தலைப்பு

வெள்ளி, 23 அக்டோபர், 2020

குடும்பம் மற்றும் சமூக வரையறைகளை சார்ந்திருக்கும் பெண்களால் ஆத்ம ஞானம் அடைய முடியுமா? சுவாமி இதைப் பற்றி என்ன சொல்கிறார்?

நிச்சயமாக முடியும் என்று ஒரு வரியில் பதில் சொன்னால் தெளிவாக புரியாமல் போய்விடும். எப்படி முடியும் என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்!

வேத காலத்தில் பெண்கள் உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றப்பட்டனர்.

கார்க்கி / மைத்ரேயி என வேத கால பெண் புலவர்கள் அநேகம்.

அஸதோமா ஸத் கமய எனும் புகழ் வாய்ந்த மந்திரங்கள் இயற்றியதே அவர்கள் தான்! 

பாரத மாதா என்று தான் பாரத பூமியை அழைக்கிறோம். நதிகளுக்கும் பெண் பெயர்களே. 

பூமியில் படைப்பின் அம்சமே பெண் அம்சம் தான்.

இறைவன்  ஸ்ரீ சத்ய சாயி பெண் அம்சமான சக்தி அம்சத்தையும் சேர்த்து அவதரித்தவரே! 



வரப்போகின்ற பிரேமசாயி பரம்பொருள் முழுவதும் சக்தி அம்சமே!

சக்தியில்லா சிவமும் சவமே! 

சிவனுக்கு ஒரு ராத்திரி கொண்டாடி .. சக்திக்கு ஒன்பது ராத்திரியை கொண்டாடுகிறோம். 

நமது பாரத எல்லையே குமரி முனை தான்!

தவம் எப்போதும் பெண்மையே!

ஆகவே தான் கன்னியாகுமரி அன்னை குமரி கடற்கரையில் தவம் இயற்றியபடியே இருக்கிறாள்.

சுவாமியின் துவாபர யுக அவதாரத்தில் கோபிகைகளே பக்தியின் இலக்கணம்.

குசேல கிருஷ்ணா என கொண்டாடாமல் 

ராதா கிருஷ்ணா என்று தான் கொண்டாடுகிறோம்.



பெண்களுக்கே தவம் எளிதாய் வாய்க்கும்!

பெண்களுக்கே பக்தி ஆழமாய் அமையும்!

அவர்களின் அடிப்படை குணம் அப்படி.

அதை அவர்கள் தான் முதலில் உணர வேண்டும்.

ஆண்கள் சிறகு கொண்டவர்கள்.

பெண்கள் வேர் கொண்டவர்கள்.

வேர் கொண்டவர்களாலேயே பொறுமையோடு அமர்ந்து தியானம் செய்ய முடியும் !

கீதையின் புகழை பூமா தேவிக்கு விஷ்ணு கற்பித்தார்‌. குருகீதா வழி பிரம்ம ஞானத்தை பார்வதிக்கு பரமேஸ்வரன் கற்பித்தார்.

பிரம்ம வித்தையை மைத்ரேயிக்கு யக்ஞவல்கியர் கற்பித்ததாக பிரிகதாரணியா உபநிஷத் கூறுகிறது

என சுவாமி வலியுறுத்துகிறார்.



மந்திரங்களின் மகாராணி காயத்ரியே பெண் தான். அந்த மந்திரத்தை பெண்களே ஓதக் கூடாதென ஒரு சாரார் முன்பு உரைத்தது எத்தனை அபத்தம். 

இந்த வஞ்சகத்தை இறைவன் ஸ்ரீ சத்யசாயியே முதன்முதலில் முறியடித்தார்.

இன்று உலகளவில்.. அமெரிக்க வெள்ளை மாளிகை வரை வேதமும் காயத்ரி மந்திரமும் ஓதப்படுகிறதென்றால் அதற்கு சுவாமியே முழுமுதற் காரணம்.

கர்ம காண்டம்.. ஞான காண்டம் என வேதத்தில் இருபிரிவு. கர்ம காண்டம் உலகாயதம். ஞான காண்டம் ஆன்மீகம். 

இல்லறத்தில் இருந்தபடியே பெண்கள் ஆன்ம ஞானம் அடையலாம் என்கிறார் சுவாமி.

காத்யாயனி... சாரங்கி...சுலபா.. விஷ்வதேவா.. மதாசாலை போன்ற பெண்கள் இல்லறத்தில் இருந்தே ஞானம் அடைந்தனர்.

இல்லற வாழ்வில் சூடாலா... துறவற வாழ்வில் சுலபயோகினி.. வானபிரஸ்த வாழ்வில் மைத்ரேயி..என பலர்.

ஆத்ம ஞானத்திற்கு தியாகமே அடிப்படையே தவிர பாலினம் அல்ல என்பதை உணர வேண்டும்.

ஆத்ம ஞானத்திற்காக எதையும் விட்டுத்தரலாம் ஆனால் எதற்காகவும் ஆத்ம ஞானத்தை விட்டுத்தர கூடாது எனும் விவேகம் / வைராக்கியம் மட்டுமே அவசியம் என்பதை பெண்கள் உணர வேண்டும்.

பெண்கள் வெறும் மாயை என்று ஒரு சில சித்தர்கள் உளறியதை எல்லாம் பெரிதுபடுத்தாமல்... சக்தி ரூப தேவியரான பெண்கள் ஆத்ம ஞானம் அடையாமல்.. ஆன்மீக முன்னேற்றம் அடையாமல் யாரால் முன்னேற்றம் அடைய முடியும்?




பெண்கள் பூப்பந்துகள்... அவர்களை சம்சாரக் கடலால் மூழ்கடிக்க முடியவே முடியாது.

பெண்களுக்கு தேவை சற்று விழிப்புணர்ச்சியே!

பெண்களின் நோக்கு தான் ஆன்மீகமாக (உள்முகமாக) திரும்ப வேண்டுமே தவிர அவர்கள் எப்போதுமே வைராக்கியசாலிகள் தான்.

சமூகம் மறைமுகமாக ஆன்மீக உரிமையை பெண்களிடம் இருந்து பறிக்கவே முயற்சிக்கிறது.

பெண்கள் ஏடி.எம் இயந்திரமோ.. வீட்டில் மிக்சி.. கிரைண்டர் போல் இன்னொரு சமையல் இயந்திரமோ அல்ல என்பதை முதலில் அவர்கள் உணர வேண்டும்.

சரஸ்வதி இடுகின்ற பிச்சை தான் அனைவருக்கும் கலையும் .. கல்வியும்..

லட்சுமி இடுகின்ற பிச்சை தான் அனைவருக்கும் தனமும் .. தானியமும்..

காளி இடுகின்ற பிச்சை தான் அனைவருக்கும் தைரியமும் .. தன்னம்பிக்கையும்...

இந்த மூவரின் பிச்சையால் தான் மூவுலகமே வாழ்கிறது.

யானைகளின் பலம் யானைகளுக்கு தெரியாதது போல் பெண்களின் பலம் பெண்களுக்கு தெரிவதில்லை.


பெண்கள் பிரம்ம ஞானம் அடையும் உரிமையை மறுப்பது பெரும் மூடத்தனம். (ஆத்ம ஞானமே பிரம்ம ஞானம்) உலக விஷயங்களில் சில கட்டுப்பாடுகளை அவர்கள் மதிப்பது நீதிகளையும் நன்னெறிகளையும் நிலைநாட்டவே .. 

அவர்களுக்கு இயற்கையிலேயே (பௌதீக ரீதியாய்) சில தடைகள் இருப்பதால் சில வரையறை இருக்கிறதே தவிர இது அடிப்படையான தாழ்வுநிலை எனப் பொருள் தராது. சீதா ராமன் .. ராதா கிருஷ்ணன் என்பதில் பெண் பெயரே முன்னர் வருகிறது. பெண்களின் மதிப்பு அத்தகையது.

(ஆதாரம் : பிரச்னோத்தர வாஹினி - இறைவன் ஸ்ரீ சத்யசாயி. ஆசிரியர்: ஸ்ரீமான் கஸ்தூரி)

ஆத்மாவுக்கு பால் இன பேதம் இல்லை..

ஆத்ம ஞானம் அடைவதற்கும் அப்படியே!

  

பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக