தலைப்பு

புதன், 1 டிசம்பர், 2021

அவதாரர் பாபாவை ஈன்ற அன்னை ஈஸ்வராம்மாவிற்கு திருக்கோவில்!

"நான் சங்கல்பித்தேன். என் அன்னை யாரென்பதை" என்று பாபா கூறுகிறார். ஆம். பாபாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்னை தான் ஈஸ்வராம்மா. "நான் பிறப்பெடுத்தது "பிரசவம் அல்ல, பிரவேசம்" என்றும் பாபா கூறுகிறார். விண்ணிலிருந்து நீலஒளிப் பிழம்பாய் அன்னையிடம் பிரவேசித்ததை தான் ஸ்வாமி அவ்வாறு விவரிக்கிறார்... 


🌹கலியுக அவதார பாபா தேர்ந்ததெடுத்த அன்னை:

பர்த்தியிலிருந்து 100 மைல்கள் தாண்டி இருந்தது "கோலிமிகுண்ட்லா" என்ற குக்கிராமம். இங்குதான் சுப்பாராவ் என்கிற சிவ பக்தர் வசித்து வந்தார். அவர் சிவனின் மீது கோண்ட பக்தியால் ஒரு சிவன் கோயிலை அங்கு கட்டினார். பெரியவர் கொண்டமராஜூ (பாபாவின் பாட்டனார்)  சுப்பாராவின் உறவினர் ஆவார். தமது உறவினரை பர்த்திக்கு அருகில் குடியமர்த்த எடுத்த முயற்சியில் வெற்றிபெற்று, சித்ராவதிநதியின் பர்த்திக்கு எதிர் கரையில் இருந்த கர்நாடகபள்ளி என்ற சிற்றூரில் சுப்பாராவின் குடும்பத்தை குடி அமரச் செய்தார் மேலும் தனது மகனான பெத்த வெங்கப்ப ராஜூவுக்கு, சுப்பாராவின் மகள் ஈஸ்வரம்மாவை மணம்முடித்தார்.

14 வயதே ஆன நாமகிரி அம்மா (ஈஸ்வரம்மாவின் இயற்பெயர்) பொறுப்புடன் குடும்பத்தில் இணைந்து அனைவரும் மெச்சும்படி நடந்தார். ஞானியாக வாழ்ந்த பெரியவர் கொண்டமராஜு , தமது மருமகளுக்கு ஈஸ்வராம்மா என்ற பொருத்தமான புதுப் பெயர் சூட்டினார். 


🌹நீல நிற ஒளிப் பந்தாய் ஞாலத்தில் உதித்தவன்:

எட்டாத இன்பநிலை அனைவரும் எட்டவேண்டும் என்று அவதாரம் எடுத்த பாபாவும், கிருஷ்ணரைப் போல எட்டாவது பிள்ளையாக , அன்னை ஈஸ்வராம்மாவைத் தேர்ந்தெடுத்து அவதரித்தார். அவதார நாடகத்தை பாபா அரங்கேற்றிய விதம்தான் என்ன.

அன்று ஒருநாள். கர்நாடகபள்ளியில் தமது வீட்டுக் கிணற்றில் ஒரு வாளியின் முலம் நீர் எடுத்துக்கொண்டிருந்தார் அன்னைஈஸ்வரம்மா. அப்போது, வானத்தில்இருந்து ஒரு நீல நிற ஒளிப்பந்து  சுழன்று வந்து, அன்னையின் உடலில் புகுந்தது


இது கண்ட ஈஸ்வராம்மா திகைத்து மயங்கி தரையில் சாய்ந்தார். இதுபற்றி பிறகு பாபா,  இவ்வாறே "என் பிரவேசம் நிகழ்ந்தது.நீல நிறத்துக்கும் இறை தத்துவத்திற்கும் ஓர் ஒற்றுமை உண்டு. ராமரும், கிருஷ்ணரும் நீலமேக ஷ்யாமள வர்ணர்கள் தானே" என்றார்.

அவதாரரின் அவதார முன்னோட்டமான  இந் நிகழ்வுக்கு சாட்சியாக இருக்கும், கர்னாடகபள்ளியின் இந்த புனிதமான கிணற்றை தற்போது சீரமைத்து அருகில் அன்னைக்குஒரு திருக்கோயிலையும் அமைத்துள்ளனர்.இதன் திறப்பு விழா 25-11-2011 அன்று நிகழ்த்தப்பட்டது. 


அடுத்தமுறை உங்கள் பிரசாந்தி யாத்திரையின் போது, அன்னை ஈஸ்வராம்மாவின் திருக்கோயிலையும் கண்டு தரிசித்து அருள் பெறுங்கள்.


தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக