தலைப்பு

வெள்ளி, 26 ஜூலை, 2019

பாபாவின் மீது கல்லெறிந்தவனுக்கு பாபா நிகழ்த்திய அற்புதம்!


பாபா பக்தர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, பாபாவை நம்பாத 
பாபாவை நோக்கி ஒரு கருங்கல்லை எறிந்தான். எறிந்த கல் என்னாயிற்று? பின்பு எறிந்தவனுக்கு பாபா எவ்வாறு பாடம் புகுத்தினார் என்ற சுவாரசிய உண்மை சம்பவத்தை இந்த பதிவில் பார்ப்போம்.

பகவான் பாபாவை நம்பாத ஒரு கூட்டம் இருந்தது. அவர்கள் பாபாவைக் கலாய்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு முறை புட்டபர்த்திக்கு வந்தார்கள். 

அப்போது பாபா, பக்தர்களின் முன்னால் உரையாடிக் கொண்டிருந்தார். சபை கொள்ளாத கூட்டம்.

இவ்வளவு பெரிய கூட்டத்தைப் பார்த்ததும் அந்த “நல்லவர்களில்’ ஒருவனுக்குக் கோபம் வந்தது. (பாபா தன்னை எதிர்ப்பவர்களை, அடாது செய்பவர்களைக் குறை சொல்வதே இல்லை. பாவம், நல்லவர்கள், தெரியாமல் செய்கிறார்கள் என்றுதான் சொல்வார்)

அந்த நல்லவன் நேரம் பார்த்து தன்னிடமிருந்த
பந்து அளவு இருந்த கருங்கல்லை, தொலைவில் நின்றபடியே பாபாவை நோக்கி வீசினான்.
கல் வேகமாகப் பறந்து வந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்தவர்கள் பதறிப் போனார்கள். அலறினார்கள்.
ஆனால் பாபா, அதைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. அவர் பாட்டுக்கு கீதை பற்றிய சொற்பொழிவை ஆற்றிக் கொண்டிருந்தார்.

கல் வேகமாக, பாபாவை நெருங்கியது. அப்போதுதான் அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது. அந்தக் கருங்கல் அப்படியே ஒரு ரோஜாப்பூவாக மாறி பாபாவின் மேல் விழுந்து அவரை அர்ச்சித்தது!
பக்தர்கள் அந்தக் காட்சியைக் கண்டு, கரகோஷம் எழுப்பினார்கள்.

ஆனால் அந்தக் கல்லை வீசியவனின் கல் மனம் மட்டும் மலராகி பாபாவின் பாதங்களைச் சரணடையவில்லை.
பாபா புன்னகையுடன் தன் பேச்சைத் தொடர்ந்தார். அவர்களைத் திருத்த வேண்டும் என்று முடிவெடுத்தார்.
அன்றைக்கு, பௌர்ணமி தினம்.
வழக்கம்போல் சித்ராவதி நதிக்குப் பக்தர்களுடன் கிளம்பினார் பாபா. அவரை அந்த “நல்லவர்களும்’ பின் தொடர்ந்தார்கள்.
ஆற்றங்கரையில் அந்த அறிவாளிகள் பாபாவின் மனதைப் புண்படுத்தவேண்டும் என்ற நோக்கில் பல கேள்விகளைக் கேட்டார்கள்.
“நடந்து கொண்டே பேசலாமே?’ என்று அத்தனைக்கும் புன்னகையுடன் பதில் சொன்னார் பாபா. அவர்கள் கேட்கும் கேள்விகளால் பக்தர்கள் வருத்தப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே அவர் அப்படிச் செய்தார்.
பேசிக்கொண்டே அந்த நல்லவர்களை அருகில் இருந்த சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.

அப்போது ஒரு நல்லவன், “உங்களுக்கு நிஜமாகவே சக்தி இருந்தால் இப்போதே, இங்கேயே ஏதாவது வரவழைத்துத் தாருங்கள்’ என்றான்.
“பேஷாக’ என்றவர், “என்ன வேண்டும் உங்களுக்கு? மசாலா தோசையா? போளியா? லட்டா? சொஜ்ஜியா?’ என்றார்.
நல்லவர்கள் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டார்கள். “இதையெல்லாம் கேட்டால் இந்த பாபா மேஜிக் செய்து ஏதாவது ஓட்டலில் இருந்து வரவழைத்துவிடுவார். அதனால், இந்தப் பருவத்தில் விளையாத பழம் ஒன்றைக் கேட்கலாம்’ என்று முடிவு செய்தார்கள்.

அது மாம்பழ சீஸன் இல்லாத நேரம். அதனால் “எங்கள் அனைவருக்கும் மாம்பழம் வேண்டும்’ என்றார்கள்.
“ஓ’ என்ற பாபா ஒரு பாட்டையும் அப்போது பாடினார்.

“யத்ன ப்ரயத்னமுல் மானவதர்மமு
ஜய அபஜயமுல் தைவாதீனமு’

(மனிதன் கொஞ்சமாவது முயற்சி செய்தால்தான், அவன் விரும்புவதற்குத் தெய்வம் கை கொடுக்கும்.) “தம்பிகளா, உங்களில் ஒருவர் இங்கே விரும்புமிடத்தில் மண்ணைத் தோண்டிப் பாருங்கள். நீங்கள் கேட்ட மாம்பழம் கிடைக்கிறதா என்று பார்ப்போம்’ என்றார்.

உடனே ஒரு “நல்லவன்’ சுற்றுமுற்றும் பார்த்து யோசித்து ஓரமான ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து தோண்ட ஆரம்பித்தான். கொஞ்ச நேரத்திலே அவன் ஷாக் அடித்தது போல் கையை உதறினான்.
“சாமி, எங்களை நீங்க நைஸா சுடுகாட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டீங்க. கையில் என்னவோ ஜிலீர்னு தட்டுப்படுது. ஏதாவது பொணமா கிணமா இருக்கப்போவுது சாமி. பயமாயிருக்கு’ என்றான் அவன்.
அதைக் கேட்டதும் பாபா குழந்தைப்போல் மண்ணில் புரண்டு புரண்டு சிரித்தார். “நயணா, பொணத்துக்கிட்ட என்ன பயம்? நாமளும் ஒரு நாளைக்கு அப்படித்தானே ஆக போறோம்? பார்க்கப்போனால் ஒரு தீங்கும் பண்ணாத சவத்தைவிட, உயிரோடு இருக்கிற நம்மைக் கண்டுதான் நாம் பயப்படணும்?’ என்றார் பொருள் பொதிய..

இன்னொரு “நல்லவன்’ துணிச்சலாய் அந்த இடத்தை நெருங்கினான் நெருங்கும்போதே மாம்பழ வாசனை அடித்தது.
“பழம்தான் சாமி.’

பாபா அப்போதும் சிரித்தார். “லோக நாடகத்தைப் பார்த்தியா? ஒருத்தன் பிணம் என்கிறான். இன்னொருத்தன் பழம் என்கிறான். சரி சரி நல்லாத் தோண்டி எடுத்துக்கிட்டு வா.’
அந்தப் பள்ளத்தில் ஒரு குண்டு மல்கோவா மாம்பழம் அவனுக்கு கிடைத்தது.

அதை பாபாவின் கையில் கொடுத்தபடியே “சாமி, சீஸனே இல்லாத இந்த சமயத்தில் மல்கோவா வந்தது அதிசயம்தான். ஆனா ஒரே ஒரு பழம்தானே வந்திருக்கு. எங்க எல்லாருக்கும் நல்ல பசி. இந்த ஒரு பழம் எப்படிப் போதும்?’ என்றான் நக்கலுடன்.

பாபா புன்னகையுடன் தன் வலக்கையை அசைக்க, ஒரு கத்தி அங்கே தோன்றியது. மாம்பழத்தைத் துண்டு போடலானார்.
அதென்ன ஒரு பழமா? அல்லது பழக்கூடையா?

நறுக்க நறுக்கத் துண்டங்கள் வந்துகொண்டேயிருந்தன. இன்னமும் பாதி பழம் கையில் இருக்கும் நிலையில் “அந்த நல்லவர் வயிறு நிம்பத் தின்று ஏப்பமும் விட்டார்கள்.
பாபா விடவில்லை “தின்னு, தின்னு’ என்படி அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டேயிருந்தார். அவர்கள் திணறினார்கள்.

“நீங்க தின்னாட்டி விட மாட்டேன். இது சுடுகாடு. பூதங்களைக் கூப்பிட்டு உங்களைப் பிடிக்கச் சொல்லிடுவேன்’ என்று வேடிக்கை காட்டினார் பாபா.

அவர்கள், பாபாவின் கால்களில் விழுந்து அன்று முதல் பக்தர்கள் ஆனார்கள் என்பதை நான் சொல்ல வேண்டுமா என்ன?

ஆதாரம்: பிப் 05,2013 அன்று வெளிவந்த தினமலரின் ஆன்மீகமலர் புத்தகத்திலிருந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக