கனவு அனுபவங்களை மொத்தமாக சேகரித்து எழுத வேண்டுமானால் எந்த நூலாசிரியருக்கும் ஒரு ஜென்மம் போதாது...  சுவாமி நம்முடனேயே தான் இருக்கிறார்... தன் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு கருணை காட்டியபடி காவல் காக்கிறார்... தன் ரூபம் வழிபடாது வேறு ரூபம் வழிபடும் பக்தர்க்கும் நம் சுவாமியே அருள்புரிகிறார்... எல்லாம் அறிந்த ஓரிறை நீயே எனும்படி சுவாமியின் கருணை கடாட்சம் நீள் விசும்பாய் நித்திய சத்தியமானது!! சுவாமியால் எதுவுமே சாத்தியமானது! 


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக