தலைப்பு

வியாழன், 22 அக்டோபர், 2020

விதியை மதியால் வெல்ல முடியுமா? அப்படி வெல்ல முடிந்தால் எதற்காக சுவாமியை வழிபட வேண்டும்?


விதி என்பது தெய்வீக நிர்ணயம். ஒவ்வொரு மனித வாழ்வுக்கும் பொது விதியும் உண்டு.. தனிப்பட்ட விதியும் உண்டு. 

பொதுவிதி சமூகத்தினால்.. தனிப்பட்ட விதி அவரவர் பூர்வ ஜென்ம கர்மாவினால்...

வீட்டின் விதானத்தில் படுத்து உறங்க முடியாது.. தரையில் தான் படுத்து உறங்க முடியும் என்பது போல் விதி. ஆனால் கட்டிலில் படுப்பதா? கட்டாந்தரையில் படுப்பதா? மெத்தையா? கிழிந்த பாயா? என்பது விதியா ? மதியா? 

விதி என்றாலே ஏதோ கெடுதல்.. கொடுமை என மக்கள் மனதில் பரவி இருக்கிறது.. அதை மனதிலிருந்து முதலில் அழித்துவிட வேண்டும்.

மகிழ்ந்திருக்கும் போது மனிதன் "யாவும் விதி" என நினைப்பதில்லை.

துக்கமாக இருக்கும் போதே விதியின் நினைவு மன வீதியில் உலா வருகிறது.

மகிழ்ந்திருப்பது மனிதன் செயல்..

துக்கமாக இருப்பது மட்டும் இறைவன் செயலா?


லாபம் வந்தால் மனித ஆற்றலே காரணம்.. நஷ்டம் வந்தால் இறைவன் ஆட்டுவிப்பதே காரணம் என நினைக்கிறானே மனிதன்..

எவ்வளவு பெரிய அறியாமை!!

பகவத் கீதையில் சுவாமி "கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே!" என்கிறார்.

இதில் கடமையை செய்வது தான் விதி.

திருடன் கொள்ளை அடிக்கிறான். இது கடமையா? இல்லை..

அந்த கடமை தர்ம ரீதியில் அமைந்திருக்க வேண்டும் . இது பொது விதி (சமூக விதி).

ஆக தனிப்பட்ட விதியில் பொதுவிதியும் கலந்தே இருக்கிறது.

பலனை எதிர்பார்க்காதே என்று தான் சொன்னாரே அன்றி பலன் வராது என சொல்லவில்லை சுவாமி.

 எதிர்ப்பார்க்கும் போதே கடமையை மனிதனால் சரியாக செய்ய முடிவதில்லை.

உலக விஷயங்களுக்காக எதிர்பார்த்து சுவாமியை வழிபடுவதும் வழிபாடே அல்ல..

வழிபாடு வர்த்தகம் அல்ல...

சிலர் விதியையும் நவ கோள்களையும் இணைத்து கிரக கோளாறு என்கிறார்கள்.

ஒன்றே ஒன்றை மட்டும் மனிதன் புரிந்து கொள்ள வேண்டும்.


மலை உச்சியில் நின்று நாயே என கத்தினால் அது தேனே என எதிரொலிக்காது.

மனிதன் எதைச் செய்கிறானோ அதுவே அவனுக்கு திரும்பக் கிடைக்கிறது.

அந்த திரும்ப கிடைப்பது என்பது உடல் / மனம் சார்ந்த நோயாகவும் அமைகிறது.

நமக்கு கிடைக்க வேண்டியது நாம் முன்பு எதை கொடுத்தோமோ அதிலிருந்தே கிடைக்கப் பெறுகிறது. அதற்கு நவ கோள்கள் என்ன.. பிரபஞ்சமே ஒத்திசைவாகிவிடுகிறது.

ஆகவே தான் சுவாமி அனைவரையும் அன்பு செய் என்கிறார்.

யார் நம்மை மனம் நோகும்படிச் செய்தாலும் அந்த செயலை மறந்து மன்னித்து அவரை நேசிக்க வேண்டும் என்கிறார் சுவாமி.


Love lives by giving and forgiving

Self lives by getting and forgetting

(அன்பு கொடுப்பதாலும் மன்னிப்பதாலும் வாழ்கிறது.

அகம்பாவம் பெறுவாலும் மறப்பதாலும் வாழ்கிறது.)

பரஸ்பர அன்பை நாம் முதலில் கடைபிடிக்க வேண்டும்.

சுவாமி சொன்ன எதையும் கடைப்பிடிக்காமல் சுவாமி நமக்கு அது தர வேண்டும்.. இது தரவேண்டும்... இமை போல் நம்மை அவர் காப்பாற்ற வேண்டும் என எதிர்பார்ப்பது சரியா? 

பார்வையே இல்லாத விழிகளுக்கு இமை இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?

சுவாமி சொல்வதை வாழ்க்கை ஆக்கும் போதே விழிகளில் பார்வை வருவதாய் வாழ்க்கை வெளிச்சமாகிறது.


விதி மதி எனும் எதுகை மோனை அல்ல சத்தியம் என்பது.

மதி என்பது நிலாவையும் குறிக்கிறது..

மனதையும் குறிக்கிறது.

அந்த மதியையும் நமக்கு இறைவன் சத்யசாயியே தந்திருப்பது.

 அந்த நிலாவை மேகம் மறைத்திருப்பது போல் மதியை மாயை மறைத்திருக்கிறது. அது விலக வேண்டும்.

"விதி விதி என சொல்லிக் கொண்டிருக்காதே... உன்னுடைய ஊக்கமும் ஆக்கமும் செயல்படாமல் எப்படி நல்ல பலனை அடைய முடியும்..?

கையில் பழத்தை வைத்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தால் அது எப்படி பழச்சாறாகும்?"

உன் ஆற்றலின் தன்மையை குறைவாக எடைபோடாதே என்கிறார் சுவாமி.

அந்த உள்ளார்ந்த ஆற்றலே இறைவன் சத்யசாயி என உணர வேண்டும்.

(ஆதாரம் : சந்தேக நிவாரணி - ஆசிரியர் ஸ்ரீமான் கஸ்தூரி... பக்கம் :70)

ஆக நல்ல செயல்களைச் செய்து நல்ல பலன்களை அனுபவிப்போம்.

தீய பலன்களை அமைதியாக அனுபவித்து அவை நாம் முன்பு செய்த தீய செயல்களினால் விளைந்தவை என உணர்ந்து சுவாமியை வழிபட்டு அந்த மன/ உடல் வேதனை போக வலிமை பெறுவோம்.

சுவாமி வழிபாடு உள்ளார்ந்த ஆற்றலை அதிகப்படுத்துகிறது. எதையும் தாங்கும் பக்குவம் தருகிறது.

நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.. நீங்கள் செய்கின்ற செயல் எந்த வகையிலாவது.. எந்த கோணத்திலாவது.. அது உங்களையே திரும்ப தாக்கும்..

விதியும் சுவாமியே..

மதியும் சுவாமியே..

யாவும் சுவாமி சங்கல்பம் என்பதை உணர வேண்டும்!

பூக்களைத்தான் பிறர் மீது வீச வேண்டும்.

பூந்தொட்டியை அல்ல...

 

  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக