இறைவன் சத்ய சாயி பக்தர்கள் அநேகம். அதில் தன்னலமில்லா சேவாதளர் அநேகம் அநேகம். அதில் ஆத்மார்த்த பக்தரும்... தன்னலமில்லா சேவாதளருமான திருமதி கல்யாணி சாயிராம் அவரின் சாயி அனுபவம் இதோ...
நான் சிறுவயதில், என் பெரியம்மா மூலமாகவும், பின்னாட்களில் ஏதோ பத்திரிகைகள் வாயிலாகவும் சத்ய சாய்பாபாவைப் பற்றி கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் அவர் கடவுள் என்று அறிந்திருக்கவில்லை.1994ம் வருடம் என் கணவரின் தம்பி மனைவி, சாய்பாபாவைக் கும்பிடுவதைப் பார்த்து சற்றே ஆர்வமானேன்.1995 ம் வருடம், என் சகோதரருக்கு திருமணமாகவில்லை என,என் பெற்றோர் மிகுந்த மன உளைச்சலில் இருந்தனர். அவர்களைப் பார்த்துவிட்டு, மிகுந்த வேதனையுடன், மனதிற்குள் அழுதவாறே வீட்டிற்கு நுழைந்த எனக்கு முதலில் கண்ணில் பட்டது, திரு.மணியன் அவர்களின் 'ஞானபூமி 'இதழ்தான். 'நான் இருக்க உனக்கு கவலை எதற்கு?' என்ற வாசகத்துடன் ஸ்ரீ சத்யசாய் பாபா புன்னகைத்துக் கொண்டு இருந்தார்!!! அந்த நேரத்தில் அது எனக்கு சொல்லொண்ணா ஆறுதலைத் தந்தது; மனம் மிகவும் லேசாகிப் போனது;அது தான் ஆரம்பம்.... அதன் பிறகு,எனக்கு ஏற்படும் சிறிய/பெரிய அனைத்து சங்கடங்களுக்கும், சம்பவங்களுக்கும் சுவாமி ஏதாவது ஒரு வகையில் பதிலலளிப்பார்..என் வீட்டிலிருப்பவர்களே கூட அவை coincidences என்பார்கள். ஆனால், Dr.மோகன் (TN sathyasai org. state president) கூறுவது போல, அவை அனைத்துமே எனக்கு Sai Incidences தான்! (இது எனக்கு மிகவும் பிடித்த வார்த்தையாகிவிட்டது!!)
மேற்கூறிய சம்பவத்திற்கு பிறகு, ஸ்ரீ சத்ய சாய் சாக்ஷாத் இறைவனே என உறுதியாக நம்பினேன். இப்படியாக நான், சுவாமியின் அருளால் சாய் வட்டத்திற்குள் வந்தவுடன் அடிக்கடி அவர் படங்கள் (photos) கிடைப்பதும், சிறுசிறு சமிக்ஞைகளும் கிடைப்பதும் வழக்கமானது.1999ம் வருடம் தான் சுந்தரம் கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.பிறகு 2000ஆவது ஆண்டில் ராஜ் டிவியில் பக்தர்கள் (Dr.மோகன், நடிகை ஸ்ரீவித்யா போன்ற பிரபலங்கள்) தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி,வியாழன் தோறும் ஒளிபரப்பாகும். இறுதியில் பாபாவின் சிந்தனை ஒன்று போடுவார்கள்.எனது மாமியார் கடுமையாக நோய்வாய்ப்பட்டு இருந்தார்கள். அவருடைய வைத்திய முறை, எனது கவலை,குடும்பத்தில் நான் எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகள் எல்லாவற்றுக்கும் பாபாவிடம் வேண்டி, வியாழன் மாலை டிவி முன் அமர்ந்து விடுவேன்.சுவாமி எனக்கான பதிலை அளித்துவிடுவார். அந்த பக்தர்களது பேட்டிகளும் சுவாமியின் மீதான எனது நம்பிக்கையை மேன்மேலும் அதிகரித்தது. அதற்கு பின்னர் அருகிலிருந்த சாயி சமிதிக்கு பஜனைக்கு செல்ல ஆரம்பித்தேன். சுந்தரம் கோவிலுக்கு மாதம் ஒரு முறையேனும் செல்வதை வழக்கமாகக்கொண்டேன்.
திருமதி. கல்யாணி சாய்ராம் அவர்களின் வீட்டு பூஜைஅறை
2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26,27 தேதிகளில் முதல்முறையாக புட்டபர்த்திக்கு எனது கணவர், மகனுடன் சென்றிருந்தேன். பிரசாந்தி நிலையத்தின் நடைமுறை எதுவும்
தெரியாது. நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் விசாரித்துக் கொண்டு, காலையில் குல்வந்த் ஹாலில் சென்று அமர்ந்து கொண்டோம். சிறிது நேரத்தில், சுவாமி மிக மெதுவாக நடந்து வந்து, நான் அமர்ந்திருந்த இடத்திற்கு சிறிது தொலைவில், சில விநாடிகள் நின்றிருந்தார். இதயம் படபடவென துடிக்க (அப்படியே இடது பக்கம் முகத்தைத் திருப்பினாலே போதும், நான் அவர் கண்களில் படுவேன்)' பாபா என்னைப் பார்க்க வேண்டும், பார்க்க வேண்டும்' என்று பிரார்த்தித்தேன்.
ம்ஹூம்.. அவர் திரும்பவேயில்லை.
வலது பக்கமாகச் சென்று விட்டார். நல்ல சிவந்த நிறத்துடன் உயரமாக(எனக்கு பெரிய உருவமாகவே அன்று தெரிந்தார்)நின்றது இன்றளவும் என் மனதில் அப்படியே பதிந்திருக்கிறது. அதற்கு மறுநாள் காலையும் சென்றோம். அன்று பஜனைக்கு மட்டும் வந்து விட்டு சென்று விட்டார். அப்போது, நான் 'சுவாமி,நான் இங்கு வந்திருப்பது உங்களுக்கு நிச்சயமாகக் தெரியும்.உங்களுக்குத் தெரியும்,என்பதை, எனது வருகையை Acknowledge செய்யும் விதமாக எனக்கு காட்டவேண்டும்' என்று வேண்டிக் கொண்டேன். பின் எல்லோருடனும் மந்திருக்குள் சென்று ஷீரடி சாயியை வணங்கி விட்டு வெளியே வரும்போது,
ஒரு இருபது பேர் மந்திரைவிட்டு வெளியே வராமல் வராந்தாவில் அமர்ந்து கொண்டனர். அனைவரும் அமைதியாக இருந்ததாலும், எதற்கு என்று தெரியாமலே, நானும் அவர்களுடன் அமர்ந்து விட்டேன். சிறிது நேரம் கழித்து, ஒரு பெண்மணி வந்து அவர்களுக்கு ஒரு சிறிய பேப்பர் கொடுத்தபடி வந்தவர்,என்னிடம் 'நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்.? இங்கு சேவாதளத் தொண்டர்களுக்கு மட்டுமே அனுமதி,வெளியே செல்லுங்கள்'என்று தெலுங்கில் கூற, நான் அவரிடம் தமிழில் பேச முனைந்தேன். அவர் சிறிது சத்தமாகப் பேசவே,அங்கிருந்த வயதான பெண்மணி, 'சுவாமி பிரசாதம், எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்' என்று(ஹிந்தியில் )
சொல்லி ஒரு பேப்பரில் சிறிது குங்குமத்தை வைத்து எனக்கு கொடுத்தார்கள். பின்பு தான் தெரியவந்தது, பிரசாந்தி நிலையத்திற்கு சேவை செய்து முடித்த ஆந்திராவைச் சேர்ந்த மகளிர் குழுவிற்கு பாபா அவர்கள் கைகளால் தொட்டு ஆசீர்வதித்து அனுப்பிய குங்குமம் அது என்பது!!! சுவாமி என்னுடைய வரவை அங்கீகரித்துவிட்டதோடு அல்லாமல்,தனது ஆசிர்வாதத்தையும் அல்லவா வழங்கிவிட்டார், என்று இன்றளவும் நெகிழ்ந்து போகிறேன். அதற்கு பிறகு புட்டபர்த்தி சென்றபோது எல்லாம் சுவாமியை தொலைவிலேயே தரிசிக்க நேர்ந்தது. ஆனால் இப்பொழுது மஹாசமாதியை வணங்கும் போது, அவரிடம் அருகிலிருந்து பேசுவது போல் தோன்றுகிறது.
தன் மகனுடன் கல்யாணி சாய்ராம்...
எனது மகன் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவிற்கு
காத்திருந்த சமயம்.பஜனைக்கு சென்ற என்னை ஆரத்தி எடுக்க சொன்னார்கள்.. அன்றுதான் சமிதியில், நான் முதன்முதலாக ஆரத்தி எடுக்கிறேன். மனம் நிறைவாக இருந்தது. மறுநாள் என் மகன் 92% பெற்று தேர்ச்சி பெற்ற செய்தி வந்தது. அதேபோல் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவிற்கு முன் சமிதிக்கு சென்றால்,பாபாவின் ஒரு படத்தில் விபூதி தோன்றியிருந்தது. அப்போது அவன் 93% வாங்கி இருந்தான். மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். அவன் பொறியியல் முடித்தவுடன்,சுந்தரம் கிளேட்டனில்(டிவிஎஸ்)
வேலை கிடைத்தபோது, நான் எப்பொழுதும் சுந்தரம் செல்வதால் (TVS ,திரு. வேணுசீனிவாசன் பெரிய சாய்பக்தரல்லவா!!) சுந்தரம் கிளேட்டனில் கிடைத்திருப்பதாக எண்ணி மகிழ்ந்தேன்.
2017ம் வருடம் எனது தாயாருக்கு filarial fever வந்து கால் மிகப் பெரிதாக வீங்கி ரொம்பவும் துன்பப்பட்டார்கள். நான் அவ்வப்போது சென்று, தங்கிவிட்டு வருவேன். அப்போது திருமதி.சௌகார்ஜானகி அவர்களின் பேட்டியை படிக்க நேர்ந்தது. அதில் USல் இருந்த அவர்களுடைய மருமகளுக்கு கேன்சர், சீரியஸாக இருந்தபோது, பாபாவை பிரார்த்தித்தபோது, சுவாமி விபூதி கொடுத்து கவலைப்பட வேண்டாம் என்று சொன்னதாகவும்,அந்த விபூதியை மருமகளுக்கு கொடுத்து உட்கொண்டவுடன், அவர் பரிபூரண குணமடைந்ததாகவும் சொல்லியிருந்தார். எங்கள் வீட்டிலும் பாபா விபூதி நிறைய உள்ளது.,ஆனாலும் இப்போது பாபா கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைத்தேன்..(நம்புவீர்களா,
சாய்ராம்..)
ஒரு மாதத்திற்கு முன் என் மகன் பிறந்தநாளுக்கு சத்யசாய் டிரஸ்டிற்கு அனுப்பிய தொகைக்கு ,கிட்டதட்ட 40 நாட்களுக்கு முன் அனுப்பிய பணத்திற்கு இரசீதும்,கூடவே சுவாமி படம் மற்றும் விபூதி பிரசாதமும் போஸ்டில் அன்றே வந்தது. உடனே அதனை எடுத்துக் கொண்டு ஓடினேன்... அழுகையினூடே நடந்ததைக் கூறி விபூதியை இட்டுவிட்டு, தண்ணீரில் கலக்கி கொடுத்தேன். சுவாமியின் மருந்து கொடுத்த பின், அவர்கள் சீக்கிரமே குணமடைந்தார்கள்!!
பல சந்தர்ப்பங்களில், சுந்தரத்தில் வியாழனன்று கிடைக்கும் கல்கண்டு,லட்டு முதலான பிரசாதங்களை என் உறவினர்களுக்கு கொடுத்திருக்கிறேன்; என் சகோதரி மகனுக்கு -முதல்முறை விண்ணப்பித்தபோது கிடைக்காத USவிசா-கிடைத்தது. என் சித்தி மகனுக்கு தடைபட்டுக் கொண்டேயிருந்த திருமணம் நிச்சயம் ஆனது. நம்பிக்கையேயில்லாத அவர்களுக்கு கூட , சத்ய சாய்பாபா ஆசி வழங்கி, "சுவாமியின் அருள்" என்றுணர வைத்தார்!! சில சமயம், எனக்கு வேண்டியது நடக்காமலும் போனதுண்டு... அப்போது அதை எதிர்கொள்ளும் சக்தியையும் சுவாமியே எனக்கு கொடுத்தார்.
சரியான நேரத்தில், நம்மை குட்டவும் தவறுவதில்லை, நம் சுவாமி!!
2014ம் வருடம் ஜனவரி முதல் தேதியன்று காலை, நகர சங்கீர்த்தனத்துக்கு சென்ற நான், பாபாவிற்கு சமர்ப்பிக்க பூக்களை எடுத்து சென்றேன். எப்பொழுதும் நிறைய மலர்மாலை சூட்டப்பட்டிருக்கும் ஷீரடி பாபாவிற்கு, நான் எடுத்து சென்ற பூச்சரமே
சாற்றப்பட்டது. ஆஹா, ஜனவரி முதல்தேதி அன்று நாம் தான் பாபாவிற்கு பூச்சரம் கொடுத்திருக்கிறோம் என்று நினைத்து,
(சிறிது கர்வமோ??) வீட்டிற்கு வந்து,பாபாவின்' இன்றைய சிந்தனை' (thought for the day )படிக்கிறேன்,
நிஜமாகவே அதிர்ந்து போனேன், சாய்ராம். அதில்,சுவாமி 'பகவான் நீங்கள் அளிக்கும் சத்தியம், கருணை, பணிவு முதலான எட்டு மலர்களையே விரும்புகிறார். அவற்றை கடைபிடிக்காமல், அன்று மலர்ந்து மறுநாளே வாடிப்போகும் மலரை சூட்டுவதால் என்ன பயன்?' என்று சொல்லியிருப்பார்...அன்று தவிப்புடன் ஒரு பாடம் கற்றுக் கொண்டேன்.
சமீபத்தில் ஒரு சிறிய மொழிபெயர்ப்பு செய்துவிட்டு,பெரிதாக சாதித்துவிட்டோம் என்று நினைத்துக் கொண்டிருந்த போது,ஒரு மாணவனுக்கு தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்க வாய்ப்பு கொடுத்து, அவன்(என்னைப் போல !!?)மகிழ்ந்திருந்த
வேளையில், சுவாமி ஸ்வீடிஷ் மொழியில் பேசி, "நான் உனக்கு கொடுத்தது ஒரு வாய்ப்பு தானே தவிர,சுவாமி அறியாததால் அல்ல..." என்றுணர வைத்த நிகழ்வை அன்றே படிக்க நேர்ந்தது..அதுவும் எனக்கு நல்ல ஒரு படிப்பினையே!!
--- திருமதி கல்யாணி சாயிராம்
மங்களகரமான பெயர் வைத்திருக்கும் இந்த பக்தை வேண்டிக் கொண்டவுடன் அவரை வரவேற்க இறைவன் சத்ய சாயி மங்களகரமான குங்குமத்தை தொட்டு அளித்தார் எனில் அது கல்யாண குணம் கொண்ட ஒரே கடவுளான சத்ய சாயியால் மட்டுமே .. அவரின் பெருங்கருணையால் மட்டுமே இது சாத்தியம்.. வேண்டிய அன்றே போஸ்ட்டில் சுவாமி விபூதியை அனுப்பி அவரின் தாயாரை குணமாக்கியதன் வழியே சுவாமி தனிப் பெருங்கருணையாளர் என்பதே ஜகத்தில் சர்வ சத்தியம்!
இந்த ஆத்மார்த்த சுவாமி பக்தையான கல்யாணி சாயிராம் அவர்கள் நம் சத்யசாயி யுகம் பிளாகில் தொடர்ந்து அற்புதமான மொழிபெயர்ப்பு சேவையாற்றுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக