தலைப்பு

வியாழன், 23 டிசம்பர், 2021

ஜப்பானில் ஏற்பட்ட பெரும் பூகம்பத்திலிருந்து ஏழரை மாத பிஞ்சுக் குழந்தையைக் காப்பாற்றிய சுவாமி கருணை!


அதிபயங்கர பூகம்பம் ஒன்றில் ஜப்பானில் வாழும் தன் பக்தர்களை எவ்வகையில் துளியும் உயிர் சேதாரமின்றி கருணையோடு காப்பாற்றினார் என்பதை குறித்துப் பரபரப்பான ஓர் அனுபவப் பதிவு இதோ...


பூகம்ப பூமி போலவே  ஜப்பானுக்கு இயற்கை தன் நிலையாமை கீதையை கற்று கொடுத்து வந்திருக்கிறது! ஆன்மீக புத்தகத்தைப் படிப்பதால் மட்டும் வருவதில்லை ஞானம்... அனுபவத்தாலேயே ஞானம் வாய்க்கிறது...! புத்தகங்கள் வெறும் பாதை காட்டும் வரைபடம் மட்டுமே... அதோடு அதன் வேலை முடிந்துவிடுகிறது... நாம் தான் அதில் பயணிக்க வேண்டும்!  பெரும் பூகம்பத்தால் ஒரே நிமிடத்தில் சரிந்து விழும் அந்தஸ்தும் ஆஸ்தியும் நிலையாமையை அவர்களுக்கு கற்று கொடுக்கிறது... அதோடு சேர்ந்தே மீண்டும் உத்வேகத்தோடு உழைத்து எழுகிற நிஷ்காம்ய கர்மத்தையும் கற்றுக் கொடுக்கிறது... உழைப்பில் கிருஷ்ண கீதையையும்... இதயத்தில் புத்தரையும் சுமக்கிறார்கள் ஜப்பானியர்கள்... புத்தர் அப்படிப்பட்ட நிலையாமையை அனுபவத்தால் சொல்லித் தரும் மண்ணில் தான் செழித்து வளர முடியும்! 

தசாவதாரங்களில் ஒருவரான புத்தரே சுவாமி என்கிற சத்தியப்படி அங்கே பலரும் சுவாமியை உணர்ந்து இன்றளவும் பக்தராகிக் கொண்டுதான் இருக்கிறார்கள்!!

அது 1995. ஜனவரி 11. ஜப்பான் தனது முதுகில் இன்னொரு பூகம்ப இடியைப் பெறுகிறது... இதுவரை அது பெறாத பேரிடியாக... பேரிடராக கருதப்படுகிறது... அந்தப் பேரிடரில் சுவாமியின் பேரன்பும் நிகழ்ந்து பக்தர்கள் உயிர் சேதமின்றி காப்பாற்றப்படுகிறார்கள்... கர்மா நிகழ்ந்தே தீரும்.. கர்மா நிகழ்ந்து தான் தீர முடியும்.. காரணம் தான் உருவாக்கிய கர்மாவை மனிதன் தானே தீர்க்க வேண்டும்! ஆனால் பக்தி இருந்தால் அவன் சேதமின்றி காப்பாற்றப்படுகிறான்! கட்டாயமாகப் பொழிய வேண்டிய மழையை சுவாமி தடுப்பதில்லை... ஆனால் பக்தர்களுக்கு குடையைத் தருகிறார்... சுவாமி முட்களை களைவதில்லை... பக்தர்களின் கால்களில் பாதுகையை தருகிறார்... அப்படிப்பட்ட கருணை ஜப்பானில் நிகழ்ந்தது! பூகம்பம் நிகழ்ந்த இடம் ஜப்பான் கோப் நகரில் இருக்கும் கன்சாய்... பெயரிலும்...வாழ்பவர் உயிரிலும் 'சாய்' என சுவாமியை சுமந்து கொண்டு வாழ்கிற பூமி அது! ஜப்பான் சத்யசாயி நடத்தும் சாயி பத்திரிகையான கன்சாய் லைட்டின் ஆசிரியர் பூகம்ப நிகழ்வையும்... சுவாமியின் பேரருள் பொழிவையும் அவ்வருட மார்ச் மாத இதழில் பதிவு செய்கிறார்! 

ஜனவரி 11 ம் தேதி காலை 5 மணி... விடி விடி என பூமி வானத்தை நோக்க... இடி இடி என அதற்குள்ளேயே பூகம்ப இடி ஏற்படுகிறது! 40 வினாடிகள் குலுங்குகின்றன... 7.2 ஆக பூகம்பம் பதிவு செய்யப்படுகிறது! இது மிக அதிகம்... அந்த இடம் எங்கும் "பாபா... சுவாமி ... சாயிராம்... காப்பாற்றுங்கள்" எனும் அலறல் கோஷம்... ஆன்மாவிலிருந்து எழுகின்ற குரல்கள் அவை!! வேறு வழியே இல்லை எனும் இக்கட்டான சூழ்நிலையில் தான் சரணாகதியே ஏற்படுகிறது மாயை சூழபட்ட மனிதனுக்கு... கணவர்களின் இயலாமையை உணர்ந்து வேறு வழியே இல்லை என துரௌபதி சுவாமியை அழைக்கிறாள்... அப்படிப்பட்ட கதறல் அழைப்புகள் அவை... பேராசை பூசிய பிரார்த்தனைக்குத் தான் சுவாமி செவி சாய்ப்பதில்லை... ஆனால் சரணாகத பிரார்த்தனைக்கு சடுதியில் செவிசாய்த்து மின்னல் பொழுதில் தடுத்தாட் கொள்கிறார்! பூகம்பத்தில் சிக்கிய ஒரு பெண்மணி கூறுகிற போது... சுவரிலிருந்த மர அலமாராக்கள் சரிந்து அவர் கணவர் மேல் விழுந்து எழமுடியாமல் மாட்டிக் கொள்கிறார்... அந்த அறையிலிருந்து ஜன்னல் கண்ணாடிகள் தூள் தூளாகிறது... மிகுந்த கஷ்டத்திற்குப் பிறகு அவர் எழ... ஒவ்வொருவரும் வெளியே வர முற்படுகின்றனர்... தனியாக மாட்டிக் கொண்ட ஏழரை மாதக் குழந்தை முன் அறையில் பயங்கரமாக அலறுகிறது... அவர்களுக்கும் கேட்கிறது... ஆனால் எதுவும் செய்ய முடியவில்லை... டி.வி விழுந்து சுக்கல் நூறு... பூகம்பத்தில் எந்த நொடி என்ன ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கூட கணிக்க முடியாது.. எது எவர் தலையில் விழும் என்பது கூட தெரியாது... பூகம்பம் போல் தான் மனித வாழ்க்கை சம்பவங்களும்... பூகம்பம் தகர்க்கும் பொருட்கள் போலத்தான் நிலையாமை எனும் நித்திய பூகம்பம் மனிதனின் கற்பனைகளை எல்லாம் தகர்த்து விடுகிறது!

எப்படியோ மிகுந்த சிரமத்தில் அலறிக் கொண்டிருக்கும் குழந்தையை நெருங்குகிறார்கள்..‌ குழந்தையை தனியாக விட்டது தவறு தான்.. ஆனால் யாருக்குத் தெரியும் பூகம்பம் வரப் போகிறது என.. அந்த நொடியில் மனித மனம் ஸ்தம்பித்துவிடுகிறது...! அவர்கள் அந்தப் பிஞ்சுக் குழந்தை இருக்கும் இடத்திற்கு விரைய முற்படும்போது தான் சுவாமியின் பேரற்புதம் காத்திருந்தது!! ஆம்! குழந்தையை சுற்றி ஒரு அடி வட்டத்திற்கு எந்த தூசியும் கூட இல்லை.. மற்ற இடங்கள் முழுக்க உடைந்த சில்லுகள்.. நொறுங்கிய பொருட்கள் இத்யாதி... அது யாரோ குடைபிடித்துக் குழந்தையைக் காத்த மாதிரி இருந்தது என அந்தப் பெண்மணி பேராச்சர்யமாகப் பகிர்கிறார்... அசாதாரண பூகம்பத்தில் இது நிகழக் கூடியதா?! என வியக்கிறார் சுவாமி பக்தையான அந்தப் பெண்மணி... சுவாமி காப்பாற்றவில்லை எனில் அந்தப் பிஞ்சு குழந்தையின் கதி என்ன... தத்தக்கா பித்தக்கா என அதனால் நடந்து கூட வர இயலாது... அதற்கு என்ன நிகழ்கிறது? என்று கூட தெரிய வாய்ப்பில்லை‌... 

அந்தக் குழந்தையை அலேக்காக தூக்கி 10 ஆவது மாடியிலிருந்து கீழே ஓடி வருகின்றனர்... வெளியே வந்து பார்க்கிற போது தான் தெரிகிறது... ஒரு வருடத்திற்கு முன்பு கட்டிய கட்டிடங்களின் முகப்பே இல்லை... யாவும் தரைமட்டம்...! அந்த ஹன்சின் எனும் பெயர் கொண்ட பூகம்பம் கலியின் வேலையை கன கச்சிதமாய் ஆற்றிவிட்டு தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் மாயமாகச் சென்றுவிடுகிறது!!

எல்லோரும் பேரழிவை கண்முன் அனுபவித்து ஸ்தம்பித்து நிற்கின்றனர்... இதில் சுவாமி அனுப்பிய தந்தியும் வந்து சேர்ந்து கண்ணீரை வரவழைக்கிறது...

"யாரும் கவலைப்பட வேண்டாம்... ஒரு பக்தருக்குக் கூட துன்பம் வராது!" என சுவாமி கருணையோடு அனுப்பிய வாசகம் எப்பேர்ப்பட்ட சத்தியம் என அங்கே அனுபவித்தவர்கள் உணர்கிறார்கள்! 

ஒருமுறை சுவாமியிடம் நேர்காணல் பெற்ற ஒரு இலங்கை பக்தர் ஒரு கேள்வி கேட்கிறார்.. அந்தக் கேள்வி " நீங்கள் கடவுளானால்...ஏன் குண்டு மழை பொழிகிறது?" என்கிறார்... அதற்கு மிக தீர்க்கமாய் சுவாமி "கவலைப்பட வேண்டாம்... என் பக்தர்கள் யாரையும் குண்டு அணுகாது!" என்கிறார்... சுவாமி சொன்ன அந்த பரமசத்திய மொழிகளை அனுபவித்து உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கை பக்தர்கள் இன்றளவும் நம்முன்னே நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்! 

     அப்போது சுவாமி பக்தர்களை மட்டும் தான் காப்பாற்றுவாரா? எனக் கேட்டால்... ஆம் !! சுவாமி வடிவம் மட்டும் பக்தி செலுத்துபவரை அல்ல எந்த இறை வடிவங்களை வழிபடுபவரையும் சுவாமியே காப்பாற்றுகிறார்...! அந்த வழிபாடு என்பது சுயநலம் , பயம் மற்றும் பேராசையால் கூடிய வழிபாடு அல்ல... "நீயே எனக்கு அனைத்தும் சுவாமி... நீ மட்டுமே எனக்கு ஒரே கதி" என பக்தி செலுத்தி உளமாற சரணடையும் பக்தர்களை மட்டுமே சுவாமி காப்பாற்றுகிறார்! இதைத் தான் திரேதா, துவாபர யுகத்திலிருந்தே சுவாமி பகர்ந்து வருகிறார்!! விபீஷண சரணாகதி, அர்ஜுன சரணாகதி, அப்துல் பாபா சரணாகதி, சுப்பம்மா சரணாகதி, கஸ்தூரி சரணாகதி இத்யாதி இப்படி எத்தனை மகானுபாவர்களின் சரணாகதியை நாம் உணர்ந்து வந்திருக்கிறோம்!! 

(ஆதாரம் : அற்புதமும் ஆன்மீகமும் -5 / பக்கம் : 84 / ஆசிரியர் : திருமதி சாய்சரஜ்) 


சுவாமி மனிதனிடம் பூமியை மட்டுமே தந்தருளினார்... மனிதனாலேயே பூகம்பம் ஏற்படுகிறது! சுவாமி மனிதனுக்கு சுத்தமான காற்றை தந்தருளினார்‌... மனிதனே அதை நச்சாக்கிக் கொண்டிருக்கிறான்... வாங்கிக் கொடுத்த விளையாட்டு ஜாமான்களை போட்டு உடைத்தாலும் கருணை காட்டும் தாயைப் போல சுவாமி நம்மேல் கருணை காட்டுகிறார்... அந்த அளப்பரிய சுவாமி கருணைக்கு நம் சரணாகதியை தவிர எந்த நிறைவான ஒன்றை சுவாமிக்கு தந்துவிட முடியும்!? சுவாமியிடம் சரணடைதலை தவிர வேறெதுவும் பொருளில்லை...! வேறெதனாலும் பயனில்லை...!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக