தலைப்பு

திங்கள், 12 அக்டோபர், 2020

பணம் கொடுத்து ஆன்மீக ஞானம் பெறுவதை சுவாமி ஆதரிக்கிறாரா?

கேள்வி: ஆன்மீக யோகம் அளிக்கிறேன் என ஏராளமாய் பணம் வசூலிக்கும் குருமார்களை நம்பலாமா? பணம் கொடுத்து ஆன்மீக ஞானம் பெறுவதை சுவாமி ஆதரிக்கிறாரா?


பதில்: உங்கள் கேள்விகளுக்கு முதலில் நன்றி.மிக மிக அவசியமான கேள்வி. சில பேர் ஆன்மீகம் என்ற பேரில் ஏராளமாய் கட்டணம் வசூலிக்கின்றனர்.

யோகா/ தியான வகுப்புகள் என திசைக்கு திசை சுவரொட்டிகள் / விளம்பரங்கள் என ஏகப்பட்ட வஞ்சக வலை விரிக்கப்படுகிறது. மக்களின் சலன புத்தியையும்.. பேராசையையும் பயன்படுத்தி உங்களுக்கு நிம்மதியான வாழ்க்கை வேண்டுமா? மகிழ்ச்சி வேண்டுமா? ஆன்மீக யோகம் பயில வாருங்கள் என அழைக்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் கட்டணம். எல்லாவற்றுக்கும் பணம்.

இது இறைவன் ஸ்ரீ சத்யசாயி ஏற்காத .. அவருக்கு எப்போதும் பிடிக்காத விஷயம்.

ஆன்மீகம் விலை பொருள் அல்ல.. யோகம் கடைச் சரக்கல்ல..

நிம்மதியையும் / மகிழ்ச்சியையும் எவ்வாறு பணம் கொடுத்து வாங்க முடியும்?

அமைதியைப் பெறுகின்ற உள் சூழலை அவர்கள் அமைத்து தருவதாக உங்களிடம் பிரமையை ஏற்படுத்தி பணம் வசூலிக்கிறார்கள்.

எவ்வளவு பெரிய பாவ கர்மா தெரியுமா?அவர்களையும் வழிபடுகிறார்கள் பலர்.

பாவ கர்மாக்கள் செய்பவர்களை வழிபட்டாலும் நமக்கு பாவ கர்மாவே ஏற்படுகிறது என சுவாமி சொல்கிறார்.

யோகாசனம் பயிற்றுவிப்பவர்கள் வெறும் ஆசிரியர்களே! குருமார்கள் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். யோகாசனம் / பிராணாயாமம் பயிற்றுவிப்பவர்களை மதிப்போம். அதற்காக அவர்களை வழிபடுவது .. ஒரு கார்ப்பரேட் கம்பெனியின் CEO படத்தை பூஜையறையில் வைத்து வழிபடுவதற்கு சமம். அது பாவமும் கூட...

நீங்கள் யோகாசனம் கற்பதில் ஆரம்பித்து..

முதுநிலை பயிற்சி .. அது இது என ஏகப்பட்ட பண விரயம்.

சிலர் முக்தி வகுப்புகள் எனும் பெயரிலும் பணத்தைப் பறிக்கின்றனர். மிக கவனமாக நாம் இத்தகைய ஏமாற்றுப் பேர்வழிகளிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அவர்கள் யோகாவை விற்பவர்கள்.

அவர்களுக்கு யோகாவை விற்க பதஞ்சலி முனிவரோ.. தத்தாத்ரேயரோ copyrights (உரிமம்) கொடுத்தாரா? யோசித்துப் பாருங்கள்.


தத்தாத்ரேயரும் -- பதஞ்சலி முனிவரும் தோற்றி வைத்த யோகத்தை ஒருசில பேர் பயன்படுத்தி பயிற்சி அளிக்கிறேன் என பெரும் பணம் வசூல் செய்வது மிகப் பெரிய மோசடி. தீவினை அது.

அந்த தீவினை எனும் தீயில் நாம் ஏன் சென்று நெய்விட வேண்டும்?

மக்களின் பலவீனத்தை தவறான விதத்தில் பயன்படுத்தி நடந்து வரும் பண வேட்டை அவர்களுக்கே எதிர்வினையாக விரைவில் முடியும்.

இதில் சிலர் கோவிலையும் ஏற்படுத்தி அதனை தரிசிக்கவும் பணம் வசூலிக்கிறார்கள்.

எப்போது யோகா சேவையாக மக்களிடம் சென்று சேரவில்லையோ .. அப்போதே அதன் வீரியத் தன்மையை அது இழந்துவிடுகின்றது.

சில நல்ல யோகா ஆசிரியர்களை கடந்து அவர்களைச் சுற்றி இருக்கும் சீடர் குழும நிர்வாக சீர்கேடும் இதற்கு காரணமாக இருக்கிறது.

அதைப்பற்றி எல்லாம் சிந்திக்காமல்.. அவ்விடம் அணுகாமல் தனிமையில் ஆன்மீக சாதனையைப் பயிற்சி செய் என்கிறார் சுவாமி‌.

சிலர் கட்டணம் வாங்கி சொல்லித் தருவதிலும்.. அவர்களே இலவசமாக சொல்லித் தருவதிலும் யோகத்தில் ஏகப்பட்ட பாரபட்சம்.

வசதியானவர்களுக்கு ஒருவிதம்.. ஏழைகளுக்கு ஒரு விதம் என்ற காலக் கூத்தும் ஆன்மீகப் போர்வையில் நடக்கத்தான் செய்கிறது. 

உண்மையான குருமார்கள் அப்படி செய்வதில்லை.

ஆன்மீகம் யாவருக்கும் பொது!

அதனை பணத்தால் பெற முடியாது.

குண மாற்றத்தாலேயே ஆன்மீகம் இதயத்தினுள் நிகழ்கிறது.

எவன் ஒருவன் ஆசைகளை எல்லாம் விட்டொழிக்கிறானோ அவனே உண்மையில் சந்நியாசி. பணத்தால் ஆகக் கூடிய செயல் ஒன்றும் அவர்களுக்கு கிடையாது என்கிறார் சுவாமி.

முதலில் சந்நியாசியாகவே இருக்க இயலாதவர்கள் எப்படி குருவாக இருக்க இயலும் என்பதை நாம் உணர வேண்டும்.

பழத்தட்டிற்கு ஒரு மரியாதை.. பணத்தட்டிற்கு ஒரு மரியாதை.. வெறும் கையை எடுத்து கும்பிட்டால் பாராமுகம் என அவர்களின் கேவலம் வீதி எங்கும் ஊர்வலம் போகிறது.

அவர்களின் திசையைக் கூட திரும்பிப் பார்க்காதே என்கிறார் சுவாமி.

ஆசிரமத்தை பெருக்கிக் கொண்டே போவதை விட ஆசிரதையை (நல்லிதய நற்பண்புகள்) பெருக்கிக் கொண்டு போக வேண்டும் என்கிறார் சுவாமி.

உண்மையான குருமார்களின் / சன்யாசிகளின் நிலையை சுவாமி இப்படி சொல்கிறார்..

1.பணம் பறிக்கும் குறிக்கோள் / ஆசிரமத்தை வளர்க்கும் குறிக்கோள் இருக்காது.

2. புகழ்ச்சியை விரும்பமாட்டார்கள்.

3. தனது சீடர்களின் நலனை எண்ணியே வாழ்வர்.

4. யார் பிரிந்தாலும் வருந்தாமல்.. யார் இணைந்தாலும் மகிழாமல் இருப்பர்.

5. தன் தவறை சுட்டினால் ஏற்பர்..பிறரை தவறே சொல்லமாட்டார்கள்


ஒரு டன் போதிப்பதை விட.. ஒரு அவுன்ஸ் வாழ்ந்து காட்டுவதே மேன்மை என்கிறார் சுவாமி.

(ஆதாரம்: சந்தேக நிவாரணி புத்தகம். அத்தியாயம் 14 | ஆசிரியர் : ஸ்ரீமான் கஸ்தூரி)

சத்தியம் - தர்மம்- சாந்தி- பிரேமை - அகிம்சை இந்த ஐந்து வித அறநெறிகளே ஆன்மீக ஞானம் எல்லாம்.

"அப்படி உத்தமமான குரு உனக்கு கிடைக்காமல் போனால் நீயே உனக்கு குருவாகிவிடு.. உன் ஆத்மாவே உன் குரு .. ஆத்ம சாதனை செய்.. அந்த ஆத்மா உன்னை ஆன்மீகப் பாதையில் வழிகாட்டும்" என்கிறார் சுவாமி. 

இதையே பகவான் ரமண மகரிஷி வலியுறுத்துகிறார்..

ஆன்மா / குரு/ இறைவன் மூன்றும் ஒன்றே என... திசை மாறும் பறவைகளாய் இல்லாமல் ஆன்மீக இசை பாடும் பறவைகளாய் வாழ்வோம்.

திசை மாறும் பறவைகள் ஒவ்வொன்றும் வேடன் வலையில் அகப்பட்டு அழியும்!

பக்திப் பறவைகள் நமக்கு வானமாகவும் .. கூடாகவும் இறைவன் ஸ்ரீ சத்யசாயியே திகழ்கிறார்...

கவனச் சிதறல் இன்றி கடவுள் சத்யசாயி காலடியில் சரணடைந்து ஆன்மீக மேன்மை அடைவோம்!

பரம்பொருள் வெறும் பொருளால் அல்ல அது வாழ்வின் அறம் பொருளாலேயே வாய்க்கப்படுகிறது!

  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக