தலைப்பு

ஞாயிறு, 18 அக்டோபர், 2020

பாத நமஸ்காரத்தில் பாவ வினைகள் களைந்த பரமாத்ம சாயி!


இறைவன் சத்ய சாயி அங்கிங்கெனாது எங்கெங்கும் நிறைந்திருக்கும் பரிபூரணப் பொருள்.. அவரின் ஒவ்வொரு அசைவிலும் வெளிப்படும் சத்தியம் ஓராயிரம் அர்த்தங்களை வெளிப்படுத்தும். அப்படி ஒரு பக்தைக்கு அவர் வெளிப்படுத்தி பக்குவப்படுத்திக் கொண்டிருக்கும் ஓர் அனுபவம்.. 


திருமதி வரலட்சுமி சாய்ராம் , சென்னை கிரோம்பேட்டையில் வசிப்பவர். எளிமையாய்ப் பழகக் கூடியவர்.. வெட்டு ஒன்று துண்டு ரெண்டாகப் பேசக் கூடியவர். உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசாதே எனக் கூறிய வள்ளலாரின் ஜோதியை நுனி நாக்கில் ஏந்தியவர். அந்த வெளிப்படையான இதயத்தில் இறைவன் வந்து வசிக்க மாட்டாரா என்ன...!!!

இவரின் குடும்பம் கலையும் இசையும் அதைத் தழுவிய திரைப்படமும் சார்ந்தது. இவரின் பாட்டனார் மகாராஜபுரம் கிருஷ்ணமூர்த்தி.. பெரிய திரைப்பட நடிகர்.. தியாகராஜ பாகவதருக்கும் முன்னவர்.

மகாராஜபுரம் கிருஷ்ணமூர்த்தி

மகாராஜபுரம் விஸ்வநாதன் பழம்பெரும் கர்நாடக சங்கீதப் பாடகர்.. இவரின் புதல்வரே அனைவரும் அறிந்த பாடகர் மகாராஜபுரம் சந்தானம்.. இவரின் தம்பியே சினிமா டாக்கீஸ் தோன்றிய ஆரம்ப நாட்களின் தனிப்பெரும் கதாநாயகர் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி. நடிப்பு மற்றும் பாடுவதில் இவரை மிஞ்ச யாருமில்லை.. அமரப் பாடகர் டி.எம்.எஸ் அவர்களே இவரின் பரம ரசிகர் (ஆதாரம்: டி.எம்.எஸ் ஒரு பண்பாட்டு சரித்திரம் நூல்) 

டம்பாச்சாரி.. சீதா ஜனனம்... மாயா மச்சீந்த்ரா போன்ற படங்களின் கதாநாயகர்.

இப்படிப்பட்ட பிரபல்ய குடும்பத்தில் பிறந்த இவர் சிறுவயது முதல் இறைவன் சத்ய சாயியை அறிந்தவர். ஒன்பதாவது வகுப்பு படிக்கையில் இறைவன் சத்ய சாயியைப் பற்றி பக்கத்து வீட்டுப் பெண்ணோடு சேர்ந்து துடுக்குத்தனமாக தவறாகப் பேசிவிடுகிறார்.

அந்த கணமே இவரின் காதணி தொலைந்து போகிறது.. பதட்டமடைகிறார்.. தான் செய்தது தவறு என உணர்கிறார். இது தான் சாயி அருள்.

பொதுவாக சுவாமி உணர வைப்பார்.

அது நிகழ்கிறது.

பாபா உன்னை அப்படி சொன்னது தவறு தான் மன்னித்துக் கொள் எனச் சொன்னவுடன்... எந்த இடத்திற்கு அவர்கள் செல்லவே இல்லையோ.. அந்த இடத்தில் காதணி கிடந்திருக்கிறது...

அது எப்படி கிடக்கும். சுவாமி அங்கே போட்டு எடுத்துக் கொள்ள உணர்த்தியிருக்கிறார்.

1988ல் ஸ்டெனோ படிப்போடு வேலையும் தேடி இருக்கிறார். பாபா நீ வேலை தரமாட்டியா எனக் கேட்டிருக்கிறார்.

அவர் தரவில்லை..

இதில் என்ன மகிமை? என வாசிப்பவர்கள் கேட்கலாம்...

தருவது மட்டுமல்ல இறைவன் சத்ய சாயி நாம் ஒன்றைக் கேட்டு அதைத் தரவில்லை எனில் அதுவும் மகிமை தான்.. உண்மையில் அதையும் தாண்டிய கருணை அது..

எதனால் பிரச்சனைகள் நம்மால் சமாளிக்க முடியாத அளவிற்குச் சென்றுவிடுமோ அதை சுவாமி நாம் கேட்டாலும் தரவே மாட்டார் என்ற தெளிவு அவருக்கு பக்குவம் வரவரப் புரிந்திருக்கிறது..

பிறகு அவர் சேர்ந்தது ஒரு சுகர் கம்பெனியில் ஸ்டெனோவாக..

அவரின் முதலாளி இறைவன் சத்ய சாயியின் பரமபக்தர். சுவாமியோடு (சுவாமியின் உடல்வயது 30 இருக்கும் போதே) நிறைய புகைப்படம் எடுத்துக் கொள்ளும் அளவிற்கு தீவிர பக்தர். அவர் பெயர் ராமச்சந்திரன். அப்போதே அவருக்கு 80 வயது.

அம்மா.. சுவாமி சாதாரணமானவர் அல்ல.. அவர் கடவுள்.. நீ வேண்டிக் கொள்.. உன்னைப் பார்த்துப்பார்... எனக்கு 3 பொண்ணு .. 1 பையன்.. எல்லாரையும் சுவாமி தான் கரையேற்றினார் எனச் சொல்லி சுவாமி படம் ஒன்று தந்திருக்கிறார்.

இப்போது புரிகிறதா.. ஏன் அவர்கள் நினைத்துக் கொண்டு வேண்டிக் கொண்ட அந்த பழைய வேலை கிடைக்கவில்லை என்று...

சில பேருக்கு படம் கிடைத்த உடனேயே சரணாகத பக்தி வந்துவிடும்.. சிலருக்கு மனம் பக்குவப்பட பக்குவப்படவே பக்தி வரும்...

ஜென்மாந்தர கர்மாக்களே காரணமே தவிற .. சுவாமி எப்போதும் போல் இறைவனே..

அந்த அனன்ய பக்தி வரும் வரை சுவாமியை சந்தேகப் படுவதும் ... குறை கூறுவதும்.. கோபப்படுவதும் என பென்டுலமாய் மனம் ஆடிக் கொண்டிருக்கும் குழந்தைத் தனமாய்...

இப்படி நிறைய பேர் இருப்பது விசித்திரமல்ல... இதை எத்தனைப் பேர் வெளிப்படையாய்ப் பகிர்ந்து கொள்வர்?!

ஆயிரம் சந்தேகமும்.. அகந்தையும் .. முரணும் இருந்தும் தங்களை பிரகலாதனைப் போல் காட்டிக் கொண்டு நடிப்பவர்களே அதிகம். ஆனால் வரலட்சுமி அவர்கள் மிக வித்தியாசமானவர்கள். வெளிப்படையானவர்கள்.

பிறகு இவர்களுக்கு திருமணம் நிகழ்கிறது. முதன்முதலில் வேலை கொடுத்த தீவிர சுவாமி பக்தரான அந்தப் பெரியவரான திரு. ராமச்சந்திரனும் திருமணத்தில் கலந்து கொண்டு ஆசீர்வதிக்கிறார். அது சுவாமியே ஆசீர்வதித்தது போல வரலட்சுமி சாயிராம் உணர்கிறார்.

மூத்த பெண் பிரியதர்ஷினி பிறந்தபிறகு தனக்கு ஆண் குழந்தை வேண்டுமென சுவாமியை வேண்டுகிறார்.. அதற்காக சத்ய நாராயண பூஜையிலும் கலந்து கொள்கிறார்.

பர்த்தி சேவை Oct 24 1996 ஆண்டு ஆற்றியவுடன் பாத நமஸ்காரம் தருவதற்காக சுவாமி வருகிறார்.. வரலட்சுமி எங்கே என தேடுவதைப் போல் பார்க்கிறார்.

முறைத்துக் கொண்டு கோபமாக வருகிறார்.. நடுங்கிப் போகிறார்..

சுவாமியின் பாதங்களைத் தொடும் போது இதுவரை ஆண் குழந்தை என்ற அவா..

சுவாமி எனக்கு பெண் குழந்தை கொடு என கண நேரத்தில் மாறிப் போகிறது..

அவருக்கே ஏன் மனதில் அப்படி வேண்டிக் கொண்டோம் என விளங்கவில்லை.

நாம் நினைத்துக் கொண்டிருப்பதைக் போல்.. பிரார்த்தனைகளை நாம் தேர்ந்தெடுக்கிறோம்.. அதற்கான அனுகூல வரத்தை அவர் தருகிறார் என்பது சத்தியமல்ல...

அந்த வேண்டுதலுக்கான வார்த்தைகளையே சுவாமி தான் தேர்ந்தெடுக்கிறார்...

சில வேண்டுதல்களுக்கு நேர்மாறாய் நடக்கும். ஆனால் அதில் நன்மைகள் நிறைய இருக்கும் என்பதை சுவாமி போகப் போக உணர வைத்துவிடுகிறார்.

திருமதி. வரலட்சுமி சாய்ராமின் பூஜையறை

சுவாமி சத்ய சாயி கிருஷ்ணரே! ஆனால்

கிருஷ்ணரை யாரால் புரிந்து கொள்ள முடியும்?

திரேதாயுகத்தில் நூறுக்கு ஐந்து என்ற கணக்கில் தான் சுவாமியை இறைவன் என உணர்ந்தனர்.

கலியுகத்தில் சொல்லவே வேண்டியதில்லை.

பெண் பிள்ளைப் பிறக்கிறது அட்சயா எனப் பெயர் வைக்கின்றார். குழந்தையோடு சேர்ந்து மே 2003 இல் Whitefieldடில் சுவாமியை தரிசனம் செய்கிறார்.

அதே முதல் தரிசனம் போல் தலை அசைத்து வரலட்சுமி எங்கே ? என தேடியபடி இறைவன் வந்து தரிசனம் தருகிறார்.

பல ஏற்ற இறக்கங்கள் அனைவர் வாழ்விலும் போல் அவர்கள் வாழ்விலும். நாம் தான் பொழுது போகவில்லை என எல்லா நிகழ்வியல் சம்பவங்களுக்கும் உரை எழுதிக் கொண்டிருக்கிறோம்.

அவசியமே இல்லை.

சுவாமி ஏற்கனவே கீதையில் சொன்னது தான்..

"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது

எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது

எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்க இருக்கிறது"

இதை பக்தர் உணர்ந்து கொண்டாலே ஞான வாசல் படார் என திறந்துவிடும். காரணம் எல்லாவற்றையும் நடத்தியதும்/ நடத்துவதும்/ நடத்தப்போவதும் சுவாமியே!

பிரபல்யமான மூதாதையர் வழியில் குடும்பம் வந்ததால்... அதை ஒட்டிய ஒரு எண்ணம் நெடுநாட்களாகவே அவர்களிடம் சுழன்று கொண்டிருந்தது..

ஒரு நாள் இரவு சுவாமி கனவில் வருகிறார்.. வந்து.. உனக்கு பிரபலம்.. புகழ் இதுலாம் சரிப்பட்டு வராது என்று தனது வலது காலால் தரையை மூன்று முறை தட்டி.. எங்கேயோ பார்க்கிறார்.. வரலட்சுமி அவர்களும் அங்கே பார்க்கிறார் கனவு கலைந்து விடுகிறது.

முதல் பெண்ணை பிரபலமான குடும்பத்தில் திருமணம் செய்து கொடுக்க முடியாத காரணத்தினால் .. சுவாமியிடம் பாத நமஸ்காரம் வாங்கி பிறந்த பெண்ணையாவது பிரபலமான குடும்பத்தில் கொடுக்க நினைக்கிறார் .. அதற்கான பதிலே சுவாமி கனவில் வந்து வழங்கியது!

இது சென்ற ஆண்டு (2019) நிகழ்ந்த கனவு.

சுவாமி எப்போதும் உண்மையான பக்தர்களின் தொடர்பிலே இருந்து கொண்டே இருக்கிறார் என்பது நிதர்சன சத்தியம்.

தனது பேத்திக்கு சாய் சத்யா என்றே பெயர் வைத்திருக்கிறார்.

2012 இவர்களின் தாய் பர்த்தி சேவையாற்றிய போது அழைக்கிறார்.. அப்போது சன்னிதானத்தில் .. சுவாமியின் இதய நிறமான அந்த வெண்ணிற சலவைக் கற்களை வரலட்சுமி அவர்களின் நெற்றி குனிந்து முத்தமிட ...

சுவாமி .. நீ உடலோடு நடமாடுகையில் உன்னை உணராமல் போய்விட்டேனே..

நீ நிகழ்த்திய பல அற்புதங்களை நினையாமல் வாழ்ந்துவிட்டேனே..

உன்னை எத்தனை முறை தரிசித்திருக்கலாம்..

தவறவிட்டேனே அத்தனை வாய்ப்புகளையும்....

என் வாழ்வில் உறவாக ..நட்பாக.. எத்தனைப் பேரை நேசித்திருக்கிறேன் .. அது யாவையும் வீண்.. மாயை...

ஆனால் உன்னை மட்டும் உளமாற நேசிக்காது போய்விட்டேனே என இதயம் வெடித்து கண்கள் கடலாக குலுங்கிக் குலுங்கி அழுதிருக்கிறார்.

எத்தனை வெளிப்படை.. 

எத்தனை பக்குவம்..

எத்தனை பக்தி...

கண்ணீர் எனும் கங்கையே நம் இதயத்தைச் சுத்தப்படுத்துகிறது!

கவிதா வாஹினியால் உள்ளத்தின் பல சந்தேகங்கள் நிவர்த்தி ஆகியிருக்கிறது அவர்களுக்கு.. அது அக மாற்றத்தையும் தந்திருக்கிறது என்பதைப் பகிர்ந்து கொண்டார்.

சுவாமி இப்படியே சிலரை பேனாவாக்கி பலரின் நிறங்களை அர்த்தமுள்ள ஓவியமாக்குகிறார். இப்போது நான் சத்ய சாயி யுகத்தில் மொழிபெயர்ப்பு சேவையாற்றுகிறேன் என நிறைவாக.. மனதிற்கு நிறைவாக இருக்கிறது எனப் பகிர்ந்தார்...

எழுத்துச் சேவை என்பது எழுச்சி மிகு சேவை!

எப்போதெல்லாம் எழுத்துக்கள் இறைவன் சத்ய சாயியை சுமக்கின்றனவோ அப்போதெல்லாம் அவை சிரஞ்சீவியாகிவிடுகின்றன..

 பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக