தலைப்பு

வியாழன், 8 அக்டோபர், 2020

சத்ய சாயிபாபாவைப் போய் கிருஷ்ண அவதாரம் என்கிறீர்களே? அதற்கு எவை சான்று? எவை ஆதாரம்?

இறைவன் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ண அவதாரமே என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக.. மலை மேல் இட்ட விளக்காக அனைவரும் எளிதில் உணரக் கூடிய ஒரு மிகச் சாதாரண வகையே. பிரம்ம பிரயத்தனம் அவசியமில்லை. அதற்கு அவருடைய வாழ்க்கையை வாசித்தாலே புரிந்துவிடும்.

கிருஷ்ணரும் சத்ய சாயியும் எட்டாவது குழந்தையாகப் பிறந்தவர்களே.

இதில் ஒரு சிறப்பம்சம். எந்த அளவிற்கு தேவகி தன்னலம் கருதாமல் தன் குழந்தையின் நலம் கருதினாளோ அப்படியே ஈஸ்வராம்பாவும்... 

எப்படி இறுதி வரை கம்சனை அண்டாமல்.. காலை வருடாமல் வசுதேவர் சிறையிலேயே வசித்தாரோ அப்படியே சத்ய சாயி தந்தை பெத்த வெங்கப்ப ராஜூவும் .. தன் காலிலேயே நின்று பிறர் சார்பின்றி.. சத்ய சாயி அவதாரத்திடம் தனக்கென எதுவும் கேட்காமல் வாழ்ந்தவர்.

அவரது இறுதி காலத்தில் சுவாமியை (சத்யசாயியை) தரிசித்து என் இறுதிச் சடங்கில் எல்லோருக்கும் உணவளியுங்கள் சுவாமி என கையிலிருக்கும் காசுகளை எல்லாம் தருகிறார். இதற்கு நீங்கள் பணம் தரவேண்டுமா? என சுவாமி கேட்க.. மறுத்து இந்தப் பணத்தில் தான் செய்ய வேண்டும் என உறுதியாகச் சொல்கிறார்.

 சுவாமி தன் இளமைக் காலம் பற்றி பகிர்ந்த புத்தகம் தமிழிலேயே இருக்கிறது. வாசியுங்கள்‌. மேற்சொன்ன சம்பவமும் இருக்கிறது.

சுவாமி துவாபர யுகத்து குழந்தையாக வசுதேவர் சிறைச்சாலையைப் பிரிகையில் கொட்டும் மழை.. ஒரு கூடையில் சுவாமியை வைத்து தலைமேல் ஏந்திச் செல்கிறார். ஒரு துளி மழையும் சுவாமியை நனைக்கவில்லை.  எந்தப் பாம்பணையில் துயில்கிறாரோ அதே ஆதிசேஷன் குடைபிடித்தது. எந்தப் பாம்பணையில் துயில்கிறோரே அதே ஆதிசேஷன் சுவாமி சத்ய சாயி கிருஷ்ணனாய் அவதரிக்கையில் அவர் எளிய படுக்கையில் சுருண்டு பாம்பணை இதம் அளிக்கப் படுத்திருந்தது!


சத்ய சாயி கிருஷ்ணரா? எனக் கேட்டீர்கள். அதை விரைவில் உணர்ந்து கொண்டதால் தான் அவரின் தாய் தந்தையர் வசுதேவ தேவகியாய் கிருஷ்ணரிடம் எதையும் எதிர்பார்க்காமல் வாழ்ந்தார்கள்.

இதில் தாய் ஈஸ்வரன்னையை கேட்டே உலகத்திற்கு கல்வி/ மருத்துவமனை / தண்ணீர் இவை எல்லாம் சுவாமி அளித்தார். இதில் கர்ணம் சுப்பம்மாவே யசோதையாக சத்ய சாயி கிருஷ்ணருக்காக வாழ்ந்து சேவையாற்றி இருக்கிறாள்.


துவாபர யுகத்தில் யசோதையின் இறுதி காலத்தில் கிருஷ்ணர் தன் பாதார விந்தத்தில் அவளை சேர்த்துக் கொண்டதைப் போல கர்ணம் சுப்பாம்மாவின் சடலத்திற்கு உயிரூட்டி துளசி தீர்த்தம் அளித்து தன் பாதம் சேர்த்துக் கொண்டார்.

எந்தக் கருவில் எந்த ஆன்மாவை அதன் கர்மாப்படி அனுப்ப வேண்டும் என்று தீர்மானிக்கும் சத்ய சாயி கிருஷ்ணனுக்கு சடலத்திற்கு உயிரூட்டுவதொன்றும் பெரிய விஷயமே இல்லை என்பதை உணருங்கள்!

கிருஷ்ணர் கோபியரோடு தொட்டு விளையாடுகையில் அவர்களின் கண்முன் மறைவார். இதைப் போல சத்ய சாயி கிருஷ்ணர் தன் பால வயதில் செய்திருக்கிறார். இருவரின் பால லீலைகள் ஒன்றே.. இரண்டுமே அநேகம் அநேகம்.

கிருஷ்ணர் விஸ்வரூப தரிசனம் காட்டியது போல் சத்ய சாயி கிருஷ்ணரும் காட்டி இருக்கிறார்.

அன்யதா சரணம் நாஸ்தி புத்தகம் வாசியுங்கள். புரியும்.

கிருஷ்ணரும் சத்ய சாயி கிருஷ்ணரும் ஏழ்மையான குடும்பத்தில் வளர்ந்தவர்களே!

வர்ணம் படியே இருவரும் சத்ரியர்களே!

சதுர் வர்ணத்தை உலகத்தில் படைத்ததும் அவரே! பள்ளியில் கணக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்.. அதே பாடங்களை வீட்டில் டியூஷனிலும் சொல்லித் தருவார்.

பள்ளியில் வேறு உடை.. வீட்டில் வேறு உடை..

பள்ளியின் infra structure வேறு. வீட்டில் வேறு அமைப்பு.

அதே பாடம். அதே ஆசிரியர்.

அதேபோல் அதே கிருஷ்ணர் துவாபர யுகத்தில் கீதை சொன்னார் .. மீண்டும் கலியுகத்திலும் சத்ய சாயி கிருஷ்ணராய் அதே கீதா பாடம்.

புரிகிறதா..

துவாபர யுகத்து போர்களத்தில் தான் கீதை சொன்னார்.

இந்த கலியுகமே ஒரு போர்க்களம் என்பதால் அனைவரையும் அருகழைத்து கீதை சொல்கிறார். சுவாமிக்கு அனைத்து பக்தரையும் அர்ஜுனனாக்குவதற்காகவே இந்த வழிமுறை.

கிருஷ்ணரை கொன்றுவிட வேண்டும் எனத் துடித்துக் கொண்டிருந்தான் கம்சன். பல அரக்கர்களை ஏவிவிட்டான். எல்லாவற்றையும் வீழ்த்தினார் கிருஷ்ணர்.

இந்தக் கலியுகத்தில் பக்தி இல்லாமையும் .. நம்பிக்கை இல்லாமையும்.. மாயையில் மூழ்குவதுமே கம்சத்தனம். 

தன்னருகில் வந்த எல்லா கம்சத்தனங்களையும் தன் காலடியில் விழவைத்து பெட்டிப் பாம்பாய் அடக்கி தன்னை கிருஷ்ண அவதாரம் என உணர்த்தினார் சுவாமி சத்ய சாயி.

சுவாமி துவாபரயுகத்தில் காளிங்க நர்த்தனம் ஆடியது போல் கலியுகத்தில் மனித ஆணவம் எனும் காளிங்க தலைகளின் மேல் தன் நர்த்தனத்தை இன்றளவும் ஆடிக் கொண்டே இருக்கிறார்.

காந்தாரி சபித்த கோகுலமே புட்டபர்த்தி. தன் நூறு குழந்தைகளை கிருஷ்ணரே போர் சதியால் கொன்றான் எனும் தாய்ப்பாச மாயையால் சபித்தாள்.

கோகுலம் பாம்புப் புற்றானது. பசுக்களுக்குப் பெயர் போன ஊர் மடி வற்றி பரிதாபங்களுக்குப் பெயர் போனது.

சாபம் இருந்தால்.. விமோச்சனம் இருக்கும்.

மீண்டும் கிருஷ்ண அவதாரத்தில் தான் கோகுலம் மறுமலர்ச்சியாகும் என்பதால் சத்ய சாயி கிருஷ்ணர் அவதரித்து சாப கோகுலம்.. சாப விமோச்சன புட்டபர்த்தியானது.

ரா.கணபதி எழுதிய சுவாமி என்ற நூலை வாசியுங்கள் புரியும்.

கிருஷ்ணர் கறுப்பாயிற்றே..எனக் கேட்கலாம். 

சத்ய சாயி கிருஷ்ணர் கறுப்பாக பல பக்தர்களுக்கு காட்சி அளித்திருக்கிறார்.

பல புகைப்படங்கள் இருக்கின்றன.. அது கறுப்பல்ல.. கருநாவல் பழ நிறம். 

அதே நிறத்திலும்.. நீல நிறத்திலும் தரிசனம் அளித்தது பல அரிய காணொளியிலும் தரிசிக்கலாம்.

எல்லா வர்ணமும் அவர் வர்ணமே எனப் புரிந்தவர்களுக்கு எங்கிருந்து வர்ண பேதம் வரப்போகிறது...!?

ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர் நீல ஒளியாகவே கிணற்றடியில் இருந்த அன்னை ஈஸ்வராம்பாவின் வயிற்றில் புகுந்தார்.

மனிதர்களும்.. மகான்களும் தான் பிரசவிப்பார்கள்.. இறைவன் பிரவேசிப்பார்.

நீல ஒளி என்பது விஞ்ஞானத்தில் Blue Consciousness என்கிறார்கள். தியானத்தில் ஆழம் போகப் போக இந்த நீல விழிப்புணர்வை அகக் கண்ணில் நேருக்கு நேராய் நாம் தரிசிக்கலாம். நீல விழிப்புணர்வு ஏற்பட்ட பிறகே சுவாமி தியானத்தில் பலருக்கு காட்சி அளித்திருக்கிறார்.

பால்கோவாவையே உண்ணாமல் பால்கோவா கசக்கும் என உளறினால் அது பால்கோவாவின் தவறா?

அதைப் போல் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணன் எனும் பரம சூட்சுமத்தை சூட்சும தியானத்தாலேயே உணர முடியும். சுவாமியின் அவதார நிகழ்வை தியானத்தில் மகான் அரவிந்தர் நேரடியாய் உணர்ந்து அவர் சீடருக்கு உரைக்கிறார். அவர் மட்டுமல்ல பகவான் ரமண மகரிஷியே (1950) கிருஷ்ணர் அவதரித்து விட்டார்.. ஆந்திராவில் வசிக்கிறார் என ஒரு சில பக்தர்க்கு உரைத்து சுவாமியை தரிசனம் செய்ய அவர்களைப் போய் வரச் சொல்லி இருக்கிறார்.

சத்ய சாயி ஆனந்த தாயி புத்தகம் வாசியுங்கள்... புரியும்.

அரவிந்தரும் ரமணரும் ராஜரிஷிகள் என்பதை உணர வேண்டும். அவர்களுக்கு நம்மிடம் பொய் சொல்லி எதுவும் ஆக வேண்டியதில்லை. காரணம் அவர்கள் சுவாமியிடம் கூட எதையும் எதிர்பார்க்காதவர்கள். 

சுவாமி பலருக்கும் கனவில் வந்து காட்சி அளித்து அருள்பாலிக்கிறார். வசுதேவருக்கே சுவாமி நான் தேவகியின் வயிற்றில் பிறக்கப் போகிறேன் என கனவில் காட்சி அளித்துத் தான் அவதார பிரவேசத்தை சொல்கிறார்.

ஷீரசோரன் எனும் கலியுகத்தில் ஒரு கிருஷ்ண பேரற்புதம். பதினாறாம் நூற்றாண்டில் நடந்தது. சுருக்கமாகச் சொல்கிறேன்.

மாதவேந்த்ர புரி சுவாமிகள் எனும் சன்யாசி / கிருஷ்ண பக்தர் ஓரிடத்தில் பசியால் வாடுகிறார். யாரிடமும் கையேந்த மாட்டார்‌. பிராரப்தத்தால் (வினைப்பயனால்) எது கிடைக்கிறதோ அதை உண்பார்.

அங்கே வந்த கலையான கறுத்த ஒரு இடைச்சிறுவன் பால் தருகிறான். ஆச்சர்யப்படுகிறார். அந்த பால்சுவை பாற்கடல் சுவையாக இருந்திருக்கிறது.

இப்படியே ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர் நரநாராயண குகையில் பால் மற்றும் பழரசங்கள் அவர் அளித்த அட்சயப் பாத்திரத்தில் தினசரி வழியும்.

அந்த மாதவேந்த்ர சன்யாசிக்கு அடுத்த நாள் அந்தச் சிறுவனைப் பார்க்க ஆவல். அவரின் தியானத்தில் சிறுவன் தோன்றி நான் தான் உன் கோபாலன் .. இதோ இந்தப் புதருக்குள் இருக்கிறேன். ஒரு பக்தன் என்னை படையெடுப்புக்கு பயந்து இதில் பதுக்கிவிட்டு போய்விட்டான். எடுத்து கோவில் கட்டி வழிபடு என்கிறார் சுவாமி.

இப்படியே ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர் பலருக்கு பல கட்டளைகளை தியானத்திலும் / கனவிலும் அளித்தபடி இன்றளவும் அருள் பாலிக்கிறார்.

அவர் கோபாலன் சிலையை சுவாமி சொன்னது போல் கண்டெடுத்து கோவில் கட்டுகிறார்.

ஊர் உலகமே திரண்டு வருகிறது..

அனைவருக்கும் அன்ன சேவையாற்றுகிறார்.

பக்தர் வந்து கொண்டே இருக்கின்றனர்..

அன்னமும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

இப்படியே ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர் உணவை தன் கையால் வளரச் செய்ததும்..

அவரவர் வீட்டில் சாயி பக்தர்கள் உணவு வளர்வதைப் பார்த்து வருவதும் ஒன்றா ? இரண்டா?

கோபாலனுக்கு பாயாசம் செய்ய வேண்டும் என்ற ஆவல் அந்த சன்யாசிக்கு ரேமுனா எனும் இடத்தில் கோபிநாதர் கோவிலில் வழிபடுகையில் ஏற்படுகிறது.

அங்கே பாயாச நெய்வேத்யம். இதை நம் கோவிலிலும் செய்யலாமே என எண்ணம் உதிக்கிறது. இப்படியே ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர் பல பக்தர்க்கு சத் எண்ணமாகவும்/ குரலாகவும்/ காட்சி வழி கட்டளையாகவும் விதித்தபடி இருக்கிறார்.

அந்த கோபிநாத ஆலய அர்ச்சகரின் கனவில் வரும் சுவாமி "என் பக்தன் மாதவேந்த்ர புரிக்கு ஏன் பாயாசம் தரவில்லை.. அவன் யாரிடமும் எதையும் கேட்க மாட்டான்.. அவனுக்காக ஒரு பாயாச பாத்திரத்தை திருடி வைத்திருக்கிறேன். அதை எடுத்து உடனே கொடு" என்கிறார்.

இதை வாசிக்கையில் கண்களில் கண்ணீரே வந்தது. தனக்கு பிரசாதமாக வந்த பாயாசத்தை தன் பக்தனுக்காக யாருக்கும் தெரியாமல் திருடி வைத்திருக்கும் சுவாமியின் பக்த வாத்சல்யத்தை என்ன சொல்வது?

சுவாமி கலியுகத்தில் வெண்ணெய் திருடாமல் வெண்ணெயான தன் பக்தரின் உள்ளத்தை திருடி உண்ணும் அற்புதங்கள் எழுத ஆரம்பித்தால் கண்ணீர் தான் வரும்.

எத்தனை பால் வகைகள் / எத்தனை இனிப்பு வகைகள் / எத்தனை தின்பண்டங்கள் .. துவாபர யுகத்திலிருந்து கலியுகம் முடிய ஆகவே அதை அலுத்து சலித்துப் போய் தான் சுவாமி சத்ய சாயி கிருஷ்ணன் பால் பதார்த்தங்களையே தொடுவதில்லை.

அந்த மாதவேந்த்ரபுரி கண்ணீர் சிந்தி பாயாசம் அருந்தியது போல் அடியேன் அழுதபடி வாசித்தேன்.

பாயசத்தை விட சுவாமிக்கு பக்தரின் ஆனந்தக் கண்ணீரல்லவா அதிக ருசி.

இந்த அதிஅற்புதத்தை அடியேன் சொல்லவில்லை சைதன்ய மஹாபிரபு நித்யானத்த பிரபுவுக்கு கண்ணீர் ஆறாய்ப் பெருகச் சொல்கிறார்.

(ஆதாரம் : ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் - பக்கம் 416.. மூன்றாம் பாகம் அத்தியாயம் 16)

ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர் பலர் கனவில் வந்து என் பக்தன் உன் வீடு தேடி வருகிறான் என்னை எப்படி கவனிப்பீர்களோ அப்படி அவனையும் கவனியுங்கள் என எத்தனை பேரிடம் சொல்லி தன்னை பக்த வத்சலன் என உணர்த்தி இருக்கிறார். நினைத்தாலே புல்லரிக்கக் கூடியது.

தியாகத்தின் மகத்துவம் உணர்த்தவே .. பிரம்மச்சர்யத்தின் தெய்வீக வீரியம் உணர்த்தவே இந்த கலியில் ஜோடி இன்றி ஜெகஜோதியாக காவி உடுத்தி இறைவன் சத்ய சாயி கிருஷ்ணர் வலம் வருகிறார்‌.

துவாபர யுகமும் கலியுகமும் அடிப்படையில் வேறு வேறு. பூகோளம் வேறு. கல்வி முறை.. அரசியல் முறை யாவும் வேறு. மனித ஆயுள் கூட இரண்டுக்கும் வேறு வேறு. 

எந்தந்த யுகம் எப்படி சுவாமியால் கட்டமைக்கப்படுகிறதோ அந்தந்த யுகத்திற்கு தகுந்தாற் போல் அவதரித்து.. தன் ரூபத்தை மாற்றி.. வாழும் முறையை மாற்றி.. எதை எந்த யுகத்தில் பிரதானமாய் உணர்த்த வேண்டுமோ அதை உணர்த்தியபடியே உலா வருகிறார்.

சுவாமியின் கணக்கு கன கச்சிதமானது. சுவாமி கால நேரம் கருதியே குறிப்பாக பிரபஞ்ச நலன் கருதியே ஒவ்வொன்றையும் செய்து வருகிறார்.பக்தரின் போக்கில் போய் பக்தரை மாற்றி அமைப்பதில் சுவாமி மகா சமர்த்தர். முதலில் நீ கேட்டதை தருவேன்.. பிறகு நான் தருவதை நீ பெற்றுக் கொள்ளும்படி உன்னைப் பக்குவப்படுத்துவேன் என்கிறார் சுவாமி.

இது தான்.. இதே தான் கிருஷ்ணத்தனம். கிருஷ்ணத்தனத்தை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. அதை அணு அணுவாய் அனுபவிக்க மட்டுமே நாம் கடமைப்பட்டவர்கள்.

பாகவத வாஹினி வாசியுங்கள். இன்னும் கீதையை எளிமைப்படுத்தி ஆழ உழுதிருப்பார் சுவாமி.

இன்னும் நீங்கள் சான்றும் .. ஆதாரமும் கேட்டால் வானம் முழுக்க எழுதும் விஷ்ணு வல்லமை இருக்கிறது. அதை முழுதும் வாசித்து முடிப்பதற்குள் உங்கள் கழுத்து வலிக்கும் அல்லவா!

ஒரே மாவை ஒரே சமையல்காரர்  வெவ்வேறு விதமாக ருசிக்க ருசிக்க சமைத்து தருவதைப் போல்..

ஒரே சத்தியத்தை ஒரே இறைவன் வெவ்வேறு வடிவத்தில் லயிக்க லயிக்க கற்றுத் தருவதோடு அன்றி வாழ்ந்தும் காட்டுகிறார்.

அப்போது கிருஷ்ண ஜெயந்தியில் சத்ய சாயி புகைப்படம் வைத்து மட்டும் வழிபட்டால் போதுமானதா ? என்று நீங்கள் கேட்டாலும் .. போதுமானதே..

நீங்கள் வைத்து வழிபடும் கிருஷ்ணர் படம் ஒரு ஓவியரின் கற்பனை உருவமே. ஆனால் கிருஷ்ணரின் நிஜ முக உருவம் சத்ய சாயி உருவமே.  நாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் இறைவனின் திருமுகத்தை காண்பதற்கு!

ஆகச் சிறந்த கலியுக மாயை என்பது பாகவத உபன்யாசம் செய்யும் பல பண்டிதர்களுக்கு சத்ய சாயி தான் கிருஷ்ண அவதாரம் என உணராமல் இருப்பதே!

கிருஷ்ணரே அவதாரம் என அவர் அருகில் வாழ்ந்த துரியோதனாதிகளே உணரவில்லையே... அது தான் தீய கர்மா. அவ்வளவு சீக்கிரம் அந்த கர்மா நம்மை இறைவனிடம்  சரணடைய விடாது!

சத்ய சாயி கிருஷ்ணரை தவிர வேறு யாருமில்லை. இதை சுவாமியே பலமுறை பல பக்தர்களுக்கு உரைத்து உணர்த்தி இருக்கிறார்.

நிஜமான மகான்களே  பொய் சொல்லாத போது.. அந்த சத்தியத்தின் திரு வடிவம் இறைவன் சத்ய சாயி கிருஷ்ணன்.

முதலில் அந்த சத்தியத்தில் திடமாகவும்... உறுதியாகவும் இருங்கள்!


அவர் கையில் புல்லாங்குழல் இருந்ததே இவர் கையில் இல்லையே என  குழந்தைத்தனமாகக் கேட்காதீர்கள்.

அதே ஒன்பது துளைகள்.. கொஞ்சம் உயரம் அதிகம்.. கண் காது மூக்கு என நீண்டு வளர்ந்திருக்கிறது..

நாம் தான் சத்ய சாயி கிருஷ்ணன் கைப் புல்லாங்குழல்..

பக்தி கானம் இசைப்போம்!

சத்ய சாயி கிருஷ்ண காயத்ரி ஜபிப்போம்!

ஓம் சாயி கிருஷ்ணாய வித்மஹே

வாசுதேவாய தீமஹி

தந்நோ கிருஷ்ண ப்ரச்சோதயாத்

  

பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக