தலைப்பு

ஞாயிறு, 4 அக்டோபர், 2020

ஒரு சிறிய எறும்புக்கும் பகவான் பாபா, பாத நமஸ்காரம் அளித்த விந்தை!கல்லுக்குள் தேரைக்கும், கருப்பைக்குள் சிசுவுக்கும் உயிரும் உணவும் அளித்து காப்பவர் யார்? நாம் உண்ணும் உணவின் ஒவ்வொரு பருக்கையிலும் , நம் பெயரை முன்பே எழுதி, பசியாற்றுபவர் யார்? அண்ட சராசரங்களையும் , அனைத்து உயிர்களையும் படைத்துக் காப்பவர் யார்? அவரே அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகரான இறைவன்  பாபா அல்லவா? உலகில் ஒவ்வொரு உயிரினமும் மதிப்பு வாய்ந்தவை. பரமாத்மா பாபாவிற்கு யானையும் ஒன்றுதான் எறும்பும் ஒன்றுதான். 


சாயிகீதாவுக்கு  பாதநமஸ்காரம் அருளிய பாபா சிற்றெரும்புக்கும் அதை நல்கிய வரலாறு வியப்பானது. அந்த அற்புத நிகழ்வை ஒரு மாணவன் விவரித்துள்ளதை  இங்கு காண்போம்.

கண்ணார உன் தரிசனம் கண்டதும்.. எம் துயர் காணாமல் போச்சுதைய்யா:

அது ஆதவனின் நாள். ஞாயிற்றுக் கிழமை காலை நேரம். மாணவர்களும் ஆசிரியர்களும் பாபா தரிசனம் காண பெங்களூர் த்ரயீ பிருந்தாவன புல் தரையில் அமர்ந்திருந்தோம். பாபாவின் வழக்கமான தரிசன நேரம் கடந்து 15 நமிடங்கள் ஆகிவிட்டன. பாபா இன்னும் வரவில்லை." ஆழ்ந்த அமைதியில்தான் ஆண்டவனைக் காண இயலும் " என பாபா கூறியதற்கு ஏற்ப அங்கு அமைதி நிலவியது பல்லாயிரக்கணக்கானோர் கூடினாலும் பகவான் தரிசன நிகழ்வில் ஒரு சிறு சலசலப்பு கூட இருக்காது அல்லவா?மாணவர்கள் பலரும், பலவித செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இருந்தனர் அவர்கள், படிப்பதிலும், எழுதுவதிலும், தியானம் செய்வதிலும் தங்கள் நேரத்தை பயனுற செலவிட்டு கொண்டிருந்தனர். முதல் வரிசையில் அமர்ந்திருந்த நான், அப்போது ஒரு விசித்ர காரியத்தில் என் கவனத்தை ஈடுபடுத்திக் கொண்டு இருந்தேன். புல் தரைக்கும் , பகவான் நடந்து வரும் சிவப்பு விரிப்புக்கும் இடையே ஒரு சிறிய எறும்பு, குறுக்கும் நெடுக்குமாக நடை பயின்று கொண்டிருந்தது. பொதுவாக எறும்புகள்  உணவுப் பொருட்களை தம் கால்களில் எடுத்துக் கொண்டு வரிசையாக செல்வதை பார்த்திருக்கிறேன் . ஆனால் இந்த எறும்போ ஒரு இரையும் தூக்கிச் செல்லாமல் காரணமின்றி இங்கும் அங்குமாக சென்று கொண்டிருந்தது. 

எத்தனை ஜென்ம புண்ணியமோ.. எறும்பு பெற்றது பாத நமஸ்காரம்:

அச்சமயம் ஸ்வாமி அறையின் கதவு திறந்தது. பகவான் சிவப்பு கம்பளத்தின்மேல் மிதப்பதுபோன்று சொகுசு நடை பயின்று வந்து கொண்டிருந்தார். அவர் கால்பட்டு எறும்பு நசுங்கக்கூடும் என எண்ணி ஓரிரு முறை அந்த  எறும்பை என் கைகளால் தள்ளிவிட்டேன். ஆனால் அந்த பிடிவாத எறும்பு அதை லட்சியம் செய்யாமல் மறுபடியும் குறுக்கும் நெடுக்குமாக  நடை பயிலத் தொடங்கியது.ஸ்வாமி என் அருகே வந்துவிட்டார். அவரது பாதத்தில் ஒரு கண்ணும், எறும்பின்மீது மறு கண்ணும் வைத்து , பகவானைப் பிரார்த்திக்கத் தொடங்கினேன். ஸ்வாமி எறும்பை மிதித்துவிடாதீர்கள் என மானசீகப் பிரார்த்தனை செய்தேன். அப்போது ஸ்வாமி என் எதிரில் நின்று, பின்வரிசையில் நின்றுகொண்டிருந்த ஒரு ஆசிரியரிடம் ஏதோ பேசத் தொடங்கினார். அந்த எறும்பு பகவானின் பாதத்தின் கீழ் சிக்கிவிட்டதாக தோன்றியது. எறும்பின் நிலைகண்டு வருந்திய நான், செய்வதறியாது திகைத்து,  பகவான் பாதம் தொட்டு நமஸ்கரித்தேன். 

ஸ்வாமி அவ்விடம் விட்டு சற்று நகர்ந்தார். அங்கு நான் கண்டதென்ன. என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. ஸ்வாமியின் காலடியில் சிறைப்பட்டிருந்த அந்த எறும்பு..அல்ல அல்ல.. அந்த புண்யாத்மா ஒருவித சிதைவுமின்றி, புல்தரையை நோக்கி தன் நடையைத் சாவகாசமாகத் தொடங்கியிருந்தது. என் மனம் அமைதி அடைந்து களிப்புற்றது. எனக்கு ஓரிரு அடி தூரத்திலிருந்த கருணைக் கடலான பகவான், தன் தலையை திருப்பி கூறினார். "அந்த எறும்புகூட என் பாத நமஸ்காரத்திற்காகத் தான் வந்தது." (அதி கூட பாத நமஸ்காரம் கோசமே ஒச்சிந்தி)

-சாயி முன்னாள் மாணவர் ஒருவரின் அனுபவ பகிர்வு


🌻 மனிதர்கள் முதல், சிறிய எறும்புகள் வரை, பகவான் படைப்பன்றோ. இந்திரன் முதலிய தேவர்கள் தாரகாசுரனிடம்  பயந்து ,தம் உ ரு மாறி, எறும்பு உருக்கொண்டு சிவனை வணங்கினர். அவர்களுக்காகவே ஈஸ்வரன் தம் உறைவிடத்தை எறும்புப் புற்றாக ஆக்கிக்கொண்டார், அதுவே திருவெறும்பூர் என்னும் ஸ்தலமாகும். அதுபோலவே சாயி சிவனும் ஒரு சிறு எறும்புக்கு இரங்கி பாத நமஸ்காரம் அளித்த விந்தையை என்ன என்பது.

ஓம் ஸ்ரீ சாயி சர்வ ஹ்ருத் வாசினே நமஹ. 


ஆதாரம்: Sanathana Sarathi English, Sep 2017.

மொழிமாற்றம்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக