தலைப்பு

வியாழன், 9 டிசம்பர், 2021

பாம்பின் விஷக்கடியால் ICUவில் உயிரிழந்தவரை மீண்டும் உடம்புக்குள்ளேயே அனுப்பிய சுவாமி!


சுவாமி பற்றியே கேள்விப்படாது அவரிடம் பக்தியே செலுத்தாத ஒருவரின் உயிரற்ற உடலில் மீண்டும் ஆன்மாவை உடம்பிற்குள் அனுப்பிய திக் திக் சுவாரஸ்ய சுவாமி மகிமை பொதிந்த அனுபவம் இதோ...! 

அவர் பெயர் அனந்தராமன். நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பணி(தற்போது Retired chief General Manager/ NLC Ltd. /Neyveli)..  மனைவி மித்ரா மற்றும் குடும்பம் என அழகாக வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது... ஒரு வெள்ளிக் கிழமை காலை முதல் மாலை வரை வழக்கம் போல் கழிந்தது... அடுத்த நாள் சனிக்கிழமை சமாராதனை பூஜைக்கான பூக்கள் சேகரிக்கப்பட்டன... திருப்பதி பெருமாள் குலதெய்வமாக வழிபடும் குடும்பம் அனந்த ராமனின் குடும்பம்.. அன்று இரவு  அனந்த ராமனின் மனைவி மிதிவண்டியை தான் கற்றுக் கொள்வதற்கான பயிற்சியை இவரிடம் கேட்கிறார். நீண்ட நாள் கோரிக்கை அது.. அன்று நிறைவேற்ற இரவல் சைக்கிள் வாங்கி மனைவிக்கு  மைதானத்தில் சொல்லிக் கொடுத்து இல்லம் வந்து மிதிவண்டியை சாய்க்கிற இடம் அடர் இருள் நிரம்பிய பக்கத்து ஷெட்... சரியாக அவர் சாய்க்கிற போது பாம்பு ஒன்று நான்கு முறை கடிக்கிறது... 


அந்த முறை எமன் எருமையில் வராமல் பாம்பு வாகனத்தில் வந்திறங்குகிறான்...
அந்த நிலா வெளிச்சத்தில் நெளிந்த ஜீவன் பாம்பு என அறிகிறார்... பூர்வ கர்மா பாம்பு வடிவமும் எடுக்கும் என்பது புரிகிறது.. பாம்பு என அலற வருவதற்குள் வாய்மொழி குளறுகியது…. ஓலக் குரல்....  அதற்குள் மனைவி ஓடிவர பொது மருத்துவ மனைக்கு கொண்டு செல்கின்றனர். 

பாம்பு கடித்த இடத்தில் இரத்தத்தை எடுத்து சோதிக்கிறார் டாக்டர்  ஜெயராஜ். ஆனாலும்  அனந்த ராமனுக்கு மூர்ச்சை தெளியவே இல்லை... விஷமில்லா சாதாரண பாம்பு தான் என டாக்டர்கள் வாய்ச் சான்றிதழ் தருகிறார்கள்... ஆனாலும் மூர்ச்சை தெளிவில்லை... உடம்பு அசையவில்லை..
ஜில்லிட்டுப் போகிறது... தொடர்ந்து கண்காணிக்கும் விதமாக ICUவில் வைத்து சிகிச்சை அளிக்கிறார் டாக்டர்... 

திரு அனந்தராமன் தன் மனைவி மித்ரா உடன்...


மனைவி மக்கள் நண்பர்கள் அவரவர் இல்லம் திரும்புகிறார்கள். அனந்த ராமனின் தாய் மட்டும் கூடவே இருக்கிறார். பிறகு நள்ளிரவு 12.30 மணி அளவில் வாந்தி வரும் நிலையில்   அனந்தராமன் தனது தாயிடம்.. தான் பிழைக்க மாட்டேன் என்பதாக சமிக்ஞை காட்ட... மூர்ச்சையற்று சரிகிறார்.. அது 1991 ஆம் ஆண்டு. டிசம்பர் 6 வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.30. அந்த வாந்திக்குப் பிறகு அனந்தராமன்  நான்காம் நிலை கோமாவுக்கு செல்கிறார்... வாழ்க்கை இவ்வளவு தான்.. யாருக்கு எவ்வளவு ஆயுள்? என சுவாமி மட்டுமே தீர்மானிக்கிறார். டாக்டர்கள் இன்னமும் பரபரப்பாகிறார்கள்... ஐசியூ அறையே டாக்டர்களால் புடை சூழப்படுகிறது..    உடம்பில் ஒரு பொட்டு அசைவில்லை... அந்த நேரத்தில் அனந்த ராமனின் தாய் தங்களது தெய்வமான ஏழுமலையானை தவிர யாரை இதயத்தால் கதறியபடி அழைத்திருக்க முடியும்? உலகத்தில் பணத்திற்கு உயிரை மீட்டுத் தரும் சக்தி ஒருவேளை இருந்திருந்தால் இங்கே கோடீஸ்வரர்கள் மட்டுமே பூமியை நிரப்பிக் கொண்டு 2000 வருடம் உயிர் வாழ்ந்திருப்பார்கள். உயிரை இரவல் பேசி வாங்கும் உரிமை இருந்திருந்தால் இங்கு பலபேரின் உயிர்க்கு பேரம் பேசப்பட்டிருக்கும்.. நல்லவேளை சுவாமி மனிதனின் ஆயுள் விதியை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார்.. 


டாக்டர்கள் வைக்கிற கெடு 48 மணி நேரத்திலிருந்து 72 மணி நேரமாக நீள்கிறது.. டாக்டர்களுக்கே தலையைப் பிய்த்துக் கொள்ளும் அளவிற்கு இதற்கு என்ன தீர்வென்றே தெரியவில்லை…    அனந்தராமன் நீட்டிய உடம்பு நீட்டியபடி நிரந்தர நித்திரையில் இருக்கிறார்... சீனியர் மருத்துவர் சீதாராமன் பெரும்பாடுபட்டு அனந்த ராமனுக்கு செயற்கை சுவாசம் பொருத்த வேண்டி இருந்தது‌... குடும்ப நண்பர்   பண்டரிநாதன் பாம்பு கடி வைத்திய ஸ்பெஷலிஸ்ட்  டாக்டர் ரவி என்பவரை அழைத்து  வருகிறார்... ரவிக்கே பெரிய சவாலாக இருக்கிறது... ஆன்டிவெனம் என்ற மருந்து.. பாம்பின் விஷத்தை வைத்தே தயாராகும் மருந்து அது... மனமே பந்தத்திற்கும், பந்த விடுதலைக்கும் காரணம் எனும்படியான மருந்து அது..  அனந்த ராமனுக்கு செலுத்தப்படுகிறது... கோமாவிலிருந்து மீண்டால் தான் எதுவும் சொல்ல முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.. 7 ஆம் தேதி விடிந்தும்  அனந்த ராமனின் மூர்ச்சை தெளியவில்லை... இதில் நுரையீரலில் சளி வேறு தொற்றுகிறது...அவர் பணியாற்றும் அலுவலகமே அவருக்காக வேண்டிக் கொண்டே இருக்கிறது... மனைவி ஸ்ரீ ராம ஜெயம் எழுதிக் குவிக்கிறார்... 8 ஆம் தேதியும்  அனந்த ராமனின்  வாழ்க்கையில் கருப்பு விடியலே... 9 ஆம் தேதி  (சுவாமியின் எண் கொண்ட தேதி) திங்கள்  அனந்தராமன் சிறிதாக அசைகிறார்... அரை மயக்கம்... விரல் உதடுகளால் பேச முயற்சி செய்கிறார்...தேக அவயங்கள் அனைத்தும் காக்க எனும்படியாக அவை பழையபடி செயல்படுமா? சொல்வதற்கு இல்லை என்பதாக இறுக்கமான சூழ்நிலை இன்னும் இளகவில்லை... சிறிது சிறிதாக அங்குலம் அங்குலமாக தேறுகிறார்..  அனந்தராமன்  எழும் அளவிற்கு வருகிறார்.. அவரின் தலையணை மாற்றுவதற்காக எடுக்கிற போது .. யாருக்கும் தெரியாமல் அவரின் நண்பர் அதனடியில் வைத்த சுவாமி படம் சிரித்த வண்ணம் "யாமிருக்க பயமேன்?" எனும் படி அசைகிறது.. பார்த்தவர்கள் இதயம் புல்லரிக்கிறது...யார் தன்னை மீட்டெடுத்து தேற்றினார் என்பது  அனந்த ராமனுக்கும் அவர் குடும்பத்திற்கும் தெள்ளத்தெளிவாகப் புரிகிறது... திருமலை தெய்வமே பர்த்திபுரி தெய்வம் எனும் சத்தியம் விளங்குகிறது... ஸ்ரீ ராம ஜெயமும் - சாயி ராம ஜெயமும் ஒன்றே என்பதும் சேர்ந்தே உள்ளுணர்வில் பதிகிறது...


கோமாவில் இருந்தபோது  அனந்தராமன்  கொண்ட அனுபவம் சிலிர்க்குபடியானது.. தான் எழுந்து (இதில் தான் என்பது ஆன்மா) இல்லம் செல்வதும்.. அலுவலகம் செல்வதும் அவரால் உணரப்படுகிறது... அப்போது ஒரு குரல் நீ பாபாவை வேண்டு.. அவர் கலியுகத்தில் உன் துன்பத்தை அகற்றுவார் என்கிறது... சுவாமி யாரென அறியாத போதிலும்  அனந்தராமன் சுவாமியை வேண்டிக் கொள்கிறார்.. பிறகு ஆக்சிஜன்  வெண்டிலேட்டர் பொருந்திய உடம்புக்குள் சென்று உடம்பை உணர்கிறார் அனந்தராமன்.. இதைப் போல் அனுபவம் சிலபேருக்கு நிகழ்ந்திருக்கிறது.. 


சிலநாள் கடந்து சுயஉணர்வு வந்து விழித்த பிறகு சுவாமியின் திருவுருவம் தலையணைக்குள் இருக்க... சுவாமியை  அனந்தராமன் திருப்படமாய் தரிசிக்கிறார்...
"நம் ஆன்மா இல்லை.. நாம் தான் ஆன்மா" என்பதே சரி..!  அது போல் நம் உடம்பு - நம் மனம் தான்... நாமே உடம்பும் மனமும் அல்ல எனும் மெய்யுணர்வு ஞானம் வர ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு வகையில் ஒரு சந்தர்ப்ப சூழ்நிலை தேவைப்படுகிறது! அவசியமின்றி அவனியில் எதுவும் நிகழ்வதில்லை.. யாவும் அந்தந்த ஜீவனுக்கு கர்ம‌ கரைதல் எனும் சிகிச்சையையே அளிக்கிறது!

என்எல்சி பொது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன போது எடுத்த புகைப்படம்...  திரு அனந்தராமன்,  அவர்களின் தாயார் மற்றும் மருத்துவர்களுடன்... 


அந்த சமயத்தில்  அனந்தராமன் சுவாமி பக்தர் கூட இல்லை. அவசியமில்லை. எந்த தெய்வ ரூபத்தை வழிபட்டாலும் சுவாமியிடமே அந்த வழிபாடு சென்று சேர்கிறது... வழிபாட்டின் அடித்தளமான பக்தி உண்மையாக இருக்க வேண்டும்.. அவ்வளவே!
மாயை எனும் பாம்பே மிகக் கொடிய விஷம் கொண்டவை... அது தினந்தோறும் மனிதனை கடிக்கிறது... அதனால் அவன் மயக்கமாகவே பூமியில் வாழ்கிறான்... நிஜ பாம்புகளை விட மாயை எனும் பாம்பிடமிருந்து மனிதன் தள்ளியே வாழ வேண்டும்.. கடிபட்டவருக்கோ சுவாமி அளித்து வருகின்ற ஆத்ம ஞானமே மாபெரும் சஞ்சீவி மருந்து... "மனப்பக்குவம் வந்துவிட்டால் பாம்பே நம்மை விழுங்கினாலும் அதன் வயிற்றைக் கிழித்தபடி புன்முறுவலோடு வெளியே வந்துவிடலாம்!"

  பக்தியுடன்
வைரபாரதி


1 கருத்து:

  1. Yes totally true.He was in my room in TSIl.Extremeley nice gentleman.He also said that his jeeva traveled from ICU to TSII office in fraction of a second to get his medical book as it was asked by hospital and all around were searching.he knew that it was in his office shelf and when he i.e jeeva ,travelled in air and went there nobody could see him but he could see them.he called them by name nobody responded as his voice could not be heard.Even in hospital he saw his body lying on bed surrounded by Doctors and,friends and his wife.it was strange to view them from above them in air.he saw his wife writing Sriramajayam.everything looked strange and incredible.entry to his body happened in a click .amazing experience it was he said.

    பதிலளிநீக்கு