தலைப்பு

சனி, 18 டிசம்பர், 2021

இரு சாயியும் ஒன்றே என உணர்ந்து கொண்ட அவதூத ஸ்ரீ கஜானன் மகராஜ் பக்தை ஆஷா!


ஸ்ரீ கஜானன் மகராஜ் எனும் ஒரு மகானின் பக்தை எவ்வாறு இரு சாயியையும் ஒன்றென உணர்ந்து கொண்டு எங்கும் நிறைந்திருக்கிறார் சுவாமி என்பதை எவ்வகையில் ஏக உணர்வோடும் அனுபவிக்கிறார் என்பவை சுவாரஸ்ய அனுபவமாய் இதோ...


நாசிக்கில் வசித்து வருகிறார் ஆஷா. அவதூத ஸ்ரீ கஜானன் மகராஜின் தீவிர பக்தை.. மகராஜும் அதே நாசிக் நகரில் வசித்தவரே...1878 ல் மக்களின் கண்களில் தோன்றுகிறார்... விநாயகரின் அவதாரமாக உணரப்படுகிறார்!  அவதூதர்களின் ரிஷிமூலம் யாரும் அறிந்திலர்...ஸ்ரீ தத்த அவதூத அக்கல்கோட் மகராஜ் மற்றும் பரபிரம்மஸ்ரீ ஷிர்டி சுவாமியின் சமகாலத்தவர் இவர்.. ஸ்ரீ தத்த அவதாரமாகிய அக்கல்கோட் மகராஜ் போல் கஜானன் மகராஜ் ஆஜானுபாவர்... திகம்பரர்... கௌபீனதாரி! நெருப்பின்றி புகை பிடிப்பவர்... வெறும் கையால் கரும்பைச் சாறாக்குபவர்.. தொழு நோய் மற்றும் விஷப் பாம்புக் கடிகளை தனது கைகளால் குணப்படுத்துபவர்... தேசத்தியாகி லோகமான்ய திலகர் மகராஜ் முன் உரையாற்றிய போது ஆங்கிலேய அரசால் அவருக்கு நேரவிருந்த பிரம்படி தண்டனையை தடுத்து.. மகராஜ் கூறியபடி பிற்காலத்தில் ஸ்ரீமத் பகவத் கீதா ரகஸ்யம் எனும் புத்தகம் எழுதுகிறார் திலகர்... 

லோகமான்ய திலகர் ஸ்ரீ கஜானன் மகராஜ் உடன்....

அனைத்தும் கடந்தவர்கள் அவதூதர்கள்... சர்வ தேவதா அதீத ஸ்வரூபரான சுவாமியின் முந்தைய அவதாரமாக ஷிர்டியில் இருந்த சமயம் "நாம் ஒரே ஆத்மா... வேறு வேறு சரீரம்" என்கிறார் கஜானன் மகராஜை பார்த்து... அவதூதர்கள் இறைவனின் ஓர் அம்சமே!! கடவுளின் கைக்கருவிகள் அவர்கள்...! ஆகவே அவ்வாறு மொழிகிறார் சுவாமி! அவதூதர்களின் வாழ்க்கை அனைத்தும் சராசரிகளின் ஆன்மீக வாழ்க்கைக்கு நல்லதொரு வழிகாட்டியாக அமைகிறது!

அப்பேர்ப்பட்ட மகானின் பக்தையான ஆஷா 20 வருடங்களாக சுவாமியை அறிந்த போதும்.. அதற்குப் பிறகே சிறிதாக சுவாமி மேல் நம்பிக்கை வருகிறது.. சமிதியின் வாயிலாக சேவையாற்றுகிறார்! ஆஷாவின் திருமணத்திற்குப் பிறகு பெங்களூர் குடியேறுகிறார்... அங்கும் சுவாமியை பற்றி கேள்விப்படுகிறார்... ஆனால் கர்மா அனுமதிக்க வேண்டுமே!! பிறகு பனாரஸ் இடம் மாற்றம்.. சுவாமி சமிதி செல்கிறார்.. சாயி பஜன் பிடித்துப் போகிறது... பிறகு மீண்டும் பெங்களூர் மாற்றம்... வாழ்க்கையில் தான் எத்தனை ஆச்சர்ய மாற்றங்கள்!! அப்பொழுது வொயிட் ஃபீல்ட் சென்று சுவாமி தரிசனம் செய்கிறார்... அலகாபாத்'தில் இருந்த போதே சமிதியில் சேர்கிறார்.. ஆயினும் பெரிய அளவிற்கு நம்பிக்கைப் பிடிமம் இல்லை.. இதை தனது தோழியான மங்களாவிடம் "எனக்கு கஜானன் மகராஜிடம் இருக்கும் திடமான நம்பிக்கை இவர் மேல் இல்லை " என வெளிப்படையாகப் பேசுகிறார்.. உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசாதவர்கள் தூய இதயம் படைத்தவர்கள்... அவர்களுக்கான விடியல் சமீபத்திலேயே இருக்கிறது... மதில் மேலேயே இருக்கும் பூனைகளுக்கு அல்ல குதித்துவிடும் தவளைகளுக்கே புது திசை திறந்து கொள்கிறது! தோழி மங்களாவோ நல்லவள்... ஆஷா சொல்வதைக் கேட்டு "ஷிர்டி சாயியின் மறு அவதாரமே சத்ய சாயி... ஷிர்டி சாயியே கஜானன் மகராஜை தன் அம்சம் என்றிருக்கிற போது.. சத்ய சாயி மட்டும் வேறா ? யோசித்துப் பார்!" என்கிறார். அது ஆஷாவின் இதயம் தொடுகிறது...நல்லதொரு வீரிய விதையை இதயத்தில் நடுகிறது...

ஸ்ரீ கஜானன் மகராஜ்

 ஒருநாள் ஆஷாவின் நண்பர் ஒருவர் வந்து.. அங்கே பார்த்த சுவாமி படத்தை தான் வரையப்போவதாகக் கேட்கிறார்.. "சரி எடுத்து கொண்டுபோய் வரை.. ஆனால் பாபாவின் மூக்கு பக்கோடா போல் இருக்கிறது.. அதைச் சரி செய்துவிட்டு வரை " என்கிறார். "அப்படி எல்லாம் பேசாதே! பாபா இதை கேட்டுக் கொண்டே இருக்கிறார்" என்கிறார் அந்த ஓவிய நண்பர். அதற்கு "நாசிக் வெகுதூரத்தில் இருக்கறது" என சிரித்தபடி சொல்கிறார் ஆஷா!

ஒருமுறை கணவனும் மனைவியும் சேர்ந்தே பர்த்தி சேவையாற்றுகின்றனர்.. சேவையின் இடைப்பட்ட ஒருநாளில் சுவாமியின் திருப்படத்தின் முன் "பாபா.. உங்கள் மேல் எனக்கு பூரண நம்பிக்கை‌ இன்னும் வரவில்லை... நீங்கள் தான் ஷிர்டி சாயியா..? தோழி சொல்கிறாளே! கஜானன் மகராஜூம் உங்களின் ஒரு அம்சமா? நீங்கள் தான் எனக்கு உணர்த்த வேண்டும்!" என மனமுருக வேண்டிக் கொள்கிறார்! சேவை முடிந்து சேவாதளத் தொண்டர்களுக்கு சுவாமி பாத நமஸ்காரம் தருகிறார்.. ஆஷா அமர்ந்த இடத்திற்கு வந்து "ஏய்.. பக்கோடா எழுந்திரு" என்றாரே பார்க்கலாம்... மெய் சிலிர்த்துப் போகிறார் ஆஷா... சுவாமியின் சர்வ வியாபகத்தை மின்னல் பொழுதில் உணர்கிறார்.. கண்களில் கண்ணீர்த்துளிகள்.. சுவாமியை கண்கள் மட்டும் தரிசித்தால் போதுமா!! கண்ணீர்த் துளிகள் தரிசிக்க வேண்டாமா! என தாமும் தரிசிக்க கண்வழியே எட்டிப் பார்க்கின்றன... விபூதிக் கூடையைக் கையில் கொடுத்து சுவாமி தன் பின்னால் வரச் சொல்கிறார்.. இன்னும் பக்குவப்படுவதற்காக இறைச்சூட்டில் இதயக் கதகதப்பு பெற அந்த பக்கோடாவும் பின்னால் செல்கிறது..

சுவாமி விபூதித் திருக்கூடையிலிருந்து "இந்தா .. உனக்கு ஸ்பெஷல்" என அள்ளித் தருகிறார்.. சுவாமி கொடுத்தது விபூதி பாக்கெட்டுகள் மட்டும் அல்ல... ஆஷாவுக்கு தானே அனைத்து இறை வடிவங்களும்... தனக்குள்ளே தான் அனைத்து மகான்களும் அடக்கம் எனும் தெளிவைத் தருகிறார்..! பெற்றுக் கொண்டு சுவாமியின் திருப்பாதங்களில் சரணாகதி அடைகையில் எட்டிப் பார்த்த கண்ணீர்த் துளிகளும் சுவாமியின் திருப்பாதங்களில் சரண் அடைகின்றன...! இதைப் போல் எத்தனை கண்ணீர் நதிகளை தனக்குள் சங்கமித்துக் கொண்டே இருக்கிறது சுவாமியின் திருப்பாத சாகரம்!!

(ஆதாரம் : அற்புதமும் ஆன்மீகமும் -5 / பக்கம் : 48/ ஆசிரியர் : திருமதி சாயி சரஜ்) 

 

எதிலிருந்து சூரியன் வெளிச்சம் பெறுகிறதோ... எங்கிருந்து மகான்களுக்கு ஆன்மானுபூதி கிடைக்கிறதோ... எப்படி சகல ஜீவராசிகளின் வாழ்க்கை இயக்கப்படுகிறதோ... எங்ஙனம் அண்ட சராசரம் ஒரே லயமாய் நிகழ்கிறதோ... எவ்வாறு இயற்கை தன் இருப்பை சமன்படுத்திக் கொள்கிறதோ.. அப்பெரும் பேரியக்கமே சுவாமி என்பதை உணர்வதற்கு ஆயிரம் ஜென்மங்கள் மனிதனுக்கு தேவையே இல்லை... சுவாமியிடம் சரணாகதி அடைந்துவிட்டால் ஒரே ஒரு நொடி போதுமானதாக இருக்கிறது...!  அப்படிப்பட்ட மின்னல் பொழுது நிச்சயம் சரணாகத பக்திக்கு நிகழவே செய்கிறது!! 


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக