தலைப்பு

செவ்வாய், 20 அக்டோபர், 2020

முதியோர் இல்லத்தில் வாழ்ந்த பக்தைக்கு நேரில் தோன்றி தலையை மசாஜ் செய்த பாபா!

தனியாக வாழும் வயதில் முதிர்ந்த சுவாமி பக்தை ஒருவரை எவ்வாறு அவர் தனிமையைப் போக்கி... காவலாய் இருந்து... தன்னை உணர வைத்து தயை செய்து வருகிறார் இறைவன் ஸ்ரீசத்யசாயி எனும் பெருங்கருணையை உணர்த்தும் பரவசப் பதிவு இதோ..

திருமதி லட்சுமி அவர்கள் திருச்செந்தூர் அருகே உள்ள வள்ளியூரில் பிறந்தவர். சுடலைமாட சுவாமி அவரின் குல தெய்வம். அவரின் குடும்பம் குலதெய்வ சுவாமி அருள் வந்து பரவச ஆடல் புரியக் கூடியது. வழி வழியாய் அவர்களே வள்ளியூரில் பூஜை செய்து வருபவர்கள். அந்த சூழலில் வளர்ந்த லட்சுமிக்கு சுவாமி பக்தி அதிகம். பத்தே நிமிடத்தில் பிரம்மாண்டமாய் கோலம் போடும் ஆற்றல் உள்ளவர். கை இழையும். கலை நயம் கண்களைக் கவரும்.

இறைவன் சத்ய சாயியை திருமணத்திற்கு பின்னரே அறிந்து கொள்கிறார். திரைப்பட விநியோகஸ்தரும் / தயாரிப்பு நிர்வாகியும் ஆன எஸ்.வி.எஸ் மணி அவரின் கணவர். திருநெல்வேலியில் இல்லற வாழ்க்கை.

திரு. எஸ்.வி.எஸ் மணி

அந்த டவுணில் சுவாமி சத்ய சாயி பாலில் தெரிகிறார் என அக்கம் பக்கத்தினர் பரவசப்பட அப்போதே இறைவன் சத்ய சாயியை பற்றி அறிந்து கொள்கிறார். லட்சுமி அவர்களும் பாலில் தரிசனம் கண்டு பரவசப்படுகிறார்.

இவரின் மகள் வயிற்றுப் பேரன் சுவாமி பக்தனாய் ஆனதை அறிந்து அந்தக் காலத்து அனுபவங்களைப் பகிர்கிறார்.

மகள் ஜெய்ஸ்ரீ யின் மரணத்திற்குப் பிறகு சிறு வயதிலேயே தாயை இழந்த தனது பேரனையும் வளர்த்து... படிக்க வைத்து அந்த கிராம அக்ரஹார சூழலில் பேரனோடு பல பக்தி வைபவங்களில் கலந்து கொண்டு அவனுக்கு மேலும் பக்தியை அளிக்கிறார்.

தன் பேரன் மேல் உயிர். சுவாமி சத்ய சாயி படத்தை வீட்டில் வைத்து பேரன் வழிபட லட்சுமியும் சேர்த்தே வழிபடுகிறார். பூஜைக்கு பூப்பறித்து தருகிறார். கணவர் எஸ்.வி.எஸ் மணியும் சுவாமியை அறிந்து வழிபாட்டிற்கு எந்த தடையும் சொல்லாமல் அனுமதிக்கிறார்.

மார்கழி மாதம் முப்பது நாளும் பஜனை நடக்கும் கிருஷ்ணர் கோவிலுக்கு பேரனை நான்கு மணிக்கே எழுப்பி .. சுடு தண்ணீர் வைத்து குளிக்க வைத்து அழைத்துக் கொண்டு போவார்.

காலமும் பக்தியும் வளர்ந்தது.

இருவரும் தனது மகன் மோகன் வீட்டிற்கே வட நாட்டிற்கு செல்கிற சூழல். பேரன் இவர்களைப் பிரிந்து அவனது தந்தையோடு படிக்கிற சூழல். கணவர் எஸ்.வி.எஸ் மணி பேரனுக்கு எழுதும் கடிதங்களில் "சத்ய சாயி பாபா துணை" என்றே எழுதுவார்.

இருவருக்கும் உயிரான பேரனைப் பிரிந்த அந்த வடநாட்டு வாழ்க்கை சுவாமி மேல் இன்னும் அதிகமான பக்தியையே வளர்க்கிறது. 

அங்கே பிரச்சனை என பேரன் அருகில் வாழ சென்னைக்கே வருகிறார்கள் இருவரும். பேரனும் அப்போது படிக்கிற சூழல் என்பதால் முதியோர் இல்லம் போன்ற ஒரு வீட்டில் ஓர் சிறு அறையில் வசித்து வருகின்றனர்.

வாரம் தவறாமல் சத்ய சாயி பஜனைக்கு இருவரும் செல்வர். சமிதியில் லட்சுமி கீழே அமர்ந்தும் .. மணி அவர்கள் நாற்காலியில் அமர்ந்தும் பஜனையில் கலந்து கொள்வர்.

ஓர் நாள்... மணி அவர்களுக்கு நெஞ்சு வலி எடுக்கிறது.. நீ மேன்மையாக வரப் போவதை பார்க்காமலேயே போகப் போகிறேனே என பேரனிடம் கடைசியாகப் பேசுகிறார் மணி. பேரன் தனது தாத்தாவை மடியில் கிடத்தி நெற்றி .. நெஞ்சு .. வாய் என சுவாமி விபூதியால் குளிப்பாட்டி.. சாய்ராம் சொல்லு தாத்தா என்கிறான். மணி அவர்கள் சொன்ன கடைசி வார்த்தை சாய்ராமே.

துணையைப் பிரிந்து தனியான பக்திப் பறவை லட்சுமி தவிக்கிறாள். அப்போதும் விரக்தியில் சாயி பஜனைக்கு போவதை நிறுத்தவில்லை. பக்திக்கு ஏது விரக்தியும்? எதிர்பார்ப்பும்? பேரனும் கல்லூரி நேரம் முடித்து அவ்வப்போது வந்து தனது பாட்டியை கவனித்துக் கொள்வான். 

அன்று 2006 ஆம் ஆண்டு தனது துணையைப் பிரிந்த அதே வருடம்.. திடீரென ரத்த அழுத்தத்தால் லட்சுமி தலையைச் சுற்றி படுக்கையில் சாய்கிறாள். ஒரு ஈ காக்கா இல்லை உதவ.. சாயி ராம் சாயி ராம் என்றே சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

அப்போதே அந்த அற்புதம் ஏற்படுகிறது.

சுவாமி பிரத்யட்சமாய் தோன்றுகிறார். லட்சுமியின் தலையை தன் திருக்கரத்தால் தொட்டு மசாஜ் செய்கிறார். சுவாமி சுவாமி என கண்ணீர் விடுகிறாள் . 

"நா இருக்கும் போது .. ஏன் கவலப்படற.. என்ன யாரு நம்பறாங்களோ அவங்களுக்கு நா பிரத்யட்சமா கூடவே இருக்கேன்" என கருணையாய்ப் பேசுகிறார்.

எவ்வளவு கருணை சுவாமிக்கு.. 

தனது உடல் உணர்வையே மறந்து சுவாமி மட்டுமே கண்களில் தெரிந்து அவரின் ஆறுதல் மொழியை கேட்டு சாய்ராம் என கத்த.. மாடி வீட்டு உரிமையாளரான மூதாட்டியே கீழே வர..

மாமி நான் சுவாமிய பாத்தேன்.. இப்பத் தான் வந்தார் எனச் சொல்லி பரவசப்படுகிறார் லட்சுமி.

2007லில் அதிருத்ர மகா யக்ஞம். பேரனுக்கு 15 நாள் மேல் திருவான்மியூரில் சுவாமி சேவை. பேரன் அழைத்ததன் பேரில்.. அந்த முதிய வயதிலும் தைரியமாக பேருந்தில் ஏறி சுந்தரத்தில் காலை சுவாமியை முதன் முதலாக நேரில் தரிசனம் செய்கிறார்.

"சுவாமி.. கிருஷ்ணனாட்டம் அழகா சிண்டு போல இருந்தார்டா.... என்ன பாத்து அப்டி சிரிச்சார்டா.. சாக்லேட்ட தூக்கி போட்டார் .. கைய அப்படியே காட்டினேன் .. என் கைல சாக்லேட்டும்..என் தலைல விபூதி பாக்கெட்டும் விழுந்துச்சு.. ஆனா அவர் கைல அப்போ விபூதி பாக்கெட்டே இல்ல" என பரவசப்பட்டு சுவாமி அனுபவத்தை பேரனோடு பகிர்ந்து கொள்ள..

"அம்மம்மா.. சுவாமி உனக்காக தான் அந்த விபூதி பாக்கெட்ட ஸ்பெஷலா போட்ருக்கார்" என்கிறான் பேரன்.

அம்மம்மா என்று தான் பாட்டியை அந்தப் பேரன் அழைப்பான். காலம் உருள.. தன் மகன் கட்டிய வீட்டில் கன்னியாகுமரியில் குடிவந்து தனியாக வாழ்கிறார் லட்சுமி.

ஒரு நாள் அதிகாலை சுவாமி லட்சுமியின் தலையைத் தொட்டு ஆசீர்வதித்த அந்த அற்புதக் கனவையும் 2020ல் பேரனோடு பகிர்ந்து கொள்கிறார்.

தனியாக வாழ்கிறோம் என்ற பயமோ.. கவலையோ.. பதட்டமோ லட்சுமிக்கு இல்லவே இல்லை.. சுவாமியின் அருட் வளைய பாதுகாப்பு இன்றளவும் தொடர்ந்து வருகிறது பரம பக்தை லட்சுமிக்கு...

எந்த பக்தரையும் அவர்களின் எந்த வயதிலும் சுவாமி கைவிடுவதில்லை என்பதற்கு லட்சுமியின் வாழ்க்கையும் ஓர் உதாரணம்.

அந்த லட்சுமி அம்மையார் வேறு யாரும் அல்ல.. அடியேனின் பாட்டியே!

  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக