தலைப்பு

சனி, 6 ஜூலை, 2019

சகிப்புத்தன்மை (Tolerance) | பாபாவின் வாழ்விலிருந்து ஒரு சம்பவம்!


பல வருடங்களுக்கு முன்னால் புட்டபர்த்தியில் இருந்த தொடக்கப்பள்ளி (பிரைமரி ஸ்கூல்) மாணவர்கள் காலையில் குளிர்ந்த நீரில் தான் நீராடுவர். சுவாமி மனம்வருந்தி, "இந்த  குழந்தைகளின் பெற்றோர் என்னிடம் கொண்ட அளவற்ற நம்பிக்கையினால் இந்த இளம் குழந்தைகளை எனது பராமரிப்பில் விட்டு சென்றிருக்கிறார்கள். பாவம், உடல் நடுங்க அவர்கள் தினமும் நீராட வேண்டியுள்ளது" என்று நினைத்தார்.

இதன் விளைவாக சூரிய அடுப்புகள் உபயோகப்படுத்தப்பட்டன. சூரிய ஒளியைப் பயன்படுத்தி அவை தண்ணீரை சுட வைக்கின்றன. விரைவில் ஹாஸ்டலில் இவை பொருத்தப்பட்டன. மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிக்கூடத்தின் பிரின்சிபால் அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் சூரிய வெப்ப அமைப்பை (solar heated system) தொடங்கி வைக்க வேண்டும் என்று சுவாமியிடம் பிரார்த்தித்தனர். சுவாமியும் ஒப்புக்கொண்டார்.

தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிவடைந்தன. அந்த கருவி ரப்பர் குழாயினால், தண்ணீர் குழாயுடன்(Tap) பொருத்தப்பட்டது. சுவாமி வந்து தண்ணீர்க் குழாயைத் திறந்ததும், சூடான நீர் கீழே வைக்கப்பட்டிருக்கும் பக்கெட்டில் நிரம்பும். அவர்கள் வெகு நேரம் காக்கவில்லை .ஸ்வாமி வந்தார்; தண்ணீர் குழாயை திறந்தார். துரதிஷ்டவசமாக ரப்பர் குழாய் அந்த நேரத்தில் தண்ணீர் குழாயில் இருந்து விடுபட்டது. வென்னீர் சுவாமியின் முகத்திலும், உடைகளிலும் பீய்ச்சியது.  திடீரென்று எதிர்பாராது நிகழ்ந்த இந்த அசம்பாவிதத்தினால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். வெட்கம் நிறைந்த மௌனம் நிலவியது. அனைவரும் ஸ்தம்பித்து நின்றனரே தவிர ஒருவரும் நிலைமையை சீர் செய்ய முன் வரவில்லை. சுவாமி அவர்களது அவஸ்தையை உணர்ந்து கொண்டார். இந்த இறுக்கத்தை தளர்த்த பலமாக சிரித்துக் கொண்டு, "இங்கே பாருங்கள், முதல் குளியலும் எனக்கு தான்" என்றார்.
 சுவாமியின் சிரிப்பும் விளையாட்டான பேச்சும் அனைவருக்கும் நிம்மதி பெருமூச்சை கொண்டுவந்தன. அவர்கள் இதயம் லேசாகியது. மூச்சு வாங்கியது. அனைவரும் சுவாமியுடன் சேர்ந்து சிரித்தனர். பாபா என்றும் கருணை நிறைந்தவர். அவர் கோபம் என்ன என்று அறியாதவர். "எனது வாழ்க்கையே நான் தரும் நற்செய்தி"(My life is My message) என்று அவர் கூறுகிறார். அது அன்பு, தயை, இரக்கம் நிறைந்த நற்செய்தி, சினத்துக்கு அங்கு இடமே இல்லை.

ஆதாரம்: தபோவனம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக