தலைப்பு

செவ்வாய், 6 அக்டோபர், 2020

மலேஷியா பக்தர்க்கு படுக்கை அறையில் ஒளிப்பிழம்பாய் தரிசனம் அளித்த தெய்வ சாயி!


இறைவன் சத்ய சாயி பக்தர்கள் உலகம் எங்கும்... வரைபடத்தில் இல்லா தேசத்திலும் சுவாமி பக்தர்கள் இருக்கிறார்கள்‌. இதில் மகோன்னத தேசமான மலேஷியா தேசத்து பரமாத்ம பக்தர் சாயி கிருஷ்ணன். அவர் சத்ய சாயி யுகத்திற்கும் .. அதன் யூ.டியூப் சேனலுக்கும் செய்து வரும் கை வண்ணமும் .. குரல் வண்ணமும் அநேகம் அநேகம். அன்னாரின் சிலிர்ப்பூட்டும் சத்ய சாயி அனுபவம் இதோ... 

பஹாங் என்ற ஊரில் பிறந்தவர் சாயி கிருஷ்ணன். குசேலனாய் இருந்தே ஆன்மீக ஞானத்து குபேரனாய் ஆனவர் இவர். சிறிய அறை.. பலகை வீடு.. பத்து பேர்.. வெளியே கழிப்பறை என தன் இளமை காலத்தில் வறுமை இவரது வாழ்வில் வசதியாக குடி இருந்தது.

இவரின் கலைத்திறன் ரவிவர்மா சிறுவயதில் வரைந்த சுவற்று ஓவியமாய் இவரும் இளம் வயதிலிருந்தே வரைய ஆரம்பித்திருக்கிறார். தன் வெறுமையை வண்ணங்களால் நிரப்பினார்.

ஒரு ஏழையால் மட்டுமே உணர முடியும் இறைவனின் கருணை எவ்வளவு விலையில்லாதது என‌.. ஏழையின் இதயத்தில் தான் இறைவன் சத்ய சாயி ஓடோடி வந்து கோவில் கொள்வார்.

உணவுக்கு பஞ்சமான போதும்.. இவரின் கனவுக்குப் பஞ்சமே இல்லை! சிறு வயதிலிருந்தே இறைவன் யார்? ஏசுவை தொழுவதற்கு மதம் மாறினால் தான் இறைவன் நம்மை ஏற்பாரா? ஆன்மீகம் என்றால் என்ன? எனப் பல கேள்விகள் இவருக்கு.

கேள்விகள் நியாயமாக இருந்தன.. ஆனால் இவருக்கு வந்து சேரும் பதில்கள் பொய்களாக இருந்தன..

சர்ச்சில் அருமையான உணவு தருவார்கள்.

இவரோ கனவை தவிர எதையும் ருசித்து உண்ண இயலாதவர். ஆகவே அந்த உணவு ருசியாக இருந்திருக்கிறது. அதில் சில மதமாற்று கும்பல் மதம் மாறிவிடு என்றார்கள். சோற்றுக்கும்... பொய் சுகத்திற்கும் மத மாற்று வலை பெரிதாய் இவர் மேலும் வீசப்பட்டது!

யாவும் ஒரே பாதையைக் காட்டும் மதங்கள் தான். அதற்காக மதம் மாறச் சொல்லவே இல்லை இறைவன் சத்ய சாயி.

உண்மையான ஹிந்து.. கிறிஸ்துவ முஸ்லிம்களை தான் உருவாக்க  சர்வ மத நல்லிணக்கத்தை உருவாக்கினார். ஆறாம் படிவம்(Form 6) அது அன்று தெரிந்திருக்காததால் சாயி கிருஷ்ணன் உள்ளம் சற்று தடுமாறியதில் தலையணைக்குப் பின் கருவறை கொண்ட முருகன் படம் சுக்கல் நூறாய்ப் போனது.

கிறிஸ்துவ மதம் ஒரு புறம்.. புத்த சமயம் மறு புறம்.. இவை அங்கும் இங்குமாக இவரை விடாப்பிடியாக இழுத்துக் கொண்டிருந்தது. கிழிந்த முருகன் படத்தைக் கடந்து வேறேதும் விபரீதம் நேர்வதற்குள் இறைவன் சத்ய சாயி தடுத்தாட் கொண்டது இவரின் பூர்வ ஜென்ம புண்ணியமே.

ஒரு நாள்.. பினாங்கு சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்த சாயி கிருஷ்ணனுக்கு அருகாமை கிருஷ்ணர் கோவிலில் இருந்து ஒரு பஜனைப் பாடல் கேட்கிறது.ஆம்! இறைவன் சத்ய சாயி பஜனையால் இவரை ஆட்கொள்கிறார்.

உள்ளே எட்டிப் பார்க்கிறார்.

பெரிய சுவாமி படம்.. சர்வ மத குறியீட்டுப் படம்.. வியந்து போகிறார்.

அந்தப் பாடலில் கரைந்து மனம் காணாமல் போகிறது. பஜனை ரீங்காரம் இவர் இல்லம் செல்லும் வரை கூடவே வந்தது‌.

"கோவிந்த ஹரே.. கோபால ஹரே" பஜனை என்னவோ செய்தது அவரை...

காரணம் தெரியுமா?

அந்தப் பாடல் இறைவன் சத்ய சாயி குரல் என்று அப்போது அவருக்கு தெரியவில்லை. தன் குரல் உயர்த்தித்தான் இறைவன் தனக்கான பக்தராக இவரை இழுத்துக் கொண்டு ... ஏற்றுக் கொண்டார்.

சுவாமி புகைப்படம் ஒன்றை முதன்முதலாக வாங்குகிறார்.. அதையே அடிக்கடி பார்த்துக் கொண்டே இருப்பார். 

சுவாமி ரூபம் தவிர வேறேதும் இவ்வுலகத்தில் பேரழகு இல்லை. அந்தப் புகைப்படத்தையே இன்றளவும் தனது பூஜையறையில் பிரதானமாய் வைத்து வழிபடுகிறார்.

அந்த பினாங்கு சாலை புத்தகக் கடையை போகிற போக்கில் பார்க்கிற போது ஒரு புத்தகம்.. இந்த புத்தகத்தில் இருப்பவரை தானே கோவில் பஜனையில் கண்டோம் என வாங்கி இருக்கிறார்.

சாயி கிருஷ்ணன் அதை விலை கொடுத்து வாங்குவதற்கு முன் இறைவன் சத்ய சாயி தன் குரல் கொடுத்து அவரை ஏற்கனவே வாங்கிவிட்டது  அன்று அவர் உணர்ந்திருக்க வாய்ப்பே இல்லை.

இல்லம் வந்து புத்தகம் பிரிக்கிறார். திறக்காத இதயம் திறந்து கொள்கிறது. அதை வாசிக்கிறார்.. புத்தகமோ சாயி கிருஷ்ணனின் மனதை வாசித்து சத்ய சாயி இறைவனே எனும் தெளிவை மெல்ல மெல்ல ஏற்படுத்துகிறது.

அந்த நேரத்தில் "பாபா.. நீங்கள் இறைவன் என்றால் அற்புதம் ஏதாவது நிகழுமா? என்றொரு உள்உணர்வு ஏற்படும் கணத்திலேயே ...

படுக்கை அறை வைகுண்டமாவது போல் ஒரு வெள்ளி நிற ஒளிப்பந்து இவர் முன் தோன்றி.. அதிலிருந்து சிறு சிறு நட்சத்திரங்கள் இவர் நெற்றி மீது சிதறி ஆசீர்வதிக்கிறது.

இவருக்கு பூமியில் இருப்பது போல் உணர்வேதுமில்லை.. ஆனாலும் அதை தாங்கிக் கொள்ளவும் இயலவில்லை. மனதிற்குள்ளே சுவாமியை வேண்ட அந்த ஒளிப்பந்தும்.. நட்சத்திர சிதறலும் நின்று போயிருக்கிறது.

அது கனவில்லை.. கற்பனையில்லை...

இவருக்கே அது புதிய அனுபவம் என்பதால் அந்த 1976 'ல் தனது 22ஆவது வயதில் இவர் அந்த பேரனுபவத்தை உணர்ந்ததில் இருந்து இவரது வாழ்க்கை சுவாமி திசையில் பயணிக்க ஆரம்பிக்கிறது.

உன்னத அனுபவம்.. உயர்வான அனுபவம் .. ஒரு சில மகான்களுக்கே நிகழும் அனுபவம். சுவாமி ஒருவரின் உள்ளார்ந்த உள்ளத்தை  கவனத்தில் கொண்டே இத்தகைய அனுபவம் தருகிறார். அவருக்கு நூறு சதவிகிதம் அது நிகழ்ந்ததை அடியேனால் உணர முடிகிறது காரணம் இவரின் பணிவும்.. பக்தியும்.. பவ்யமுமே அதற்கான சான்றுகள். இவரின் பக்கத்து வீட்டினர் தவிர அந்தப் பேரனுபவத்தை யாருமே நம்பவில்லை.

பொதுவாக மனிதர்களுக்கு தங்கள் அனுபவமே பெரியது.. தாங்கள் பெறாத அனுபவம் யார் பெற்றாலும் அதை சந்தேகிப்பது என்பதான அவநம்பிக்கையே ஆழமான பக்தி இறைவன் மேல் அவர்களுக்கு இல்லை என்பதை காட்டிவிடுகிறது.

அன்று இரவு விடிந்தது இவருக்கு மட்டும் சத்ய சாயி விடியலாக.. தவறாது அந்த அனுபவத்திலிருந்து அதே கிருஷ்ணர் கோவிலின் சாயி பஜனுக்கு செல்வார்.

சீமா காலேஜ் இயக்குநர் சுனில் குமார் டட் அவர்களின் இல்லத்திலும் சாயி பஜனில் கலந்து கொள்வார். சுவாமி பற்றிய எல்லா புத்தகங்களையும்.. அவரும் தர இவர் வாசித்து விடுவார். சுவாமி பற்றிய பக்திப் புத்தக மூழ்குதலும் இதயத்தை ஞானத்தால் குளிப்பாட்டி வாழ்க்கையை நிச்சயம் கரை ஏற்றவே செய்கிறது. இவருக்கு செய்தது போல்...

தமிழ் பள்ளியிலேயே படித்ததால் சுவாமி குறித்தான தமிழ் வாசிப்பும்.. ஆங்கில மொழியறிவு இல்லாமையை  சுவாமி பற்றிய ஆங்கில புத்தக வாசிப்பே இவரிடம் போக்கியதால்... சுவாமி தான் இவரின் ஆங்கிலப் பேராசிரியரும் கூட...

Man of Miracles புத்தகம் தான் இவர் முதன்முதலில் கடையில் வாங்கி வாசித்தது.. அதே புத்தகத்தின் தமிழாக்கம் தான் இவர் குரலோடு அத்தியாயம் அத்தியாயமாக சத்ய சாயி யுக யூடியூப் சானலில் காணொளி ஆனது.. இது தான் டிவைன் கனெக்ட்டிவிட்டி... காலத்தின் அற்புதமும் கூட‌... 

சுவாமி கடவுள் என உணர்ந்த அந்த இளமை வேகத்தில் நண்பர்களிடமும் தெரிந்தவர்களிடமும் அந்த பேரனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதில் இவருக்கு தோல்வியே நேர்ந்திருக்கிறது.

கடவுளே மனிதனை அதுவும் இந்த கலியுகத்தில் தன்னை நம்ப வைப்பதற்கு படாதபாடு பட வேண்டி இருக்கிறது என்பது இந்த யுகத்திற்கு மட்டுமான தனிப்பட்ட சிறப்பு.

சுவாமி பக்தர் என்று சொல்லிக் கொள்பவர்களே கூட சுவாமி அனுபவம் பலவற்றை நம்பவே மறுக்கின்றனர். அரை குறை பக்தி எதையும் முழுதாய் நம்பாது. இதில் பக்தி இல்லாதவர்களையும் .. நாத்திகர் பற்றியும் சொல்ல வேண்டியதே இல்லை.

கல்லூரி படிப்பை முடித்த இவர் மாறான் எனும் ஊரில் ஆசிரயப் பணிக்குச் செல்கிறார். அது பல மைல் தூரம்.

அவர் வசிக்கும் இடத்தில் சீன பக்தர் ஒருவர். நண்பராகிறார். அவரது மகளின் ரத்தப் புற்று நோயை இறைவன் சத்ய சாயி போக்கியதன் அற்புதத்தை அறிந்து சிலிர்க்கிறது இவரின் மனம் .

அதுவரை நோய் தீர்க்கும் பேரனுபவம் என்பது புத்தக வாசிப்பிலேயே இருந்த அவருக்கு.. நேரடி சாட்சிய அனுபவம் உணர புல்லரிக்கிறது.

இருவரும் சேர்ந்து ஒவ்வொரு வியாழனும் 140 கிலோ மீட்டர் பேருந்தில் கடந்து கோலாலம்பூர் விவேகானந்த ஆசிரமத்தின் சாயி பஜனைக்கு சென்று நள்ளிரவில் திரும்புவர். சாலையோ கரடு முறடு.. இவர்களின் உள்ளமோ பக்திச் சுவடு.. இளம் காளை பயம் அறியாதது போல் பக்தி உள்ளம் தூரம் அறியாததே!

அந்தக் காலத்து அனுபவம் இப்போது நினைத்துப் பார்த்தாலும் சிலிர்ப்பையே தரும்.

1976 ல் ஒரு முறை பஜனையில் இவர் கலந்து கொள்ள திடீரென ஓர் பேரானந்த அமைதி சூழ்கிறது இவர் இதயத்தை.. அந்த தியான நிலையின் மறு அனுபவத்திற்காக இன்றளவும் காத்திருக்கிறார்.

தியானம் என்பதே எதையும் எதிர்பார்க்காமல் அந்த பேரமைதியோடு அமைதியாக பொருளற்று காத்திருப்பது தான்!

வாழ்க்கை ஒரு நீண்ட காத்திருப்பு... ஆனால் எதற்காகவும் அல்ல...

எனும் அடியேன் கஸலே நினைவுக்கு வருகிறது!

1980ல் இவரும்.. சீன பக்தரும் சேர்ந்து தெமர்லோ என்ற இடத்தில் சத்ய சாயி ஆன்மீக சேவா மையத்தை துவக்குகிறார்கள்.

அது இன்றளவும் ஆன்மீக ஆலமரமாய் ஆத்ம நிழல் தருகிறது.

1981ல் புட்டபர்த்தியில் முதல் சுவாமி தரிசனம். சுவாமி காரில் செல்வதைக் கண்டு பசுவைப் பார்த்த கன்றாய் பின்னால் ஓடுகிறார். சுவாமி கோகுலத்தில் காரை நிற்க வைத்து அங்கே மயில்களை அரவணைக்கிறார்.

பல மைல் கடந்து... கடல் கடந்து வந்த இந்த மலேஷிய பக்தர் சுவாமியை தனியாக தரிசிக்கிறார். பேச நா எழவில்லை..

பிரபஞ்சப் பேரொளியின் முன் மெழுகுவர்த்தி என்ன பேச முடியும்..! உருகுகிறார்.

அதே சந்தர்ப்பத்தில் வேறொரு பொழுது தரிசனம். சுவாமி கிருஷ்ண ரூபமாய் கறுத்த வதனத்தோடு காட்சி அளிக்கிறார்.

சுவாமி கண் இரண்டும் விண்மீனாய்ப் பிரகாசிக்கிறது.

விண்மீனைக் கண்ட தாமரைக் குளமாய் இவர் இதயம் பரவசப் பூப் பூக்கிறது!

பினாங்கு கிருஷ்ணர் கோவில் பஜனையில் பஜன் பாடப் பாட சுவாமி படத்திலிருந்து நீர்த்துளிகள் தோன்றி வழிகிறது. மின்சார பரவசம் அடைகிறார்.

ஓவென்று வெளியே ஓடிப் போய் பரவச நிலையில் அழுகிறார்.

இப்படி அழுதவர் தான் சைதன்ய மகா பிரபு.

இப்படி அழுதவர் தான் துகா ராம்.

இப்படி அழுதவர் தான் பக்த மீரா.

பக்தியின் உச்சகட்ட வெளிப்பாடு என்பது அழுகையே..


பல்லாயிரம் கிலோமீட்டர் தள்ளி பக்தர் இருக்க.. சர்வ வியாபியான சுவாமி தன் இருப்பை உணர்த்த இதுவன்றோ இறை நிலை என சுவாமியை நினைத்து உருகுகிறார்.

ஒரு முறை சர்வ தர்மா பிரார்த்தனை பாடி இவர் ஆர்த்தி எடுக்க சுவாமி படத்தில் தேன் துளி தோன்ற .. அடடா ஆரத்தி பாடல் சொல்லித் தானே எடுக்க வேண்டும் என்ற தவறை உணர்கிறார்.

சுவாமி ஒருவரின் தவறைக் கூட அவரின் மனம் புண்படாத வண்ணமே தேன்துளியாய் இனிக்க இனிக்க எடுத்துரைப்பவர்.

ஒரு பக்தர்.. அவர் மலாகாவின் தலைமை ஆசிரியர்.. அவரை புட்டபர்த்தி ஆஞ்சநேயர் கோவிலில் சந்திக்க அவரது மகளின் மனநோயை அறிந்து... சுவாமி உங்களுக்கு கண்டிப்பாக தரிசனம் தருவார் என இவர் சொல்ல.. முதல் ரோவில் தரிசனம்.

சுவாமி கோவிலை விட்டு மணல் வெளியில் நடந்து அந்த பக்தரிடம் வந்து விபூதி சிருஷ்டி செய்து தர.. அதை அவர் ஊரில் மகளுக்கு அணிவிக்க நோயும் குணமாகியிருக்கிறது.

சுவாமியிடம் இந்த மலேஷிய பக்தர் பாதநமஸ்காரமும் பெற்றிருக்கிறார். எப்போதும் பாதப் புகைப்படத்தை ஒரு கையால் தொடும் பழக்கத்தோடே சுவாமியின் பாதங்களைத் தொட மலருக்கே மென்மை அளிக்கக் கூடிய மிருதுவாய் திருப்பாதம் இருப்பதை உணர்ந்து பரவசப்படுகிறார். 


ஒரு தமிழ்ப் பள்ளியில் எளிய மாணவர்களுக்கு மனித நேய வகுப்புகள் எடுக்க ஆரம்பிக்கிறார். வாரம் ஒரு முறை அவர்களுக்கு இவர் உணவுப் பொட்டலங்கள் வழங்குவது வழக்கம். அந்த முறை 60 நூடுல்ஸ் பொட்டலங்களை ஒரு பெண்மணி தயார் செய்து அளிக்கிறார். ஆனால் அந்த வகுப்பில் எண்ணிக்கையைக் கடந்த மாணவர் கூட்டம். என்ன செய்வது என உத்தேசிக்க.. இவர் அளித்து இன்னும் ஓரிரு பொட்டலங்களே மிஞ்ச.. கிடைக்காத மாணவர்கள் பலர் காத்திருக்க கையைப் பிசைகிறார்.

அப்போதே இவர் கண்முன்னர் நூடில்ஸ் பொட்டலப் பாக்கெட்டுகள் வளர ஆரம்பிக்கின்றன..

மாணவர்கள் உறைந்து போக.. இவர் சாயி ராம் என அலற..

துரௌபதிக்கு வஸ்திரம் அளித்த அதே சத்ய சாயி கிருஷ்ணரே இந்த சாயி கிருஷ்ணருக்கு நூடுல்ஸ் பாக்கெட்டை வளரச் செய்திருக்கிறார். இது 2005 இன் அனுபவம்.

சமசிபூர் எனும் இடத்தில் காலில் அறுவை சிகிச்சையான இவரின் நண்பர் பட்ட காலிலேயே படும் என்பது போல சிறுநீரக சிகிச்சைக்கு பணமின்றி அவதிப்படுகிறார். 27000 வெள்ளி தேவைப்படுகிறது. இவரோ அவருக்காக சாயி மையத்தை நாடுகிறார். 4000 வெள்ளி தான் சேகரிக்க முடிந்திருக்கிறது. டாக்டரும் சுவாமி கிருபையால் தனக்கு ஃபீஸ் வேண்டாம் என்கிறார். 

எந்த டாக்டர் வேண்டாம் என்பார் இந்த காலத்தில்? 

சுவாமியே மருத்துவர் வாய்வழியே சொல்ல வைத்திருக்கிறார்.

ஆனாலும் மருத்துவ செலவுக்கான மீதம் 12000 தேவை. கையைப் பிசைக்கிறார் சாயி கிருஷ்ணன். பிசைந்த கையைக் குவித்து சுவாமியிடம் வேண்டுகிறார்.

அலுவலகம் செல்கிறார்.

ஒரு தொலைபேசி.. குரல் மட்டுமே கேட்கிறார். சாயி ராம் நான் சுவாமி பக்தன்.. எவ்வளவு பணம் தேவை? என ஒருவர் கேட்கிறார். இவர் சொல்ல.. இதோ அனுப்பி விடுகிறேன் அக்கவுண்ட் நம்பர் சொல்லுங்கள் என்கிறார்.

முகம் தெரியாத ஒரு பக்தரின் உதவி என்பது சுவாமியின் சங்கல்பத்தால் அன்றி எதனால் நிகழும்!

பிறருக்காக நாம் செய்யும் நியாயமான வேண்டுதல்களை சுவாமி  உடனே நிறைவேற்றிவிடுகிறார். 

இவர் மகனோடு பர்த்தி தரிசனம் செல்கிறார். ரிச்வான் - என்பான் வைரஸ் பரவி உலக பீதியை கிளப்பிய காலக்கட்டம்.

மகனுக்கு காய்ச்சல். வைரஸ் இல்லை டைஃபாய்ட் என உணர சமாதானம் அடைகிறார்.

சுவாமி எப்போதுமே தன் பக்தர்களுக்கு வரும் இன்னல்களின் வீரியத்தை குறைத்தபடியே  அனுபவிக்க வைக்கிறார்.

இதற்காகவே பக்தர்கள் நாம் அடுத்த பிறவியில் ஒருவேளை பிறந்தாலும் சுவாமியின் காலடியிலேயே விழுந்து கிடக்கும் நன்றிக் கடன் அவ்வளவு ஏராளமாய் நமக்கு இருக்கிறது.

15 நாள் வரை காய்ச்சல் இழுக்கும் என மருத்துவர் சொல்ல.. சுவாமியின் பார்வை கலங்கிய இவர் மேல் விழ.. வாசல் வழியே முடியாமல் நடந்து வந்த மகன் மேலும் விழ.. அந்த நொடியே டைஃபாயிட் வேர்த்து விறுவிறுத்து உடலை விட்டு  ஓடிப் போயிருக்கிறது.

இவருக்கு இரண்டு மகன்கள்.. இருவரும் டாக்டர்கள்.

அவருக்காக இவர் சுவாமியை வேண்டி காயத்ரி மந்திரம் ஜபிக்க கடினமான தேர்வையும் எளிதாய் மருத்துவத் தேர்ச்சிப் பெற்றிருக்கிறார்.

சாயி கிருஷ்ணன் ஆற்றிவரும் சேவையை பகிர ஆரம்பித்தால் ... பதிவு அனுமார் வால் கோட்டையாய் நீண்டு கொண்டே போகும்..

அன்னை ருக்மணி போதும் என்று மூன்றாவது கைப்பிடி அவலை சுவாமி எடுக்கையில் தடுத்தது போல் சிலவற்றை மட்டும் பகிர்கிறேன்...


1998 முதல் தமிழ் வழியாக மலேஷிய மாணவர்களுக்கு மனித மேம்பாட்டு கல்வி நடத்தி வருகிறார். இக்காலத்து பெற்றோர்கள் யாரும் தங்கள் குழந்தைகளுக்கு செல்லம் கொடுக்கும் அளவிற்கு அறநெறியைக் கொடுத்து வளர்ப்பதில்லை . ஆனால் இவர் எது அவசியமோ அதை எளிய வசதியற்ற பிள்ளைகளின் வேரில் சத்ய சாயி அமுதம் ஊற்றுகிறார்.

இதுவரை 80,000  மாணவர்களுக்கு மேலாக சத்ய சாயியின் மனிதநேய பண்புகளைப் பற்றி உரையாற்றியுள்ளார்.

இவரை பல பள்ளிகளும் .. கல்லூரிகளும் அழைத்து போதனைகள் கேட்க வைக்கிறது. அவர்களுக்கு வர்ணம் தீட்டச் சொல்லி தந்திருக்கிறார். எதையும் காசாக்க துடிக்கும் கலியுகத்தில் பல கோவில்களிலும் பூங்காக்களிலும் இவரது ஓவியமே அனைவரையும் வர்ணக் கை கொண்டு வரவேற்கிறது.

ஒரு சாரார் மட்டும் பதுக்கி வைத்திருந்த காயத்ரி மந்திரத்தை இறைவன் சத்ய சாயியே கூர்ம அவதாரத்தில் வேத ரட்சணம் செய்தது போல் காயத்ரி மந்திர ரட்சணம் செய்தார். இதன் தொடர்ச்சியாக  காயத்ரி மந்திர மேன்மையையும் .. உச்சாடனத்தையும்.. அதன் வழி நல்லுரைகளையும் மலேஷிய மாணவ இதயத்தில் விதை தூவி வருகிறார்‌ சாயி கிருஷ்ணன்.

சுவாமியின் தினசரி ஆன்மீக வாக்கிய வேதங்களை தமிழில் ஆறாண்டுகளுக்கும் மேலாக தமிழ்படுத்தி அதை குரல் வழி இணையத்தில் பதிந்து வருகிறார்.

இப்போது அது ஆயிரக்கணக்கில் மீள் பதிவாக பவனி வருகிறது.

இத்தனை சேவை ஆற்றியும் இவருக்கு ஆணவம் இல்லை.. பதவிக் கொம்பு... சேவைக் கொம்பு எதுவும் முளைக்காமல் சுவாமியின் காலடிப் பட்டாம்பூச்சியாய் பக்தி சிறகு விரித்து மிகவும் அடக்கமாக.. யார் மீதும் எவர் மீதும் எந்தக் குறையும் சொல்லாமல் இதய சேவையாற்றுகிறார்‌.

இதுவே ஆன்மீக சாதனையின் முதல்படி..

இப்படி சுவாமிக்கு மிகவும்  பிடித்த பங்காரு சாயி கிருஷ்ணன் கிருஷ்ணனாய் இன்றி சத்ய சாயி கிருஷ்ணனின் கைக்குழலாய் இருப்பது சுவாமி மகிமையே..

அதற்கு சத்ய சாயி யுகம் எனும் பிருந்தாவனமும் அவரின் சேவா கானத்தை எங்கெங்கும் எதிரொலிக்கிறது.

  பக்தியுடன்

வைரபாரதி2 கருத்துகள்: