தலைப்பு

திங்கள், 5 அக்டோபர், 2020

டி.எம்.எஸ் மகன் கனவில் காட்சி தந்த கடவுள் சாயி!


ஒருவர் மட்டும் இறைவன் சத்ய சாயி பக்தர் என்றாலும் அவரின் பரம்பரைக்கே பேரருள் பாலிக்கும் கடவுள் சாயி எவ்வாறு ஒவ்வொரு குடும்ப நபரையும் பக்தியோடு ஆட்கொள்கிறார் என்பதை நினைத்தாலே நெஞ்சு சிலிர்க்கும்.. அப்படி ஒரு பதிவு இதோ..


பெரும் பாடகர் டி.எம்.எஸ் இறைவன் சத்ய சாயி பக்தர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு தெய்வீக விஷயம்.

அந்தப் புண்ணிய குரல் அவருக்கு மட்டுமே இந்த பூமியில் இறைவன் சத்ய சாயியால் வழங்கப்பட்டது ..உலகப் பாடகர் அவர்.

அடியேன் முதன்முதலில் சத்யசாயி பக்திப் பாடலாய் தமிழில் கேட்டது என் அய்யன் டி.எம்.எஸ் அவர்களின் தவப்புதல்வர் டி.எம்.எஸ் பால்ராஜ் அவர்களின் குரலில் தான்...

அந்த சின்மய தேஜா சாயிராமா... இன்னும் அடியேன் இதயத்தில் ரீங்கரித்துக் கொண்டே இருக்கிறது

பிற்காலத்தில் அவரை சந்திப்பேன் என்றோ... அடியேன் வரிகளில் அவர் பாடுவார் என்றோ நினைத்தே பார்க்காத செயல்.. சுவாமி நிகழ்த்தினார்.

அருணை மகான் பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் மேல் அடியேன் எழுதிய சுப்ரபாதத்தை அவரே பாடினார்.

பொற்பொழுதுகள் அவை.

அய்யன் டி.எம்.எஸ் சுவாமியை தரிசிக்கும் போதெல்லாம் பால்ராஜ் அண்ணாவும் உடன் தரிசித்திருக்கிறார்..

அப்போது அய்யன் பாடுகையில்..

ராமனைப் போல..  கண்ணனைப் போல.. சிவனைப் போல எனப் பாடிக் கொண்டே இருக்கையில் .. சுவாமி இடைமறித்து..

"என்ன சௌந்தரம்.. போல போலன்னு பாடற.. அப்ப நான் ராமர்..கிருஷ்ணர்.. சிவன் இல்லையா? " எனக் கேட்டதை உடன் இருந்து அனுபவித்துப் பகிர்ந்தவர் டி.எம்.எஸ் பால்ராஜ் அண்ணாவே ..

பிறகு வரிகள் மாற்றி..

நீயே ராமர்.. நீயே கண்ணன் என அய்யன் பாடியதும் தனிப் பெரும் பக்தி ரசம்.

சத்ய சாயி சரணமய்யா... என இவர் பாடிய பாடல் அய்யன் டி.எம்.எஸ் அவர்களால் வெகுவாக ரசித்துப் பாராட்டப்பட்டது!

அவர் யாரையும் அவ்வளவு விரைவில் பாராட்டுபவர் அல்ல..

சுவாமி பஜன் பாடுகையில் கூட .. சுவாமி உங்களுக்கு இந்த சங்கதியில ஸ்ருதி போயிடுச்சு என சொல்வாராம் டி.எம்.எஸ்..

அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன் எனப் பாடியவராயிற்றே டி.எம்.எஸ் 

அதற்குக் கருணைக் கடலான கடவுள் சத்ய சாயி சிரித்துக் கொண்டே..

"ஸ்ருதி.. லயம்.. ஸ்வரம் எல்லாம் நானே சௌந்தரம்" என்பார் சுவாமி அய்யனைப் பார்த்து...

திரைப்படப் பாடகர்.. மேடைக் கச்சேரிகளிலும் கலை கட்டுபவர்.. இருப்பினும் எந்த வித கர்வமும் இன்றி பழகக் கூடியவர் .. தான் பெரும் பாடகரின் மகன் என்ற நினைப்பே இல்லாதவர்..

எளிமையானவர்... எதார்த்தவாதி டி.எம்.எஸ் பால்ராஜ் சாயி ராம்.

அவருக்கும் சுவாமி சிருஷ்டித்து மோதிரம் வரவழைத்து தந்திருக்கிறார்.

அதைப் பெற்ற புண்ணியவான் அவர்.

இறைவன் சத்ய சாயியின் பேரன்பிற்குப் பாத்திரமாகும் அனைவரும் புண்ணியம் செய்தவர்களே!

ஒருவரின் தீய குணங்களை விட்டுவிட்டு அவரின் நல்ல குணங்களை உயர்த்திச் சொல்வதே (புகழ்ந்து சொல்வதல்ல) அடியேனின் சுபாவம்.

காரணம் அப்போது தான் நல்ல குணங்கள் நான்கு பேருக்காவது இதயத்தில் சென்று பதியும் என்ற நல்ல நோக்கில் தான் அவரின் நன்னெறி சுபாவங்கள் இங்கே பகிரப்பட்டன..

அகந்தை இல்லாமல் வாழ்வது பெரிய தவம்.

நாம் ஒன்றுமே இல்லை‌.. சுவாமி நீயே எல்லாம்.. எல்லா மேன்மையும் என உணர்வதே அறம்!

ஒரு நாள் டி.எம்.எஸ் பால்ராஜ் அண்ணா கனவில் சுவாமி காட்சி அளிக்கிறார்.

சுவாமியே பலமுறை சொல்லிய வண்ணம்.. ஒருவர் கனவில் நான் வருகிறேன் என்றால் அது கனவல்ல.. நிஜம். நீ.ங்கள் என்னை நினைத்துக் கொண்டு இரவில் துயில்வதால் நான் கனவில் வருவதில்லை எனச் சொல்லியதை டாக்டர் காடியா தனது புத்தகமான சாயி ஸ்மரணிலும் பதிவு செய்திருக்கிறார்.

அந்த அற்புதக் கனவில் சுவாமி பால்ராஜ் சாயிராமை ஒரு பாடல் பாடச் சொல்கிறார்.

அது அய்யன் டி.எம்.எஸ் பாடிய மிக உருக்கமான.. இறைவனுக்கு மிக நெருக்கமான பாடல்..

அந்தப் பாடலை கண்ணில் நீர் ததும்ப அய்யனின் திருமகன் டி.எம்.எஸ் பால்ராஜ் பாட .. சுவாமி ஆனந்தமாய் ரசித்துக் கேட்க...

பால்ராஜ் அவர்களின் தொண்டையில் இருந்து அப்படியே இதயம் தொடர்ந்து வயிறு வரை தனது பேரருட் கைகளால் தடவிக் கொடுக்கிறார்..

இப்படித் தான் அய்யன் டி.எம்.எஸ் குரல்வளையை தனது கர கலையால் அடிக்கடி தடவிக் கொடுப்பார்.. இப்போதைய திருச்செய்கை அதற்கும் மேலாக எல்லா அங்க அவயங்களையும் பால்ராஜ் சாய்ராமுக்கு தடவிய வண்ணம் சீர் செய்திருக்கிறார்.

எந்தக் கை இந்த உலகை இயக்குகிறதோ..

எந்தக் கை இந்த வாழ்வை இயக்குகிறதோ..

எந்தக் கை இந்த அண்ட சராசரத்தை ஆட்டிப் படைக்கிறதோ...

எந்தக் கை பூமியின் பல மாற்றங்களுக்கு காரணமாக இருக்கிறதோ / இருக்கப் போகிறதோ...

அந்தக் கடவுளின் கை தடவிக் கொடுப்பதில் பரவசப்படுகிறார் பால்ராஜ் சாயி ராம்...

அந்தப் பாடலில் சுவாமிக்கு மிகவும் சந்தோஷம்..

அந்தப் பாடலில் சுவாமிக்கு மிகவும் ஆனந்தம்...

அப்போது தான் ஒரு மூதாட்டி சுவாமிக்கு பின்புறம் அமர்ந்திருந்ததை கவனிக்கிறார் பால்ராஜ் சாயிராம்.. அவர்களும் அந்தப் பாடலைக் கேட்ட வண்ணம் இருக்கிறார்கள்..

அந்தப் புண்ணியவதி வேறு யாருமல்ல அய்யன் டி.எம்.எஸ் அவர்களின் மனைவியும்.. டி.எம்.எஸ் பால்ராஜ் அவர்களின் தாயுமான சுமித்ரா சாயி ராம்.

அவர் சுவாமியின் பாதார விந்தம் சேர்ந்து இன்னமும் ஒரு வருடம் ஆகவில்லை..

அந்தக் கனவில் அவரின் தாயாரைக் காட்டி... உன் தாய் சுவாமியிடமே இருக்கிறாள் என்பதையும் இறைவன் சத்ய சாயி உணர்த்துகிறார்.

சுவாமி இப்படி தன் இதழ்களால் உரைப்பதைக் கடந்து தனது தெய்வீக சமிக்ஞையால் உணர்த்துவது அநேகம்.. அநேகம்..

ஒரே கனவில் தனது தாயையும் கண்டு ஆனந்தம் அடைகிறார்..

சுவாமியையும் தரிசித்துப் பரவசப்படுகிறார் டி.எம்.எஸ் பால்ராஜ்.

இது ஏதோ பல மாதங்களோ.. பல வாரங்களுக்கு முன்போ நிகழ்ந்த கனவல்ல.. நேற்று முன் இரவு (14. 09.2020) .

சுவாமி இன்னமும் அதே உத்வேகத்துடனும்.. பிரபஞ்சப் பிரபாவத்துடனும் பக்தர்களை எப்போதும் காத்து ரட்சித்து அருள் பாலித்து வருகிறார்.

அதை பக்தர்கள் நிதர்சனமாய் தினசரி உணர வேண்டும்..

சுவாமி விரும்பிக் கேட்ட அந்தப் பாடல் இதோ‌..

"உனைப் பாடும் தொழில் இன்றி வேறு இல்லை... எனைக் காக்க உனை இன்றி யாருமில்லை"

எவ்வளவு சத்தியமான வரிகள்...

எவ்வளவு சாஸ்வதமான பாடல்...

சுவாமி ...

உனை எழுதும் தொழிலின்றி வேறு இல்லை...

எனைக் காக்க உனை இன்றி யாருமில்லை

   பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக