தலைப்பு

திங்கள், 5 அக்டோபர், 2020

தியான வழியில் பயணிக்கும் சாதகர்களுக்கு தலைசிறந்த வழி எது?


தியான வழியில் செல்லும் சாதகர்கள் மூன்று மார்க்கங்களில் பயணிக்க முயல்கின்றனர். அவை சாத்வீகம், ராஜஸிகம், தாமஸிகம் ஆகும்.

சாத்வீக மார்க்கம் : 

இவ்வழியில் ஜபம் தியானம் ஒரு கடமை என கருதி, அதன் பொருட்டு வரும் துன்பங்களை எல்லாம் ஏற்றுக்கொள்வர். இவை அனைத்தும் வெறும் மாய தோற்றம் என்று உறுதியாக நினைப்பர். எந்த சந்தர்ப்பத்திலும் எப்போதும் அவர் நன்மைகளையே செய்து, எல்லோருக்கும் நன்மையே விரும்பி, எல்லோரையும் எப்போதும் நேசிக்கிறார். எந்நேரமும் இடைவிடாது கடவுளையே சிந்தித்து, கடவுளையே தியானம் செய்கிறார். ஜெபத்தின் பயன்களுக்காக கூட ஏங்குவதில்லை. எல்லாவற்றையும் ஆண்டவனுக்கே விட்டுவிடுவார்.

ராஜஸிக மார்க்கம்:

 இங்கு சாதகர் தான் எடுத்துவைக்கும் ஒவ்வொரு படியிலும் வெற்றிக்காக ஏங்குவார். வெற்றி கிடைக்காவிடில், சிறிது சிறிதாக தளர்ச்சியும் அருவருப்பும் சாதகரை மேற்கொள்வதால், ஜபதியானத்தில் உள்ள ஆர்வம் மெதுவாகக் குறைகிறது.

 தாமஸிக மார்க்கம்:

 இது இன்னும் மோசமானது .ஆபத்து வரும் போதோ, மிகுந்த துன்பத்தின் போதோ, இழப்பு அல்லது வலிக்கு ஆளாகும் போதோ மட்டும்தான் கடவுள் பற்றிய நினைப்பு தோன்றும். அந்த சமயங்களில் இத்தகைய மக்கள், இந்த விதமாக பூஜை செய்வேன், இந்த விதமான உணவு அளிப்பேன், இந்த விதமாக கோவில் கட்டுவேன் என்று உறுதி கூறி வேண்டிக்கொள்வார்கள். கடவுளுக்கு முன் வைத்த உணவு எவ்வளவு? இறைவன் பாதத்தில் சமர்ப்பித்த காணிக்கை எவ்வளவு? கடவுளுக்கு தண்டனிட்டது எத்தனை முறைகள்? எத்தனை தடவைகள் கோயிலை சுற்றினோம்? என்றெல்லாம் கணக்கிட்டு, அவற்றிற்கு ஏற்ப கடவுளிடமிருந்து அருள் எதிர்பார்ப்பார்கள். இவ்வாறு நினைந்து தியானம் செய்பவர்களின் மனமும், புத்தியும் ஒருபோதும் தூயதாக இராது.

தற்போது, மக்கள் பலர் ஜபதியானத்தில் ராஜஸிக, தாமஸிக வகைகளைத்தான் கடைபிடிக்கிறார்கள். மனதையும் புத்தியையும் பரிசுத்தமாக்குவதே, ஜப தியானத்தின் முக்கிய குறிக்கோள். இது நிறைவேறுவதற்கு, சாத்வீக தியானமே மிக சிறந்த வழி. மனமும் புத்தியும் தூயதாகும்போது, ஆத்மாவை உணர்ந்த பேரொளியுடன் பிரகாசிக்கும். முழுமையாக இவ்வொளியுடன் திகழ்பவர் 'ரிஷி' என அழைக்கப்படுகிறார்.

ஆதாரம்: தியான வாஹினி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக