தலைப்பு

செவ்வாய், 21 டிசம்பர், 2021

"உன் குரலில் பக்தி இருக்கிறது!" என சுவாமியால் வரம் பெற்ற திரைப்படப் பாடகர் மலேஷியா வாசுதேவன்!

உயிரை உருக்கும்படி தனது தனித்துவக் குரலால் பாடிப் பரவசப்படுத்திய மலேஷியா வாசுதேவன் அவர்களை சுவாமி தனது தனிப்பெரும் தெய்வீகத்தால் பரவசப்படுத்திய தனிப்பட்ட அவரின் சுவாமி அனுபவம் முதன்முதலாய் இதோ...


மலேஷியா வாசுதேவன் அவர்கள் இன்றளவும் நம் ஆடியோ தளங்களில் நீங்காமல் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கிறார்... தனித்துவக் குரல் அவருடையது... மெருகும் , கரகரப்பும் , அடிவயிற்றில் இருந்து எழும் அவரது நாதம் மிக வித்தியாசமானதாக இருக்கும்... பெரும்பாடகர் டி.எம்.எஸ் அவர்களுக்குப் பிறகு ஆண்குரல் இவருடையது தான் என உணரத் தோன்றும்...இதில் இருவருமே சுவாமி பக்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது... இல்லையெனில் பிரசாந்தினி என தனது மகளுக்கு அவர் பெயர் வைக்க வேண்டியதில்லை... இது யூகம் இல்லை.. இவரின் அனுபவம் திறக்கிறபோது சுவாமி அவருக்கும் தனது நீள் கருணையை நிச்சயப்படுத்தியிருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது...

மலேஷியாவால் டி.எம்.எஸ் அவர்களைப் போல் எந்தப் பாடல்களையும் தனதாக்கிக் கொள்ள முடிந்ததற்கு காரணம் அவருக்கு சுவாமி வழங்கிய அந்தக் குரல்.. அசாத்தியக் குரல் அது... மனிதனின் நவரசங்கள் அனைத்திலும் அந்த இரண்டு பாடகர்களும் பாடி அசத்தி ஜாலம் செய்திருக்கிறார்கள்... டி.எம்.எஸ் எம்.கே.டி போல் பாடியும்.. மலேஷியா பி.யூ சின்னப்பா போல் பாடியும் திரைப்படங்களில் ஆரம்பத்திலேயே அசத்தியவர்கள்...பிறகு தனித்துவப்பட்டார்கள்...ஸ்ரீ ராகவேந்த்ரா திரைப்படத்தில் குருவே சரணம் பாடலில் "ஞானத் திருமேனி காண வரவேண்டுமே" என்ற சரணத்தில் அவர் பாடிடும் அந்த பக்திப் பூர்வ உணர்வு ... நிச்சயம் இப்படிப் பாடினால் நதி விலகி தானாக வழிவிடும் என்ற உணர்வு நமக்கு ஏற்படும்... மலேஷியாவில் தந்தையே வாசுதேவன் அவர்களின் சங்கீத குரு... 9 வயதிலேயே சினிமாவில் பாட ஆசை... அந்த வயதிலேயே மேடைக் கச்சேரி செய்கிறார்... மலேஷியா டி.வி ரேடியோ நிகழ்ச்சிகளில் "ஞானப்பழத்தை" "தனித்திருந்து வாழும் தவமணியே" என்ற பாடல்களால் இசை நிகழ்ச்சியில் (சூப்பர் சிங்கர் போல்) அப்போதே பிரபலமடைந்தவர்... 14 ஆம் வயதில் நாடகக் கம்பெனியில் சேர்கிறார்... 5 வருடம் சொந்த நாடகக் கம்பெனி நடத்துகிறார்... ஒரு நாடக மன்றம் மூலம் படம் எடுக்க இந்தியா வருகிறார்.. முதலில் பாடகராகிறார்...முதல் பாடலே எம்.எஸ்.வி இசையமைப்பில் பாரதவிலாஸ் "இந்திய நாடு என்வீடு" தேச பக்திப் பாடல்... கோரஸ்... அப்போதே வாசுதேவன் மலேஷியா வாசுதேவன் ஆகிறார்.. பெயர் சேர்ப்பு உபயம் எம்.எஸ்.வி. பிறகு பாவலர் பிரதர்ஸால் ஆட்டுக்குட்டி முட்டை யிட்டு என ஒலித்து இவருக்கு தங்க முட்டைகளையே அளித்தது!!

அந்த நற்பேறு நெருங்குகிற ஒரு பொற்பொழுது... பிபி நாராயணன் அகில உலக தொழிற்சங்கத் தலைவராக இருக்கிறார்... அவரை மலேஷியா வாசுதேவன் சந்திக்க நேர்கிறது... "எவர் எதிர்வரினும் நீயே ஆகும் !" எனும்படி அந்த சந்திப்பு நேர்கிறது... "நமக்குப் புரியாத ஒரு சக்தி அங்கிருக்கிறது பாபாவாக..." என்கிறார் ஒரு சுவாமியின் திருப்படத்தை அளித்தபடி... ஆம் மனிதனுக்கு புரியாத சக்தி தான் இறை சக்தி.. அவன் புரிந்து கொண்டுவிட்டால் அது வெறும் மனித சக்தியே... புரியாமல் பூரிப்பு தருவதாலேயே அது இறை சக்தி...

பிறகு ஒரு ஒலிப்பதிவு ஸ்டூடியோவில் பெரும்பக்தை பி.சுசிலாம்மா "பாபா பிறந்த நாளில் பாடுவீர்களா?" எனக் கேட்கிறார்... "கூப்பிட்டால் வருகிறேன்" என மிக பவ்யமாகப் பேசுகிறார்.. 

சுவாமி இவர் பெயரைத் தேர்ந்தெடுத்து இவரை நெருங்குகிறார்... சுவாமி பிறந்தநாளில் பாடுபவர்கள் மேடையில் கைகூப்பியபடி நிற்கிறார்கள்... இவருக்கோ சுவாமி தன்னைப் பாட அனுமதிக்க வேண்டுமே என பரபரப்பு... சுவாமி அனுமதித்தால் தான் இங்கே நல்லன எல்லாம் நடக்கிறது... ஸ்வாமி மிக அருகே வந்து "வாசுதேவன்...என்ன மொழியில் பாடப்போகிறாய்?" எனக் கேட்கிறார்... "தமிழ் தான் தெரியும் சுவாமி" என்கிறார்... "பாடு" என சுவாமி விரல் அசைக்கிறார்... அவர் விரல் அசைய இவர் குரல் அசைகிறது...நிகழ்ச்சி பிரமாதமாய் நிகழ்கிறது... மலேஷியாவின் வித்தியாசமான குரல் பக்தர்களின் மனதை ஆக்கிரமிக்கிறது... சுவாமிக்கு பரம திருப்தி... நிகழ்ச்சி முடிந்த உடன்... 

சுவாமி மலேஷியாவிடம் "உன் தொழிலும் , புகழும் பெருகும்" என்கிறார்.. கண் கலங்குகிறது அந்தக் குரல்... "பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்துப்புட்டா" என்பதாக சுவாமியின் தத்தாக அவரின் குரல் மாறுகிறது... அவரின் பெயரும் புகழும் சுவாமி சொன்னபடியே கிரீட முத்தாக மாறுகிறது..

மலேஷியா வாசுதேவன் நல்முத்து... மனிதர்கள் யாரையும் சீக்கிரத்தில் நம்பிவிடும் குழந்தை குணம் அவருடையது... 

சுவாமி மொழிந்த அந்த வார்த்தைக்குப் பிறகே முழு முன்னேற்றமும் அடைந்தேன் என மனப்பூர்வமாய் மலேஷியா ஒப்புக்கொள்கிறார்... முதன்முறையாக தான் பர்த்தி சென்றபோது... சுவாமி அவதரித்த பர்த்தி திருமண்ணை மிதித்துவிட்டீர்கள் அல்லவா...உங்கள் எதிர்காலம் வளமானதாகிவிடும் என ஒரு சுவாமி பக்தர் சத்தியம் பேசியதையும் பகிர்ந்து கொள்கிறார்...

1993 ல் ஒருமுறை பஜன் ஹாலில் சுவாமி இவரைப் பாட வைக்கிறார்.. பெரும்பாக்கியவானே மலேஷியா வாசுதேவன்... இதற்குப் பின்னரும் சுவாமி முன்னர் பல இடங்களில் பாடுகிறார்.. இறைவனுக்கு முன் பாடுவதற்குத் தான் இறைவன் அளித்த குரலும்... இறைவனுக்காக இறைவனைப் பற்றி எழுதுவதற்குத் தான் இறைவன் அளித்த கலையும்... பாலில் தேன் சேர்த்தாலே இனிக்கும்.. நீர் சேர்த்தால் அல்ல!! ஒருமுறை சுவாமியிடம் உத்தரவு கேட்காமலேயே ஒரு படம் தயாரிக்கிறார்.. சுவாமியிடம் பிறகே சொல்கிறார்... நஷ்டம் ஆகுமே என சுவாமி சொல்லி... 30 லட்சம் நஷ்டம் வரும் என்கிறார் சுவாமி... அப்படியே நிகழ்ந்தது... மனிதன் நஷ்டங்களில் தான் பக்குவப்படுகிறான்.. அதிர்ஷ்டங்களில் அகந்தையே பெறுகிறான்... அதிர்ஷடத்தை விட நஷ்டமே ஆன்ம லாபம்... ஆன்மீக நன்மை!! அந்தப் பக்குவக் குரலுக்கு வாழ்க்கையில் பக்குவம் பெறுவதற்கான பலவழி நிகழ்கிறது...

கொடைக்கானலில் சுவாமி முன் மலேஷியா உருகிப் பாடுகையில் சிருஷ்டி மோதிரம் ஒன்றை சுவாமி விரல்களில் அணிவிக்கிறார்... திருமதி உஷா வாசுதேவனோ "எனக்கு தாயும் தந்தையும் அவரே..." என உரிமையோடு சண்டை போடுவேன் என நூலாசிரியரிடம் பகிர்ந்து கொள்கிறார்... 

மலேசிய வாசுதேவன் தன் துணைவியார் திருமதி உஷா உடன்... 

இப்பொழுதெல்லாம் எந்தக் கோவிலுக்கு சென்றாலும் சுவாமி கண்முன் விரிகிறார்.. எங்களுக்கு அவர் தான் குலதெய்வம் என்கிறார் திருமதி உஷா வாசுதேவன்... சுவாமி ஒருமுறை "வாசுதேவன்... உன் குரலில் பக்தி இருக்கிறது" என வாழ்த்தியிருக்கிறார்...எப்பேர்ப்பட்ட வரம் அது.. மனிதன் வாழ்த்தில் சுயநலம் இருக்கிறது.. ஆனால் இறைவன் வாழ்த்தில் எவ்வித சுயநலமும் இல்லை... மனிதனைப் போல் இறைவன் நேற்றைக்கு ஒன்று இன்றைக்கு ஒன்று எனப் பேசுவதில்லை.. அந்த வாழ்த்தை ஆன்மாவில் நிரம்பப் பெற்ற மலேஷியா 

"இதுவே என் வாழ்க்கையில் நான் பெற்ற பெரும் பாக்கியம்" என உருகிப் பேசுகிறார்... எத்தனை சத்தியம் அது!! மனித விருதுகள் எந்த மூலைக்கு... மனித அங்கீகாரங்கள் மாயம் நிறைந்தவை...அகந்தை தருபவை... *இறைவனின் அங்கீகாரமே ஆன்மாக்கள் பெற வேண்டிய இலக்கு...!* அந்த வரம் கோடைக்காலக் காற்றாய் அவர் பாடிய வரையும்... ஒலிக்கிற இந்நொடியிலும் அவ்வரமே சூழ்ந்து நம் இதய செவிகளுக்கு வர்ணம் பூசிக் கொண்டிருக்கிறது!!

சுவாமி பற்றி அவர் பாடிய கேசட்கள் , குறுந்தகடுகள், பாடல்கள் அதுவே சத்திய சாஸ்வத சாயி ஜீவிதம்... அந்த சாயி தரிசனம் ஆல்பம் ஒலிக்காத சாயி பக்தர்கள் வீடே இன்றளவும் இல்லை...! 

(ஆதாரம் : அற்புதமும் ஆன்மீகமும் - 5 / பக்கம் : 50 / ஆசிரியர் : திருமதி சாயிசரஜ்) 


மலையோரங்களில் எதிரொலிக்கும் ஏசுதேவனின் ஆன்ம போதமாய் வாசுதேவனின் கானம் மன ஓரம் முதல் ஆன்மா வரை சென்று குறிப்பாக சுவாமி பக்தியை குரல் வழி இன்றளவும் பரப்பிக் கொண்டிருக்கிறது... அந்தக் குயில் சுவாமியின் தோள்களில் இளைப்பாறிக் கொண்டிருக்கலாம்... ஆனால் அதன் குரல் இன்றளவும் ஆன்மீகம், லௌகீகம் என காற்றின் இடுக்குகளில் கூட தன் இருப்பால் பரவசப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது! சுவாமி சங்கல்பம் அது... சுவாமி சங்கல்பத்தை மிஞ்சிடும் மனித சிந்தனை இதுவரை மட்டுமல்ல என்றுமே இல்லை!!

சுவாமி சங்கல்பத்தாலேயே உலகில் எதுவும் இயங்குகிறதே அன்றி மனித சிந்தனையால் அல்ல...!!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக