தலைப்பு

ஞாயிறு, 19 டிசம்பர், 2021

எந்த மகான்களையும் நாம் இழிவாகப் பேசக் கூடாது!

மகான்கள் எத்தகையவர்கள் என்பதையும்.. அவர்களை குறைத்து மதிப்பிடக்கூடாது என்பதையும்... சுவாமியை வழிபடுகிறோம் என்ற பெயரில் மகான்களை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது என்பதையும்.. ஏன்? எதற்காக? என்கிற சுவாரஸ்ய விளக்கம் கலங்கரை விளக்குப் பதிவாக இதோ...


சுவாமி இறைவன்... பரிபூர்ண அவதாரம்... இதை தெள்ளத் தெளிவாக உணர்ந்து வழிபடுகிறோம் என்ற பெயரில் மகான்களை இழிவாகப் பேசுவதும்.. அவர்களை குறைத்து மதிப்பிடுவதும் கூடாது... சுவாமியோ மகான்களை தன் அங்கங்கள் என்கிறார்... அப்படிப்பட்ட மகான்களை நாம் இழிவாகப் பேசுவது என்பது சுவாமியையே அங்கஹீனப் படுத்துவதற்குச் சமம்! கோடிக்கணக்கான மக்கள் அதில் எல்லோரும் மகான்களாவதில்லை... ஒரு ரமணர் தான்... ஒரு காஞ்சிப் பெரியவர் தான்... அரிதாகவே அப்படிப்பட்ட குறிஞ்சிப் பூப் பூக்கிறது... அப்படிப் பூத்து வருபவர்கள் எப்பேர்ப்பட்ட புண்ணியம் செய்தவர்கள்..புனிதர்கள்... எப்பேர்ப்பட்ட பாக்கியவான்கள்... மேன்மையானவர்கள் என்பதை உணர வேண்டும்...

சுவாமியே பரப்பிரம்மம் எனப் பல மகான்கள் உணர்ந்து அதை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.. அதற்கு சான்றாக காஞ்சிப் பெரியவர் சுவாமியே அம்பாள் என்றும்... தலைமை கவர்னர் மாதிரி எனவும்... திருப்பதி பர்த்தி வேறல்ல எனும் பரம சத்தியத்தைப் பகிர அதனை கேட்டவர்களாக தெய்வத்தின் குரல் நூலாசிரியர் ரா.கணபதி அவர்களின் குடும்பமும்... பெரும்பாடகி எம்.எஸ் அம்மா குடும்பமும் இன்றளவும் சாட்சியாகத் திகழ்கிறது... 

சுவாமி தான் பரபிரம்மம் ஆயிற்றே நாம் எதற்கு பிற மகான்களை எல்லாம் சட்டை செய்ய வேண்டும் என நினைப்பது சுவாமியையே ஒருவகையில் புறக்கணிப்பதற்குச் சமம்... சுவாமியை வழிபடுவதால் நாம் சாயி பக்தர்கள்... அந்தந்த மகான்களை வழிபடுபவர்களும் அந்தந்த மகான்களின் பக்தர்களே... இதில் பக்தி என்பது இரண்டு வெவ்வேறு தளத்தில் இயங்குபவர்களுக்கும் சரிசமமாகவே இயங்கி வருகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது! மனிதர்களிடமே தன்னைப் பார்க்க வேண்டும் என நமக்கு கற்றுக் கொடுத்த சுவாமி ... மகான்களிடம் தன்னை பார்க்காதே என்றா கற்றுக் கொடுத்தார்...? மனிதருள் இயங்கும் சுவாமி அவர்களுள்  இல்லையா? மனிதர்களுக்கும் மகான்களுக்கும் உள்ள வித்தியாசம்... மகான்களோ இறைவனை உணர்ந்தவர்கள்... மனிதர்களோ உணரப் போகிறவர்கள்...! முன்னோடி அவர்கள்... அந்த முன்னோடிகளை ஆன்மீகத்தில் முன்னேறிச் செல்பவர்கள் முகம் சுழித்துப் பேசுவது இழுக்கு! மனிதர்களை விட பலபடி மேலே பக்குவப்பட்டிருப்பவர்கள் ... பழுத்த ஞானம் கொண்டவர்கள்... வைராக்கியவாதிகள்... சுயநலமே இல்லாத பேரன்பு கொண்டவர்கள் மகான்கள்!

நம் சுவாமி எல்லா உயர்ந்த மகான்களையும் மற்றும் அவர்களின் பக்தர்களையும் / அடியவர்களையும் மதித்தவர்... அவர்களுக்கு உரிய மரியாதையை கொடுத்தவர்... அந்தந்த வழி மரபுகளையும் மரபினரையும் வாழ்த்தியவர்... அதற்கு சரியான உதாரணம் ரிஷிகேஷ் சிவானந்த ஆசிரமம்... 

அதன் பரமகுரு ஸ்ரீ சிவானந்த சுவாமிகள் ஸித்தி அடைந்தபிறகு அவரின் சிஷ்யகோடிகள் சுவாமியையே அந்த மாபெரும் ஆசிரமத்தைப் பார்த்துக் கொள்ளும்படி வேண்டியபோது... சுவாமி  ஒரு நொடியில் அதனை தனதாக்கிக் கொள்ளலாம்... ஆனால் சுவாமி அப்படி செய்யவில்லை... அதை அவர்களின் வழிதோன்றல்களிடமே சீரியவிதமாய் ஒப்படைத்து ஆசீர்வதித்தார்... அந்த பரந்து விரிந்த இதயம் தான் இறைவனான சுவாமி... நாம் அந்த இதயத்தை கைவரப்பெற வேண்டும்...!

மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவியும் சிறுவயதில் ஸ்ரீகிருஷ்ண உருவத்தையும்... நம் சுவாமி உருவத்தையும் ஆரத்தி எடுத்து வழிபட்டவர் தான் ... அந்த அரிய புகைப்படம் கூட இருக்கிறது... 


பகவான் யோகி ராம் சுரத்குமார் சுவாமியை தன் தந்தை என்றிருக்கிறார்... அதற்கான  காணொளி ஆதாரமும் அதன் வழிப் பதிவும் இருக்கிறது... (1) (2)  அதைப்போல் வாழும்கலை மகான் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருதேவரும் சுவாமியின் பாலவிகாஸ் மாணவர் தான்! பல உயரிய மகான்கள் நம் சுவாமியை இறைவன் என்றிருக்கின்றனர்... ஆகையால் அத்தகைய இறைவனின் பக்தர்கள் நாம் எத்தகைய பாந்தமுடன் சாந்தமுடன் புறம் பேசாமல் நற்பேறோடு வாழ வேண்டும் என்பதை நாமே உணர வேண்டும்...! நம் ஆன்மீக சாதனை அப்போதே வேர் பிடிக்கும்...!

அறநெறி களை பேசுவதல்ல ஆன்மீகம்... அதனை வாழ்க்கையாக்குவதே ஆன்மீகம்... அப்படி வாழ்ந்தவர்கள்/ வாழ்கிறவர்கள் மகான்கள்!

நமக்கு நம் சுவாமி போதும்... இவர்கள் வெறும் மகான்கள் தானே என்ற நம் நினைப்பு ஓர் அறியாமையே... வெறும் மகான்கள் அல்ல பெரும் மகான்கள்! ஆன்மீக வாழ்க்கைக்கான ரகசியச் சாவி அவர்களின் வாழ்க்கையிலேயே இருக்கிறது... மகான்களின் வாழ்க்கையை வாசித்தாலே சுவாமி எதை போதனை செய்தாரோ அதை வாழ்ந்திருப்பார்கள்...  வைராக்கியத்திற்கு பகவான் ரமணர்... குருபக்திக்கும், தன்னை பிச்சைக்காரர் என்று சொல்லிக் கொண்ட தன்னடகத்திற்கும் பகவான் யோகி ராம்சுரத்குமார்‌... வினயத்திற்கு மகாபெரியவர்.. ஜப நிஷ்டைக்கு சேஷாத்ரி சுவாமிகள்... தியானத்திற்கு இமய யோகி சுவாமி ராமா... யோக வாழ்க்கைக்கும், மனித சேவைக்கும் ரிஷிகேஷ் சிவானந்தர்... 

இப்படிப் பலர்!  தன் வாழ்க்கையையே தனது போதனை புத்தகமாக்கியவர்கள் அவர்கள்... இந்தப் பதிவை வாசிப்பவர்களில் ஒருவர் கூட நாளை மகானாகலாம்... ஆகவே மகான்களை புறக்கணிப்பது கூடாது! காரணம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வயதில் ஞானோதயம் ஏற்பட்டிருக்கிறது.. ஸ்ரீரமணருக்கு ஏழு வயது என்றால்... யோகி ராமுக்கு 40 வயது... யார் எப்போது மகானாவார்கள் என சுவாமிக்கே தெரியும்.. ஆகவே தான் யாரையும் கிள்ளுக் கீரையாகக் கருதுதல் அறவே கூடாது! இவனெல்லாம் மகானா ? என யாரேனும் யாரையோ நினைத்தால் அவர்களுக்கு நினைவுப்படுத்த வேண்டியது... 

கொடும் திருடனும் வேடுவனுமான ரத்னாகரன் தான் வால்மீகி ரிஷியாக ஆனதும்.. காமுகனான அருணகிரி தான் அருணகிரிநாதரானார் என்பதும்... பொருளாசை கொண்ட திருவெண்காடர் தான் பட்டினத்தார் ஆனதும்... நம் கண்முன்னே விரிகின்ற மகான்களின் சரிதம்... அவர்களின் சரிதம் நம் ஆன்மீக வாழ்க்கைக்குப் பெரிதும் உந்து சக்தியாக அமைகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை!!


இக்காலக் கட்டத்தில் போலியான மனிதர்கள் குருமார்களாக வலம் வருவது நிகழத்தான் செய்கிறது... ஆனால் எவர் அசல்.. எவர் போலி என்பது சுவாமிக்கு மட்டுமே தெரியும்... ஆக நாம் அவர்களுக்கு  சான்றிதழ்கள் தர வேண்டிய அவசியமே இல்லை!! நம் ஆன்ம சாதனை நோக்கியபடி மட்டுமே நாம் நடைபோட வேண்டும்... வம்புகளில் உள்நுழைதல் கால விரயமே! 

உண்மையாக ஆன்மீக தாகம் கொண்டவர்களுக்கு உண்மையான மகான்களும் ... பேராசை கொண்டவர்களுக்கு போலியான குருமார்களும் கிடைப்பார்கள் என்பது நடைமுறை வாழ்வியல்.. !! யதா பா'வம்: ததா ப'வதி!!

உண்மையான மகான்கள் ஏராளம்... அவர்களை மதித்து துதித்து அவர்கள் வாழ்ந்து சென்ற வாழ்க்கையை படிப்பினையாக எடுத்து.. அவர்களின் அறநெறிகளை வாழ்க்கையாக்கி... சுவாமியின் பரிபக்குவ பக்தராக திகழ்வோமாக!! 

இதை வாசிக்கும் உங்களில் ஒருவர் கூட நாளை மகானாகலாம் என்பதை மீண்டும் உணர்த்தி உங்களை நமஸ்கரிக்கிறேன்!!


 பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக