தலைப்பு

வெள்ளி, 23 அக்டோபர், 2020

பிரபல இசையமைப்பாளர் தமனின் தாயார் / சினிமா பாடகி சாவித்ரி அவர்களின் சாயி அனுபவங்கள்!

பிரபல பின்ணணி பாடகியாக இருந்தும்.. பிரபல இசை அமைப்பாளரின் தாயாக இருந்தும் பந்தா இல்லாத சுபாவம். பக்தி பிரபாவம். கள்ளம் கபடமற்ற மனம். சிறு வயதில் கணவனை இழந்து சத்ய சாயி தெய்வத் துணையோடு குடும்பத்தை கரையேற்றிய சாயி கருணை இதோ பரவசப் பதிவாக...


சின்னஞ்சிறு வயது முதலே தெய்வ பக்தியோடு குண்டூரில் பிறந்த சாவித்ரி அவர்கள் காஞ்சிப் பட்டுடித்தி கஸ்தூரி பொட்டு வைத்து என பல பிரபல சினிமா பாடல்களை பாடிய பெரிய பாடகி. பொட்டு வைத்த முகமோ.. திருவளர்ச் செல்வியோ என பல திரைப்பாடல்கள் பாடிய பி.வசந்தா இவரின் சகோதரியே.

சினிமா ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் அவர்கள் வழியாக சத்ய சாயி ராமரை அறிந்து உணர்ந்து வீட்டில் சுவாமி படம் வைத்து வழிபட ஆரம்பித்திருக்கிறார் QMCயில் பி.ஏ இசை படித்த சாவித்ரி.

சுவாமி 80களில் ஆப்ட்ஸ்பரி வருகையில் அவரை தரிசனம் செய்வதும்.. பாடல்கள் பாடுவதும் என அம்மா துர்கா பாயோடு சேர்ந்து சுவாமியை ஆராதனை செய்திருக்கிறார் சாவித்ரி.

மயிலை சவுந்தர்யா அவர்களின் வழி சுவாமிக்கான கலை நிகழ்வுகளான இசை நாடகத்தில் (லவ குசா இசை நாடகம் என பல) பாடுவது போன்ற குரல் வழி சேவையை (1986 முதல் 1997 வரை) நிறைய செய்திருக்கிறார். எப்போது புட்டபர்த்தி மற்றும் சுந்தரத்தில் இவர் பாடல் பாடினாலும்.. சுவாமி நேராக வந்து இவர் முன் நின்று பாத நமஸ்காரம் அளிப்பார். "எப்டி இருக்க?" என்று வினவுவார்.

அந்த வார்த்தையே ரோகத்தையும் குணமளித்து யோகமாக்கிவிடுமே.

பல பாத நமஸ்காரங்கள். பல வினவுதல் என தெய்வ அருள் தொடர்ந்திருக்கிறது.

நாடகம் கண்டும் இவர் குரலைக் கேட்டும் தெய்வ சாயி பாராட்டியதும் பல..

பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் சக்கரவர்த்தி இசைக்குழுவில் டிரம்மராக பணியாற்றிய சிவகுமார் அவர்களோடு இவரது இல்லற வாழ்க்கை தொடர்கிறது.

1995 ல் இதயவலியால் இறந்து போகிறார் அவர்.

கரையேற்றும் படகோட்டி இன்றி இவரது குடும்ப வாழ்க்கை தத்தளிக்கிறது. 

மகன் தமன் மற்றும் மகள் யாமினி உடன்  சாவித்ரி சாய்ராம்


முதல் குழந்தைக்கு சாயி ஸ்ரீநிவாசன் எனப் பெயர் வைக்கின்றார். அவரே இப்போது பிரபல எஸ்.எஸ்.தமன்.

இரண்டாவது பெண் குழந்தையான யாமினி இரண்டாம் வகுப்பு படிக்கும் போதே கணவன் இறப்பு கடும் துயரத்தை விளைவிக்கிறது.

யாமினி கருவில் இருக்கும் போதே லவ குசா நாடகமும் அரங்கேற பாராட்டுதலும் சுவாமியிடம் கிடைத்திருக்கிறது. அந்த 2nd standard யாமினி பர்த்தியில் சுவாமியிடம் " நான் உங்க ஸ்கூல்ல படிக்கட்டா? எனக் கேட்கிறது‌ . சுவாமி நிச்சயமா என பதில் சொல்லி.. யாமினிக்கு தாயுமானவ சுவாமி தந்தையாகிறார். இன்று அவர்கள் வளர்ந்து வரும் திரைப்படப் பாடகராகவும் சுவாமியின் அருளால் ஒளிர்ந்து வருகிறார்.

குடும்ப பாரம் முழுக்க சிறுவன் தமனின் தோளில்.தந்தை கலைத் தொழிலையே கையில் எடுத்து இரவு பகல் கடுமையாக உழைக்கிறார். ஒரு முறை சுவாமியிடம் நேர்காணல் அறையில் "பையன் ரொம்ப கஷ்டப்படுறான் சுவாமி" எனச் சொல்ல‌.

"கஷ்டப்படட்டும்.. அப்பத்தான் முன்னுக்கு வர முடியும். நா பாத்துக்கறேன்" என்கிறார். எவ்வளவு சத்திய வாழ்வியல் வார்த்தை! தமன் தன் 14வது வயதில் சுவாமிக்கான கலை நிகழ்வில் தாள வாத்தியம் இசைத்து"நல்லா முன்னுக்கு வருவ" என செயின் அணிவித்து ஆசி வழங்கி இருக்கிறார்.

சுவாமி சொல்வது தானே சத்தியம். இதோ இப்போது அவர் பிரபல தெலுங்கு திரை இசையமைப்பாளர்.


ஒரு முறை சுவாமி சாவித்ரி சாய்ராமுக்கு நேரில் நீல நிறப்புடவையை தர இவர் கை வரை நீட்டும் போது.. அந்த பச்சை நிறப் புடவை தந்தால் நன்றாக இருக்குமே என மனதிற்குள் நினைக்க சுவாமியோ சட்டென கைகளை மாற்றி பச்சை நிறப் புடவையை அளிக்கிறார். காஞ்சி பட்டுடுத்தி பாடல் பாடியவர்க்கு சுவாமி பட்டென அளித்த பச்சைப் பட்டுப்பரிசு. ஒரு முறை நேர்காணலில் நேர்காணல் அறையை விட்டு சுசீலா அம்மா...பாடகி அம்பிலி சாயிராம்.. சாவித்ரி அம்மாவும் வெளியே வர முற்படுகையில்.. "நமக்கும் சுவாமி செயின் வரவழைச்சு கொடுத்தா எவ்ளவு நல்லா இருக்கும் " என நினைக்க அந்த நொடியே சாவித்ரி சாயிராமை உள்ளே அழைத்து "உனக்கு செயின் கொடுக்கறேன்.. போட்டுக்கறியா?" என சுவாமி கேட்க .. பரவசப்படுகிறார்.

சாவித்ரி சாய்ராம் அவர்களின் வீட்டு பூஜையறை 


சுவாமிக்கு நம் ஒவ்வொருவரின் ஒவ்வொரு எண்ணமும் தெரியும் என்பதற்கு இவை எல்லாம் உதாரணம்.

சுவாமி நிறைய கனவில் வந்து கொண்டே இருப்பார். எப்போதும் கனவில் வந்தாலும் "தெனம் ரெண்டு பாட்டாவது மறக்காம பாடு" என்பார். இவரும் அது படியே செய்கிறார். டாக்டர் மோகன் இல்லம் மற்றும் வடபழனி குபேர சாயி கோவிலில் பாடுவது என தன் இசை ஆராதனையை சத்ய சாயி இறைவனுக்கு நிதம் நெய்வேத்யமாக்குகிறார். ஒருமுறை இவர் சுந்தரத்தில் "ராமன் எத்தனை ராமனடி" பாடல் பாட ... சுசீலா அம்மாவோ "என்ன விட நீ அந்த பாட்ட நல்லா பாடிட்ட" எனப் பாராட்ட அந்த நல்ல மனதிற்கு நன்றியும் தெரிவிக்கிறார்.

விதிவசத்தால் கணவர் பிரிந்தாலும் இறைவன் ஸ்ரீ சத்ய சாயி தன் அருட் வசத்தால் சாவித்ரி சாயிராமின் மகளுக்கு கல்வி தந்து..மகனுக்கு இசை தந்து.‌.. இவரின் குடும்பத்திற்கே வாழ்க்கை தந்திருப்பது சத்ய சாயி பரமாத்மாவினால் மட்டுமே முடிகிற கருணை.. மலர்கிற அருள்.. முகிழ்கிற ஆற்றல்!


பக்தியுடன்

வைரபாரதி

1 கருத்து: