வீசும் வயலின் காற்று சுகமாய் விரல் வயலின் சுகத்தை இதயங்களுக்கு பரவசமூட்டும் மாமேதை எல்.சுப்ரமண்யம் அவர்களுக்கு சுவாமி நிகழ்த்தி அவரால் மறக்கவே முடியாத இசை அனுபவம்... சுவாமி எவ்வகையில் எல்லாம் தெய்வத் தொடர்பில் வந்து வழிகாட்டுகிறார் என்பதற்கான உன்னத உதாரணம் இதோ...
வயலின் வரங்களாய் வயலின் ஸ்வரங்கள்... அது உடம்புக்கு சத்து.. இது உணர்வுக்கு சத்து... மாமேதை எல்.சுப்ரமண்யம் குடும்பமே வயலினுக்கு தன் வாழ்வை அர்ப்பணித்த குடும்பம்.. அண்ணன் எல்.வைத்தியநாதன்... வயலின் இசையால் வைத்தியம் செய்தவர்... திரைப்பட இசையமைப்பாளரும் கூட.. ஏழாவது மனிதன் திரைப்படத்தில் அவர் தனது எட்டாவது ஸ்வரம் கொண்டு சிலிர்க்க வைத்திருப்பார்... தம்பி சங்கரும் வயலின் வித்வான்...வயலின் கம்பிகள் போல எல்.எஸ் குடும்பம் வயலினுக்கு தன்னை வழங்கிய இசைத் துடிப்புகள்... அவர்களின் வாழ்க்கை இசைக் குறிப்புகள்...பத்மஸ்ரீ பத்ம பூஷன் விருதாளர்...தந்தை லட்சுமி நாராயணன் யாழ்பாணம் கல்லூரி இசை விரிவுரையாளர்... எல்.எஸ் குடும்பம் கேரளாவை சேர்ந்தது... இதோ இவருக்கு எவ்வகையில் எல்லாம் சுவாமி வழிகாட்டி உயர்த்தினார் என்பதை பரவசமாய் வாசிக்கப் போகிறோம்...
அப்போது எல்.எஸ் ஒரு மருத்துவ கல்லூரி மாணவர். இசை குடும்பம் என்பதால் அவருக்கும் இசை ஆர்வம்... வயலின் ஒரு புறம்... ஸ்டெதஸ்கோப் மறுபுறம்... இரண்டுமே இழுத்தது... இரண்டையுமே கைபிடிக்க வேண்டும் எனும் ஆர்வம் வலுத்தது... தான் மருத்துவ சிகிச்சை மட்டுமல்ல கச்சேரியும் செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்... தன் எதிர்காலம் என்னவாக இருக்கும்?? ஒரே குழப்பம்.. தான் வழங்கப் போவது மருந்தா? இசை விருந்தா?
அப்போது தான் சுவாமி ஆபட்ஸ்பரியில் விஜயம் செய்திருக்கிற தெய்வீக தருணம் ... பிரபல பீட்டில்ஸ் பாடகரான ஜார்ஜ் ஹாரிஸனுடன் சுவாமியை தரிசிக்க செல்கிறார் அந்த மருத்துவ மாணவர்...
அந்தப் பாடகர் அவரை சுவாமியிடம் அறிமுகம் செய்வதற்கு முன்னே... சுவாமியே "தெரியுமே! வயலின் வித்வான் லட்சுமி நாராயணனின் மகன் தானே நீ! ராயப்பேட்டையில் தானே இருக்கிறாய்!" என சொன்னவுடன் அந்த மருத்துவ மாணவர் புல்லரிக்கிறார்...
"நான் டாக்டர் ஆவதற்கு படித்துக் கொண்டிருக்கிறேன்... ஆனால்... வயலின் வாசிக்கத் தெரியும்... கச்சேரிகள் செய்யவும் ஆசை!" என சுவாமியிடம் தன் அந்தரங்க ஆசையினை பகிர... சுவாமியோ அதற்கு "அப்படியா.. நீ டாக்டராக பணியாற்றுப் போவதும் இல்லை... உடனே மேடை ஏறி கச்சேரி செய்யவும் போவதில்லை...ஒரு வெளிநாட்டு கல்லூரியில் விரிவுரை நிகழ்த்தப் போகிறாய்... அதுவும் உனக்கு பிடித்திருக்கும்...!" என்கிறார்... எல்.எஸ் மேலும் பரவசப்படுகிறார்..
கையோடு கொண்டு வந்த வயலினை சுவாமிக்கு காட்டுகிறார்... சுவாமி அதைத் தொட்டும்.. அவரின் தலையைத் தொட்டும் ஆசீர்வதிக்கிறார்... சுவாமி ஆசீர்வதித்த அந்த வயலின் அவரை பத்மபூஷன் தொடங்கி பத்மஸ்ரீ வரை பெற்றுத் தந்திருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி...
சுவாமி சொல் அப்படியே நிகழ்ந்தது... சில நாட்களுக்குள் அவருக்கு அமெரிக்க யேல் பல்கலைக் கழகத்திலிருந்து அவருக்கு அழைப்பு வந்தது... இசை விரிவுரை ஆற்ற... அங்கே அந்த இசைப் பற்று பிடித்துக் கொள்ள... வயலின் இசையில் வித்தகர் ஆகிறார்... பாரிஸில் தொடர்ந்து இசை கச்சேரி நிகழ்த்தவும்... இசைத்தட்டில் பதியவும் அழைப்பு வருகிறது... அதற்கு முதல் வாரம் எல்.எஸ் சிகாகோ சென்று கச்சேரி நிகழ்த்தியதில் அவர் வயலின் இசையில் பார்வையாளர் இதயம் வழுக்கி விழ... நிகழ்ச்சி முடிந்து இவர் ஒரு இடத்தில் வழுக்கி விழ... உட்கார முடியாத அளவிற்கு பெருங் காயம்... பாரிஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது.. இசை தட்டையாவது பதிவு செய்து கொள்ளலாம்... என தீர்மானிக்கிறார்.. பதட்டமடைவார்கள் என்பதால் யாரிடமும் தெரிவிக்கவில்லை... வயலின் வ(ய)லி(ன்) ஆகி படுக்கையில் படுத்திருக்கிறது...
மறுநாள் காலை அவருடைய மனைவி விஜி இந்தியாவிலிருந்து ஃபோன் செய்து... "நீங்கள் வழுக்கி விழுந்து பலமாக அடி பட்டீர்களாமே...? " என்று கேட்க.. தூக்கி வாறிப் போடுகிறது யாரிடமும் தான் பகிர்ந்து கொள்ளாத ரகசிய சம்பவம்...
"உனக்கு எப்படி தெரியும்?" என எல்.எஸ் கேட்க...
"சுவாமி நேற்று கனவில் சொன்னார்... அவன் பாரிஸ் கச்சேரியில் கலந்து கொள்ள வேண்டாம் என நினைக்கிறான்... ஒன்றும் ஆகாது.. அவனை வாசிக்கச் சொல். மேடையில் அமர்ந்து என்னை நினைத்து வாசிக்கச் சொல்.. வலி பறந்துவிடும்!" என்று சொல்லி மறைந்துவிட்டார் என்கிறார்...
ஆக தான் கான்சல் செய்வதாக இருந்த பாரிஸ் கச்சேரிக்கு செல்கிறார்... எல்.எஸ் அப்போது உட்காரும் நிலையில் கூட இல்லை.. விமானத்தில் செல்ல வேண்டும் என்றாலும் ஸ்டெச்சரில் தான் செல்ல வேண்டும்.. சுவாமி சொல்லிவிட்டார் என்ற ஒரே காரணத்துக்காக மிக தைரியத்தோடு ஏறுகிறார்... நியூயார்க் விமானத்தில் ஏறுபோதே மயங்கி விழுந்து தெளிகிறார்... ஆனால் தனக்கு என்ன நேருமோ என துளியும் அஞ்சாமல் உள்ள உறுதியோடு பயணித்து... சுவாமி சொல்படியே மேடையில் சிரமப்பட்டு அமர்ந்து சுவாமியை நினைத்து வயலினை சுதி மாற்றிய அந்த நொடி ... அதே நொடி.. அவரின் விதியே மாறுகிறது...
பாரிஸிலேயே ஆறு கச்சேரிகள் வாசிக்கிறார்... "சுவாமியின் கருணையை என்னவென்பது!!!" என குரல் தளுதளுக்க அனுபவம் பகிர்கிறார்"
பேச்சாளர் என்றால் சுவாமியின் கருணையை தான் உணர்ந்த ஒருதுளியாவது பிறருக்கு பேசி காட்டிவிடலாம்.. ஆனால் வயலின் வித்வானால் சுவாமியின் கருணையை வாசித்துத் தான் காட்ட முடியும்!!
ஒவ்வொரு ஆண்டும் இசைக் கச்சேரி நிகழ்த்த சென்னைக்கு வந்து போகிறார்.. மேற்கத்திய மற்றும் கர்நாடக சங்கீதத்தை இணைத்து "காற்றினிலே வரும் கீதம்" எனும் இசை தட்டை உலக விருந்தாக வழங்கி இருக்கிறார்... சுவாமியை வணங்கி வழிபடாமல் எந்த கச்சேரியும் அவர் தொடங்கியதே இல்லை...
அவர் வயலின் உறையை திறந்தவுடன் முதலில் தரிசனம் தருவது சுவாமி திருப்படமே... அதைத் தொட்டு வணங்காமல் அவர் தனது வயலினை இன்றளவும் தொடுவது கூட இல்லை...!
(ஆதாரம்: பகவான் பாபா / பக்கம் : 261 / ஆசிரியர் : எஸ்.லட்சுமி சுப்ரமண்யம்)
கலை என்பதே சுவாமியின் பிரபாவம்... அத்தனை கலை அழகியலிலும் சுவாமியே வெளிப்படுகிறார்...அந்தக் கலையை மனிதர்களுக்கு சுவாமியே வழங்குகிறார்...
எந்த மனிதன் தண்ணீர் ஊற்றுகிறான் என்பதை வேர்கள் அறிவதில்லை... எந்த மேகம் மழையாகும் என மனிதன் கூட முடிவு செய்வதில்லை... சுவாமி எனும் பரப்பிரம்மமே அதனையும்
அத்தனையையும் முடிவு செய்கிறார்... ஒரு கலைஞனை சுவாமியே இயக்குவதில் சுவாமியையே கேட்டு சுவாமியையே நாம் அனுபவிக்கிறோம்... வயலினாக நமது இதயம் இருந்தாலும் அதன் பௌ அதுவே பக்தி.. அதை இணைத்தால் அன்றி தெய்வீகம் நமக்குள்ளிருந்து எழும்பாது...!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக