தலைப்பு

சனி, 11 டிசம்பர், 2021

ஆசீர்வதிக்கப்பட்ட நாய் - குட்டன்!இந்த உடம்பு என்பது உனக்கு வாடகைக்கு தரப்பட்டிருக்கும் வீடு. அதன் உரிமையாளர் கடவுளே. அவர் விரும்பும் வரை, நீ அதில் வசிப்பாயாக. நம்பிக்கையும், பக்தியுமான வாடகையை செலுத்துவதன் மூலமாக இத்தகு குடியிருப்பை தந்த கடவுளுக்கு நன்றி கூறியபடியே அதில் வசிப்பாயாக.

-பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா

மே 2, 1962 இல் பகவான் பாபா நீலகிரி சென்றிருந்த பொழுது பிகேட்டி என்னும் கிராமத்திற்கு சென்றார். அந்த கிராமத்தில் வயதான ஒரு நொண்டி நாய் இருந்தது. அந்தக் கிராம மக்கள் அதனை  "குட்டன்" என்று அழைத்தனர். அவ்வூரை அது காவல் காத்து வந்தது. அது வெளி மனிதர்களை பார்த்தால் மிக முரடாக மாறி குரைக்க ஆரம்பிக்கும். எனவே பாபா போயிருந்த பொழுது அதை சங்கிலியால் கட்டிப்போட்டு விட்டனர். அன்பே வடிவமான சாயிக்கு அதை கட்டிப்போட்டு இருப்பது பிடிக்கவில்லை. அதனருகில் சென்று "பங்காரு" என அழைத்தார். அதை மெல்ல தட்டிக் கொடுத்தார். பாபா அங்குள்ளவர்களிடம் "இவன் ஒரு உண்மையான தூய ஆத்மா. இவன் யாரையும் எதையும் செய்ய மாட்டான்" என்றார். குட்டனை அவிழ்த்து விட்டதும் அதற்கு மகிழ்ச்சி! பாபா செல்லுமிடமெல்லாம் தொடர்ந்து சென்றது. மேடைக்கு கூட அதை உடன் அழைத்துச் சென்றார் சுவாமி. அது அமைதியாக அமர்ந்து கவனமாக பஜனையை கேட்கும்.ஒரு நாள் கிராமத்தினர் விருந்து ஏற்பாடு   செய்திருந்தனர். பாபாவிற்கு டைனிங் ஹாலிலேயே மிக அழகான மேடை அமைக்கப்பட்டிருந்தது. பஜனை முடிந்த பிறகு பாபா சமயலறை சென்று உணவை ஆசீர்வதித்து பிரசாதமாக ஆக்கினார். குட்டன் பாபாவை பின்தொடர்ந்து சென்றது. அங்குள்ள வாலண்டியர்ஸை (தன்னார்வலர்கள்) அழைத்து முதலில்  குட்டனுக்கு அளித்து விட்டு மற்றவர்களுக்கு வழங்கச் சொன்னார். ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. இருப்பினும் பாபாவின் கட்டளைப்படி செய்தனர். குட்டன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுதே, நீண்ட வரிசையில் உள்ள அனைவருக்கும் உணவு பரிமாற சொன்னார். மேடையில் அமர்ந்தபடி தானே மேற்பார்வை பார்த்தார். 


குட்டன் சாப்பிட்டுவிட்டு பாபாவின் அருகில் வந்து நின்றது. சிறிது நேரத்திற்குப் பிறகு பாபா தனது நாற்காலியில் அமர்ந்து எதிரிலுள்ள ஸ்டூலில் தனது பொற்பாதங்களை வைத்துக்கொண்டார். குட்டன் அவர் அருகில் அமர்ந்து பாபாவின் பாதங்களில் தலையை வைத்து நிரந்தரமாகத் தூங்கிவிட்டது.    குட்டன் ஸ்வாமியுடன் தன்னை இணைத்துக் கொண்டான்.

🌻 பெரிய பாக்கியம் பெற்ற ஆத்மாவால் மட்டுமே சுவாமியோடு ஐக்கியமாக முடிகிறது... ஒவ்வொரு ஆன்மாவும் பிறந்து பிறந்து வருவதே இந்த ஐக்கியமடைதல் எனும் இலக்கை அடைவதற்குத்தான்... அதற்காகவே மனிதன் ஆன்ம சாதனை புரிகிறான்... முழு பக்குவமே சுவாமியோடு ஒருமித்தலை நோக்கிய  ஒப்புறவையும் ஒப்புதலையும் அடைகிறது... குட்டன் மிகவும் கொடுத்து வைத்தவனே! 🌻

 ஆதாரம்: BABA SATHYA SAI, Part 2, pg :- 294 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக