பகவான் பாபாவின் சக்திகளும், யுக்திகளும் அளவிட இயலாதவை. அனைத்தும் அறிந்தவர். அனைத்திலும் சிறந்தவர். அனைத்துள்ளும் உறை பவர் நம் அந்தர்யாமியான பாபா தானே. அப்படிப்பட்ட பகவான், எளிமையும், பணிவையும் கைக்கொண்டு, நாம் நம் வாழ்வை எப்படி நடத்தவேண்டும் என்பதை தாமே நேரடியாக (Practical Demonstration) ஒரு நிகழ்வை நடத்திக் காட்டிப் புரிய வைக்கிறார்...
புட்டபர்த்தி பள்ளியிலும், கல்லூரியிலும் பயின்று, பர்த்தியில் பணி அமர்ந்து, பகவானின் பாத சேவையில் இணந்து.. இப்படிப்பட்ட பாக்கியங்களைப் பெற்ற, சாயிராம் ரவிகுமார் அவர்கள் மனம் கசிந்து உருகிய ஒரு நிகழ்வு.
🌹பஜன் பாடலை மென்மையாய் உதடுகளில் தவழவிட்ட பாபா:
"கொஞ்சம் உள்ளே வா" என ஸ்வாமி என்னை, இண்டர்வியூ அறைக்குள் அழைத்தார். அங்கு ஒரு பீரோவிலிருந்த புடவைகள் சிலவற்றை தேர்ந்தெடுத்து என் கைகளை நீட்டச் சொல்லி அதில் புடவைகளைப் போட்டார். அவை பக்தர்களுக்கு கொடுப்பதற்காக அவர் தேர்ந்தெடுத்த புடவைகளாகும். அந்த அறையில் ஸ்வாமியும் நானும் மட்டும் இருந்தோம். அங்கு நிலவிய ஆனந்தமயமான அமைதியில் நான் மெய் மறந்திருந்தேன். அந்த அமைதியின் ஆழத்திலிருந்து , ஒரு தெய்வீக பஜன் பாடல் , பாபாவின் அடித் தொண்டையிலிருந்து "ஹம்மிங்"ஆக வெளிப்பட்டது.
"ஹரஹர சங்கர சாம்ப சதாசிவ ஈசா மஹேசா" என்கிற பாடலைத்தான் பாபா முணுமுணுத்துக் கொண்டிருந்தார். அது பாபாவுக்கு மிக பிடித்த பாடல் என்று எனக்கு தெரியும். அதை நான் பரவச நிலையில் கண்மூடி மெய்மறந்துகேட்டுக்கொண்டிருந்தேன்.திடீரென பாட்டு சப்தம் நின்றது. கண்ணைத் திறந்த நான், மெல்ல பாபாவை ஏறிட்டுப் பார்த்தேன். "என்ன பார்க்கிறாய்" என்று பாபா கேட்க, "ஸ்வாமி உங்கள் பாட்டு மனதில் பேரானந்தமாக ஒலிக்கிறது" என்றேன்.
பாபா கூறிய எதிர்பாராத பதில்...
அசையாப் பொருட்களையும் தமது இசையால் அசைய வைக்கும் ஸ்வாமி கூறுகிறார். "அப்படியில்லை. எனக்கு உங்களைப் போலெல்லாம் நன்றாகப் பாட முடியவில்லை" கையிலிருந்த புடவைகளை நழுவவிட்டு, அடியற்ற மரம் போல் அவரது பாதத்தில் விழுந்து பற்றிக்கொண்டேன். "ஸ்வாமி, இந்த பிரபஞ்சத்தின் முழுமுதற்கடவுளாகிய நீங்களா இவ்வாறு கூறுவது" என மனம் உருகிக் கேட்டேன். ஒருவர் எத்தகைய ஏற்றம் பெற்றிருந்தாலும், வாழ்வில் எளிமையும் பணிவும் பெற்றுத் திகழ வேண்டும் என்கிற அற்புத உபதேசத்தை பாபா இதன் மூலம் போதிக்கிறார் அல்லவா.
ஆதாரம்: ஸ்ரீ சத்யசாய் இன்ஸ்டிட்யூட்டின் முன்னாள் மாணவரான திரு ரவிக்குமார் அவர்களின் உரையிலிருந்து.
தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர்
🌻விண்ணிலிருந்து இறங்கி நம்மிடையே வந்த, யுக அவதாரமாகிய பாபா, தன் நிலையிலிருந்தும் இறங்கி, எளிமை என்றால் என்ன, பணிவு என்றால் என்ன என்று நமக்கு போதிக்கும் அற்புதமான போதனையின் நடைமுறை விளக்கம் அல்லவா இது. மனதில் பதிந்த பாபாவின் போதனைகளை, செயலில் காட்டினால் நாமும் எல்லா சிறப்புகளும் அடைந்து ஆனந்தமாக வாழலாம். 🌻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக