தலைப்பு

திங்கள், 29 ஜூலை, 2019

கிளாரினெட் மன்னன் ஏ.கே.சி. நடராஜனின் சாயி அனுபவங்கள்.


பாபாவும் பத்து மணியும்:

கிளாரினெட் மன்னன் ஏ.கே.சி. நடராஜனைத் தெரியாதவர்களோ அவரது இசையில் லயிக்காதவர்களோ இருக்க முடியாது. அந்த இசை மேதை, பாபாவின் சிறந்த பக்தர். பாபா பற்றிய அவரது அனுபவம் ஒன்றை இப்போது பார்க்கலாமா?

இது 1964ம் வருடம்.
பிப்ரவரி 3ம் தேதி.
திருச்சியில் ஒரு வீட்டைக் கட்டியிருந்தார் ஏ.கே.சி. அந்தப் புதுமணை புகு விழாவுக்கு மாலை எட்டு மணிக்குச் சரியாக வருவதாக பாபா வாக்களித்திருந்தார். ஏ.கே.சி.க்கு சந்தோஷம் தாங்கவில்லை. எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்.

பாபா திருச்சி வரும் விஷயம் எப்படி மக்களுக்குத் தெரிந்ததோ தெரியவில்லை. காலையிலிருந்தே கூட்டம் குவிய ஆரம்பித்துவிட்டது. எல்லோரும் உள்ளே வர ஆரம்பித்தார்கள்.

“இதென்னாடா, கூட்டம் சேர்ந்து நம் புத்தம் புது வீட்டைப் பாழாக்கப் பார்க்கிறார்களே’ என்று சலிப்புற்றார் ஏ.கே.சி.
வந்த கூட்டத்தைக் கலைக்கவும், இனிமேலும் கூட்டம் சேராமலும் இருக்க ஒரு தந்திரம் செய்தார். அதாவது வீட்டு முகப்பில், “பாபா, இரவு பத்து மணிக்கு மேல்தான் இங்கே விஜயம் செய்யப் போகிறார்’ என்று பெரிதாக எழுதி வைத்து விட்டார்.

கூட்டமும் கலைந்தது.
பாபாவும் வரவில்லை.

மணி மாலை ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பாபா வரவே இல்லை. ஏ.கே.சி வீட்டார் தவித்துப் போனார்கள்.

பத்து மணியும் அடித்துவிட்டது.
ஊர் மக்கள் மெதுவாக வர வர, பாபாவின் காரும் அங்கே வந்தது. பின் தொடர்ந்து அவருடைய பக்தர்களின் பரிவாரங்களின் கார்கள்.
வண்டியிலிருந்து இறங்கிய பாபாவின் உதவியாளர், ஏ.கே.சியிடம் “சரியாக எடவ்டு மணிக்கே எங்கள் கார் காவேரிப் பாலத்துக்கு அருகே வந்துவிட்டது. எதனாலோ தெரியவில்லை, ஸ்வாமி அங்கேயே இரண்டு மணி நேரம் கார்களை நிறுத்தி வைத்து விட்டார்’ என்றார்.

ஏ.கே.சி. நடுங்கிப் போய்விட்டார். பகவானின் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்தார். பாபா, அந்த கிளாரினெட் மேதையின் காதுகளில், “நான் பத்து மணிக்கு வருவேன் என்றுதானே உன் வீட்டு வாசலில் எழுதி வைத்தாய்? அதான் நான் பத்து மணிக்கு வந்தேன்’ என்றபடியே புன்னகைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக