தலைப்பு

வியாழன், 23 டிசம்பர், 2021

ஸ்ரீ சத்ய சாயி லீலாம்ருதம் (நித்திய பாராயணத்திற்கானது)


பகவான் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சத்ய சாயிபாபா அவர்களின் 60ஆம் பிறந்த தின விழா அன்பளிப்பு ஆண்டு :1986 - (மிக அரிய தொகுப்பு)

1. ஈஸ்வரி மைந்தனே! சதுர்த்தி நன்னாள் தன்னில் புட்டபர்த்தியில் அவதரித்து உலகத் துயர் துடைக்க வந்த தூயவா! ஆருத்ரா நட்சத்திரத்தன்று தோன்றிய சோமவார ஈசனே! ஸ்ரீ சத்ய நாராயண விரத வரதனே! ஸ்ரீ பெத்த வெங்கப்ப ராஜூவின் மைந்தனே! ஸ்ரீ சத்ய நாராயணா என்னும் திருநாமம் சூட்டப்பெற்ற நாரணனே! தம் பெற்றோர்களை உய்விக்க வந்த புட்டபர்த்தீசா! உன்னை நான் மனப்பூர்வமாய் நமஸ்கரிக்கின்றேன்.


2. "சத்தியம் நிலைக்க அக்ஷய வருடத்தில் உதித்து , நான் பாரத்வாஜ ரிஷி கோத்திர, ஆபஸ்தம்ப சூத்திர ஷீரடி சாயியின் மறுபிறப்பு என்று திருவாய் மலர்ந்து கூறி "சத்தியம் நானே - சர்வமும் நானே" , என்று எல்லோரும் அறிய சத்தியமே ஆதாரமாகக் கொண்ட இறைவனே! ஸ்ரீ சத்ய சாயி! உம் திவ்ய திருவடிகளில் சரண் அடைகின்றேன்"


3. "பள்ளியில் ஆசிரியர் சீற்றமுடன் நின்னை இருக்கையில் மேல் நிறுத்த , பின் அவர் எழ முடியாமல் அவரது இருக்கை அவருடன் ஒட்டிட, அவர் தம் பிழையறிந்து வேண்டிட... அவருக்குத் தான் யாரென்று நீருபித்த பால சாயி நின் தாள் வணங்குகின்றேன்".


4. "யார் நீ" என வினவிய மக்கள் சொல்லுக்கு, பார் அறிய மல்லிகை மலர்களையிட்டு "சாயி பாபா" என்று அவை சேர லீலை புரிந்த சாயி! இறைவனாக பேசுகின்ற பெருந்தகையே! 

உன்னைப் பேயனோ ! பித்தனோ ! என மனைவிட்டகற்றி மந்திரவாதியின் வஞ்சக செயலெலாம் அறிந்தும்... நின் தேகத்தைப் புண்படுத்த தீமூட்டிய ஊசியினால் கண்களில் குத்த, தாய் தமக்கை அலறிட காயமே பொய்யென உணர்ந்தும் , காயமே நீ அல்ல என்றுணர்த்திய மௌன சாயி! நின் பொற்றாள் வணங்குகின்றேன்.


5. நித்தமும் பக்தர்கள் நின் தாள் வணங்கி, அவர் பிறவிப் பிணி நீங்க, பிரதி வியாழன் தோறும் பக்தர்களின் இன்னலை நீக்கி... விபூதி, கற்கண்டு ஷீரடியவதாரத்தின் அங்கியின் பாகம் முதலிய பல அவர்களுக்களித்து "மானச பஜரே குரு சரணம்" என முதன்முதல் சாயி பஜனையை ஆரம்பித்து வைத்த சத்குரு சாயி! நின் பொற்றாள் வணங்குகின்றேன்.


6. 'பிரபஞ்சத்தின் தோற்றத்தையும் அழிவையும் உணர்ந்து ... ஜீவராசிகளின் பிறப்பையும் , இறப்பையும் அறிந்து... அறிவுடைமை, அறிவின்மை இரண்டையும் கடந்து... ஞானம் , வைராக்கியம் , வீரியம், ஐஷ்வர்யம் , ஸ்ரீ , கீர்த்தி ஆறும் உன்னிடம் சேர்ந்து அவதரித்த பகவான் சாயி! நின் தாளை நமஸ்கரிக்கின்றேன்'. 


7. "அன்று நரஹரியாய் தோன்றி பிரகலாதனை இரட்சித்த பரம புருஷன் நீயே! ஆதிமூலமே! என்று கதறிய கஜேந்திரன் என்னும் கரியைக் காத்த சக்ரதாரியும் நீயே! திரௌபதியை சபையில் மானங்காத்து இரட்சித்த இருதயவாசி நீயே! பிறவிப் பெருங்கடலிலிருந்து எம்மை உய்விக்கப் புட்டபர்த்தி தலந்தன்னில் அவதரித்த சத் சக்கரவர்த்தி சாயி! உன்னை நமஸ்கரிக்கின்றேன்"


8. "தெய்வீகம், சாதுர்யம், சௌலப்யம், சூரத்தன்மை, பொறுமை, கருணை, சமத்துவம், தாய்மை, தூய்மை, தபஸ், மன்னிக்கும் மனப்பான்மை, நேர்மை, பேரறிவு, பேரானந்தம் முதலிய திருக்கல்யாண குணங்கள் ஒன்று சேர்ந்து அவை உய்யப்பிணங்கும் திருவுருவம் படைத்த சாயி! நாஸ்திகர் அனைவரையும் ஆஸ்திகராக்கி மக்களை மகிழ்விக்க உதித்த தெய்வ சாயி உன் திருத்தாளை நமஸ்கரிக்கின்றேன்.


9. சத்தியம் என் பிரச்சாரம், தர்மம் என் ஆசாரம், சாந்தி என் ஸ்வபாவம், ஃப்ரேமை எனும் ஸ்வரூபம் என்று உணர்த்திய பகவானே! உறுதியான சத்தியத்தின் மூலம் ஞான மார்க்கத்தைக் கடைபிடி; ஆனந்தம் பெற்ற மங்கள சிவத் துடன் பக்தி மார்க்கத்தைப் பின்பற்று ; பொலிவுள்ள சுந்தரத் தைக் கர்மமார்க்கத்தின் மூலம் தொடரு என்று வழிகாட்டிய சத்ய - சிவ - சுந்தர சாயி! உன் பொற்றாள் வணங்குகின்றேன்.


10. "லோகநாதன் தன் அருந்தவப் பயனால் முதன்முதல் அவதாரமான ஷீரடி சாயியின் திருவுருவத்தைத் தானுகந்து பிரதிஷ்டை செய்வித்துப் பக்தகோடிகளின் பிரமைகளைப் போக்க சக்கரங்கள் பல தோற்றுவித்துப் புனித தலமாக்கிய உலகநாத சாயி! நின் திருவடி சரணடைகின்றேன்" 


11. "அன்பே தெய்வமென இயேசுநாதரும், இறைவனே எல்லோருக்கும் பிதா என்ற நபிநாயகமுமா, அஹிம்சையே பரம தர்மம் என்ற ஜீன புத்த பகவானும் , சத் நாமத்தை நித்தமும் ஓது என்ற குருநானக் தேவரும் கூறிய பொன்மொழிகள் ஒரு சேர நின் "அவதார மொழி அமுதமாய்ப்" பெருகி, உரையே அன்பு , செயலே அன்பு, வாழ்வே அன்பு, வழியே அன்பு என்று அன்பில் வாழ வைக்கும் இன்ப சாயி! நின் பெறறாள்ச ரணடைகின்றேன்"


12.  நாளை நன்னாளாக்க அன்பால் துவக்கு , அன்பால் நிரப்பு , அன்பால் நடத்து, அன்பால் முற்று இஃதே இறைவனை அடையும் பாதை என்று அருளிச் செய்யும் அன்பு சாயி! நின் பொற்றாள் வணங்குகின்றேன்.


13. அண்ணனுக்கு எழுதிய அரிய தம் மடல்களில் மண்ணினில் இல்லை இன்பமும் துன்பமும் என்பதைப் பண்ணினால் விளக்கிப் பகன்ற தேவா! காளிங்கானந்தர் என்னும் பிற மதத்தவன் மனநிலையறிந்து காளியாகிய தெய்வம் தானேயாகி பகவதி தரிசனம் பலவிதங் காட்டிய பகவதி சாயி! அடியேன் நின் தாள் பணிந்தேன்.


14. "பம்பாயில் சத்தியம்- அது என் கால்கள்; ஐதராபாத்தில் சிவம் - அது என் உடல்; சென்னையம்பதியில் சுந்தரம் - அது என் சிரசு " என மாமந்திரம் அருளிய மாநவனே! "என்னை நோக்கி நீ ஓரடி எடுத்து வைத்தால் உன்னை நோக்கி நான் பத்தடி வைத்தருளுவேன்" என்று கூறும் பக்த ரட்சக சாயி! நின் பொற்றாள் வணங்குகின்றேன்.


15. "இறைவன் கல்லல்ல ; கல்லில் இறைவனை காண்க! ஆனால் இறைவனை உன் செயலால் கல்லாக மாற்றிவிடாதே " என்ற உபதேசத்தை விளக்கப் பல பதிகள் தம்மில் விக்ன விநாசக விநாயகரையும் , தர்ம ரட்சக ராமபிரானையும் , துயர் துடைக்க நவகிரகத்தையும் பிரதிஷ்டை செய்து பக்தர்களுக்கருளிய கருணா சாகர சாயி! நின் தாள் வணங்குகின்றேன்". 


16. மனதில் ஏற்பட்ட ஆணவ மலத்தை நீக்கு ; நித்தமும் இறைவனின் புகழைப் பாடு; விவேக வைராக்கியத்துடன் வாழ்ந்து உயர் கதியைப் பெற இறைவன் ஒருவனே என்று பறை சாற்று அவனையே பல பெயர்களாலும் , பல வழிகளாலும் வழிபடு, இறைவனை அடைய ஒரு வழி அன்பே என்று சர்வ மதங்களும் ஒரே அடிப்படையான கட்டுப்பாட்டை விளக்குகின்றன என்று உபதேசித்த சர்வமத சாயி! நின் பொற்றாள் வணங்குகின்றேன்.


17. அற்புதம் அற்புதம் என உலக மக்கள் அனைவரும் அறிய அமெரிக்க நாட்டு வால்டெர் கோமனுக்கு உயிர்ப்பிச்சை அளித்து , அவர் தம் இல்லத்தரிசியின் பெருந்துயர் தீர்த்து, திருக்கல்யாண வைபவம் செய்வித்து அவர்தம் சுயநாடான அயல்நாட்டிற்கு அனுப்பிய தேவா! என் மிருத்யுஞ்ஜெய சாயி! நின் திருவடி கமலங்களில் என் சென்னியை தாழ்த்துகின்றேன்.


18. "சகல சாஸ்திரங்களையும் தாம் அறிவராயிருந்தும் அவற்றின்படி தாமே ஆசரணையில் இருந்து காட்டி , சிஷ்ய கோடிகளையும் அவற்றின்படி நடக்கச் செய்து , அவர்கள் தியானத்தின் மூலம் உயர் கதி அடைய ஆலமரத்தினையும் நட்டு வளர்த்து வைத்து சாதுக்களை அனுக்கிரகித்த சத்- சித்- ஆனந்த சாயி! நின் பொற்றாள் வணங்குகின்றேன்.


19. "அபேதானந்தர் தம் மனநிலை ஐயம் நீங்க , பேதமில்லை நானும் இரமணரும் ஒன்றே என்ற நீதியாம் நிலையினை உணர்த்திய தெய்வமே... புலியைக் கொன்ற துரையின் மனத்தகத்துக் கிலியெலாம் நீங்க அருளிய அன்பா! ஆன்மீக சேவையே அனைத்திலும் பெரிதென மாண்புடன் உலகில் அருளிய தேவா! காண்பவர் உள்ளத்தில் நீங்காது இடம் பெற்ற கண் கண்ட தேவ சாயி! நின் தாமரை திருவடிகளில் சரணடைகின்றேன்".


20. கௌஹத்தி தன்னில் லக்கி தன் சகோதரி மனையில் விருந்தினர்க்கான மீனினைக் கவ்விய பூனையை, இரும்புக் கம்பியால் இன்னல் தர அச்சிறுமியின் குறும்பு நீங்க , அங்கு உன் படம் தரை மீது விளங்கப் பூனையின் உடம்பில் விபூதியுடன் காட்சி தந்த சாயி! பந்திபூர் காட்டில் சக்கரஹல்ல நதியின் குறுக்கே நம் பந்தம் நீங்க சிவராத்திரி தினந்தன்னில் சுந்தரச் சிலுவையும் , லிங்கமும் தந்து அனைவரும் ஒரே சாயி குடும்பம் என்றுணர்த்திய சர்வ பூத சாயி! நின் தாமரைத் தாள்களில் நான் சரணடைகின்றேன். 


21. உலகோர் நலம்பெற  சத்யசாயி நிறுவனங்கள் நிறுவி , பஜனை மண்டலிகளும் சமிதியும் ஆண்களுக்கும் , மஹிளா விபாக் பெண்களுக்கும் , இளமையிலேயே சிறுவர் சிறுமியர் நலம் பெற பாலவிகாஸும் அமைத்து யௌவனடரிடமுள்ள ஆற்றல் வீணாகாமல் சேவையில் அவர்களை ஊக்குவித்து சேவாதள தொண்டராக்கி "உலகத்தை ஆன்மீகத்தின் மூலம் தான் இன்று காப்பாற்ற முடியும் . இது சுயசாதனையின் மூலம் தான் கிட்டும். பிறகு இறைவனகிய உன் அருள் வரும்" என்றுணர்த்திய பேரருளுடைய சாயி! நின் பொற்றாள் வணங்குகின்றேன்.


22. "ஒவ்வொருவரும் அன்புச் சுடராக மாறுங்கள்! அன்பை உள்ளும் புறமும் வெளிப்படுத்த சேவையில் இறங்கி உங்களை நீங்களே இரட்சித்துக் கொள்ளுங்கள் ! அன்பை வளரச் செய்து , அதைப் பெருக்குக! தெய்வமே மக்களுக்கு தொண்டு செய்ய கீழிறங்கி வந்திருக்கும் போது அத்தொண்டிலே நீங்களும் ஈடுபட்டால் அவர் பெருமிதம் அடைவார்! தெய்வத்திற்குப் பிடித்த செயல் புரிக! எவர் தர்மத்தை கடைபிடிக்கின்றாரோ அவரை தர்மமே இரட்சிக்கும் " என்று அருளிய என் தெய்வமான தர்ம ரட்சக சாயி! நின் தாமரைத் தாளை நமஸ்கரிக்கின்றேன். 


23. "மனதினாலும், சொல்லாலும், செயலாலும் ஒன்றையே கடைபிடி! ஒழுக்கத்தை வளரவிடு! அறவழியில் செல்வத்தை ஈட்டி... இறைவன்பால் காமத்தைச் செலுத்தி... மோட்சத்தையே விரும்பு!" என்று மனிதனின் நான்கு குறிக்கோள்களான தர்மார்த்த காம மோட்சத்தை செயல்படச் செய்யும் விவேக சாயி! நின் பொற்றாளில் நான் நமஸ்கரிக்கின்றேன். 


24. இப்பூவுலகில் மனிதன் தன் வாழ்க்கையின் மூலம் நிறைவுகாண வேண்டுமானால் அவன் தன்னுள் தெய்வ அன்பை நிரப்பிக் கொள்ளட்டும்! இந்த அன்பின் வழியாகத் தொண்டில் ஈடுபடட்டும்! மனிதனுக்குச் செய்யும் தொண்டு மாதவனுக்கு செய்வதை ஒக்கும்! இவ்வாறல்லாமல் தன்னுள்ளும் அன்பே இல்லாமல்... அது இருந்தாலும் மற்றவருடன் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பானேயாகில்... அவன் பூமிக்கு பாரமே ஆவான் என்று எச்சரித்த உபதேச சாயி! நின் பொற்றாளை நமஸ்கரிக்கின்றேன்.


25. "நீ சேவை செய்யும் போது தற்பெருமையடைய வேண்டாம்! உன் உயர் பண்பாகிய திறமை , வலிமை, செல்வம், தைரியம், ஈகை , ஒழுக்கம் ஆகிய சர்வமும் இறைவன் உனக்களித்த பரிசாகும்! நீ இதை உணர்ந்தாலும் சரி; உணராவிட்டாலும் சரி; இல் தெய்வ பரிசுகளைப் பிறருக்கு நீ அன்பளிப்பாக சேவையின் மூலம் அளிப்பாயாக!" என்று அருளிய என் இறைவனான சிவசக்தி சாயி! நின் பொற்றாள் வணங்குகின்றேன்.


26. "பிறவிப் பிணி மட்டுமின்றிப் பல தேக பணிகளான புற்றுநோய் போன்றவற்றைத் தன் பார்வையினாலேயே பறக்கச் செய்துவரும், மனநலம் குன்றிய மாந்தர்களின் மனநோயை மறக்கச் செய்துவரும், அறுவை சிகிச்சையின்றி ஆறாத நோய்களை அகற்றி அருள் புரிந்துவரும், சாயி சங்கல்பம் ஒன்றே தீரா நோய் தீர்க்கும் மருந்தெனக் காட்டிவரும் வைத்தீஷ்வர சாயி! நின் தாளை நான் நமஸ்கரிக்கின்றேன். 


27. "நகர சங்கீர்த்தனம் செய்து நான் என்ற அகந்தையை வெளியேற்று! ஓய்வு காலத்தை சத்சங்கத்தில் மூழ்க விடு! நம் இருதய குகையிலிருந்து தெய்வீக ஒளியாக எழுவதே "ஓம்" என்ற பிரணவ பிரம்மமாகும். இதை உணர உறங்கி எழும்போது ஓம்காரத்தை ஜபி! "ஓம்" மீது உன் சிந்தனையைத் திருப்பு! அதுவே விழிப்பு, கனவு, தூக்க துரிய நிலைகளில் நிலையாக உள்ள தத்துவம் " என்றோதிய ஓம்கார சாயி! உன் திருவடிகளில் சரணடைகின்றேன்.


28. நற்கல்வி கற்றவனே குணவான் என்று கூறி , இன்று சீர்குலைந்துள்ள கல்வியை மேம்படச் செய்ய மனித மேம்பாட்டு கல்வித் திட்டமிட்டு , உலக முழுமையும் செம்மையுறப் பரவச் செய்து ... ஆசிரியர், பெற்றோர் , உற்றோர் , உறவினர் மேம்பட மாணவனுக்கு வழிவகுத்துக் காட்டிய சாயி! இதனை நடைமுறையில் காட்டுதற்கென்று ஆரம்பப் பள்ளி முதல் உயர்கல்வி வரை சர்வகலா சாலையும் நிறுவி மக்களை மேலோங்கச் செய்யும் ஞான சாயி! உன் திருவடிகளில் சரணடைகின்றேன்.


29. "நான் எங்கும் உள்ளேன்! எல்லாவற்றையும் அறிவேன்! உன்னையும் கவனித்துக் கொண்டே இருக்கின்றேன்" என்ற உணர்வு உன்னை சாதனையில் முன்னேறச் செய்யும்... அந்தச் சாதனை தொண்டின் மூலமாக வெளிப்படும்! அப்போது உங்கள் ஆனந்தம் குதூகலமாகப் பொங்கும்! அதுவரை செய்த சேவையின் ஆற்றல் இன்பத்தையும் உற்சாகத்தையும் கிளரும்! மேன்மேலும் தொண்டு செய்ய உந்தும்! அன்பு,அடக்கம், பொறுமை , சகிப்புத்தன்மை உன்னிடமிருந்து நீர் வீழ்ச்சி போன்று பெருகிக் கொட்டும்! அப்போதே இந்த சாயி தேகத்திற்கு நீங்கள் அங்கமாக ஆவீர்கள்" என்றோதிய சர்வ சாயி! உன் மலரடிகளில் சரணடைகின்றேன்!


30. "உன்னுள் இருக்கும் இறைவனை அடைய உன்னை நீ நேசி! பிறரிடமும் கோவில் கொண்டுள்ள இறைவனை அறிய அவர்களை நேசி! இதற்காக அன்பின் செவிகளால் கேள்! அன்பின் கரங்களால் சேவை செய்! அன்பையே நினைவில் வை! அன்பையே உணரு! அப்போது அன்பே வடிவான கண்ணன் அன்பலையின் மேல் தவழ்ந்து உன்னை அடைவான்!" என்று போதித்த சாயி கிருஷ்ணா! நின் பொற்பாத கமலங்களில் நான் சரணடைகின்றேன். 


31. "தேச பக்தியை அடிப்படையாகக் கொண்டுதான், உலக சமுதாயத்தின் மீது அன்புக் கட்டிடம் எழுப்ப இயலும்! தாய், தந்தை,ஆசிரியர் முதலியோர் முதன்மையாக இதை உனக்கு வழிகாட்ட வேண்டும்! நம் பழம்பெரும் கலாச்சாரத்தை அறிந்தால் மட்டும் போதாது... நம் கலாச்சாரத்தின் உன்னத கீர்த்தியை நீ தூய்மையின் மூலமாக நிலைநாட்டு! என்றோதும் சத்ய , தர்ம, சாந்தி, பிரேமை, அஹிம்சா சாயி! உன் தாமரைத் திருவடிகளில் நான் நமஸ்கரிக்கின்றேன்"


              மங்களம்

ஆதியும் நீயே! அந்தமும் நீயே!

அருமறை முதல்வனும் தேவனும் நீயே!

ஜோதியும் நீயே! துணைவனும் நீயே!

நீதியும் நீயே! என் நினைவிலும் நீயே!


பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்

தாண்டு பலகோடி நூறாயிரம் நின்

சொல்லெல்லாம் வாழ்க! 

கல்லாது கற்ற வேத முதல்வனே வாழ்க!


யுகம் யுகம் நீங்கா நின் கிருபை வாழ்க!

போற்றும் அடியார் தம் இன்னல்கள் போக்கும் நின் தாமரைத் திருவடி 

வாழ்க! வாழ்கவே!


ஓம் தத் சத்

ஜெய் சாயிராம்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக