நம் அனைவர் வாழ்க்கை சம்பவங்களையும் நினைத்துப் பார்க்கையில் அது ஒரு அர்த்தமுள்ள கதையாகவே தோன்றுகிறது. அந்த வகையில் முற்பிறவியும் மறுபிறவியும் ஒரு அற்புதமான கதை தான்!
ஆனால் உங்களின் கேள்வி இவை எல்லாம் பொய் என்கிற வகையில் தொனிக்கிறது. அதற்கான தீர்க்கமான பதில் அது பொய்யில்லை. நிஜம் என்பதே!
எதை வைத்து எனில்?? நம் இந்து மதம் சார்ந்த / சாராத எண்ணம் அடிப்படையிலோ இல்லை ஒரு நம்பிக்கை சார்ந்தோ இதை உங்களிடம் தெரிவிக்கவில்லை.
உயிர் பயணித்துக் கொண்டே இருக்கிறது. உடலுக்கு உடல் ..
பேருந்து நிறுத்தத்தில் சிலர் ஏறுவர் இறங்குவர் என்பது போல்
மரணம் என்பது முற்றுப்புள்ளி அல்ல.
ஆகவே மரணம் குறித்த பயமும் அர்த்தமில்லாதது.
அய்யகோ மரணம் எல்லாவற்றையும் போக்கடித்துவிட்டது என்பதும் உண்மையில்லாதது.
உடல் என்பது கண்ணால் பார்க்கப்படுவது.
மனம் என்பது உணரப்படுவது.
அறிவு என்பது அறியப்படுவது. அது ஒரு தகவல் சேகரிப்பே.
ஆன்மா என்பது ??
அது நாமே !!
அந்த விழிப்புணர்வு நிலையே ஆன்மாவாகிய நாம்.
நமக்கு அளிக்கப்பட்ட உபகரணமே (equipments) உடலும் / மனமும் / அறிவும்.
இந்த அடிப்படை புரிந்தால் தான் .. இந்த பகுதியில் உங்களின் வாசிப்பு பயணம் எளிய புரிதலோடு இருக்கும்.
கர்மா தொடரும் வரை பிறப்பு / இறப்பு தொடர்கிறது.
நம் எண்ணமே கர்மா என்கிறார் இறைவன் சத்ய சாயி.
எண்ண ஊர்வலங்களே மனம் என்பதற்கான ஒட்டு மொத்த ஒரே பெயர்.
கர்மா தன் பயணத்தை மனதை வைத்தே தொடர்கிறது!
இதுவே அடிப்படை.
மரணத்தில் உடல் மட்டுமே இறந்து போகிறது. உடல் சம்பந்தப்பட்ட உணர்ச்சிகள் நின்று போகிறது.
பேருந்து பழுதானால் வேறொரு பேருந்திலோ / ஆட்டோவிலோ / கால் டாக்ஸியிலோ பயணிப்பது போல் அந்த மரண சூழலில் மனம் வேறொரு உடலில் தன் பயணத்தை தொடர்கிறது .
தன் பயணம் தொடங்குவதற்கான இடைப்பட்ட காலத்தில் பித்ரு லோகத்தில் சஞ்சரிக்கிறது.
நாம் பழுதான பேருந்தை விட்டு வேறொரு வாகனத்தில் ஏறுவதற்கு சில நிமிடங்கள் ஆகும். அது போன்ற தற்காலிக தங்குதல் தான்.
இந்த பூமியில் இந்த உடலோடு வாழ்வதும் அதைப் போன்ற ஒரு தற்காலிக தங்குதல் தான்!
பித்ரு லோகத்திலிருந்து பூமிக்கு வேறொரு மனித உடல் எடுத்த முன்னோர் ஆன்மாவுக்காக சடங்கு செய்து நாம் படையல் வைத்தால் அது அங்கே சென்று சேர்வதில்லை.
சிலர் முப்பது நாற்பது வருடங்களாக அவர்களுக்கு சடங்கு செய்வர். அவசியம் இல்லை. அவ்வளவு காலங்கள் அதற்கு தேவைப்படுவதில்லை. பல ஆன்மா சில வருடங்களிலேயே மீண்டும் பிறந்து விடுகிறது.
முன்னோர் நினைவு திதியில் நமது மன திருப்திக்காக நாராயண சேவை அளிப்பது நமக்கே நலம் அளிக்கிறது.
இறந்த பின் வேறொரு உடல் ஆன்மாவிற்கு கிடைக்க சில நாட்களோ .. சில வருடங்களோ ஆகிறது.
அந்த உடல் மனித உடலாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.
அதே போல் ஆண் / பெண் பிறவிகளும் மாறி மாறி வரக் கூடியவையே!
மீண்டும் கீழ் இறங்கி மிருக உடல் கொண்டு மீண்டும் மனிதன் என்ற சுழற்சியும் நேர்கிறது.
பாம்பு / ஏணி பரமபத விளையாட்டு போல் தான் பிறவிகளின் சுழற்சி .
நமது நல்ல எண்ணத்தின் / நாம் செய்கின்ற நல்ல செயல்களின் பயன் தீரும் வரை அதற்கான உலகத்தில்.. வங்கியில் பணம் இருக்கும் வரை (நம் அக்கவுன்ட்டில்.. அடுத்தவர் அக்கவுன்ட் அல்ல) ஏ.டி.எம் மில் பணம் எடுத்துக் கொள்வது போல்.. இது உலக வாழ்க்கைக்கும் பொருந்தும். வேற்று உலக வாழ்க்கைக்கும் பொருந்தும்.
ஆகவே உடல் இறந்த பிறகு பூமி போல் அந்தந்த உலகத்தில் (பித்ரு லோகம் / சொர்க்கம் ) ஆன்மா வசிக்கிறது.
அது தீர்கையில் அதற்கான பிறவி தீர்மானிக்கப்படுகிறது.
நாம் தீர்மானிப்பதில்லை என்பது புரிந்திருக்கும்.
இறைவன் சத்ய சாயியே தீர்மானிக்கிறார்.
நீங்கள் ஏன் எல்லாவற்றிலும் உங்கள் சத்ய சாயியை நுழைக்கிறீர்கள் என வாசிக்கும் சிலர் கருதலாம். அதற்கு காரணம்
அவர் ஒருவரே சத்தியப் பரம்பொருள்.
இந்த பிறவிகளின் நிர்வாகத்தை (management) பார்க்கக் கூடியவர் என்கிறபடியால் தான்!
மதிப்பெண் குறைந்து தோல்வியுற்றால் சில சமயத்தில் மாணவனின் நன்னடத்தையை கருத்தில் கொண்டு கிரேஸ் மார்க் அளித்து ஆசிரியர் மாணவனை தேர்ச்சியடைய வைப்பார்.
அது போல் தான் எத்தனையோ அக்கிரமங்கள் செய்தும் மரண தருவாயில் சுவாமி என கண்கலங்கி உருகினால் இறைவன் சத்ய சாயி இறங்கி அந்த ஆன்மாவிற்கு நல்லதொரு அடுத்த பிறவியை அருள்கிறார்.
ஆக.. நாம் சேர்த்த கர்மாவும்.. இறைவன் சத்ய சாயி கருணையும் (நாம் அதற்கு தகுதி என்றால் மட்டும்) மட்டுமே அடுத்த பிறவியை தீர்மானிக்கிறது.
ஒரு திரைப்படத்திற்கு டிக்கட் எடுத்துவிட்டு இன்னொரு திரைப்பட அரங்கில் நுழைந்தால் உங்களை அனுமதிக்க மாட்டார்கள். அது போல் தான் நமது எண்ணங்களே / நமது செயல்களே அடுத்த பிறவியையும் தீர்மானிக்கிறது.
திரை அரங்க உரிமையாளர் உங்கள் நண்பர் என்றால் டிக்கட்டே இல்லாமல் படம் பார்க்கலாம்.
ஆகவே இறைவன் சத்ய சாயியிடம் நட்புறவாட வேண்டும் எனும் சத்தியத்தை நினைவில் நிறுத்த வேண்டும்!
எண்ணங்களே / செயல்களே இந்தப் பிறவியையும் தீர்மானித்தது.
நல்ல கதை விடுகிறீர்கள் என்று வாசிப்பவர்கள் நினைக்கலாம்.
இல்லை.
இதனை வேறொரு தளத்தில் நம்மால் உணர முடியும்.
நம்மால் கடந்த பிறவிகளைக் கண்ணுக்குக் கண் பார்க்க முடியும்.
உணர முடியும் .
புல்லரிக்கும் படி அனுபவிக்க முடியும்.
அதற்கான ஒரே ஆன்ம சாதனம் தியானம்.
தியானம் உடலை உறையச் செய்து மனதை சூட்சுமப்படுத்தி..
அறிவை நுண்ணறிவாக்கி...
புலன்களைக் கடக்கச் செய்து..
ஆன்மாவை ஆழப்படுத்துகிறது.
ஏதேதோ உளறல் போல் தோன்றலாம்.
தியானத்தில் ஆழம் போக .. ஆழம் போக.. இதை அனுபவிப்பீர்கள். இது அனுபவப் பூர்வமான சத்தியம்.
இந்தப் பதிவு கூட ஒரு பெயர்ப் பலகை போல் தான். நீங்களே நடந்து சென்று இருப்பிடம் அடைவது போல்.. நீங்களே தான் தியானித்து அதை உணர வேண்டும்!
அந்த ஆழத்தில் முற்பிறவிகள் காட்சியாக விரியும்.
சிலருக்கு அதை சார்ந்த கனவுகள் கூட வந்திருக்கிறது. பகிர்ந்திருக்கிறார்கள்.
நமது மௌனத்தில் தான் அதாவது நம் மனமற்ற நிலையில் தான் சுவாமி நம்மோடு பேசுகிறார். இதை சுவாமியே பலமுறை அறிவித்திருக்கிறார்.
"Only In your silence you can hear the footsteps of God "
சுவாமியின் வருகை / தரிசனம் / சம்பாஷனம் தியானத்தில் சிலருக்கு நேரவே செய்கிறது.
முற்பிறவி அனுபவங்கள் கனவில் சிலருக்கு நிகழ்ந்தாலும் அது முற்பிறவியா என தெரியாமல் இருக்கும் .
ஆனால் தியானத்தில் சுவாமியே அதனை உணர்த்துவார் / விளக்குவார்.
நாம் இறைவன் சத்ய சாயி பக்தர்களானது ஏதோ விபத்து அல்ல... அது முற்பிறவிகளின் தொடர்ச்சியே.
அது மட்டுமல்ல வாழ்க்கையில் நமக்கு நேர்கின்ற அடிப்படையான பல சம்பவங்கள் (கல்வி /திருமணம் / வேலை )/நபர்கள் (உறவு / நட்பு)/ பயணங்கள் ... பயணத் திருப்பங்கள் யாவும் முற்பிறவி கர்மா படியே செயல்படுகிறது.
ஒரு ஆன்மா அது மனித உடலோ இல்லை மிருக உடலோ .. ஏதோ ஒரு பிறவியில் அது பிறருக்கு ஒரு சிறு நன்மை செய்திருந்தாலும் அதை இறைவன் சத்ய சாயி தன் பக்தனாக தேர்ந்தெடுக்கிறார்.
அப்படியே எலியாக இருந்த ஆன்மா அப்படியே சிவ விளக்கை போகிற போக்கில் தூண்டிவிட்டு அடுத்த பிறவியில் பலிச் சக்கரவர்த்தியாக பிறந்தது.
இப்படி உதாரணங்கள் பல..
ஆன்மீக வாழ்க்கையும் .. ஆன்மீக சாதனைகளும் ... முற்பிறவியினால் மட்டுமே வாய்க்கிறது.
எதையும் நாம் நிகழ்த்துவதில்லை..
எதையும் நாம் ஏற்படுத்துவதில்லை.
பொம்மலாட்டக்காரன் இயக்கும் பொம்மை போல்..
கர்மாவினால் இயக்கப்படும் பொம்மையே மனிதன்
கர்மா மனதின் வழி / புத்தியின் வழி செயல்படுகிறது.
தீய கர்மா எனில் தீய குணம்.
நல்ல கர்மா எனில் நல்ல குணம். அவ்வளவே!
முற்பிறவியையும் இந்த கர்மாவின் செயல்பாட்டு விஞ்ஞானத்தை உணர்ந்து கொண்டதால் தான் மகான்கள் எதற்கும் கலங்குவதில்லை. எதற்கும் கவலைப்படுவதில்லை.
முற்பிறவிக்கான தீய கர்மா அழிய அழிய இறைவன் சத்ய சாயி மீதான சந்தேகமும் போய்விடுகிறது. பக்தி வளர்கிறது.
இறைவன் சத்ய சாயி திருவாசகம் ஆழமாய்ப் பதிகிறது.
ஒருவர் முற்பிறவிகளை உணர உணர இறைவனின் அவதாரங்களும் கூடவே சேர்ந்து ஆழமாய்ப் புரிய வருகிறது.
மனிதனுக்கு பிறவிகள்.
இறைவனுக்கு அவதாரங்கள்.
மனிதனுக்கோ தாய் /தந்தை /பிறப்பிடம் / பிறக்கும் சூழல் இவை யாவும் முற்பிறவியின் கர்மாவினால் மனிதனுக்கு அமைகிறது.
இறைவனோ தானே யாவற்றையும் சங்கல்பத்தினால் அவற்றை தேர்ந்தெடுத்து அவதரிக்கிறான்.
மனிதப் பிறவிகள் என்பது புற்றீசல்கள்.
ஆனால் இறைவனின் அவதாரமோ குறிஞ்சி மலர்.
முற்பிறவி கர்மாவை உணர்ந்தவர்கள் கவலையை விடுவார்கள்.
நல்ல எண்ணத்தையும் .. நல்ல செயல்களை மட்டுமே இந்தப் பிறவியில் செய்வார்கள்.
இறைவன் சத்ய சாயியிடம் பரம பக்தியையும் வளர்ப்பார்கள்.. அவர் பாதங்களை இறுக்கமாகவும் பிடித்துக் கொள்வார்கள்.
உணர்ச்சிவசப்படுவதை நிறுத்துவார்கள்.
உறவுகள் நிரந்தரம் எனும் சத்தியமான பொய்யை உணர்ந்து ...
பந்த பாசங்களை புறம் தள்ளுவார்கள்.
அனைவரிடமும் அன்போடும் .. கெடுதல் புரியாமலும்.. ஆணவமற்றும் இருந்து
இப் பிறவியையும்.. சென்ற பிறவியையும் சுத்தமாக்கிக் கொள்வார்கள்.
எல்லா கேள்விகளுக்கும் மனமே முதல் கேள்வி.
எல்லா பதில்களை விடவும் ஆன்மாவே இறுதி பதில்.
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக