தோல் வியாதிக்கு இளம் சாயி கொடுத்த வாழைப்பழ வைத்தியம்.
இறைவன் ஸ்ரீ சத்யசாயி லீலைகள் இந்த நொடி வரை ஒன்றா ? இரண்டா? தோலுக்குள் வாழைப்பழம் மறைந்திருப்பதைப் போல் சுவாமியின் ஒவ்வொரு லீலைக்குள்ளும் அவரின் கருணையே மறைந்திருக்கிறது!
ஆதிகால பக்த சிகாமணி, உடல் மறைந்தாலும் சாய் பணியில் மறக்கவொண்ணா மகநீயர் சேஷகிரி ராவ். அவருக்கு முன்பே சாயியை வந்தடைந்தார் அவரது மகளான சுந்தரம்மா. சாய் கண்ணனின் யசோதையான புட்டபர்த்தி சுப்பம்மா இவர்களுக்கு உறவினர். எனவே பெங்களூர் வாசியான ராவின் மனையாள் அங்கு சென்றார். அங்கே 16 வயது பரமனை கண்டார். சுந்தரம்மாவுக்கு அடுத்த பிரசவத்தில் ஏற்படவிருந்த ஆபத்தையும், அது தன் அருளால் நீங்கும் என்பதையும் சுவாமி அவரிடம் தெரிவிக்க, அவர் பெங்களூர் திரும்பிய பின் அதை மகள் சுந்தரம்மாவுக்கு தெரிவித்தார்.
அப்படியே பால சாயி தங்கியிருந்த இடத்தில் அம்மாள் மட்டும் உட் சென்றார். அவர் இவரது சமாச்சாரங்களை சகஜமாக சொல்லி ஆசி வழங்கினார்.
அப்புறம் கூடியிருந்த எவருக்குமே அவர் எங்கே போனார் என்று தெரியாமல் எப்படியோ மாயமாய் நழுவிவிட்டார்! சிறிது நேரத்திற்கு பிறகு உள்ளே வந்தார். தீங்குரலில் திவ்ய நாமாவளிகள் பாடி பஜனை செய்தார்.
பஜனையின் இடையில் சுந்தரம்மாவின் கணவர் உள்ளே வந்தார். அதுமட்டுமில்லை, அவரது தாய், பெண் இருவரும் வேறு வந்தனர். இவர்தான் போய் அவர்களை அழைத்து வந்திருக்கிறார் என்று சுந்தரம்மா புரிந்து கொண்டாள். ஆனால் எப்படி கணவர் மனதில் இத் திடீர் மாற்றம் ஏற்பட்டதென அவருக்கு புரியவில்லை. பஜனை முடிந்து வீடு திரும்புகையில் அந்த அதிசயத்தை சர்மா அவருக்கு சொன்னார். ஜாகையுள்ளே பாலசுவாமி காணாது போனாரல்லவா? அப்போது தெருமுனையில் குறுக்கும் நெடுக்குமாய் போய்க் கொண்டிருந்த சர்மாவின் முன் திடீர் ஆவிர் பாவம் செய்திருக்கிறார்!
"அந்த கர்ப்பிணியம்மாவுடைய கணவன் தானே நீ? உனக்கு உடம்பெல்லாம் எக்ஸிமா(சொறி சிரங்கு) அவஸ்தைப்படுகிறாய். சரி பண்ணுகிறேன்" என்று கூறி துளிர்க்கரத்தை அசைத்தார். அதில் ஒரு வாழைப்பழம் வந்திருந்தது. "தோலோடு சாப்பிடு, வியாதி பறந்து போய்விடும்" என்று கூறி பழத்தை சர்மாவுக்கு கொடுத்தார் பிஞ்சில் பழுத்தவர்.
திடீர் ஆவிர் பாவத்தை போலவே திடீர் அந்தர் தானமானார். அதிர்ந்து போன சர்மா அதிர்ச்சி நீங்கிய பின் வாழைப்பழ வைத்தியரின் பக்தரானார். சாயியின் ஜாகை நோக்கி அவர் வர, பஜனை ஒலி கேட்டது. சாயி தான் பாடுவது என்று அறிந்த பின், ஓடோடி சென்று தாயையும் மகளையும் அழைத்து வந்திருக்கிறார்.
தோல் வியாதி தீர தோலோடு பழம் தின்னக் கொடுத்த விந்தையை சொல்லவா? தோல், நிணம், எலும்பு யாவற்றுக்கும் உள்ளே இருக்கும் உயிரை அவ்வாழை தொட்டு சர்மாவை பக்தியில் வாழவைத்த விந்தையை சொல்லவா?
இறைவனின் செயல்கள் மனிதனுக்கு அற்புதங்கள் ஆனால் இறைவனுக்கோ அது சர்வ சாதாரணமானவையே!
இறைவன் ஸ்ரீ சத்யசாயியால் சாதிக்க முடியாததெது!
அண்ட சராசர ஆன்மாக்கள் ஒவ்வொன்றுமே அவரின் வினோத லீலைகள் தான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக