மனிதன் அடைய வேண்டிய நான்கு புருஷார்த்தங்களில் நிறைவான 'வீடு பேறு' எனும் முக்திக்கு 'தன்னலமற்ற சேவையையே' பகவான் பரிந்துரைக்கிறார். அவ்வாறு நடைமுறையில் செய்வது எவ்வளவு கடினம் என்பது ஆன்மிக பாதையில் பயணிக்கும் சாதாகர்களுக்கு, பக்தர்களுக்கு மட்டுமே தெரியும்.
'இல்லை இல்லை அது ஒன்றும் அவ்வளவு கடினமானது இல்லை, பகவானின் பக்கபலம் இருந்தால், முடவனும் மலையைத் தாண்ட முடியும்' என சொல்லி அவ்வாறே வாழ்ந்து காட்டும் சிலரும் நம்முடன் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவர் மதுரையை சேர்ந்த 'தன்னலம் கருதாத' 'நாராயண சேவை' புகழ் திருமதி. வசுந்தரா கிருஷ்ணமூர்த்தி அவர்கள்!
உற்சாகமும் உத்வேகமும் அளிக்கும் அவர்களது பேட்டியனை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
திருமதி. வசுந்தரா கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் ஒரு கலந்துரையாடல்
ஸ்ரீ சத்ய சாயி நாராயணனுக்கு மிகவும் பிடித்த சேவை – நாராயண சேவை (தேவையுள்ளோர்க்கு உணவளித்தல்).
மதுரையில் நாராயண சேவை என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருபவர்கள், திருமதி வசுந்தரா கிருஷ்ணமூர்த்தி சாயிராமும், தெய்வத்திரு. S.கிருஷ்ணமூர்த்தி சாயிராம் அவர்களும்தான். 1992ல் மதுரை சென்ட்ரல் சமிதியின் உறுப்பினர்களான இருவரும், மதுரை கிழக்கு சமிதி தொடங்கியவுடன், அச் சமிதியின் ஒரு பஜன் யூனிட்டின் தாலைமை ஏற்று 22 ஆண்டுகள் நாராயண சேவையை ஒருவாரம் கூட விடாமல் செய்து வருகின்றனர். திரு. கிருஷ்ணமூர்த்தி சாயிராமின் அறுவை சிகிச்சையின் போதும், அவர் பகவானின் திருவடி சேர்ந்த போதும் இச்சேவை தொடர்ந்து நடந்தது குறிப்பிடத்தக்கது. திருமதி வசுந்தரா கிருஷ்ணமூர்த்தியிடம் நாம் கலந்துரையாடினோம்.
நாம்: சாயிராம், நீங்கள் நடத்தி வரும் தொடர் நாராயண சேவைக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
திருமதி. வசுந்தரா: சாயிராம், நன்றி.
நாம்: நீங்கள் எவ்வாறு, எப்போது நாராயண செய்யத் தொடங்கினீர்கள்?
திருமதி. வசுந்தரா: 1992ல் நாங்கள் சென்ட்ரல் சமிதியில் (அப்போது மதுரையில் ஒரே சமிதிதான்) உறுப்பினராக இருந்தோம். கலங்கவைக்கும் கடன் தொல்லை, வட்டி கட்டவே வருமானம் சரியாக இருந்தது. தவித்துக் கொண்டிருந்த நான், சென்ட்ரல் சமிதியைச் சேர்ந்த சாயிராம் கண்ணன் கொடுத்த திரு. ரா, கணபதி எழுதிய ‘அற்புதம் அறுபது’ என்ற புத்தகத்தை படித்தேன். 60 பேருக்கு 60 விதமான அற்புதங்கள் நடத்திய நிகழ்ச்சிகளைப் படித்துக் கண்ணீர் விட்டேன். எனக்கு நீங்கள் என்ன அற்புதம் சேய்யப் போகிறீர்கள் என்று நினைத்துக் கொண்டு புத்தகத்தைப் படித்த போது என் கண்ணில் பட்ட வரிகள்,
“நீ சமுதாயத்திற்கு என்ன பணி செய்யப் போகிறாய் என்று உறுதி கூறு. இது அரசியல் வாதியின் வாக்குறுதியல்ல. அறுதியும் இறுதியும், உறுதியுமாகக் கூறு. சமுதாயத்திற்கு நான் செய்ய என்ன இருக்கிறது, அது தன்னைத் தானே பார்த்துக் கொள்ளும் எனக் கூறாதே. இந்த சமுதாயம்தான் உன்னை வளர்த்து ஆளாக்கியது. இந்தப் பணி செய்கிறேன் என்று சுவாமிக்கு உறுதி கூறினால், சுவாமியும் இந்த நிமிடத்திலிருந்து உனக்கு பொறுப்பாளராக (caretaker) மாறுவேன் என்று பூமியிலடித்துச் சத்தியம் செய்கிறேன்”
மறக்க முடியாத அந்த செய்தியைப் பார்த்தவுடன் நான் நாராயண சேவை செய்கிறேன் என்று உறுதி எடுத்துக் கொண்டேன்.
நாம்: சாயி சமுதாய பணிகள் பலவகை. பஜனை, பால விகாஸ், பூஜைகள் என்று பல சேவைகள் இருக்க நாராயண சேவை செய்ய வேண்டும் என்று ஏன் உங்களுக்குத் தோன்றியது?
திருமதி. வசுந்தரா: மனிதன் திருப்தியடைவது உணவில்தானே. அதுமட்டுமல்ல, நான் மிக நன்றாக, சிக்கனமாக, தூய்மையாகச் சமைப்பதில் வல்லவள். எனது கல்வி தகுது, உடல் தகுதி இவற்றையெல்லாம் நினைக்கும் போது நாராயண சேவையே நமக்கு ஏற்ற சேவை என்று நினைத்தேன். அந்தப் புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு, “சுவாமி, இந்தப் புத்தகத்தின் மூலமாக நான் உறுதி கூறுகிறேன். வயதானாலும், உடல் நலம் குன்றினாலும், இறுதி மூச்சு விடும் காலம் வரை, நாராயண சேவை செய்யும் இடத்தில் இருந்தாவது, விடாமல் நாராயண சேவை செய்து வருவேன்” என்று உறுதி கூறினேன். ஆனால் இதற்குத் தேவையான நிதியுதவியை நீங்கள்தான் தர வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்.
நாம்: இதை உங்கள் கணவரிடம் கூறியபோது அவரது பதில் என்ன?
நாம்: உங்களது முதல் நாராயண சேவையைப் பற்றிக் கூருங்கள்.
திருமதி. வசுந்தரா: சுவாமியிடம் பிரதிக்ஞை செய்து 2 மாதத்திற்குப் பிறகு கையில் இருந்த 90 ரூபாயை வைத்து,சாதம், சம்பார், உருளைக்கிழங்கு பொரியல் தயார் செய்து, 4 தூக்கில் எடுத்துக் கொண்டு, பஸ்ஸில் பைகாரா, முத்துராமலிங்கபுரம் பாரதி இல்லத்திற்கு சென்றோம். நாங்கள் சென்று சேர்வதற்குள் உணவு இடைவேளை முடிந்துவிட்டது. பொறுப்பாளரிடம், தயவுசெய்து ஒரு தட்டு கொடுங்கள், கேட்கும் குழந்தைகளுக்கு ஊட்டிவிடுகிறேன் என்று கூறி தட்டில் உணவைப் பிசைந்து உருண்டைகளாக்கி குழந்தைகளைக் கூப்பிட்டேன். வாராத் தலையும், ஒழுகிய மூக்கும், கிழிந்த உடையுடன் ஓடிவந்து குழந்தைகள், வாயை சுற்றிக் கொண்டிருந்த ஈக்களை விரட்டி விட்டு “இது என்ன காய்? அது என்ன சாதம்?” என்று கேட்டு ஆசை ஆசையாக சாப்பிட்ட போது, உன்னை விடத் துன்பப்படுபவர் உலகில் எத்தனையோ பேர், அவர்களுக்குத் தொண்டு செய்வது உன் கடமை என்று பகவான் சொல்லாமல் சொல்வது தெரிந்தது. இனி எந்த பொருளானாலும் ஒரு துளி கூட வீணாக்கக் கூடாது என்று நினைத்து பஸ்ஸில் திரும்பும் போது “நான் உனக்கு Caretaker ஆக இருப்பேன்” என்று பகவான் கூறியதை நிரூபித்துக் காட்டினார்.
நாம்: முதல் சேவையிலேயே இத்தனை அனுபவமா? அதையும் கூறுங்கள்.
திருமதி. வசுந்தரா: நாராயண சேவைக்கு, இருந்த பணத்தை செலவழித்து விட்டதால், கையில் பஸ்ஸில் சென்றுவர போதுமான 8 ரூபாய் மட்டுமே இருந்தது. திரும்பி போகும் போது ஆளுக்கு ரூ. 2/- டிக்கெட் என ரூ. 4/- மட்டுமே இருந்தது. வந்த ஒரு பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தவுடன் கண்டக்டர், இது சேதுபதி ஹைஸ்கூல் செல்லாது, பணிமனை தான் செல்லும் என்று கூறி, ஒரு டிக்கெட்டுக்கு ரூ. 3/- தாருங்கள் என்று கேட்டார். சரிதான், கையில் இருக்கும் காசுக்கு செல்லக் கூடிய தூரம்வரை சென்று அங்கிருந்து வீடுவரை நடக்க வேண்டியது தான் என்று நினைக்கையில், எங்கள் கையில் இருந்த தூக்கைப் பார்த்த கண்டக்டர், “நீங்கள் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு உணவு கொடுத்து விட்டு வருகிறீர்களா? பரவாயில்லை அடுத்த Stopல் இறங்கி வேறு பஸ் பிடித்து செல்லுங்கள்” என்று கூறி எங்களிடம் டிக்கெட் வாங்காமல் அடுத்த Stopல் இறக்கிவிட்டார். வேறு பஸ் பிடித்து ஆளுக்கு ரூ. 1/- டிக்கெட் வாங்கி, இறங்கிய பின் ஆளுக்கு ஒரு ஜூஸ் வாங்கி குடித்து, களைப்புத் தீர்ந்து வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். உண்மையில் சுவாமி எங்கள் Caretaker ஆகி விட்டார்.
நாம்: நாம் அவரை நோக்கி ஓரடி வைத்தால் அவர் நம்மை நோக்கி 100 அடிகள் வைப்பார் அல்லவா?
நாராயண சேவைக்கு மற்றவர்கள் எவ்வாறு உதவினர்?
திருமதி வசுந்தரா: அதுவும் சுவாமி நடத்திய லீலைதான். என் கணவரின் அலுவலகத் தோழர்கள், மற்ற நண்பர்கள் எங்கள் வீட்டுக்கு வரும் போது நாங்கள் செய்யும் சேவையை பார்த்தார்கள், அதில் ஈரோட்டில் இருந்து வந்த அன்பர் ஒருவர் இப்படி 5 பாத்திரத்தில் ஏன் சாதம் வடிக்கிறீர்கள் என்று கூறி, 2 படி பிடிக்கும் பெரிய பாத்திரம் வாங்கித் தந்தார். நாங்கள் வாய் திறந்து எதுவும் கேட்க மாட்டோம், இருப்பினும் பாத்திரமாகவும், பண்டமாகவும் பலர் உதவி செய்தனர். இன்று 38 படி ஒரே நேரத்தில் சமைக்கக் கூடிய பாத்திரம் வந்து விட்டது. காஸ் ஸ்டவ், தண்ணீர் சுத்திகரிக்கும் மெஷின் என்று பலர் கொடுத்து உதவினர்.
நாம்: பணமாக உதவி செய்ய முன் வந்தார்களா?
திருமதி வசுந்தரா: உதவினர். முதன் முதலில் புதூர் பத்மா சாயிராம், “எனக்கு வேலை கிடைக்க வேண்டும் என்று சுவாமியிடம் பிரார்தனை செய்தேன். வேலை கிடைத்துவிட்டது. அதனால் என் முதல் மாத சம்பளம் 4000 ரூபாயை நான் நாராயண சேவைக்கு தருகிறேன்” என மனமுவந்து கொடுத்தார். என் கணவர் திரு. கிருஷ்ணமூர்த்தி சரியாக வரவு செலவு கணக்குகளைப் பார்ப்பது பலருக்கு மகிழ்ச்சி தந்தது. சாயி நிறுவன உறுப்பினர்கள், எங்கள் நண்பர்கள், அன்பர்கள் தருகின்றனர். பலர் மாதாமாதமும், சிலர் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கும் தருவார்கள். சிலர் அவர்களின் திருமண நாள், பிறந்த நாளுக்குத் தருகின்றனர்.
நாம்: எப்போதாவது உங்களுக்கு பணத்தட்டுபாடோ, பொருள் தட்டுப்பாடோ வந்திருகிறதா?
திருமதி வசுந்தரா: பகவானிருக்க தடைகள் ஓடிவிடுமல்லவா? பணத்தட்டுபாடோ, பொருள் தட்டுப்பாடோ வரும் சமயத்தில், பகவானின் அருள் தட்டுப்பாடின்றி வந்து விடும். ஒரு வாரம் கையில் ரூ. 600/- தான் இருந்தது. காய்கறிக்குக் கூட காணாது என்று கவலைப்பட்ட போது, பக்கத்து வீட்டுகாரரின் தங்கை, நான் நாராயண சேவைக்கு பணம் சேர்த்து வைத்திருக்கிறேன் என்று ரூ. 3000/- கொடுத்தார். ஒருமுறை அரிசி தட்டுப்பாடாக இருந்த போது, கொடைகானல் விஜயம் முடித்து சுவாமி புறப்பட்டுவிடார். அப்போது மீதமிருந்த 2 சிப்பம் அரிசி நாராயண சேவைக்கென இங்கு வழங்கப்பட்டது. சுவாமியின் பிரசாதமான அந்த அரிசி (அக்ஷதை) வந்த நாள் அக்ஷய த்ரிதியை.
ஒருமுறை நாராயண சேவையை ஸ்வீட்டுடன் செய்யலாமென எண்ணி அவசரப்பட்டு ஏற்பாடு செய்து விட்டேன். என் கணவரைக் கேட்கவில்லை. என் கணவர் ஏன் என்னைக் கேட்கவில்லை? இம்முறை இனிப்புக்கு ரூ. 500/- கொடுத்துவிட்டால் அடுத்த முறை சேவைக்கு பணம் பத்தாது என்றார். நான் இனிப்புக்கு யார் மூலமாக ஏற்பாடு செய்தேனோ அவரை போனில் அழைத்து, ஏற்பாட்டை நிறுத்த கூறினேன். ஆனால் அவரோ “மன்னியுங்கள், நான் இனிப்புக்கு ஏற்பாடு செய்ய மறந்து விட்டேன்” என்றார். சற்று நேரத்தில் ஒருவர் வந்து “எங்கள் அம்மா முதல் முறை ஓய்வூதியம் வாங்கியுள்ளார். எனவே நாராயண சேவையுடன் இனிப்பு வாங்கி தாருங்கள்” என்று கூறி ரூ. 500/- கொடுத்து சென்றார். அதே போன்று ஒருமுறை நாராயண சேவைக்கு 108 உணவு பொட்டலம் கொடுப்பதாக சொல்லியிருந்தோம். ஆனால் சமையல் முடிந்து பொட்டலம் போட்ட போது 85 தான் வந்தது. அப்போது நந்தலால் சாயிராம் திரு. சமயராஜ் அவர்களின் வீட்டில் இருந்து நாராயன சேவைக்கு தயிர்சாதம் கொண்டு வந்தார். அதையும் சேர்த்த போது 120 பொட்டலம் வந்தது!
இஞ்சி சட்னி போட வேண்டுமென்று நினைத்த போது ஹோசூரிலிருந்து அதற்கு தேவையான பொருள்கள் வந்தது, வாழைக்காய் பொரியல் போட நினைத்த போது வாழைத்தார் வந்தது. தண்ணீர் தட்டுப்பாடு இருந்த நேரத்திலும் எங்கள் வீட்டு வாசலில் தண்ணீர் லாரியை நிறுத்தி, தண்ணீர் தந்தது எனப் பல நிகழ்ச்சிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
நாம்: ஒவ்வொரு நாராயண சேவையிலும் ஒரு அற்புத அனுபவம் ஏற்பட்டிருக்கிறது என்கிறீர்கள், புரிகிறது. இதில் உங்கள் மனதை நெகிழ வைத்து, மயிர்கூச்செரிய வைத்த நிகழ்ச்சி ஒன்றை பகிர்ந்து கொள்ளுங்களேன்.
திருமதி வசுந்தரா: நாங்கள் பல வீடுகள் மாறியிருக்கிறோம். ஒவ்வொரு இடத்திலும் அருகே குடியிருப்பவர்கள் நாராயண சேவைக்குப் பொருளும், உடல் உழைப்பும் கொடுத்து உதவியிறுக்கிறார்கள். தற்போது நான் வசந்த நகரில் குடியிருக்கிறேன். இந்த யூனிட் பால விகாஸ் குழந்தைகள் தங்களது பிஞ்சுக் கரங்களால் செய்த உதவியை என்னால் மறக்க முடியாது. 2011ஆம் வருடம் தீபாவளிக்கு முந்தைய வாரம் தங்களின் குருவுடன் சுமார் 10 குழந்தைகள் இங்கு வந்தனர். ஆசைக்கு உச்சவரம்பிட்டு (Ceiling on desires) அந்த குழந்தைகள் அனைவரும் சேர்ந்து ரூ. 700/- கொடுத்தனர். நான் அந்த குழந்தைகளிடம் எப்படி ஆசையை கட்டுப்படுத்தினீர்கள் என்று கேட்டேன். ஒரு குழந்தை எப்போதும் நான் தீபாவளிக்கு இரண்டு புத்தாடைகளை வாங்கிக் கொள்வேன், இந்த முறை அதை ஒன்றாகக் குறைத்தேன் என்றது. ஒரு குழந்தை பட்டாசைக் குறைத்தேன் என்றது. ஓர் இளம் பிஞ்சு, “சாய்ராம், இவர்கள் எல்லாம் 6 மாதமாக பணம் சேர்க்கின்றனர். நான் பாலவிகாஸில் சேர்ந்து ஒரு மாதம் தான் ஆகிறது. அதனால் நான் ஒரு மாதமாக எங்கள் பள்ளி Canteen-ல் உணவு சாப்பிடும் போது மிச்சப்படுத்தி ரூ. 51/- சேர்த்தேன் என்று பெறுமையுடன் சொன்னது. என் மனம் அப்படியே நெகிழ்ந்து விட்டது.
நாம்: பகவான் பாலவிகாஸை ஏற்படுத்தியதே குழந்தைகளிடம் இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தத்தானே!
திருமதி வசுந்தரா: ஒவ்வொரு ஆண்டும் இந்தக் குழந்தைகள் தீபாவளிக்கு முதல் வாரம் இவ்வாறு சேமித்து நாராயண சேவைக்குக் கொடுக்கிறார்கள். இம்முறை ரூ. 1200/- கொடுத்தார்கள்.
நாம்: கேட்கவே காது குளிர்கிறது. இபோது உங்கள் சேவைப் பணி எவ்வளவு விரிவடைந்திருக்கிறது?
திருமதி வசுந்தரா: ஆரம்பத்தில் பொட்டலம் போட்டு புகைவண்டி நிலையம், பேருந்து நிலையம் போன்ற இடங்களில் உள்ளவர்களுக்கு அளித்து வந்தோம். பிறகு சேவையை முறைப்படுத்தினோம். தற்போது மதுரையில் உள்ள பல இல்லங்களுக்கு நாராயண சேவை செய்து வருகிறோம். செஷயர் ஊனமுற்றோர் இல்லம், பைக்காரா முத்துராமலிங்கபுரம் பாலர் இல்லம், YMCA காது கேளாதோர்-வாய் பேசாதோர் இல்லம், சேவாஸ்ரமம், விஸ்வநாதபுரம் பாலர் இல்லம், ஷெனாய் நகர் சேவாலயம், நந்தநார்குடி, சுந்தர்ராஜன்பட்டி கண்ணிழந்தோர் பள்ளியென பல இடங்களுக்கு இந்தச் சேவை விரிவடைந்துள்ளது.
நாம்: இந்த இல்லங்களுக்கு எந்த வரிசையில் எப்படி முறைப்படுத்திக் கொடுக்கிறீர்கள்?
திருமதி வசுந்தரா: ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை அன்றே நானும் என் கணவரும் இல்லங்களுக்கு தொலைபேசி மூலம் கேட்டு, அவர்கள் தேவைக்கு ஏற்றார் போல் நாராயண சேவை செய்வோம். பிறகு ஒரு முறை ஏற்படுத்தி முதல் வாரம் சேவாலயம், இரண்டாவது வாரம் சேவாஸ்ரமம் என்று குறிப்பிட்ட வாரங்களில் அந்தந்த இல்லங்களுக்கு நாராயண சேவை செய்து வருகிறோம். பண்டிகை நாட்களில் எத்தனை இல்லங்களுக்கு முடியுமோ அத்தனை இல்லங்களுக்கு கொடுப்போம். சுவாமியின் பிரந்த நாள் வரும் போது ஒரே நாளில் காலை மாலை என்று இருமுறை கூட சேவை செய்திருக்கிறோம். ரம்ஜான் போது பள்ளிவாசலுக்கு சென்று பொட்டலங்கள் கொடுத்திருக்கிறோம்.
நாம்: அடேயப்பா! கேட்கவே வியப்பாக இருக்கிறது. நீங்கள் இருவர் மட்டும் எப்படி இவ்வளவு பெரியளவில் சேவை செய்ய முடிந்தது?
திருமதி வசுந்தரா: பகவான் தான் எனக்கு Caretaker என்று சத்தியம் செய்து விட்டாரே, பிறகு என்ன? எனக்கு குழந்தைகள் கிடையாது./ ஆனால் பெற்றால்தான் பிள்ளையா? முதன் முதலில் நாங்கள் செய்யும் சேவையைக் கேள்விப்பட்டு யோகேஷ் என்ற சாயி இளைஞர் எங்கள் சேவையில் பங்கு கொண்டார். அவரைத் தொடர்ந்து ஒரு இளைஞர் பட்டாளமே திரண்டு எங்களுக்கு தோள் கொடுத்தது. எங்களைச் சுற்றி வியூகம் அமைத்தனர். எவ்வளவு பெரிய சேவையானாலும் செய்து முடித்து விடுவார்கள். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை எப்போது வரும், அவர்களை எப்போது பார்கலாம் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பேன். அவர்களில் பலர் தினமும் எங்கள் வீட்டிற்கு வருவார்கள். ஒவ்வொருவரையும் நான் சத்ய சாயியின் பிரசாதமாக, இல்லை, இல்லை, சத்ய சாயியின் அம்சமாகவே பார்க்கிறேன். என் உலகம் அவர்களை சுற்றி சுற்றி வருகிறது.
நாம்: அவர்களுக்கு நடந்த ஒரு அற்புதத்தை கூற முடியுமா?
திருமதி வசுந்தரா: ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவம், எனக்கோ பல அனுபவம். இவற்றை எல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடயிருக்கிறேன். அதில் அனைத்தையும் கூற உள்ளேன்.
நாம்: நாங்கள் அதை ஆவலுடன் எதிர் நோக்கி காத்துக் கொண்டிருக்கிறோம். நாராயண சேவையைத் தவிர வேறு வகையான சேவைகள் ஏதேனும் செய்துள்ளீர்களா?
திருமதி வசுந்தரா: நாராயண சேவைக்குப் போக எஞ்சிய நிதியில் புடவை, வேஷ்டி, மழை கோட்டு என பல வஸ்திர சேவை செய்திருக்கிறோம். இல்லங்களில் உள்ளவர்களுக்கு மிதியடி வாங்கி தந்திருக்கிறோம். கணினி மேசை, தண்ணீர் மோட்டார், தன்ணீர் சுத்திகரிப்புக் கருவி வாங்கித் தந்துள்ளோம். சேவா இல்லங்களுக்கு மின் கம்பி இணைப்புகள் தந்திருக்கிறோம். ஊனமுற்றோர்க்கு மூன்று சக்கர வண்டி வாங்கித் தந்துள்ளோம். கண்புரை நீக்க அறுவை சிகிச்சைக்கு உதவியுள்ளோம். சேவை இல்லங்களில் நான் பால விகாஸ் வகுப்பு எடுப்பேன்.
நாம்: உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?
திருமதி வசுந்தரா: எனது கணவர் தனது ஆசையை ஓர் உயில் போல எழுதி வைத்திருக்கிறார். ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதை ஒரு ‘மாதிரி கிராமமாக’ ஆக்க வேண்டும் என்பது அவரது ஆசை. அங்கு இளைஞர்களுக்கு குறிப்பாக மகளிருக்கு வேதப் பயிற்சி, தொழிற்பயிற்சி தர வேண்டும். இயற்கை சூழலில் முதியோர் இல்லம், மருத்துவமனை, பள்ளிக் கூடங்கள் கட்ட வேண்டும் என்பது அவரது ஆசை.
திருமதி வசுந்தரா: என் கடைசி மூச்சுள்ளவரை நாராயண சேவை செய்ய வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் 10 வருடங்களுக்கு முன் இருந்த இளைஞர்கள் திருமணமாகி வேலைக்குச் சென்று விட்டனர். எனவே இளைஞர் எண்ணிக்கைக் குறைந்து விட்டது. என் கணவர் சாயி திருவடி சேர்ந்த பிறகு எனக்கு உடல் நலமும் சரியில்லை. எனக்கு பிறகு நாராயண சேவை செய்ய தகுந்தோரை தயார் செய்து அவர்களிடம் என்னிடமுள்ள பாத்திர பண்டங்களைக் கொடுத்து அவர்கள் நாராயண சேவை செய்வதைப் பார்த்துக் கொண்டே சாயி திருவடியைச் சேர வேண்டும் என்பது என் விருப்பம்.
நாம்: நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து நாராயண சேவை செய்து பகவானின் அருளுக்கு பாத்திரமாவீர்கள் என்பதில் எங்களுக்கு ஐயமில்லை. உங்களுக்கு நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், அனைத்து ஐஸ்வர்யமும் தர நமது பகவானை அன்புடன் வேண்டிக் கொள்கிறாம். சாய்ராம் 🙏
திருமதி வசுந்தரா: நன்றி! சாய்ராம்.
ஆதாரம்: மதுர சாயி- மதுரை சத்ய சாயி நிறுவனத்தின் காலாண்டு இதழில் (மே 2014) இருந்து எடுக்கப்பட்டது.
திருமதி வசுந்தரா சாய்ராம் அவர்களுடன் நாராயண சேவையில் கலந்து கொள்ள விருப்பமுள்ளோர் கீழ் கண்ட முகவரியில், தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
# 6/4, வசந்த நகர் 3வது தெரு, மதுரை-3
கைப்பேசி: +919566399835
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக