தலைப்பு

திங்கள், 26 அக்டோபர், 2020

ஷிர்டி சாயி பாபா தன் அடுத்த அவதாரத்தைப் பற்றி விளக்கிய தெய்வீக சான்றுகள்!


இறைவன் ஸ்ரீ ஷிர்டிசாயி அடுத்த அவதாரமான சத்யசாயியாய் உதிக்கப்போவதைக் குறித்து தன் அணுக்கமான பக்தர்களிடம் பிரகடனப்படுத்திய சான்றுகளும்/ குறிப்புகளும் இந்தப் பரவசப்பகுதியில் தெளிவாய் விளக்கப்படுகிறது...

அன்று வந்ததும் அதே கடவுள்
இன்று வந்ததும் இதே கடவுள்
என்றும் உள்ளது ஒரே கடவுள்
மூன்று ஆயினும் ஒரே கடவுள்..
அந்தக் கடவுளே மூன்று ரூபங்களை தாங்கிய சாயிபாபா எனும் பூரண பரபிரம்மம்!


ஷிர்டி பாபா தன் பக்தர்களிடம் தனது அடுத்த அவதார வருகையை அறிவித்திருக்கிறார். உடல் சமாதிக்குப் பிறகும் தனது சூட்சும பிரவேசத்தால் பல இடங்களில் காட்சி அளித்து இதை விவரித்திருக்கிறார்.


இதை ஒரு தொகுப்பாக இணைத்து சத்சரிதத்தில் வெளிவந்திருக்கலாம்.
தகவல் பரிமாற்றத்திலும்.. இறைவன் ஷிர்டி சாயி சொன்னதன் உள்ளர்த்தம் புரிந்து கொள்ளாமல் இருந்ததும் வெளிவராமல் இருந்ததற்கான ஒரு காரணம்.

புத்தர் சொன்னதே அவரின் சீடர்களுக்கு முழுதாக ஏறவில்லை..
இறைவன் மிக மிக உயரத்திலிருந்து பேசுகிறார்.. நாமோ அறியாமை எனும் அதள பாதாளத்தில்... மாயை எனும் இருளில் வாழ்ந்து வருகிறோம்..

அந்த அகண்ட வெளிச்சம் பிரயாணித்து நம்மை நோக்கி வருகையில் முழு வெளிச்சம் சேர்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஏற்கனவே பழக்கப்பட்ட மனித மனம் ஒவ்வொரு வார்த்தைக்கும் அதற்கான அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல்..தனக்கான அர்த்தத்தை எடுத்துக் கொள்கிறது. எனவே இறைவன் உபதேசிக்கும் போது வார்த்தை  இறைவனுடையதாகவும்.. அர்த்தம் நம்முடையதாகவும் ஆகிவிடுகிறது . 

இறைவன் சத்ய சாயி தான் ஷிர்டி சாயியாக இருந்து சமாதியான பிறகு யாராருக்கெல்லாம் அடுத்த அவதார வருகையை தெரிவித்தார் என்பதை அவரே விளக்குகிறார்... 


"1918 ம் ஆண்டுக்கு முன்பே நான் என் உடலை விட தீர்மானித்திருந்த போது எட்டு வருடங்களுக்குப் பின் வருவேன் என்று கூறியிருந்தேன். ஆனால் எட்டு வயதுள்ளவனாக வருவேன் என காகா சாஹிப் தீக்ஷித் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டார். அது தவறானதாகவும்.
காகா சாஹிப் தனது நினைவாற்றலை வைத்து வெகு ஆண்டுகள் கழித்தே தவறான புரிதலை தனது டைரியில் எழுதியிருக்கிறார்.

அப்துல் பாபா


1918 ற்குப் பின் பலவிதமான பக்தர்களுக்கு நிதர்சனமாக தரிசனம் அளித்தேன். அதில் அப்துல் பாபா குறிப்பிடத் தகுந்தவர். நான் அவரிடம் தோன்றி "இந்த உடல் ஒழிக்கப்பட்டு விட்டது. என்னை யார் ஒழிக்க முடியும்?" என்றேன். மெட்ராஸ் மாகாணத்தில் ஏழு வருடங்கள் கடந்து அடுத்த அவதாரமாய் தோன்றுவேன் எனவும் தெரிவித்தேன். 
சமாதியடைந்த மூன்று மாதங்களுக்குப் பின் கிரிக்கியில் ஒரு கிராமத்தில் தோன்றி "உடல் போய்விட்டது ஆனால் நான் மறுபடியும் தோன்றுவேன்" எனத் தெரிவித்தேன். 
சமாதியடைந்த 6 மாதங்களுக்குப் பின் என் தகரக் குவளையுடன் துவாரகா மாயியில் தோன்றிய போது சொன்னேன்.
தாஸ்கனுக்கும் , மஹல்சபதிக்கும் இது தெரிவிக்கப்பட்டது. 10 மாதங்கள் கருவில் கழிந்த பின்னர் 1926ல் இந்த உடல் அவதரித்ததால் 7 என்ற கணக்கும் உண்மை.. காகா சாகிப்பிடம் கூறிய 8 என்ற கணக்கும் உண்மையே"

(ஆதாரம்: Sri Sathya Sai Speaks - 1961 அக்டோபர் 23ம் நாள் விஜயதசமியன்று )

தவறுவது மனித இயல்பு..திருத்துவது இறைவன் இயல்பு.

அப்போது ஆந்திரா மெட்ராஸ் மாகாணமாகவே இருந்தது. ஆகவே சுவாமி அப்படி மொழிந்திருக்கிறார்.

ஷிர்டியில் சுவாமி நேரடியாக.. மிகவும் பிரத்யேகமாக அப்போதே சொல்லியும் பெத்த பொட்டு அம்மாவான திருமதி சாரதா தேவிக்கு சத்ய சாயியை முதன்முதலில் கேள்விப்படும் போது சந்தேகமே வந்தது. இது தான் மனித மனதின் இயல்பு. 
உள்ளதை உள்ளபடி உணர‌ முற்படாமல் எல்லாவற்றுக்கும் உரை எழுதுவது மாய மனதின் சுபாவம்.

நிலா குளத்திலும்... கடலிலும்... நதியிலும் ஒரேவிதமாகவே ஒளிர்கிறது. தன் வண்ணத்தை மாற்றிக் கொள்வதில்லை.
ஷிர்டி சாயியும்.. சத்ய சாயியும்.. பிரேம சாயியும் ஒருவரே. கடவுள் ஒன்றே.

இந்த மனதைக் கடந்து சாயி மாதவனிடம் சரணாகதி அடைவதொன்றே ஆகச் சிறந்த வாழ்க்கைக்கான பேரர்த்தம் என்பதை ஆழமாய் உணர வேண்டும்.

சத்தியம் வளரும்

  பக்தியுடன்
வைரபாரதி ✍️ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக