தலைப்பு

சனி, 10 அக்டோபர், 2020

சுவாமி படங்கள் வெறும் படங்கள் அல்ல.. அவை சுவாமியே!

சுவாமி படங்கள் படங்களே அல்ல அவை சுவாமியே என்பதற்கான சான்றுகள்.. மகத்துவம் என்பதைப் பகிர ஆரம்பித்தால் எண்ணிலடங்காது.. அதில் ஒரு பக்தரின் பிரத்யேக அனுபவத்திலிருந்து சில துளிகள் இதோ... 

காரணமின்றி கண்ணீர் பெருகுவது போல் காரணமின்றி சுவாமி மேல் சிலருக்கு பக்தி வருவதுண்டு. அப்படியே அடியேனுக்கும் மிகச் சிறிய வயதில் வந்தது.. அப்போது அடியேன் வாழ்ந்து வந்த குடும்பத்தினர் எவர்க்கும் பக்தி இல்லாத காரணத்தினால் சுவாமி படமே எனக்கு சுவாமியாக இருந்தது.. ஒரு வேளை அவர்களுக்கு அப்படி பக்தி இருந்திருந்தால் 1992 லேயே (அடியேனுக்கு 8 வயது) நிறைய நெருங்கிய சுவாமி தரிசனங்கள் கண்டு பேரானந்தம் அடைந்திருக்கலாம்.

இதை இப்போது பகிர ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது..

அந்த காலத்தில் சுவாமியை ஸ்தூலத்தில் எளிதாய் அனைத்து பக்தர்களுக்கும் தரிசனம் செய்ய முடிந்தன.. ஆனால் அடியேனால் முடியவில்லை. ஆனால் பலராலும் இப்போது  சூட்சுமத்தால் சுவாமியை தரிசிக்க முடியாத காரணத்தினால் இந்த காலக்கட்டத்தில் எப்படி சுவாமியின் படங்களே சுவாமியாக உணர்வது என்பதை.. அந்த காலத்தில் அடியேன் உணர்ந்த பாங்கினைப் பகிர்ந்தால் பலருக்கு ஏதுவாக இருக்கலாம்.

சுவாமி படங்கள் முதலில் படங்களே அல்ல.. அவை ஒவ்வொன்றும் சுவாமியே இதை அனைவரும் அறிந்திருப்பதே! அதிலிருந்து சுவாமியின் அதிர்வலைகள் வந்து கொண்டேவும்.. வளர்ந்து கொண்டேவும் இருக்கும்..

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பார்கள். அப்படியே நாம் சுவாமியை எந்த அளவிற்கு கொண்டாடுகிறோமோ அந்த அளவிற்கு சுவாமி நம்மோடு இணைந்திருப்பதை நம்மால் உணர்ந்து கொண்டே இருக்க முடியும்.

சுவாமி படங்களை வெறும் படங்களாக எண்ணாமல்.. அவைகளை சுவாமியாக உணர்ந்து.. அதன் முன் புன்முறுவல் புரிவது.. சுவாமியை தொடுவது.. சுவாமியை கட்டி அணைப்பதாக படத்தினைக் கட்டி அணைப்பது.. சுவாமிக்கு முத்தம் தருவதான.. கொஞ்சிப் பேசுவதான எல்லா தெய்வீகக்  கொண்டாட்டங்களையும் நாம் அந்தப் படத்திற்கு புரிந்து கொண்டே வர .. அது சுவாமி தான் என்பது வெகு விரைவில் உணர்ந்து கொள்வோம்!

எவை எல்லாம் அடியேன் சிறுவயது முதல் புரிந்து வருகிறேனோ அவைகளை மட்டுமே பகிர்கிறேன்.

நீ ஒரு பைத்தியம். அதனால் தான் படத்திற்கு முத்தம் தந்து எங்களை வேறு செய்யச் சொல்கிறாய் .. யாரேனும் அந்தச் செயலைப் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என சிலர் கருதலாம்.

இந்த விஷயத்தில் அடியேன் ஒரு தூசி.

இதையே தான் பக்த துகாராம் செய்தார்.

அன்னை பக்த மீரா செய்தாள்.

அவர்களுக்கு கொஞ்சிக் குலாவ சுவாமி சிலை இருந்தது..

நமக்கு சுவாமி படம் இருப்பதால் நாம் அவர்களின் அடியொற்றியே இப்படி சுவாமி படத்தோடுப் பழக வேண்டும்!

எதை வாங்கினாலும் சுவாமி படத்தின் முன் காட்ட வேண்டும். எதைச் சாப்பிடுவதற்கு முன்னும் சுவாமியின் உதட்டில் சென்று சுவாமி சாப்பிடு..என்று முகத்தில் சாந்த புன்னகை தழுவ.. இதயம் உருக .. கண்களை மூடி சுவாமியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

அடியேன் செருப்பு வாங்கினால் கூட சுவாமி உன் சைஸ்க்கு இது பற்றா விட்டாலும் அணிந்து கொண்டு தா என்றே சொல்லி சுவாமிக்கான நாற்காலியோடு பேசி அதில் வைப்பேன். 

இப்படி பலர் செய்கிறார்கள் எனக் கேள்வியும் பட்டு சந்தோஷமும் அடைந்திருக்கிறேன்.

சுவாமி படத்தில் விபூதி வருவதற்கான முதல் காரணமே அது படம் அல்ல அது நானே என உணர்த்தவே சுவாமி அதில் விபூதி வரவழைக்கிறார். அதற்குப் பிறகே அந்த விபூதியால் வியாதி குணமாவதும் .. பல மகிமைகள் நிகழ்வதும். முதல் குறியீடு அது படம் அல்ல என்பதை உணர்த்தவே சுவாமி தருகிறார்.

முதன்முதலில் சுவாமியை கண்டது சுசீலா அம்மா கேசட்டில்.. அந்த சுவாமியைப் பிறகு ஹைதராபாத்  ஷிவம் அதில் தரிசித்த போது சிலிர்ப்பாக இருந்தது. இரண்டாவது  அஷ்டோத்திர புத்தகத்தில் சுவாமி தரிசனம். அதில் லிங்கம் கையில் வைத்திருப்பார்.

அந்தப் புத்தகத்தில் இருந்த சுவாமி தோற்றமே முதன்முதலில் (10 வயதில்) கனவில் வந்து பேசியது!

இப்படிப் படங்கள் படங்களே அல்ல.. அவை சர்வ சத்தியமாய் சுவாமியே என்பதை வாசிப்பவர்கள் உணர்ந்திருக்கலாம். அப்படி உணர்ந்திருந்தால் உங்களின் பிள்ளைகளிடம் சொல்லுங்கள். உங்களின் பக்தி உண்மையானதெனில் அவர்களுக்கும் அதன் கீற்றில் கொஞ்சம் ஒட்டிக் கொள்வது உறுதி.

பலர் ஸ்தூல உடம்பில் சுவாமியை தரிசித்துக் கொண்டிருந்த போது.. அடியேன் சிறுவனாக ஒரே ஒரு கண்ணாடி ஃபிரேம் போட்ட படத்தின் அருகில் அமர்ந்து கொண்டு சுவாமியையே பார்த்துக் கொண்டிருப்பேன்.. சுவாமி சிரித்த வண்ணம் அதில் இருப்பார்... எனக்கு வேண்டிக் கொள்வது என்பதெல்லாம் தெரியாது... அந்தப் புகைப்படத்தையே அப்படியே பார்த்துக் கொண்டிருப்பேன். எத்தனை நிமிடங்கள் கடக்கும் என்றே தெரியாது.

பத்து வயதில் இந்த அனுபவங்கள்.

ஊதுவத்தி ஏற்றி (அப்போது சைக்கிள் பிராண்ட்) சுவாமிக்கு அந்த ஊதுபத்திப் புகை நெளிந்து வளைந்து முகத்தில் அடிக்கும்.. அப்படி ஒரு ஆனந்தம் தரும்...

அதை எல்லாம் விழிப்புணர்வோடு செய்திருக்கிறேன் என்பதை இப்போது நினைத்துப் பார்க்க அவை எல்லாம் சுவாமி சங்கல்பமே என உணர்கிறேன்.

சைக்கிள் பிராண்டை இப்போது வாங்கினாலும் அது பழைய அனுபவத்தையும் சேர்த்து நறுமணமாய் வீசும்.

பலருக்கு தியானமே வரவில்லை என நினைத்தால்.. சுவாமியின் புகைப்படத்தை மட்டுமே கண் கொட்டாமல் புன்முறுவலோடு பார்த்துக் கொண்டே இருங்கள் ... இப்படி நாட்கள் செல்லச் செல்ல வராத தியானம் உங்கள் காலடியில் மண்டியிடும்.

சிலர் வீடு முழுதும் சுவாமி படங்கள் வைத்திருப்பார்கள். பார்க்கவே ஆனந்தமாக இருக்கும். இதை எல்லாம் சிறு வயதிலேயே பார்த்து வந்ததால்.. சுலபமாகப் படம் கிடைக்காத அந்தக் காலத்திலேயே இப்படி நாமும் வைத்துக் கொள்ள வேண்டும் என நினைத்திருக்கிறேன்.

ஒருமுறை உறவினர் ஒருவர்...

நீ ஏன் படத்தை சேர்த்துக் கொண்டே போகிறாய் எனக் கேட்டார்..

நீங்க மட்டும் ஏன் பணத்தைச் சேர்த்துக் கொண்டே போகிறீர்கள் எனத் திரும்பிக் கேட்டேன்..

பதில் ஏதும் இல்லை.

ஆரம்பித்தில் சுவாமி படம் சேகரித்து.. இப்போது அதை பலருக்கு தரவும் சுவாமி வைத்துக் கொண்டிருக்கிறார்.

அதைப் போல் சேர்த்தப் பணத்தை எத்தனைப் பேர் தந்து கொண்டிருக்கிறார்கள்??

எந்தப் படங்களை எல்லாம் சிறுவயதில் தரிசித்து / வழிபட்டு/ வாங்க காசில்லாமல் இப்படி .. அந்தப் படங்களை எல்லாம் இப்போது காணும் போது பசு மாடு அசை போடுவதாய் என் பால்ய காலத்தை நினைத்து ஆனந்தப்படுவேன்.

எந்த வீட்டிற்கு வாடகைக்குச் சென்றாலும் வீட்டுக்காரரைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் வீட்டுச் சுவரே தெரியாத அளவிற்கு சுவாமி படம் ஒட்டியிருக்கிறேன்.

பொதுவாக பக்திக்கு யார் என்ன நினைப்பார்.. பிறரின் அபிப்ராயம் நம் மேல் என்னவாக இருக்கும் என்று கவலையே இருக்காது. அது தன்னுள் தானாய் மூழ்கி இருக்கும்.

இந்த சுபாவத்தை பரம பக்த சிகாமணிகளின் வாழ்க்கையை வாசிக்கும் போது உணர்ந்தும் கொள்கிறேன்.. நாம் சரியாகத் தான் பயணிக்கிறோம் என... அதே போல் வாடகை வீட்டில் சுவரே தெரியாமல் சுவாமி படம் ஒட்டி இருந்ததையும் அங்கீகரித்து சுவாமி விபூதி மழையைப் பொழிந்ததையும் எண்ணி சுவாமி கருணையை நினைத்து அகம் மகிழ்ந்திருக்கிறேன்.

சுவாமி சாட்சாத் இறைவன். சுவாமிக்கு தீட்டே இல்லை.. இறந்த வீட்டிலும் என் பஜனையைப் பாடலாம் என்றிருக்கிறார்.

பெண்களின் அந்த மூன்று நாட்களில் கூட என் பஜனைக்கு வரலாம் என்றிருக்கிறார்.

சாப்பிட்டு பஜனை செய் என்கிறார். சுவாமிக்கு பக்தியே முக்கியம். புற சடங்குகள் அல்ல..

இப்படி ஒரு இறைவனை வழிபடாமல்.. கொண்டாடாமல்.. வேறு யாரை வழிபடுவது? கொண்டாடுவது? 

சாஸ்திர சம்பிரதாயங்களால் இறைவன் சத்ய சாயியை கட்டிப் போடவே முடியாது. அந்த வேலையை பரம பக்தியே செய்யும்!

இதற்கெல்லாம் மேலாக கல்லூரியின் ஐந்தாண்டுகள்.. முதுகலைக் கல்வி.

டி.எஸ்.என் கல்லூரியில் வைரபாரதி பயின்ற வகுப்பறையில் தினந்தோறும் சுவாமி வழிபாடு

ஆறுமாதம் ஒவ்வொரு வகுப்பறை..

அந்த ஒவ்வொரு வகுப்பறையிலும் சுவாமிப் படங்களை ஒட்டி .. பூ சாற்றி.. ஊதுபத்தி ஏற்றி வழிபட்டது ஒருநாள் கூட தவறியதே இல்லை..

பேராசிரியர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்ற கவலையே அடியேனுக்கு தோன்றவில்லை..

என் வகுப்புத் தோழன் ஒருவன் இவன் இப்படி எல்லாம் செய்து தன்னை  நல்லவன் போல் காட்டிக் கொள்கிறானோ என நினைக்கவும் செய்திருக்கிறான்.

பாராட்டுக்கும்.. இகழ்ச்சிக்கும்.. அப்பாற்பட்டதாகவே இதயம் அன்றிலிருந்தே இருந்தது..

யாரேனும் கவிதைகளை வியந்து பாராட்டினால் கூட இது சுவாமி தருகிற கவிதை .. எழுத்து... நமக்கு அந்த தகுதி இல்லையே..

இந்த பாராட்டுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை சுவாமி என அப்போதே சொல்லிப் பழக்கப்பட்டிருக்கிறேன்...

சுவாமி புகைப்பட வழிபாடு கல்லூரியில் தொடர்ந்து கொண்டே இருந்தது.. சுவாமி பிறந்தநாளில் இனிப்புகள் வழங்குவது உட்பட..

ஒருநாள் கணிப்பொறி தலைமைப் பேராசிரியர் அடியேனைத் தனியாக அழைத்தார்..

செமயா மாட்னடா.. இன்னிக்குக் கூட நீ வெச்ச செம்பருத்திப் பூவ பாத்துட்டே தான் கிளாஸ் முடிந்து போனாரு என்றான் ஒரு வகுப்புத் தோழன்... நீ செம்பருத்திய பறிக்கும் போதே கவனிச்சார்டா .. அத நான் பாத்தேன் என்றான் இன்னொருவன்..

அடியேனுக்கு எந்த கவலையோ.. பயமோ இல்லை.. எப்போதும் என் பக்தியில்.. அதனால் வெளிப்படும் செய்கையில் உறுதியாகவே எந்த நாளும் இருந்திருக்கிறேன்..

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே விவேகானந்த வித்யாலயா கன்னியாகுமரியில் ஒரு வியாழன் மாலை சுவாமி வழிபாட்டுக்காக செம்பருத்திப் பூக்கள் பறித்து.. பிரின்சிப்பால் சாந்தா மேடத்திடம் ஒருவர் மாட்டிவிட.. இம்போஷிசன் எழுதியவன் தான் அடியேன் என்றபடியால்..

அங்கே நுழைந்தேன்.. அது கணிப்பொறி தலைமைப் பேராசிரியர் அறை.

பெயர் சத்ய நாராயணன்..

இவரே சுவாமி பெயர் தானே வைத்திருக்கிறார். அப்றம் என்ன‌.

எஸ் சார்.. என்றேன்..

நீ தினமும் உங் கிளாசுல பூ வைக்கிற .. கவனிச்சிட்டே வரேன்.. ஆனா ஒண்ண மறந்திட்டியே .. எவ்ளோ பெரிய தப்பு அது..

என்ன சார்? என்றேன்

நீ  ஓங் கிளாசுல மட்டும் சுவாமிக்கு நல்லா பூ வைக்கிற .. என் ரூம மறந்திட்டியே..

நாளைலேந்து இங்க பாபா ஃபோட்டோ வெச்சு.. மத்த தெய்வங்களுக்கும் சேர்த்து பூ வைப்பா என்றார்..

என் கண்கள் கலங்கின...

அவர் என் கையைப் பிடித்தார்.

நானும் பாபா பக்தன் தான் என்றார்‌..

சாயி ராம் என்றேன்..

சாயி ராம் என்றார்..

அது தான் இறைவன் சத்யசாயி. 

நாம் வைத்து வழிபடுபவை படங்களே அல்ல.. அவை சாட்சாத் சர்வ சத்தியமாய் சுவாமியே! 

  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக